சனி, 31 ஜனவரி, 2015

இதய நோயை கட்டுபடுத்த...., உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு
நம்மிடையே இல்லை.
ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர்.
2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் .
இதய நோய் உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.
 இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள் அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றி இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தரும் இந்த இதய வழிகாட்டி நம் உயிர் காக்கும் தோழன்!

இதயம்

மனிதனின் நெஞ்சுக்கூட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் உறுப்பு, இதயம். இதை வலது மற்றும் இடது புறம் என இரண்டாகப் பிரிக்கலாம். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.
நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் ரத்தம் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.
 இதயம் ஒரு பம்ப் போன்றது. தசையால் ஆன பம்ப் என்றும் சொல்லாம்.
கார்பன்டைஆக்ஸைடு நீக்கப்பட்டு, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரத்தம், நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வருகிறது. இதயம் துடிப்பதன் மூலம், நல்ல ரத்தம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் செல்லும் இந்த ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தைப் பயன்படுத்திவிட்டு, கார்பன்டைஆக்ஸைடை வெளியிடுகிறது. இந்த அசுத்தமான ரத்தம் மீண்டும் இதயத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து இதயம் துடிப்பதன் மூலம் நுரையீரலுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
இப்படித் தொடர்ச்சியாக இதயத்தின் வழியே ரத்தச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.


இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன.
இவைதான், தேவையான நேரத்தில் ரத்தத்தை சரியான பாதையில் இதயத்துக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. இதயம் சரியாகச் செயல்பட, பிறவியிலேயே இந்த வால்வுகள் சரியான முறையில் உருவாகியிருக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் சரியான நேரத்தில் வால்வுகள் திறந்து ரத்தத்தை வெளியேற்ற முடியும். வால்வுகள் மூடிய பிறகு கசிவு இல்லாமலும் இருக்கும்.

துடிப்பு

தாயின் கருவறையில் ஆறாவது வாரத்தில் தொடங்குகிறது குழந்தையின் இதயத் துடிப்பு.

சராசரியாக இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கிறது.
வயது, பாலினத்துக்கு ஏற்ப இதயத் துடிப்பின் அளவில் மாற்றம் ஏற்படும். இதயம் சுருங்கி விரிவது ஒரு தொடர் செயல்முறை. இதயம் சுருங்கும்போது இதயத்தின் வென்ட்ரிக்கிள் சுருங்குகிறது.
இதனால் ரத்தமானது நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.
இதயம் விரிவடையும் போது இதய அறைகள்  மீண்டும் ரத்தத்தால் நிரம்புகின்றன.

 மின் பாதை

இதயம் தானாகத் துடிப்பது இல்லை.
அது இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை.
இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் ‘சைனஸ் நோட்’.
 இங்கிருந்துதான் இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒன்று அதிவேகமாகத் துடிக்கும்,
அல்லது தேவைக்கும் குறைவாகத் துடிக்கும். இதை சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.

இதய நோய்கள்

1. பிறவியிலேயே ஏற்படுவது (congenital),

2. பிற்காலத்தில் ஏற்படும் நோய் (Acquired)

பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாகவே, குழந்தைகளுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு, ரத்தக் குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வயதான காலத்தில் ஏற்படுகிறது.

இதய நோய்களை ரத்தக் குழாய் நோய்கள், இதய ரிதம் பிரச்னைகள் (அரித்மியா) மற்றும் பிறவிக் குறைபாடு என்று மூன்றாகப் பிரிக்கலாம். பொதுவாக, இதய ரத்தக் குழாய் (கார்டியோவாஸ்குலர்) பிரச்னையால் ஏற்படக்கூடிய பாதிப்பையே, இதய நோய்கள் என்று அழைக்கிறோம்.

ரத்தக் குழாய் குறுகி அல்லது அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, நெஞ்சுவலி அல்லது பக்கவாதம் ஏற்படுவதையே கார்டியோவாஸ்குலர் நோய்கள் என்கிறார்கள்.
தவிர, இதயத் தசைகள் அல்லது வால்வு பாதிப்பு, சீரற்ற இதயத் துடிப்பு போன்றவற்றாலும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான இதய நோய்களை வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தடுக்க முடியும்.

