நோக்கியாவை நம்பி பாக்ஸ்கான் இல்லை.

நோக்கியாவை தொடர்ந்து பாக்ஸ்கான் ஆலையும் இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா, பாக்ஸ்கான் உள்ளிட்ட பல மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் 2006 ஆம் ஆண்டு அமைந்தன. 
மொபைல் போன் மற்றும் அதன் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யும் பணிகளும் இங்கு நடைபெற்று வந்தன.
நோக்கியாவை போன்றே பாக்ஸ்கான் நிறுவனமும் உலகின் மிகப்பெரிய உற்பத்தி கூடத்தை இங்கு அமைத்தது. 
நோக்கியா உள்ளிட்ட பல முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அதன் மொபைல்போன் மற்றும் அதன் மின்னணு பாகங்களை உற்பத்தி செய்து அளிக்கும் பணியில் இந்தநிறுவனம் ஈடுபட்டுவந்தது. இம்மாத 3வதுவாரத்தில் இந்த ஆலை மூடப்படவுள்ளது.
 போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை என்று அந்நிறுவனம் இதற்கு காரணம் கூறுகிறது. இதுகுறித்து ஆலையின் நிர்வாகம் காஞ்சிபுர மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.
டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து படிப்படியாக உற்பத்தி நிறுத்தப்படும் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பாக்ஸ்கான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கருத்து கேட்கமுயன்றபோது பலமுறை முயன்றும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. குறுந்தகவல் அனுப்பியும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. 
ஆனால் இந்த ஆலை மூடப்பட்டால் நேரடியாக 1306 ஊழியர்கள் மற்றும் 189 தொழில்நுட்ப பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு நோக்கியா தான் முக்கியமான வாடிக்கையாளர் ஆகும். 
ஸ்ரீபெரும்புதூரில் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒருபிரிவு நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மற்றொரு பிரிவு என இந்தநிறுவனம் இரண்டுபிரிவுகளை கொண்டு இயங்கியது. 
நோக்கியாவில் உற்பத்தி உச்ச கட்டத்தில் இருந்தபோது அதன் வளாகத்திற்குள் இருந்த இதன் பிரிவில் 6800க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். பாக்ஸ்கானிடமிருந்து ஆர்டர்களை நோக்கியா ஏற்கனவே நிறுத்திவிட்டதால் இந்தப்பிரிவு ஏற்கனவே மூடப்பட்டு விட்டது.
இதைத்தொடர்ந்து வரும் 15ஆம் தேதிமுதல் 16 ஆம் தேதிக்குள் இந்நிறுவனம் தனது பிளாஸ்டிக் பிரிவையும் டிசம்பர் 22 ஆம் தேதி மோல்டிங் பிரிவையும் மூடப்போவதாக அறிவித்துள்ளது. 
கடந்த அக்டோபர் மாதம் வரை நோக்கியா வளாகத்திற்குள் இருந்த பிரிவு உதிரிபாகங்களை அதற்கும் வியாட்நாமிற்கு சென்றுள்ள நோக்கியாவின் புதிய உற்பத்தி பிரிவிற்கும் விநியோகித்து வந்தது.
 கடந்த ஒருமாதமாக பாக்ஸ்கான் மூடப்படும் என்று செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
இதுகுறித்து கடந்த சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராசன் கேட்டபோது அரசு பதில் அளிக்கவில்லை. 

எனவே பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று அவர்கூறியுள்ளார்.
ஆலை மூடல் குறித்து பாக்ஸ்கான் நிர்வாகம், சிஐடியு ஆதரவு பெற்றஅதிகாரப்பூர்வ சங்கமான பாக்ஸ்கான் எம்ப்ளாயீஸ் யூனியன், திமுக தலைமையிலான தொழிலாளர்முன்னேற்ற பேரவை (தொமுச) அதிமுகவின்அண்ணாதொழிற்சங்க பேரவை (அதொச)ஆகிய சங்கங்களுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தையை பாக்ஸ்கான் நிர்வாகம் நிறுத்திவிட்டது.
