பதற்றம் ஆபத்தை தரும்.



பதற்றமாக இருக்கும்போது உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. 

அது நம்மை கவனமாக இருக்கவும், பிரச்னைகளை எதிர்கொள்ள  துணையாகவும் உடலில் வெவ்வேறு பகுதிகளில் பல மாற்றங்கள் ஏற்படவும் செயல்படுகிறது. 

பயப்படக்கூடிய சூழ்நிலைகளில் மிகவும் கவனமாகவும்,  தெம்புடனும் இருப்பது அவசியம். 

கவனத்தை அதிகரிப்பதற்கு மூளைக்கும், தெம்பை அதிகரிப்பதற்கு தசைகளுக்கும் இரத்த ஓட்டம் அதிகமாகி  செல்கிறது.

அதனால் வயிற்றுக்கும் குடலுக்கும் இரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது. 
இதனால் உணவு ஜீரணிக்கும் சக்தி குறைகிறது. 

இதனால் வயிறு புரட்டுவது போல் தோன்றும்.

 சில நேரங்களில் அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் 
என்கிற உணர்வு இதனாலேயே வருகிறது. 
பதற்ற நிலையில் தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

 இதனால் நுரையீரல் வேகமாக இயங்குவதால் மூச்சுவிடுவது சிரமமாகிறது
.  
பதற்ற நிலையில் மூளை, தசைகள் போன்ற இடத்திற்கு இரத்தத்தை அதிகமாக செலுத்துவதற்காக இதயம் வேகமாக இயங்குகிறது.

இதனால் ரத்த  கொதிப்பும் நெஞ்சு படபடப்பும் வருகிறது.

பயம் மற்றும் பதற்றமான சூழ்நிலையை எதிர்கொள்ளவோ அல்லது விட்டு விலகவோ உடலில் அதிக சக்தி தேவைப்படுகிறது.

 அதிகமான சக்தியை  பயன்படுத்தும்போது உடல் சூடாகின்றது. சூடான உடலை குளிர்ச்சிப்படுத்த வேண்டும்.
 உடல் குளிர்ச்சியாவதற்கு அதிகம் வியர்க்க வேண்டும். பதற்ற  நிலையில் அதிகம் வியர்ப்பதற்கு இதுவே காரணமாகும். 
மன பதற்றமான சூழ்நிலைகளில் மூச்சை வேகமாகவும், மேலோட்டமாகவும் விடுவதால்  இரத்தத்தில் கரியமில வாயு குறைகிறது. 
இதனால் ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கின்றது. 

இது இரத்த குழாய்களை உடல் முழுவதும் குறிப்பாக மூளை நரம்பு மண்டலத்தில் உள்ள ரத்த குழாய்களை சுருங்க செய்கிறது. இதன் காரணமாக  மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. 

இதன் விளைவாக மூளைக்கு குறைந்த அளவு பிராண வாயு செல்கிறது மற்றும் ரத்தத்தில்  கால்சியத்தின் அளவு குறைகிறது. 
இதனால் உடலில் ஊசி குத்துவது போலவும், கை, கால் மரத்துப்போவது போலவும் மற்றும் நரம்பு இழுப்பது  போன்ற உணர்வுகளும் ஏற்படும். 


தலை சுற்றல், தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு, இதய துடிப்பு அதிகரித்தல் போன்ற உணர்வுகளும் ஏற்படும்.

 ஒரு முக்கியமான காரியத்தை  மேற்கொள்ளும் முன் நமது தசைகள் இறுகுவதை உணர மாட்டோம்.

காரியத்தை முடித்த பின் முதுகுவலியோ கழுத்து பின்புறம் வலியோ வாட்டும். 

 பயத்தில் தசை இறுகுவதே இதற்கு காரணமாகும். 
தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க வேண்டும் 
==================================================================================================
மறைந்தார் ”பாலன்”.
====================


