புதன், 10 டிசம்பர், 2014

யுனிவர்சல் சீரியல் பஸ்?யு.எஸ்.பி. எனப்படும் யுனிவர்சல் சீரியல் பஸ் இன்று பயன்படுத்தாத சாதனங்களே இல்லை என்று கூறுமளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
கணினிகளுடன் சாதனங்களை இணைப்பதில் பல்வேறு சிக்கல்களை பயனர் சந்தித்துவந்த 1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் உருவானது இத்தொழில்நுட்பம். உருவான காலகட்டத்தில் அதன் வேகம் மிகக் குறைவு.
அதன்பிறகு, நீண்ட காலத்திற்குப் பிறகு அதாவது 2000ஆம் ஆண்டுவாக்கில் மேம்படுத்தப்பட்ட யு.எஸ்.பி. 2.0 தொழில்நுட்பம் வெளியான பிறகே அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்தது.

இது வெளியானபிறகே பிளக் அண்ட் பிளே எனப்படும் கணினியில் இணைத்தவுடன் பயன்படுத்தத் தொடங்கிடும் முறை உருவாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
(இந்த வசதி வருவதற்கு முன்பாக எந்த சாதனத்தை கணினியுடன் இணைத்தாலும் ரீஸ்டார்ட் செய்துதான் சாதனத்தை இயக்க நிலைக்கு கொண்டு வரமுடியும்.
 அதேபோல சாதனங்களுக்கு ஏற்ப அதன் கனெக்டர்களும் பல்வேறு வடிவமைப்புகளில் கணினியில் பொருத்தவேண்டிய தேவையும் அன்றிருந்தது.)இன்று பல பரிமாணங்களை அடைந்துள்ளது இத்தொழில்நுட்பம். 
இதன் இயக்க வேகம் மேம்பட்டிருக்கிறது. பல்வேறு வடிவ கேபிள் இணைப்புகள் உருவாகியிருக்கின்றன.இன்று வீட்டுக் கணினியானாலும், லேப்டாப், டேப்லட், கைபேசி என அனைத்திலும் யு.எஸ்.பி. இணைப்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
லேப்டாப் மற்றும் மேசைக் கணினி எதுவானாலும் குறைந்தது 4 யு.எஸ்.பி. இணைப்பாவது அவற்றில் இருக்கும்.ஒலி, ஒளி நாடா கேசட்டுகள், சிடி/டிவிடிக்களின் வருகையால் காலாவதியானது. 
அதற்கடுத்த வந்த பென்டிரைவ்கள் 2 ஜிபி, 4ஜிபி,8ஜிபி, 16ஜிபி,32ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி என்று உயர்ந்து கொண்டிருக்கும் நினைவக அளவுடன், எளிதில் எங்கும் எடுத்துச் செல்லத்தக்கதாகவும், பல நூறு முறை அழித்துப் பதிவு செய்யும் வகையில் இருப்பதும், பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருப்பதால் பென்டிரைவ்களின் வருகை சிடி/டிவிடிக்களின் ஆயுளைப் படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது.
யு.எஸ்.பி. பென்டிரைவ்கள், யு.எஸ்.பி. இண்டெர்நெட் டேட்டா கார்டுகள் என யு.எஸ்.பி.யின் பயன்பாடும் வளர்ச்சியும் கணினியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
யு.எஸ்.பி.2.0 வெளியான பத்தாண்டுக்குப் பிறகு யு.எஸ்.பி. 3.0 அறிமுகமானது. இது தற்போதுதான் அதிகமாக புழக்கத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இம்முறை இதன் வேகம் 5 ஜி.பி. அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. 
இதற்கடுத்து யு.எஸ்.பி. 3.1 தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இவ்வரிசைத் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாட்டிற்கு வர சிறிது காலமாகலாம்.இதே நேரத்தில் கம்பியில்லா இணைப்பு முறைகளும் ஒருபக்கம் மிகுந்த வேகத்துடன் வளர்ந்து வருகின்றன.
இன்ஃபிராரெட், புளூடூத், ஒய்ஃபீ என்று அவையும் மாறிவருகின்றன. யு.எஸ்.பி. இணைப்புகள் எங்கும் நிறைந்திருந்தாலும் இதற்குப் போட்டியாகவும் சில தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன.ஃபயர்வொயர் எனப்படும் ஒரு இணைப்புத் தொழில்நுட்பம் ஆப்பிள் நிறுவனக் கணினி சாதனங்களில் பயன்படுத்தப்பட்டது. 
இதற்கு அடுத்து தண்டர்போல்ட் என்று தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இத்தொழில்நுட்பங்கள் யு.எஸ்.பி. தொழில்நுட்பத்தைவிட அதிகம் பயன்மிக்கவை, வேகத்திலும் பன்மடங்கு அதிகமானவை.
ஆனால், இவற்றை இணைப்பதற்கான கேபிள் மற்றும் கனெக்டர்களை நிறுவுவதற்கு அதிகமாக செலவாகும். 
இதன் காரணமாகவே வேகம் குறைந்தாலும் எளிமையான யு.எஸ்.பி. கனெக்டர் தொழில்நுட்பமே உலக அளவில் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.குறிப்பாக சமீபகாலமாக அறிமுகமாகி வரும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கார்களில், உள்ள ஆடியோ மற்றும் வீடியோ இணைப்புகளில் அதிகளவில் யுஎஸ்பிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கணினி மட்டுமின்றி பல்வேறு தகவல் தொழில் நுட்ப சாதனங்களிலும் யுஎஸ்பிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
பென் டிரைவ், சார்ஜர், டேப்லட், ஸ்மார்ட்போன், பிரிண்டர், கீபோர்டு, மௌஸ், நெட்வொர்க் சாதனங்கள் என இன்னும் பல வகையான சாதனங்களையும் அவற்றின் பயன்பாட்டையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது யு.எஸ்.பி. தொழில்நுட்பம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செவ்வாய் கிரகத்தில் 