இந்த மூன்றுதொழிற்சங்கங்களுடன் இதுவரை 3 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன. 
ஆனால் ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
ஐபோன்கள் மற்றும் ஐபேட் போன்ற உயர்ரக போன்களை உற்பத்தி செய்ய 2010ஆம் ஆண்டு பாக்ஸ்கான் முடிவு செய்திருந்தது.
ஐ போன்களை தயாரிப்பதில் உலகப்புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உதிரிபாகங்களை அளிக்கும் மிகப்பெரிய நிறுவனம் இதுவாகும். 
இந்தப்பிரிவை பிரேசில் நாட்டில் வைத்துள்ளது. 
இந்தப்பிரிவும் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டிருந்தால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்த 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். 
2007ஆம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் உலகில் அறிமுகம் செய்யப்பட்டவுடன் அதற்கு கிடைத்த அமோக வரவேற்பையடுத்து அந்நிறுவனத்துடனான பாக்ஸ்கான் நிறுவனத்தின ஒப்பந்தம் மேலும் வலுவடைந்தது.
இந்தியாவில் ஐ போன்களை உற்பத்தி செய்வது குறித்து 2010-11ல் பாக்ஸ்கான் ஒரு ஆய்வை நடத்தியது.
நோக்கியா மூடப்பட்டதால் அதற்கு உதிரிப்பாகங்களை விநியோகம் செய்த பாக்ஸ்கானும் முடப்படுகிறது என்ற வாதத்தை நிர்வாகம் வேண்டுமென்றே பரப்பிவிடுகிறது. 
நோக்கியாவை நம்பி இந்த நிறுவனம் இல்லை. 
அதைவிட பல மடங்கு பெரிய நிறுவனம். பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பெறும் ஆர்டர்களை இங்கு தயாரித்து அனுப்பமுடியும் .
நோக்கியாவை நம்பி பாக்ஸ்கான் இல்லை. 
நோக்கியா நிறுவனத்திற்கு உலகில் 10 உற்பத்திப்பிரிவுகளே உள்ளன. 
ஆனால் அந்த நிறுவனத்தை விட பலமடங்கு பெரியது பாக்ஸ்கான். 
உலகம் முழுவதும் இதன் பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். 
இந்த நிறுவனத்திற்கு ஏராளமான ஆர்டர்கள் உள்ளன. 
நோக்கியாவை காரணம் காட்டி மூடுவதுஏற்புடையது அல்ல. 
பாக்ஸ்கான் ஆலை தொடர்ந்து இயங்க மத்திய- மாநில அரசுகள்இந்தப்பிரச்சனையில் தலையிடவேண்டும்.
இல்லையென்றால் தமிழக அரசே ஏற்கமுன்வரவேண்டும். ‘மேக்கிங் இந்தியா’ என்று பிரச்சாரம் செய்துவரும் மத்திய பாஜக அரசும் பிரதமர் மோடியும் உள்நாட்டில் வேலைவாய்ப்பை இழக்கும் இந்த ஊழியர்களையும் பாதுகாத்தால்தான் இந்தியா பொருளாதார ரீதியாக வலிமைபெறமுடியும்.

=====================================================================
பாக்ஸ்கான்: ஒருகண்ணோட்டம்

2006ஆம் ஆண்டு சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு உற்பத்தி பிரிவுகளை பாக்ஸ்கான் துவக்கியது. 
ஒன்று ஸ்ரீபெரும்புதூர் உயர் தொழில்நுட்ப பொருளாதாரமண்டலத்திலும் மற்றொன்று நோக்கியா வளாகத்திலும் இயங்கிவந்தது.
இந்தியாவில் 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.850 கோடிக்கு முதலீடு செய்தது.
உச்சத்தில்இருந்தபோது நோக்கியா வளாகத்தில் இருந்த இதன் பிரிவில் சுமார் 6800 பேர் பணிபுரிந்து வந்தனர். 