தமிழ் இதழியல் கண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர் எஸ்.எஸ்.பாலன் என்கிற எஸ்.பாலசுப்ரமணியன். 
பலரையும்போல சினிமா கனவோடு, பத்திரிகைக்கு வந்தவர் அல்ல அவர். பத்திரிகைக்காக சினிமாவை விட்டவர்.
 1969-ல் அவருடைய தந்தை எஸ்.எஸ்.வாசன் மறைந்தபோது,
 ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் தலைமைப் பொறுப்பு மட்டும் அவரிடம் வரவில்லை; திரையுலகின் உச்சத்திலிருந்த ‘ஜெமினி ஸ்டுடியோ’வின் தலைமைப் பொறுப்பும் அவரிடம் வந்தது.
 வாசன் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் வெளியான ஜெமினி ஸ்டுடியோவின் ‘மன்சுலு மராலி’ தெலுங்குப் படம் பெரும் வெற்றி பெற்றது. 
பாலசுப்ரமணியன் தொடர்ந்து படங்கள் எடுத்தார், இயக்கினார். 
எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்', சிவாஜி நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, முத்துராமன் நடித்த ‘எல்லோரும் நல்லவரே' போன்றவை இவர் இயக்கிய சில படங்களாகும்.கடைசியாக இயக்கியது ‘எல்லோரும் நல்லவரே”
ஆனால், அவருக்குள் இருந்த பத்திரிகையாளன் விகடனைத்தான் முழுமையாக நேசித்தான். ஜெமினி ஸ்டுடியோவில் தொடங்கி, அவருக்குள் இருந்த எழுத்தாளன் சேவற்கொடியோன் வரை சகலமும் அந்தப் பத்திரிகையாளனுக்காக அவர் கொடுத்த விலைகள்.
கொண்டாடப் பல விஷயங்கள் உண்டு, பாலசுப்ரமணியனிடம். தொழிலாளிகள் காலம் முழுவதும் வாழ்த்திய பத்திரிகை முதலாளி அவர். தமிழ் இதழியலில் எழுத்தாளர்களுக்கு என்று ஒரு தனி இடம் பத்திரிகையில் இருந்தது அவருடைய காலத்தில்தான்.
 1950-களில் ஒரு பவுன் தங்கம் ரூ. 80 விற்ற காலத்தில், ‘முத்திரைக் கதை’களுக்கு ஒரு கதைக்கு அவர் கொடுத்த ரூ. 500 சன்மானம் இன்றைக்கும் எந்த நிறுவனத்துடனும் ஒப்பிட முடியாதது. 
தொழில்முறைப் பயிற்சி என்பது இன்னமும் கனவாக இருக்கும் தமிழ் இதழியலில், பெரும் புரட்சியை உண்டாக்கியது அவர் கொண்டுவந்த ‘மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’.
 சமூகநீதிக்கு முன்னுதாரணமாக, நாட்டிலேயே அதிகமாகப் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் - குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - தமிழ் ஊடகங்களில் இன்றைக்கு முக்கியப் பொறுப்புகளில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் பாலசுப்ரமணியன்.
கிட்டத்தட்ட 50 வருஷங்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் அவர் இருந்தார். 
தமிழில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக முதலிடத்தில் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை உட்காரவைத்துவிட்டு அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். அதோடு, முற்றிலுமாகப் பொது வாழ்விலிருந்தும் விலகிக்கொண்டார்.
1987-ம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்குக்காக, அன்றைய எம்.ஜி.ஆர். அரசு இவரைக் கைதுசெய்து மத்திய சிறையில் அடைத்தது.
தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார். அதற்கான காசோலையை அப்படியே ப்ரேம் போட்டு வைத்துள்ளார்.
அடுத்த ஞாயிறு டிச. 28 அன்று - அவருடைய 80-வது பிறந்த நாள் அன்று - வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட பேட்டியின் ஒரு பகுதி இது. 
ஒரு பந்தயக் குதிரைபோல 50 வருஷம் ஓடிவிட்டு, அப்புறம் அப்படியே ஒதுங்கியிருப்பது எப்படிச் சாத்தியமாக இருக்கிறது?
