"அ[ம்மா] ணி வகுப்பு"?
குடியரசு தின விழாவில் மக்கள் பார்த்து மகிழ்வது அலங்கார ஊர்திகளின் அணி வகுப்புதான்.
ஆனால் அது இந்த ஆண்டு "அம்மா அணிவகுப்பு" ஊர்வலமாக மாறிப்போனது"
குடியரசு தின விழாவை முன்னிட்டு, அரசின் சாதனைகளை விளக்கும் வாகனங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த அரசுத் துறை வாகனங்கள் அனைத்திலும், ஜெயலலிதா படங்களே இடம் பெற்றிருந்தன.
ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றிருந்தது மாத்திரமல்ல; ஒரு வாகனத்தில் கூட தற்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் படம் இடம் பெறவில்லை.
அரசுத் துறை அதிகாரிகள் யாரும், அவரை முதல் அமைச்சராகக் கருதி ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த அளவுக்குத் தான் தமிழக அ.தி.மு.க. அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கடந்த 25-11-2014 அன்று தமிழக நாளேடுகளில் ஒரு செய்தி வந்தது. அதாவது அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், திட்டங்கள், பாடப் புத்தகங்கள், இணைய தளங்கள் என அனைத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் படங்கள் வேண்டுமா என்ற கேள்வியுடன் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர் தம்பி டி.ஆர்.பி. ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய முதல் அமர்வு விசாரித்து அளித்த உத்தரவில், "அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டிடங்களில் யார் யாருடைய புகைப்படங்ளை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணைகள் 1978, 1981, 1990இல் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்தில், சட்டசபைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பாணையில், முன்னாள் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைத் தொகுதி, காலியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறிய அரசாணைகளை மனதிலே கொண்டு, மனுதாரர் அனுப்பிய மனு மீது, ஒரு மாதத்துக்குள், அரசு உயர் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு இவ்வாறு ஒரு மாதத்துக்குள், அரசு உயர் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, ஒரு மாதத்திற்குப் பதிலாக இரண்டு மாதங்கள் முடிவடைந்த போதிலும், அரசு உயர் அதிகாரிகள் இந்தத் தீர்ப்பு பற்றி என்ன முடிவெடுத்தார்கள் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு பதில் அளிப்பது போல, குடியரசு தின அணிவகுப்பில் வந்த வாகனங்களில், சொத்துக் குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, முதலமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்து விட்ட ஜெயலலிதாவின் படங்களை இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தினால் ஜாமீனில் வெளியே வந்து, அவரது மேல் முறையீட்டு வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நேரத்தில் இப்படியெல்லாம் அரசு நிகழ்ச்சியில் தண்டனை பெற்ற ஒருவரின் படங்களைக் காட்சியாக்கி வெளியிட்டிருப்பது சட்டப்படி சரியானதுதானா?
அரசின் பல்வேறு துறைகள் சார்பாக இடம் பெற்ற இந்த அலங்கார ஊர்திகள் அத்தனையிலும் ஜெயலலிதாவின் படங்கள்தான் பிரதானமாகக் காட்சி அளித்தன. கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் படங்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன.
ஆனால், இந்த முறை அதை விட அதிகம். நீதிமன்ற தண்டனைக் குள்ளாக்கப்பட்டது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. ஜெயலலிதாவின் படத்தை அப்பட்டமாக குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகளில் போட்டிருந்தார்கள்.
ஆனால் ஓர் ஊர்தியில் கூட கவர்னரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் படமே இல்லை. செய்தித் துறையும், காவல்துறையும் அடித்த சிங்கியும் அதிகம்.
ஒரு தண்டனை பெற்ற ,சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவியை கூட பிடுங்கப்பட்டவரின் படம் வைப்பது எவ்வளவு பெரிய கேவலம் அதுவும் சட்டம்&ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறைக்கு.
TASMAC நிறுவன விளம்பர ஊர்தியில் வைத்தால் கூட ஒரளவு அதன் வளர்ச்சிக்கு பாடு பட்டவர் என்ற அங்கலாய்ப்பில் சமாதானம் கொள்ளலாம்.
. அடுத்து வந்த அலங்கார ஊர்தியின் முகப்பில் "வாய்மையே வெல்லும்" என வார்த்தை பொறிக் கப்பட்டிருக்க.... பல அதிகாரிகளும் ,பார்வையிட வந்த மக்களும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள்.