தற்போது மற்றொரு பிரிவில் 1306பேரும் தொழில்நுட்ப பணியாளர்கள் 189பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
நோக்கியா தனது ஆர்டர்களை நிறுத்தியதால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்பட்டுவந்த பிரிவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது.

========================================================================
ண்ணெய்யில்
கால் வைத்தால் வழுக்கும் என்பதுபோல தற்போது எண்ணெய்யின் விலையும் உலகளவில் வழுக்கி சரிந்துள்ளது.
இந்தாண்டு ஜூன் மாதத்தில் ஒரு பேரல் 112.42 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் டிசம்பர் முதல் வாரத்தில் 69.79 டாலர்களாக கிட்டத்தட்ட 40சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
தற்போதைய விலை சரிவுக்கான முக்கிய காரணமாக கூறப்படுவது அமெரிக்காவின் எண்ணெய் தேவை குறைந்து அந்நாடு இறக்குமதியை பாதியாகக் குறைத்துவிட்டதுதானாம்.
அமெரிக்காவின் தேவை குறைந்ததற்கான காரணம் அங்கு புதிதாக ஷேல் எரிவாயு என்ற பெட்ரோலிய வாயு பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறதாம். எனவேதான் விலை சரிந்துள்ளதாம்.
அமெரிக்கா இறக்குமதியை பாதியாக குறைத்த போதிலும், எண்ணெய் வள நாடுகள் உற்பத்தியை குறைக்காமல், நாள் ஒன்றுக்கு அதே பழைய அளவான 3 கோடி பேரல்களை தொடர்ந்து உற்பத்தி செய்கிறதாம். 
இது உலகத் தேவையைவிட 20லட்சம் பேரல்கள் அதிகமாம். ஆக உற்பத்தி என்பது தேவையைவிட அதிகரிக்கும் போது விலை சரிகிறது.
இந்தியாவின் எண்ணெய் தேவையில் 80சதவீதம் இறக்குமதியை சார்ந்தே உள்ளது.
 இதில் 25 சதவீதம் சவூதி அரேபியாவில் இருந்தே செய்யப்படுகிறது. 2013-14ஆம் நிதியாண்டில் 14 ஆயிரத்து 300 கோடி டாலர் செலவு செய்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.
இந்த செலவு 2030 ஆம் ஆண்டுவாக்கில் 35 ஆயிரம் கோடி டாலர்களாக உயருமென ஒரு கணிப்பு உள்ளது.
ஒரு பேரலுக்கு 10 டாலர் அளவுக்கு விலை குறைந்தால் நமது நாட்டின் இறக்குமதி செலவு 1700 டாலர் குறையும் என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. மேலும் ஒரு பேரல் 10 டாலர் குறையும் போது மொத்த விலை குறியீட்டு எண் 0.5 சதவீதம் குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.5 சதவீதம் குறையும், ஜிடிபி வளர்ச்சி 0.1 சதவீதம் அதிகரிக்கும் என்று நொமுரா என்ற ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
 இந்த தகவல்களின்படி இந்த ஆறு மாதத்தில் பேரல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 44 டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
அதாவது 7 ஆயிரம் டாலர் அளவுக்கு இறக்குமதி செலவு நாளொன்றுக்கு குறைந்துள்ளது. அதேபோல மொத்த விலை குறியீட்டு எண் 2.3 சதவீதம் அளவுக்கு குறைய வேண்டும்.
நடப்பு கணக்கு பற்றாக்குறையும் 2.1சதவீதம் அளவுக்கு குறைந்திருக்க வேண்டும்.
ஜிடிபியும் 0.5சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க மத்திய அரசு கடந்த நவம்பர் 12ந்தேதி பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.1.50 அளவுக்கு உற்பத்தி வரியை உயர்த்தியது.