காலையில நாலு மணிக்கே எந்திரிச்சு, மொத ஆளா ஏழு மணிக்கெல்லாம் ஆபீஸ் போவேன். ராத்திரி பெரும்பாலான நாள்ல கடைசி ஆளா ஒன்பதரை மணிக்கு வெளியே வருவேன். வீட்டுக்கு வந்தும் வேலை செய்வேன். அது ஒரு காலம். இப்ப வெளியவே போறதில்ல. இது ஒரு காலம். எது விதிக்கப்பட்டிருக்கோ அதை வாழறோம் (தலையைக் காட்டுகிறார்).
உங்கள் தந்தை வாசனைப் பற்றி எழுதிய ‘நான் கண்ட பாஸ்’ கட்டுரையில் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறீர்கள், அதாவது காலையில் நீங்கள் எழுந்து பார்க்கும்போது அவர் தூங்கிக் கொண்டிருப்பார்; இரவில் அவர் வீட்டுக்கு வரும்போது நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பீர்கள் என்று. ஆனால், நீங்களும் வாழ்வின் பெரும் பகுதியை வேலைக்காகவே செலவிட்டிருக்கிறீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று தோன்றவில்லையா?
அப்படிப்பட்ட ஒரு கடின உழைப்பாளிக்குப் பொறந்துட்டு, நான் உழைக்க அஞ்ச முடியுமா? அவர் அடிக்கடி ஒண்ணு சொல்லுவார், ஒரு பத்திரிகைக்காரன்னா அவன் 24 மணி நேரமும் பத்திரிகைக்காரன்தான்னு. எங்கே இருந்தாலும் மூளை யோசிச்சுக்கிட்டேதானே இருக்கு? வீட்டுல எவ்ளோ நேரம் இருக்கோம்கிறதைவிட, வீட்டோட எவ்ளோ நெருக்கமா இருக்கோம்கிறதுதான் முக்கியம்னு நெனைக்கிறேன்.
சினிமாவிலிருந்து எது உங்களைப் பத்திரிகையை நோக்கி ஈர்த்தது?
எனக்கு சினிமா மேல எப்பவுமே ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்ப்பந்தம். பத்திரிகைக் கனவுதான் துரத்திக்கிட்டே இருந்துச்சு.
உங்களுக்குப் பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது?
சின்ன வயசுலயே. 12 வயசுலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கேன். ‘சந்திரிகா’ அப்படின்னுட்டு.
உங்கள் கையெழுத்துப் பத்திரிகையை உங்கள் தந்தை படித்திருக்கிறாரா?
தெரியாது. அவர் அதைப் பார்த்தாரா இல்லையான்னுகூடத் தெரியாது. ஆனா, அவர் ஆசையா வளர்த்துக்கிட்டிருந்த விகடனை அப்போலேர்ந்து ஆசையா நான் பார்த்துக் கிட்டிருந்தேன். என்னைவிட ஒன்பது வயசு மூத்தவன் விகடன். ஒருவகையில என்னோட அண்ணா.
நீங்கள் எழுதிய கதைகள் எதையாவது அப்பா படித்திருக்கிறாரா?
ஒரு நாவல் எழுதினேன். அதை எழுதி பைண்ட் பண்ணி அவர்கிட்டே குடுத்தேன். அவர் ரொம்ப ஃபாஸ்ட் ரீடர். என்னைக் கூப்பிட்டுச் சொன்னார். “உன்னோட நாவல் படிச்சேன். நல்லா இருந்துதுப்பா. இதை எதாவது இங்கிலீஷ் நாவலைப் படிச்சி எழுதினியா?”ன்னு கேட்டார். “நான் இங்கிலீஷ் நாவலே படிக்கிறதில்லை”ன்னேன். அவர் சொன்னார், “இங்கிலீஷ் கதையைப் போல இருக்குப்பா. ஆனா, நம்ம நாட்டுக்கு இந்தக் கதை ஒத்துவராது. படமா எடுத்தா நம்ம நாட்டுல ஓடாது”ன்னார். கதைகளை அவர் சினிமாவாத்தான் பார்த்தார்.
எழுத்து மேல் இவ்வளவு ஆர்வம் இருந்திருக்கிறது. அப்புறம், பத்திரிகையாசிரியர் பொறுப்பில் உட்கார்ந்ததாலேயே எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள். இடையில், உங்கள் போட்டி பத்திரிகையான ‘குமுத’த்தில் ஆசிரியர் எஸ்.ஏ.பி. தொடர்ந்து எழுதினார். உங்களிடமிருந்து விலகிய கல்கியும் தொடர்ந்து தன்னுடைய பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். இதெல் லாம் உங்கள் முடிவைப் பாதிக்கவில்லையா?
ம்ஹூம். நான் ஒரு முடிவை எடுக்கும்போது, தீர்மானமா யோசிச்சுதான் எடுப்பேன். பின்னாடி அந்த முடிவை மாத்திக்கிறதுக்கான நியாயங்களும் எதுவும் உருவாகலை.
ஒரு பத்திரிகை ஆசிரியராக, மிகவும் முக்கியமான தருணம் என்று எதைச் சொல்வீர்கள்?

