வெள்ளி, 14 நவம்பர், 2014

சர்க்கரை நோயர்களே

இன்று குழந்தைகள் தினம்
 மட்டுமல்ல
 உலக சர்க்கரை நோய் தினமும் கூட....
உலக மக்கள் தொகையில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வரும் நாம், உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்து விட்டோம். 2013ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர். நோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 கோடி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 100 பேரில் 12 பேர் சர்க்கரை நோயாளிகளாகவே உள்ளனர்.

காரணங்கள் :


நம் உடலில் ஏற்படும் மரபணு மாற்றமும், சுற்றுச்சூழலும் சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம். இதனுடன் குறைந்த உழைப்பும், அதிக சக்தி கொண்ட உணவு முறையும் சேரும் போது சர்க்கரை நோய் எளிதில் தொற்றுகிறது. வாகனங்களின் பெருக்கத்தால் நடைப்பயிற்சியே இல்லாமல் போய் விட்டது. உணவுப்பழக்க வழக்கங்களும் மாறி விட்டன. எவ்வாறு ஏற்படுகிறது

கணையத்தில் இன்சுலின் சுரக்காமல் இருப்பது, சுரந்த இன்சுலின் முறையாக வேலை செய்யாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன. லட்சத்தில் மூன்று பேருக்கு குழந்தை பருவத்திலேயே இப்பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். இரண்டாம் வகை சர்க்கரை நோயை மாத்திரைகள், உணவு, உடற்பயிற்சி மூலமே கட்டுப்படுத்தி விடலாம்.
அறிகுறி

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக தாகம், பசி, அதிக சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் புண், எடை குறைதல், பார்வை மங்குதல், கண்புரை போன்ற பல அறிகுறிகள் தென்படும். இதில் 30 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இருக்காது.

பாதிப்புகள் :முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால், தலைமுதல் பாதம் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். விழித்திரை, நரம்பு மண்டலம், மாரடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு, 
பக்கவாதம் ஏற்படும். உடல் பருமன் ஏற்படும். கொழுப்பு சத்து கூடும். ரத்தகொதிப்பு ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு வரும்.
தடுக்க 


சர்க்கரை நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்தசர்க்கரையை பரிசோதித்து டாக்டரை ஆலோசித்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன், வருமுன் காப்போம் என்பதே மிகச் சிறந்த மருந்து.

மரபணு மாற்றத்தால் வரும் சர்க்கரை நோயை வாழ்க்கை முறை மாற்றத்தால் தள்ளிப்போடலாம். ஆனால் தவிர்க்க முடியாது. ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் உணவு முறை மாற்றங்களால் வரும் சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்கலாம்.
வயிறு நமது ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பின் அளவை வயிற்றில் உள்ள கொழுப்பு காட்டிக் கொடுத்து விடும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்தால் ரத்தக்குழாய்களில் கொழுப்பு குறைகிறது என்று அர்த்தம்.
இதற்கு உணவில் இருந்தே தொடங்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தினமும் 3 வேளை சாப்பிடும் உணவை, 6 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். அதுவும் காலை நேரங்களில் 
3 மணி நேர இடைவெளிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.

மற்றவர்கள் அரசன் போல் காலை உணவையும், மந்திரி போல் மதிய உணவையும், பிச்சைக்காரன் போல் இரவு உணவையும் சாப்பிட வேண்டும். அதாவது காலையில் நல்ல சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். மதியம் சரிவிகிதத்துடன் கூடிய மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் மிக, மிக குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானியம் :


அரிசி உணவை முடிந்த அளவு குறைக்க வேண்டும்.தினை, கோதுமை, வரகு, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, சாமை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் உடலுக்கு தேவையான அதிகப் புரதம், குறைந்த மாவுச்சத்து, நிறைந்த கால்சியம், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பி12 வைட்டமின் அதிகம் உள்ளது.தோல் நீக்கிய கோழி, மீன் வாரம் ஒருமுறை சாப்பிடலாம். ஆட்டு இறைச்சி எப்போதாவது ஒருமுறை குறைந்த அளவு சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு சிறந்தது.
எண்ணெய் 

ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் எண்ணெய் போதும். நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு இரண்டு லிட்டர் போதும். அதுவும் ஒரு லிட்டர் “மூபா” ஆயில் அதாவது நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில் வகையை சார்ந்தவை. ஒரு லிட்டர் பூபா ஆயில்- சன்பிளவர் வகையை சேர்ந்த எண்ணெய் சேர்க்க வேண்டும்.

தினமும் 20 கிராம் நார்ச்சத்து கிடைக்கும் அளவிற்கு உணவில் காய்கறிகள் சேர்க்க வேண்டும். ஒரு முறை சாப்பிடும் ஊறுகாயில் நமக்கு நான்கு நாளைக்கு தேவையான உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி :


நடப்பது, ஓடுவது, விளையாடுவது, நீச்சலடிப்பது போன்ற உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியம். பளு துாக்குதல், உடல் எடையை பயன்படுத்தி செய்யப்படும் பயிற்சிகளும் செய்யலாம்.
குறைந்தது தினம் 30 நிமிடம் நடக்க வேண்டும். 
வாரத்தில் 150 நிமிடம் நடந்தே ஆக வேண்டும். நடைபயிற்சி முடியாத நாட்களில் வாகனத்தை நிறுத்தி விட்டு, கட்டடங்களில் படிக்கட்டுகளை பயன்படுத்துதல், 
 மருத்துவர். சி.பி.ராஜ்குமார்
குறைந்த துாரம் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு முடிந்த அளவு நடக்க பழக வேண்டும். 
மனஅழுத்தம் இல்லாமல் வாழ பழக வேண்டும். 
மனஅழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம், அமைதியான வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.
எடை குறை:


சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், கொழுப்பு சத்து, பித்தப்பை கல், மூட்டுவலி, குறட்டை, துாக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்பட காரணமே உடல் எடை தான். தற்போதைய உடல் எடையில் 10 சதவீதம் குறைத்தால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பை 60 சதவீதம் குறைக்கலாம்.

                                                                                                                                               -- டாக்டர் சி.பி.ராஜ்குமார்,[தினமலரில்]

==========================================================================================================

கேரட் ;
அஞ்சு 5 அற்புதங்கள்!

ம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

 கண் பார்வை 

கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.

 இளமையாக

கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.

. மாரடைப்பு

கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.
 புற்று நோய்

கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

 பற்கள்

கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.
=============================================================================================================