இதனால் ரூ.10ஆயிரம் கோடி அளவுக்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை சரி செய்யப்பட்டதாக கூறியது மத்திய அரசு.
இதோடு நில்லாமல் டிசம்பர் 2ந்தேதி மீண்டும் ரூ.2.25 அளவுக்கு உற்பத்தி வரியை உயர்த்தியுள்ளது.
இதனால் 4 ஆயிரம் கோடி அளவுக்கு வரி வருவாய் அதிகரிக்குமாம். இந்த இடத்தில் நமது கேள்வியாதெனில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இங்கேயும் படுவேகமாக விலை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும், அங்கு விலை குறையும் போது மட்டும் அந்த பலன்களை மக்களை சென்று சேர விடாமல் உற்பத்தி வரி, விற்பனை வரி, நடப்பு கணக்கு பற்றாக்குறையென ஜாலம் காட்டுவதன் மர்மம்தான் என்ன?2002ல் கச்சா எண்ணெய் இறக்குமதி விலைச் சமன்பாடு என்ற நூதன விலை முறையை கண்டுபிடித்த அன்றைய பாஜக அரசின் தவறான நடைமுறைகள் இன்று மீண்டும் துவங்கியிருப்பதுதான் தற்போதைய அவலத்திற்கான காரணம் அதாவது இறக்குமதி செய்யப்படும்.
80சதவீதத்தையும், உள்நாட்டில் உற்பத்தியாகும் 20 சதவீதத்தையும் இணைத்து மொத்தமாக போடப்படும் வரிகள், சரக்கு கட்டணம், இன்சூரன்ஸ் என எல்லா செலவுகளையும் சேர்த்து விலை நிர்ணயம் செய்யும் முறைதான் முக்கியகாரணம்.
மேலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை பெரும் கார்ப்பரேட்களுக்கும், தனியார்களுக்கும் ஏலமிட்டு விற்று அவர்களையும் பங்குதாரர்களாக மாற்றியது கடந்தகால பாஜக ஆட்சி. இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் 21 சதவீத பங்குகளையும், இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் 49 சதவீதப் பங்குகளையும், பாரத் பெட்ரோலியத்தின் 45 சதவீத பங்குகளையும், ஓஎன்ஜிசியின் 31 சதவீத பங்குகளையும், கெயில் இந்தியாவின் 43 சதவீத பங்குகளையும், ஆயில் இந்தியாவின் 22 சதவீத பங்குகளையும் வாங்கி வைத்திருப்பது யார் தெரியுமா?
இந்தியாவின் அதானி குழுமமும், டாடா குழுமமும், பிர்லா குழுமமும் மற்றும் வெளிநாட்டு வாழ் கார்ப்பரேட்களும்தான்.
இவர்களின் லாபம் எந்த விதத்திலும் குறைந்துவிடக்கூடாதென்ற வர்க்கபாசத்தால்தான் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரசு பார்த்துக் கொள்கிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யிரினங்கள் கடலிருந்தே 

தோன்றின என்பது வரலாறு. இயற்கை அமைப்பில் கடல்களும் சமுத்திரங்களும் அள்ள அள்ள வற்றாத மிகவும் அரிய வளம் கொண்டவை. பூமியின் ஏறக்குறைய முக்கால் பாகத்தை நிரப்பியிருக்கும் கடல்கள் மீன் மற்றும் எண்ணற்ற கனிம வளங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. அவை இந்த பூமியின் மனித குலம் தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் சீரான தட்பவெப்ப சூழ்நிலையில் வாழ வைக்கும் மகத்தான பணியை காலங்காலமாக மேற்கொண்டு வருகின்றன. கடலில் உள்ள வாட்டர் கரண்ட்ஸ் எனப்படும் நீரோட்டங்கள்தான் இந்த அரிய பணியை செய்து வருகின்றன.
