மக்களே போல்வர் கயவர்.
தருண் விஜய் வகையறாவுக்கு அய்யன் வள்ளுவர் அன்றே சொன்னது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரி கையான “பாஞ்ச சன்யா”வின் நெடுநாள் ஆசிரியரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான தருண் விஜய் கன்னியாகுமரி யிலிருந்து சென்னை வரை ‘திருக்குறள் திருப்பயணம்’ மேற்கொண்டுள்ளார்.
திருக்குறளை பரப்புவதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
திருக்குறளை ஏற்கனவே தமிழ்மக்கள் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
அவர் இந்த பயணத்தை தமிழகத்தில் நடத்துவதற்கு பதிலாக, பாஜக தலைமைஅலுவலகம் அமைந்துள்ள தில்லியி லிருந்து ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூர் வரைநடத்தியிருந்தால் அவர்கள் திருக்குறளைதெரிந்து கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும்.திருவள்ளுவரை மட்டுமின்றி, புதுவை யில் பாரதிதாசன், தூத்துக்குடியில் வஉசி,எட்டயபுரத்தில் மகாகவி பாரதி மற்றும் செய்குத்தம்பி பாவலர் என்று தமிழ் புலவர்கள், அறிஞர்கள் யாரையும் விட்டுவைக்காமல் அவர்களது அருமை பெருமைகளை எடுத்துக்கூறி புல்லரித்து போர்வை யை எடுத்து போர்த்திக்கொள்கிறார்.
இவர் திருவள்ளுவரை விட பெரியவர் போல ஆங்காங்கே போற்றிப் பாடவும் சிலர் கிடைத்திருக்கிறார்கள்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம்,சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே, மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே” என்றெல்லாம் பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன்.
மக்களை மருட்டு கின்ற மதவெறிக்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய இடத்திற்கே வந்தது குறித்து பாரதிதாசன் இப்போதிருந்தால் வருத்தப்பட்டிருப்பார்.
அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதேசி கப்பல் ஓட்டியவர், தூத்துக்குடியில் தொழிற்சங்கம் அமைத்தவர் இதன் காரணமாகவே செக்கு இழுத்தவர் வஉசி.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வை குடியரசு நாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து நாட்டின் பொதுத்துறைகள் அனைத்தையும் அவருக்கு பக்குவமாக பந்தி வைக்கிற திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் திரு வாளர் தருண் விஜய்.
அதுமட்டுமின்றி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உரிமைகள் வழங்கும் தொழிற்சங்க சட்டங்களையெல்லாம் முதலாளிகள் மனம் குளிரதிருத்திக் கொண்டிருக்கிற மோடி அரசை இயக்குகிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூளைகளில் ஒன்றுதான் தருண் விஜய்.வஉசியின் புகழைப் பாடவும் குறைந்த பட்ச தேசபக்தி வேண்டும் தருண் விஜய் அவர்களே!“
எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிரை, எல்லோரும் ஓர் விலை,எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று பாடியவர் சுதேசி கவிஞர் பாரதி.
ஆனால், “சதுர் வர்ணம், மாயா சிருஷ்டம்“ அதாவதுநான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன். நானே நினைத்தாலும் அதைமாற்ற முடியாது என்று பகவான் கிருஷ் ணன் பகர்ந்ததாக கட்டப்பட்டுள்ள பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று பேசும் கூட்டத்தைச்சேர்ந்த தருண் விஜய் போன்றவர்களைத் தான்
“ நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி, வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி” என்றுஅன்றைக்கே பாரதி சாடிவிட்டு போயிருக் கிறான்.
திருக்குறளின் இந்திய மொழிப் பெயர்ப்பை படித்துவிட்டுத்தான் தமக்கு அந்த நூலின் மீதும், திருவள்ளுவர் மீதும்தாளாத காதல் வந்துவிட்டதாக, இல.கணேசன், தமிழிசை போன்றவர்கள் எழுதிக் கொடுத்த வசனத்தை ஊர் ஊராகப் பேசி வருகிறார்
தருண் விஜய்.அவர் இன்னமும் படிக்க வேண்டிய குறள்கள் ஏராளம் உண்டு.
குறிப்பாக ‘கயமை’ என்ற அதிகாரத்தை படித்தால் தருண் விஜய் அதிர்ச்சியடைவார்.
அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் எதிர் காலத்தில் வேடம் போட காத்திருக்கிற ஆர்எஸ்எஸ் அமைப்புக்காகவே எழுதப் பட்டது போன்று இருக்கும்.
அந்த அதிகாரத்தில் முதல் குறள் இதுதான்:
" மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பார் யாம்கண்டது .
கயவர்களும் மக்களைப் போலவே காணப்படுவார்கள்.
கயவர்களும், மக் களும் ஒத்திருப்பதுபோன்ற ஒற்றுமையை நான் எங்குமே கண்டதில்லை என்பது தான் இதன்பொருள்.
வடமொழியான சமஸ்கிருதமே தெய்வமொழி. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி களும் நீச மொழி என்று சொல்லித்தரும் ஆர்எஸ்எஸ் பள்ளிக்கூடத்தில் அரிச் சுவடி படித்த தருண் விஜய், பாரதியார் போல வேடமிட்டு “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடித்திரிகிறாரே,
இவருடைய நடிப்பாற்றலைக் காண நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்போது இல்லையே என்றுஏக்கம் வருகிறது.
தசாவதாரம் கமல ஹாசன் கடுமையாக ஒப்பனை செய்து பத்து வேடங்களில் நடித்திருப்பார்.
ஆனால் ஒரே முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு தருண் விஜய் நடிக்கும்நடிப்பு அந்த கலைஞானியையே வெட்கப் பட வைத்துவிடும்.
அதே கயமை அதிகாரத்தில் கடைசிக் குறளில் வள்ளுவர் கூறுகையில் ஒரு துன்பம் ஏற்படும் போது கயவர்கள் தம்மை விலையாக விற்றுவிடவும் தயங்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருப்பார்.
விடுதலை போராட்ட காலத்தில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடிவந்ததருண் விஜய்யின் முன்னோடிகளைத் தான் வள்ளுவர் இப்படிச் சித்தரித்தார் போலும்.
“தன்னெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்சே, தன்னைச் சுடும்“ என்பதும் வள்ளுவர் வாக்கு.
தனக்கு திருமணம் ஆனதையே மறைத்துவேட்புமனு தாக்கல் செய்த பெருமக்க ளெல்லாம் பெரிய பொறுப்புகளில் இருக்கிற காலமிது.
ஆனாலும் அவர்களது நெஞ்சம் வருந்தியதாகத் தெரியவில்லை. இந்த இடத்தில் வள்ளுவரே தோற்றுப்போய் நிற்கிறார்.
உழவை உயர்த்தி பாடியவர் வள்ளுவர். ‘உழன்றும் உழவே தலை’ என்பது அவரதுவார்த்தை. அவர் அத்துடன் நில்லாமல்என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே என்று சோம்பித் திரிபவரைக் கண்டு, நிலம் எனும் நல்லாள் சிரிப்பாள்.
ஏனென்றால் என்னைவைத்து பிழைக்கக் கூடாதா என்று நிலம் நினைப்பதாக எழுதியிருப்பார் வள்ளுவர்.
ஆனால் இன்றைக்குமத்திய பாஜக அரசாங்கம் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்தி உழவர் களின் ஒப்புதல் இன்றியே அவர்களது நிலத்தை பறிக்க ஏற்பாடு செய்கிறது.
இந்தக் கொடுமையைக் கண்டு நிலம் எனும் நல்லாள் நடுங்குவதை, அரற்றி அழுவதை அறிவாரா பாஜக எம்.பி.? மகாத்மா காந்தியை படுகொலை செய்தகோட்சேவுக்கு கோயில்கட்ட புறப் பட்டிருக்கிறது ஒரு கூட்டம்.
கூடா நட்புஎன்ற அதிகாரத்தில் வள்ளுவர் “தொழுத கைஉள்ளும் படைஒடுங்கும், ஒன்னார் அழுதகண்ணீரும் அனைத்து” என்று பாடியிருப்பார். பகைவர் வணங்கி தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கக் கூடும். அதுபோல அவர்கள் அழும் கண்ணீரும் அவ்வாறானதே என்பதுஇதன் பொருள்.
அன்றைக்கு அண்ணல்காந்தியை, அந்த அகிம்சா மூர்த்தியை கொலை செய்வதற்கு முன்னால் கோட்சேவும் கூடகுனிந்து வணங்கிவிட்டுத் தான் துப்பாக்கியை எடுத்து சுட்டு அவரை வதம் செய்து முடித்தான்.
