ஞாயிறு, 7 டிசம்பர், 2014

காலநிலை மாற்றம்?

"காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காலநிலை மாற்றம் என்றால் கழிவு நீரை கால்வாயில் கொட்டுவது போன்ற ஏதோ சுற்றுச்சூழல் பிரச்சனையாக சிலர் கருதுகின்றனர். தட்பவெப்பநிலை அல்லது பருவநிலை மாற்றம் என்றும் அதை புரிந்து கொள்கின்றனர்.
காலநிலை மாற்றம் என்பது ஒரு பேரழிவாகும். அது குறித்து முழுமையாக புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்."


நாள்தோறும் சூரியனிலிருந்து எவ்வளவு ஒளி ஆற்றல் பூமியின் மீது விழுகிறதோ அதற்கேற்ப பசுமை இல்ல வாயுக்கள் புவியின்வெப்பத்தை விண்வெளியில் கலக்கவிடுகின் றன. 

எடுத்துக்காட்டாக சூரியனிடமிருந்து புவியின் பரப்பின் மீது ஒரு சதுர மீட்டருக்கு 343 வாட் சூரியக் கதிர்வீச்சு விழுகிறது. 

இச்சக்தியில் 103 வாட் வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்பட்டு வான்வெளிக்கு திருப்பி அனுப்பப்படு கிறது. மீதமுள்ள 240 வாட் ஒளி ஆற்றல் பூமிக் குள் அனுமதிக்கப்படுகிறது. 

இச்சக்தியை வாயு மண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்கள் ஈர்த்துக்கொண்டு பிடித்து வைப்பதன் மூல மாகவே பூமியில் வெப்பம் நிலவுகிறது. இவ் வாறு பிடித்து வைக்கப்பட்ட சூரிய ஆற்றல் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாயு மண்டலம் மூலமாக அகச்சிவப்புக் கதிராக மாற்றப்பட்டு மீண்டும் வான்வெளிக்கே அனுப்பப்படுகிறது. 

நிலக்கரி, பெட்ரோல், நாப்தா உள்ளிட்ட படிம எரிபொருட்களின் அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகள், வாகனங்கள், நவீன சாதனங்கள் ஆகியவை வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் பூமியில் அதிகரித்துள்ளதால் வான்வெளிக்கு அனுப்ப வேண்டிய ஒளி ஆற்ற லையும் அதிகமாகப் பிடித்துக் கொள்கின்றன. 
இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து பூமி சூடாகி காலநிலையில் மாற்றங்கள் தொடங்கி விட்டன. இது குளோபல் வார்மிங் (புவி சூடேற் றம் )என்றும் அழைக்கப்படும்.காலநிலை மாற்றத்திற்கும் தட்பவெப்ப நிலை அல்லது பருவநிலை மாற்றத்திற்கும் என்ன வேறுபாடு?

 மணிக்கு மணி நாம் உணரும் வெப்ப நிலை, ஈரப்பதம் மற்றும் மழை ஆகியவை தட்ப வெப்பநிலை அல்லது பருவ நிலை ஆகும்.

ஒரு காலகட்டம் முழுவதும் அதாவது ஒராண்டு காலம் வரையிலான தட்பவெப்ப நிலையானது காலநிலை என்று அழைக்கப்படுகிறது.

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன? 

அவற்றின் பணி என்ன?

பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலத்தில் நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பல்வேறு வாயுக்கள் உள்ளன. 
இவற் றில் நைட்ரஜன் 78 விழுக்காடாகவும் ஆக்சிஜன் 21 விழுக்காடாகவும் இரண்டும் இணைந்து 99விழுக்காடாகவும் உள்ளன. மீதமுள்ள 1 விழுக்காட்டிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, நியான்,ஹீலியம்,கிரிப்பான்,சௌதான், குளோரா புளோரா கார்பன் (சிஎப்சி), ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. 

வாயு மண்டலத்தில் இவற்றின் அடர்த்தி குறைவாக இருந்தாலும் இவ் வாயுக்களின் மகத்தான பணியால்தான் மனித குலம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் இப்புவியில் வாழ முடிகிறது. 