சூரியனிலிருந்து வரும் வெப்பக் கதிர்கள் பூமத்திய ரேகை மற்றும் கடலின் மேல் மட்டத்திலுள்ள நீரை மற்ற பகுதிகளை விட அதிகமாக ஆவியாக்குகின்றன அதனால் கடல் பகுதிகளில் பல இடங்களில் வெற்றிடம் ஏற்படும்போது வெற்றிடம் உள்ள பகுதியை நிரப்பிட மற்ற பகுதியிலிருந்து கடல் நீர் அந்த பகுதிக்கு செல்கிறது. இன்னொரு பக்கம் கடலின் மேல் பகுதி ஆவியாகும் போது கடலின் ஆழத்திலிருந்து மேல் நோக்கி நீர் பாய்கிறது. இப்படி பல பகுதிகளிலிருந்தும் நீரோட்டம் பாய்வதால் பூமியின் தட்பவெப்ப நிலையானது அதிக குளிர்ச்சியில்லாமலும் அதிக வெப்பமில்லாமலும் சீரானதாக பராமரிக்கப்படுகிறது.
ஆக கடல் என்பது தட்பவெப்ப நிலையை பராமரிக்கும் மாபெரும் சூழல் அமைப்பாகும். 
இன்னொரு பக்கம் அளவுக்கதிகமான சூரிய வெப்பத்தை உள்ளிழுத்துக்கொண்டு பூமி அதிக அளவில் சூடாவதிலிருந்தும் தடுத்து வருகிறது. 
கடலிலுள்ள நீரில் 63 விழுக்காடு வேதியல் பொருட்களும் 2 விழுக்காடு நன்னீரும் 35 விழுக்காடும் உவர்நீரும் உள்ளன. இந்த கலவை விகிதமானது கடல்கள் மற்றும் சமுத்திரங்களுக்கேற்ப மாறுபடுகிறது. 
இந்த கலவை விகிதம் பாதிக்கப்பட்டால் கடுமையான பாதிப்புகள் கடலில் ஏற்படும். உதாரணமாக கடலிலுள்ள வேதியல் பொருட்கள் மிகுதியானால் கடலிலுள்ள உயிரினங்கள் அழியலாம்.
 அதனைத் தொடர்ந்து இந்த புவியின் தட்பவெப்ப நிலையை சீராக பராமரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்படலாம். ஏற்கனவே கால நிலைமாற்றத்தினால் பூமி சூடாவதால் கடல் நீர் அதிகமாக சூடாகி அதிலுள்ள வேதியல் தன்மையின் காரணமாக கடல் அமிலத்தன்மை பெற்று வருவதாக என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் உள்நாட்டிலும் கடற்கரையிலும் உள்ள தொழிற்சாலைகளும் சுற்றுலா விடுதிகளும் ஓட்டல்களும் தங்களது கழிவுகளை கடலில் கொட்டி கலக்க விடுகின்றன.கடலில் கொட்டப்பட்டு மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளின் அளவு குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
 வங்காள விரிகுடாவில் மட்டும் 2,69,000 டன்கள் அளவில் பிளாஸ்டிக் குவியலாக மலைபோல் மிதப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கடல்களிலும் சமுத்திரங்களிலும் 5 லட்சம் கோடியே 25,000 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் குப்பைகள் மிதப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
இந்த ஆய்வை கலிபோர்னியாவைச்சேர்ந்த பைவ் ஜயர்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் மார்குஸ் எரிக்சன் என்பவர் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வானது 2007லிருந்து 2013வரையிலான 24 கடல் பயணங்களின்போது மேற்கொள்ளப்பட்டவை. 
வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் சமுத்திரங்கள், வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் சமுத்திரங்கள் மற்றும் இந்திய சமுத்திரம், ஆஸ்திரேலிய கடற்கரை, வங்காள விரிகுடா மற்றும் மத்திய தரைக்கடல் ஆகிய கடல்களிலும் சமுத்திரங்களிலும் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இப்போது இதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை சற்று பார்ப்போம். 