நான் ஆனந்த விகடனில் இருந்த ஐம்பது வருஷங்களுமே எனக்கு முக்கியமான தருணங்கள்தான்னு சொல்வேன். ஒவ்வொரு நாளும், அன்னிக்குத்தான் பொறுப்பு ஏத்துக்கிட்ட மாதிரிதான் உள்ளே நுழைவேன். ‘என் மண்டை காலி மண்டை. எனக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாத்தையும் நீங்கதான் சொல்லிக்கொடுக்கணும்’னு நெனைச்சுக்கிட்டுதான் நுழைவேன்.
விகடன் அட்டைப் பட ஜோக்குக்காக அதிமுக அரசு சிறைத் தண்டனை விதித்தபோது, எம்ஜிஆரிடம் நீங்கள் பேசுவீர்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எது உங்களை எதிர்த்துப் போராட வைத்தது?
விகடன் ஒரு புரட்சிப் பத்திரிகை கிடையாது. எல்லோரும் வாசிக்கக் கூடிய, ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகைதான் அது. ஆனா, அன்னைக்கு எம்ஜிஆர் அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை என் மீதான தாக்குதலாகவோ, விகடன் மீதான தாக்குதலாகவோ பார்க்கலை. ஒட்டுமொத்த பத்திரிகைச் சுதந்திரத்து மேலேயும் நடத்தப்பட்ட தாக்குதல். அதைத் தனிப்பட்ட வகையில, குறுக்குவழியில அணுகினா, இந்தப் பத்திரிகை தொழிலுக்கே நான் வந்திருக்க வேண்டியதில்லை.
உங்களுடைய நீண்ட பயணத்தில் தமிழ் இதழியல் உலகம் எவ்வளவோ மாறியது. குறிப்பாக, உங்களுடைய ஆசிரியப் பணியின் கடைசிக் காலகட்டத்தில் சிறு பத்திரிகைகள் முக்கியமான இடத்தை நோக்கி நகர்ந்தன. தீவிர வாசிப்பின் பரப்பு அதிகரித்தது. ‘இந்தியா டுடே’, ‘சுபமங்களா’ போன்ற பத்திரிகைகள் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கின. இதையெல்லாம் எப்படிப் பார்த்தீர்கள்?
நான் கவனிச்சேன். ஆனா, என்னோட பத்திரிகையோட தன்மை என்ன, என் வாசகர்கள் யாருங்கிறது எனக்குத் தெரியும். காலத்துக்கு ஏத்த மாதிரி விகடன் தன்னை எல்லாக் காலகட்டத்துலேயும் மாத்திக்கிட்டிருக்கு. அந்த மாற்றம் அது தனக்குள்ள நடத்திக்கிற மாற்றம். இப்படி மத்த பத்திரிகைகளைப் பார்த்து நடத்திக்கிற மாற்றம் இல்ல. என் பத்திரிகை அவங்க பத்திரிகை மாதிரி வர்றதுக்கு ஒரு வாசகன் அவங்க பத்திரிகையையே வாங்கிக்கிட்டுப் போயிடலாமே? அப்புறம், ஆங்கில இதழியலுக்கும் தமிழ் இதழியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
உங்களுடைய 50 வருஷ இதழியல் காலத்தில் நீங்கள் ரொம்பவும் ரசித்த பத்திரிகை எது? தமிழில்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆங்கிலத்தில் அல்லது வேறு எதாவது ஒரு மொழியில்...
குமுதம். நான் எப்பவுமே விரும்பிப் படிக்கிற பத்திரிகை குமுதம்தான். குமுதத்தைப் படிப்பேன். ரசிப்பேன். இவ்ளோ லாம் பண்ணிருக்காங்க. நமக்குத் தோணலையேன்னு வருத்தப்படுவேன். எஸ்.ஏ.பி-க்கு போன் பண்ணி வாழ்த்து வேன். எல்லோரையும் சந்தோஷப்படுத்துறதுதான் பெரிய சந்தோஷம்.
இப்போது வரும் பத்திரிகைகளையெல்லாம் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ம்ஹூம்... நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாது வாசிக்கணும்னு தோணினா, பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. நல்லா இருந்த காலத்திலேயும் சரி, வீட்டுல ‘ஹிண்டு’ மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.
ஒரு வெற்றிகரமான பத்திரிகையாளனுக்கு அடிப்படைப் பண்பாக இருக்க வேண்டியது என்று எதைச் சொல்வீர்கள்?
தன்னைச் சுத்தி நடக்குற எல்லாத்தையும் கவனிக்கிறதும் எப்பவும் திறந்த மனசோட இருக்கிறதும்!”
இதுதான் எஸ்.எஸ்.பாலனுடைய கடைசி கலந்துரையாடல்.

===============================================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?