சூரிய ஒளியை இவ்வாயுக்களே ஈர்த்து வைக்கின்றன என்பதுதான் அந்த மகத்தான பணியாகும்.காலநிலை மாற்றங்களினால் என்ன பாதிப்புகள் உண்டாகும்?பூமி சூடாவதால் தட்பவெப்ப நிலைகளில் வேகமான மாற்றங்கள் ஏற்படும். கடல் உள்ளிட்ட நீர்நிலைகள் மிகவும் வேகமான முறை யில் ஆவியாகி மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். 

பனிப்பாறைகள் வேகமாக உருகி வெள்ளப் பெருக்குகள் ஏற்படும். இந்த இரண்டுவெள்ளப் பெருக்குகளும் கடலில் சேருவ தால் கடல் மட்டம் உயரும். இதனால் கடற்கரை யோரப்பகுதிகள், கிராமங்கள், நகரங்கள் மூழ்க நேரிடலாம்.

நீளமான கோடைக்காலம், கடும் வறட்சி, அதிவேகப் புயல்தொடர்ந்து பெய்யும் கன மழை, நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி நிகழும்.

 விவசாயம் உள்ளிட்ட பல தொழில்கள் அழியும். பூமி சூடாவதால் உயிரினங்களின் இனப்பெருக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
 உதாரணமாக அக்டோபரில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும் ஒரு சில பூச்சி இனங்கள் அதற்கு முன்னரே ஜூன் மாதத்திலேயே இனபெருக்கம் செய்யலாம். 

இதனால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உயிரினங்களின் இனப்பெருக்கம் ஏற்படலாம். பூமி சூடாவதால் குழந்தைகள், முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட தொற்று அல்லாத நோயுள்ளவர் கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். 

அதிகமான மன அழுத்தங்களுக்கு உள்ளாகி மன நோயாளிகள் மேலும் சிரமங்களுக்குள்ளாவர்.

 இங்கு ஒரு சில பாதிப்புகளே குறிப்பிடப்பட்டுள் ளன. உண்மையில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மிகவும் அதிகமானவை. 

பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு கொந் தளிப்புகள் ஏற்படலாம். பூமி சூடாவதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

உலகளவில் நடைபெற்ற அறிவியலாளர்களின் மாநாட்டில் இதற்காக வரம்பு முடிவானது. 2 செல் சியஸ் என்பதுதான் அந்த வரம்பின் எல்லை.காலநிலை மாற்றத்தினை தடுக்க சர்வதேச அளவில் என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன?

காலநிலை மாற்றம் என்பது இயற்கையாக பூமியில் நடந்துள்ளது என்று கூறி அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி அடைந்த நாடுகளும் தாங்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களினால்தான் பூமி சூடாகிறது என்பதை மறைத்து திசைதிருப்பி வந்தனர். 

ஆனால் காலநிலை மாற்றம் என்பது மனிதச் செயல்பாடுகளால்தான் உருவானது என்பதை ஆணித்தரமாக அறிவியல் பூர்வமான சான்றுகளுடன் நிறுவியது காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுக்குழு. ஐபிசிசி எனப்படும் இந்தக் குழு 1988ல் உலக வானிலையியல் கழகம், ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவற்றால் நிறுவப்பட்ட அமைப்பாகும்.

 காலநிலை மாற்றம் குறித்து உலகமெங்கும் எழுந்த கவலைக்குரல்களுக்கு நடவடிக்கையாக உருவாக்கப்பட்டதே இந்தக் குழுவாகும். காலநிலை மாற்றம் குறித்து உலகமெங்கும் நடக்கும் ஆய்வு முடிவுகளை தொகுத்து மதிப்பிட்டு விசாரித்து அறிக்கையாகத் தொகுப்பதே இந்தக் குழுவின் பணியாகும். 
இந்தக் குழு இதுவரை நான்கு அறிக்கைகளை அளித்துள்ளது. 

இதனடிப்படையில் காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையே பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்துவது மற்றும் வெளியிடுவதை குறைப்பது தொடர்பாக ஒப்பந்தம் உருவானது. 

இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

 ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

சமீபத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக சீனாவும் அமெரிக்காவும் தாங்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளன. 

இந்த இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 

இதன் பின்னணியில் தற்போது நடைபெறும் பெரு மாநாட்டில் ஒரு புதிய ஒப்பந்தம் உருவாக உள்ளது.
====================================================================================================================