உள்நாட்டில் பிளாஸ்டிக் உண்ணும் கால்நடைகளுக்கு இரைப்பையில் மற்றும் சிறுநீரகத்தில் என்ன பாதிப்பு ஏற்படுமோ அதே பாதிப்பு கடலில் வாழும் எண்ணற்ற மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஏற்பட்டு அவை அழியும். பிளாஸ்டிக் கடலில் மிதக்கும்போது சிறிய துகள்களாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளதால் கடல் வாழ் உயிரினங்களும் பறவைகளும் இவற்றை உண்ணும் வாய்ப்புகள் அதிகம். 
இந்த கழிவுகள் நீண்டகாலத்தில் மிகவும் நுண்துகள்களாக மாறுகின்றன.
இவற்றின் அளவு 36,000 டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை உயிரினங்கள் ஒரு வேளை உண்ணவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அவை மக்காத தன்மையில் பல காலத்திற்கு மிதப்பதால் பல இடங்களில் சூரிய ஒளி புக முடியாத நிலையும் கலங்கல் தன்மையும் ஏற்பட்டு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களுக்கு உணவு தயாரிக்க முடியாத நிலையும் ஏற்படும். 
இந்த கழிவுகள் கடலிலுள்ள ரசாயனப்பொருட்களுடன் வேதியல் வினைபுரிந்து கொடிய நச்சுத்தன்மை பெறுகின்றன என்பதால் தொடர்ந்து அபாயம் கூடிக்கொண்டே போகிறது என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது. இந்த கழிவுகளுக்கு முக்கிய காரணமாக விளங்குபவை கார்ப்பரேட் தொழிற்சாலைகளும் கட்ற்கரையிலுள்ள நட்சத்திர ஓட்டல்களும்தான். இவை கழிவுகளை சுத்திகரிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
அப்படியே கழிவுகளை கடலில் கொட்டுகின்றன. இன்னொருபுறம் மீன்பிடிக் கார்ப்பரேட்டுகளின் கலங்கள் விடும் கழிவுகளும் இந்த மாசுக்களுக்கு காரணம் ஆகும் என்று அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இப்படிப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு புறம் இருக்க இன்னொரு அதிர்ச்சி தரும் தகவலும் வந்துள்ளன. 
தொடர்ந்து உலகளாவிய கார்ப்பரேட்டுகளின் நிர்ப்பந்தத்தினால் ஐ.நா.வின் சர்வதேச கடல் நிலப்பரப்பு அமைப்பு பசிபிக் இந்தியா மற்றும் அட்லாண்டிக் சமுத்திரங்களில் ஆழ்கடலில் உள்ள புதைந்து கிடக்கும் கனிம வளங்கள் குறித்து ஆராயவும் தோண்டி எடுக்கவும் 7 லைசன்ஸ்களை அளித்துள்ளது.
கடலின் ஆழத்திலுள்ள நிலத்தில் அரிய கனிம வளங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை பாலி மெட்டாலிக் சல்பைட்ஸ், பாலிமெட்டாலிக் மேக்னீஸ் நோடுல்ஸ் மற்றும் கோபால்ட் வளமுள்ள பெரோமேக்னீஸ் ஆகியவை. இவை கடலின் ஆழத்திலுள்ள மலைகளிலும், அகழிகளிலும், சமவெளிகளிலும் பல ஆயிரம் டன் கணக்கில் ஒட்டியுள்ளன.
இவற்றை ராட்சத எந்திரங்களை கொண்டு தோண்டி எடுக்க ஆரம்பித்தால் இதுவரை நினைத்து பார்க்க முடியாதபடி மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். 
எண்ணற்ற அரிய வளங்களையும் பூமியின் தட்பவெப்ப நிலையை சீராக பராமரிக்கும் மிக அற்புதமான பணியை செய்து வரும் கடல்களும் சமுத்திரங்களும் ஓயாத லாப வெறியினால் பெரும் குப்பைத்தொட்டிகளாகும். இதை இனியும் அனுமதிக்கலாமா...?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?