பள்ளிக் கல்வித் துறை அலங்கார ஊர்தியின் முகப்பில், "மக்களுக்காக நான், மக்களால் நான்" என்ற ஜெயலலிதாவின் வாசகத்தை பெரியஅளவில் போட்டு, அதன் கீழ் ஜெயலலிதாவின் பெயரையும் எழுதியிருந்தார்கள்.
மின்சாரத் துறையின் அலங்கார ஊர்தியில் "மின் மிகை மாநிலம் இலக்கை நோக்கி தமிழகம்" என வாசகம் பொறிக்கப்பட்டிரு ந்தது.
இப்படி வரிசையாக வந்த 24 அலங்கார ஊர்திகளிலும் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்றிருக்க, கடைசியாக வந்த ஓர் ஊர்தியில் மட்டுமே ஜெயலலிதா படம் மிஸ்ஸிங்.
அது தேர்தல் துறையின் ஊர்தி.அவரகள் கூட விமர்சனம் அதிகம் வரும் என்ற பயத்தில்தான் தவிர்த்திருப்பார்கள்.
இந்த அணி வகுப்பில் உச்சபட்ச விசுவாசத்தைக் காட்டியது செய்தித் துறை தான். அரசு நிகழ்ச்சி நிரல் புத்தகத்திலே ஜெயலலிதாவின் பெயரை அப்பட்டமாகச் சொல்லி, "மாண்புமிகு" என்ற அடைமொழியையும் சேர்த்திருந்தார்கள்.
"மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் லட்சியம்" என்றும், "மக்களின் முதல்வர் மாண்புமிகு அம்மா" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நிரல் புத்தகத்திலும் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயர் இல்லை" என்றெல்லாம் அந்த கட்டுரை நீளுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இதே குடியரசு தின விழாவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வந்த போது, அவருடைய கார் மக்கள் காத்திருக்கும் தூரம் வரை சென்று மக்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து விட்டு, அதன் பிறகுதான் குறிப்பிட்ட இடத்திலே வந்து அமர்ந்தார்.
இது எல்லா ஆண்டுகளிலும் முதல்வராக இருப்பவர்கள் செய்வதுதான்.
ஆனால் இந்த ஆண்டு முதல்வர் மக்களைப் பார்த்து வாழ்த்துச் சொல்லும் நிகழ்ச்சியையே ரத்து செய்ததோடு, நிகழ்ச்சி நிரலில் இருந்தே அதை எடுத்து விட்டார்கள்.
இந்தச் செய்தியை "நக்கீரன்" இதழும் உறுதி செய்திருப்பதோடு, அலங்கார ஊர்திகளில் யாருடைய படம் வைக்கலாம் என்று அரசின் ஆலோசகர் கார்டனில் கேட்க, அங்கிருந்து வந்த உத்தரவின்படியே ஜெயலலிதா படம் இடம் பெற்றது என்று அதிகாரிகள் தரப்பு கூறியதாகவும் தெரிவித்திருக்கிறது.அதுபோலவே நிகழ்ச்சி முடிந்து முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா புறப்படுவதற்கு முன்பு, அனைத்து அமைச்சர்களும் அவர் அருகே வந்து வழியனுப்புவார்கள்..
ஆனால் இந்த ஆண்டு முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட போது, எந்த அமைச்சரும் அவர் அருகிலே கூட வரவில்லை. இன்றைய ஆட்சியில் நிர்வாகம் முதல் பாரம்பரிய நடை முறைகள் வரை எல்லாமே மனம் போன போக்கில் தாறுமாறாக என்னவெல்லாம் நடக்கிறது. அ தற்கு இவைகள் உதாரணங்கள்.ஆனால் இதை கண்டு கொண்டு கண்டிக்க வே ண்டிய நிலையில் அதிகாரம் உள்ள நீதித்துறையும்,ஆளுனரும் மக்களின் முதல்வர் செயல்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் இன்றைய நிலை.எல்லா முக்கிய பொறுப்பும் உள்ள மத்திய அமைச்சரே ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்ட ஒரு முன்னாள் முதல்வரை எந்த வித தேவையும் இல்லாத நிலையில் சந்தித்து பேசி செல்வது நீதி எவ்வாறு வரும் என்பதற்கு கட்டியம் கூறுகிறதே .
========================================================================.