சிகிச்சை கள்


இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு, தன்மையைப் பொறுத்து சிகிச்சை முறைகளும் மாறுபடும்.
ஆரம்பநிலைப் பாதிப்பு என்றால், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே உங்கள் இதயம் கெட்டியாகிவிடும்.
 சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களைத் தாண்டி தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதன் தீவிரத்தைப் பொறுத்து எந்த மாதிரியான அறுவைசிகிச்சை என்பதை முடிவு செய்வார்கள்..

 தவிர்க்க எளிய வழிகள்:


ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப்பின்பற்றுவதன் மூலம் நாம் இதய நோயில் இருந்து மீளலாம். கெட்ட கொழுப்பு உடலில் சேரவிடாத அளவு பார்த்துக்கொண்டால் இதய நோய் வராமலேயே கூட நம்மால் தவிர்க்க முடியும்.


========================================================================
 நாகேஷ்
நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.
தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள்.
தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.

தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.

நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.
மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

1959-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார்.
 தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார்.
இது மிகவும் வெற்றிப்படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர்.

அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.

தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் நாகேஷ்.
தான் சந்திக்கும் பிரமுகர்களிடம் கமல்ஹாசனை பாராட்டி ஒரு வார்த்தையாவது பேசிவிடுவார்.
கமல்ஹாசனும் நாகேஷ் மீது அன்பும்,மரியாதையும் கொண்டிருந்தார்.
 ரொம்ப நாட்களுக்குப்பின்னர் கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில்  வில்லனாகநாகேஷ்  தோன்றினார்.
அதற்குப் பின்  மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றபல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.
கமல்ஹாசனுடன்" நம்மவர் "படத்தில் நடித்தார்.அவரின் நடிப்பு பார்த்தவர் கண்களில் கண்ணீரை வரவைக்கும் விதமாக இருந்தது.அப்படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
 நாகேஷ் நடித்த கடைசிப்படம் தசாவதாரம் ,
 இதுவும் கமலஹாசன் படம்தான் .
 நாகேஷ் உடல்நிலை சரியின்றி  2009-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி காலமானார்.
=========================================================================

 நாம் என்று சாவோம் ?

மனிதன் பிறக்கும் போதே இறக்கும் நாள் தெரியாது,ஆண்டவன் என்றைக்கு என்னை எடுத்துக்கொள்வான் என்றும்  இனி தத்துவம் பேச முடியாது.
நாம் எவ்வளவு காலம் வாழ்வோம், ஒரு மனிதன் எப்போது உயிரிழப்பான் என்பதற்கு விடையளிக்கும் புதிய உயிரி கடிகாரத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
 எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோர் 14 வருடங்களுக்கு மேலாக, வயதான மனிதர்கள் 5,000 பேரை கண்காணித்து நான்கு விதமான ஆய்வுகளை நடத்தினர்.
 டி.என்.ஏ.வில் நடைபெறும் மெத்தைலேஷன் என்ற வேதியியல் மாற்றங்களை வைத்து தனி மனிதனின் உயிரியல் வயதையும், தற்போது அந்த குறிப்பிட்ட மனிதரின் வயதையும் விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

அதில் உண்மையான வயதும், உயிரி வயதும் ஒரே மாதிரியாக இருப்பவர்களை காட்டிலும், உண்மையான வயதை விட உயிரி வயது அதிகமாக இருப்பவர்கள் மரணத்தை விரைவில் நெருங்குகிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
ஒவ்வொரு நபரின் உயிரி ஆயுளும் அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் இருந்து கணக்கிடப்பட்டது.
பின்னர் அவர்கள் அனைவரும் ஆய்வின் போது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டனர்.

இந்த ஆய்வு குறித்து  ரிக்கார்டோ மரியோனி கூறுகையில், நான்கு ஆய்வுகளின் படி உயிரி கடிகாரத்தின் வயதும், புகை பிடித்தல், டயாபட்டீஸ் மற்றும் இதய நோய் காரணமாக இறந்தவர்களின் வயதும் ஒத்திருந்தது என கூறினார்.

=====================================================================