இதை வள்ளுவர்அன்றைக்கே உணர்ந்தது மட்டுமல்ல, கோட்சேயின் வாரிசுகள் இன்றைக்கு காந்தியை புகழ்வது போல அழுது நடிப் பதையும் புரிந்தே வைத்திருக்கிறார் போலும்.
இதில் தமிழ் எங்கே ? |
சாதி அமைப்பை நிலைநிறுத்த வேண்டும், இந்தியாவை ஒற்றைப் பண்பாடு டைய நாடாக மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்கள் இன்றைக்கு தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே மாரீசமான் வேடமிட்டு வந்து கொண்டிருக் கிறார்கள்.
இவர்களிடம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்பதற்காக அதே கூடா நட்பு அதிகாரத் தில் வள்ளுவர் எச்சரித்து விட்டு போயிருக்கிறார்.
முகத்தில் சிரிப்பை வைத்துக் கொண்டு மனதிற்குள் தீய நோக்கத்தை பதுக்கிக் கொண்டு வரும் வஞ்சகர்களிடம் நட்பு கொள்ளாதிருக்க வேண்டும் என்று பொருள்படும் குறளை தமிழ்மக்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வள்ளுவ நெறி. ஆனால் பிறக்கிற போதே ஒருவர் இந்துவாக மட்டுமல்ல,
அவரவர் சாதியோடும் பிறக்கிறார். மதம் மாறினாலும் சாதி மாற முடியாது என்ற பிற்போக்குத் தத்துவம்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆரம்ப பாடம். இன்றைக்கு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி, மிரட்டி மதமாற்றம் செய்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் பரிவாரம்.
வள்ளுவருக்கு உரை எழுத வந்திருக்கும் பாஜக தலைவர் தருண் விஜய், சாதி என்று ஒன்று இல்லை, பிறக்கிற போது எல்லோரும் ஒரேமாதிரிதான் பிறக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறாரா?
அப்படி ஏற்றால் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொடரமுடியாது. தன்னுடைய வழிகாட்டி கோல் வால்க்கரா, வள்ளுவரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” என்று நல்லதொரு நாட்டுக்கு இலக்கணம் வகுத்தார் எங்கள் வள்ளுவர்.
ஆனால் இந்திய மக் களை பசி விரட்டுகிற, பிணி துவைக்கிற ஒரு நாட்டைத்தான் இன்றைக்கு பாஜக படைத்துக் கொண்டிருக்கிறது. துறவுக்கு பொருள் சொன்ன வள் ளுவர் பற்று அற்று இருப்பதே துறவு என்றார்.
ஆனால் ஆர்எஸ்எஸ் ஆதரவு சாமியார்கள் பலரும் சுவிட்சர்லாந்து வங்கிகளில்கள்ளப்பற்றுக்கணக்கு வைத்திருக் கிறவர்கள்தான்.வள்ளுவம் என்பது வெறும் வரிகளால் ஆனது அல்ல.
அது ஒரு வாழ்க்கை முறை.தருண்விஜய் அங்கம் வகிக்கும் ஆர்எஸ் எஸ் சித்தாந்தத்திற்கு ஒவ்வொரு குறளும் எதிராகவேயிருக்கிறது. திருக்குறளில் கொல்லாமை என்று ஒருஅதிகாரமும் உண்டு.
எந்தவொரு உயிரையும் கொல்லாமல் இருப்பதுதான் மிகச் சிறந்த அறம் என்று பத்துக் குறள்களிலும் முத்தாகச் சொல்லியிருப்பார் வள்ளுவர். விலங்குகளைக் கூட கொல்லக்கூடாது என்பது வள்ளுவர் வாக்கு. குஜராத்தில் சகமனிதர்களையே கொன்று குவித்தவர்களிடம் இந்த குறள்களை மொழிபெயர்த்துக் கொடுக்க ஏற்பாடு செய்வாரா தருண் விஜய்.
கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்கு மலர் தூவிவிட்டு
அவரது கொள்கைகளுக்கு குண்டு வைக்க வேடமிட்டு வருபவர்களிடம்
தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களுக்கு எதிராக பாஜக காலூன்றவும்,திருவள்ளுவரை இந்துத்துவா கடலில் கரைக்கவும்
ஆர்.எஸ்.எஸ் .திட்டத்தின் ஒரு வழிதான்
தருண் விஜயின் திடீர்
திருவள்ளுவ,தமிழ் பாசம்.
நனறி:தீக்கதிர்.