பிரம்மாண்டமான ஏரி

நாசா  தகவல்செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி இருந்ததாக நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த 2010 ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் கிரேட்டர் பகுதியில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 
இதைத்தொடர்ந்து 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் பூமத்திய ரேகைக்கு அருகே விண்கல் ஒன்று மோதியதால் 96 மைல் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட பள்ளம் உருவானதை கியூரியாசிட்டி படம் எடுத்து அனுப்பி உள்ளது. 
இதன் மூலம் பூமியில் உயிரினங்கள் வாழ்வது போல் செவ்வாயிலும் வாழ இயலும் என்பதற்கான ஆதாரமாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உட்புற சூரியக் குடும்பத்தில் உள்ள செவ்வாய், பூமி போன்ற கிரகங்கள் விண்ணில் வலம் வரும் பாறைகள் மீது மோதி சிறியதும் பெரியதுமான பள்ளங்கள் உருவாக்குவது தொடர்ச்சியாக நடக்கக் கூடிய ஒன்று தான் என்றாலும் தாக்குதலுக்கு உள்ளான பிறகு என்ன நடந்தது என்பதே முக்கியமாக உள்ளது. 
தற்போது அதற்கு முக்கிய சான்று கிடைத்துள்ளது. 3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் என்ற மலையில் இருந்து வரும் நீரானது கேல் பள்ளத்தாக்கில் மையப்பகுதிக்கு வந்து சேர்கிறது. 
இதனால் அடுக்கடுக்கான படிவப்பாறைகளால் அடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்ட கேல் பள்ளத்தாக்கு தற்போது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தற்போது கியூரியாசிட்டி விண்கலம் மவுண்ட் ஷார்ப் மலையின் மீது ஏறத் தொடங்கி உள்ளது. 
இதனால் அந்த மலையின் ஒவ்வொரு அடுக்கும் எவ்வாறு உருவானது. 
அது உருவான நேரம் மற்றும் அப்போதிருந்த புவியியல் நிலைமைகளை அதனுள்ளே கொண்டுள்ளது.எனவே ஒவ்வொரு அடுக்கும் செவ்வாய் கிரகத்தின் வரலாற்றின் ஒரு பக்கமாக உள்ள நிலையில், ஒரு காலத்தில் வெது வெதுப்பாகவும் ஈரப்பதத்துடனும் காணப்பட்ட செவ்வாய் கிரகம் தற்போது உலர்ந்து போனதற்கான காரணம் குறித்து அறிய ஆய்வாளர்கள் முயற்சித்து வருகின்றனர். 
இது குறித்த ஆய்வுகளுக்காக 2.3 பில்லியன் டாலர்கள் செலவாகுமென எதிர்பார்ப்பதாக ஜான் குரோட்ஜிங்கர் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

                                                                                                                நன்றி:தீக்கதிர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------