வரலாற்றை[?] திணிப்பதற்கான முயற்சி

“மிக விரைவில் இந்தியாவில் பாடப்புத்தகங்களையெல்லாம் அரசாங்கம் மாற்றியமைக்கப்போகிறது என ஒரு பரவலான கருத்து உலவி வருகிறது. நமது பள்ளிக்கூடங்களில் பயிலும் கோடிக்கணக்கான குழந்தைகளிடையே தப்பும் தவறுமான - முற்றிலும் பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய வகையிலான வரலாற்றை திணிப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதை ஒருக்காலும் ஏற்க முடியாது”
- கடுமையான இத்தகைய வார்த்தைகளோடு கூடிய தீர்மானத்தை நிறைவேற்றி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை எச்சரித்திருக்கிறது,
 இந்திய வரலாற்றுக் காங்கிரசின் 75வது மாநாடு.
‘வரலாற்றைத் திரிக்காதே!’
இந்திய வரலாற்று காங்கிரஸ் (ஐஎச்சி) எனும் இந்தமாபெரும் அமைப்பு 1935ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
இது, இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று அறிஞர்கள் மற்றும் தலைசிறந்த அறிவுஜீவிகளைக் கொண்ட மிகப்பெரும் அமைப்பாக திகழ்ந்து வருகிறது. இந்திய வரலாற்றியல் ஆய்வில் முன்னோடிகளாகத் திகழும் அறிஞர்களின் ஆய்வுகளோடும் வழிகாட்டுதலோடும் இந்திய அறிவுலகில் மிக முக்கியப் பங்களிப்புச் செய்து வருகிறது.
அத்தகைய அமைப்பின் மாநாடு, தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் 28-30 தேதிகளில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் ஹமீது அன்சாரி துவக்கி வைத்து உரையாற்றினார்.
 வரலாற்று அறிஞரும் ஜவஹர்லால் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியருமான ரொமிலா தாப்பர், வரலாற்றியல் முன்னோடியும் அலிகார் வரலாற்றியலாளர் சொசைட்டி தலைவருமான பேராசிரியர் இர்பான் ஹபீப் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்ற முக்கிய அறிஞர்களாவர்.
மேலும் வரலாறு, பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களும் பங்கேற்றனர். 
ல், ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களும் பொருளாதார அறிஞர்களுமான பிரபாத் பட்நாயக், சி.பி.சந்திரசேகர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுதீர் சோப்ரா, முன்னாள் துணைவேந்தரும் தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் யஷ்பால், இந்திய விவசாய ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஆர்.பி.சிங், கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜன் குருக்கள், அலிகார் வரலாற்றியல் சொசைட்டி தலைவர் பேராசிரியர் ஜே.வி.நாயக் மற்றும் பேராசிரியர்கள் யகதி சின்னாராய், எம்.கே.பான், அன்னபூரணா சட்டோபாத்யாயா, கும் கும் ராய், பைரவி பிரசாத் சாகுர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
 மாநாட்டின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இந்தியாவில் வலதுசாரி பிற்போக்கு சித்தாந்தத்தை உயர்த்திப்பிடிக்கும் ஆட்சி அமைந்துள்ள பின்னணியில் இந்திய வரலாற்றை திரித்துக் கூறுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தது.
இன்றைய இந்தியாவின் பிரதமரே கூட நாட்டின் வரலாற்றை தமது இஷ்டத்திற்கு மாற்றி மாற்றி மேடைகளில் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது எனக் கடிந்துள்ள வரலாற்றுக் காங்கிரசின் தீர்மானம், இந்த அமைப்புஇந்தியாவின் வரலாற்றை விஞ்ஞானப்பூர்வமற்ற முறையில் திரிக்க முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்காது என்றும் பிரிவினைவாத முறையில் அல்லது பிளவுவாத முறையில் அல்லது இன ஆதிக்க நோக்கத்துடன் கூடிய முயற்சிகளை ஒருபோதும் ஏற்காது என்றும் தெளிவுபடுத்தியது.
இந்தியாவின் அனைத்து வரலாற்று அறிஞர்களும் பேராசிரியர்களும் நமது நாட்டின் கடந்தகால வரலாற்றைத் திரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம் என்றும், வரலாற்றியலாளர்கள் என்ற முறையில் நாம் மேற்கொண்டுள்ள பணியின் மாண்புகளை உயர்த்திப்பிடிப்போம் என்றும் மாநாடு உறுதியேற்றது.
மேலும், “நாட்டின் வரலாற்றில் ஏற்கெனவே தீவிரமான ஆய்வுகளுக்குப் பின்னர் உறுதிசெய்யப்பட்ட உண்மைகளை திட்டமிட்டு தவறான முறையிலும் முரணான வகையிலும் மாற்றிக் கூறுவதை இன்றைய அரசியல் எந்திரத்தின் அனைத்து நபர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இந்தியாவின் வரலாற்றைத் தவறான முறையில் முன்வைப்பது சர்வதேச அளவில் இந்த நாட்டின் மீது ஏற்பட்டுள்ள நன்மதிப்பை சீர்குலைக்கவே வழிசெய்யும்“ என்றும் அந்த தீர்மானம் கூறியுள்ளது.
மற்றொரு தீர்மானத்தில், உலகளவில் பிரசித்தி பெற்ற நினைவுச் சின்னமான தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறையில் புனரமைப்பு என்ற பெயரில் அதன்முக்கிய அம்சங்களை அழிப்பதற்கான முயற்சி அரசுத்தரப்பில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை வரலாற்று காங்கிரஸ் கண்டித்துள்ளது.
ஹுமாயூன் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள சின்னங்கள், எழுத்துக்கள், ஏற்கெனவே பல்வேறு வரலாற்றியல் உண்மைகளைபிரதிபலிக்கும் விதத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள், வண்ணங்களைக் கூட அழிப்பதற்கும் மாற்றுவதற்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது;
 இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் அத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், நமது நாட்டில் ஒரு பொது இடத்தில் நிறுவப்பட்டுள்ள தண்ணீர் குழாயிலிருந்து நீர் பருக ஒரு தலித்துக்கு அனுமதி இல்லை என்ற நிலைமை இருந்தது.
 பிரிட்டிஷார் போனபிறகும் இன்றைக்கும் அதே சாதியக் கட்டமைப்பும் கொடுமைகளும் நீடிக்கின்றன.
காலனியாதிக்கக் காலத்திற்கு முன்பிருந்தே இந்திய சமூகத்தில் தலித்துகள் அரசியலில் பங்கேற்பது தடுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஒரு குறிப்பிடத்தக்க அளவில் தலித் மக்கள் அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட அரசியல் என்பது சாதி ஆதிக்க சக்திகளுக்கான களமாகவே இன்றும் நீடிக்கிறது.
முன்பு ஆண்டவர்கள், பழைய ராஜாக்கள், பழைய ஜமீன்தார்கள், செல்வந்தர்கள், அவர்களது வழிவந்தவர்கள்... என சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக ஆளும் வர்க்க சக்திகளாக இருந்தவர்களாக இன்றைக்கும் உயரிய சமூக பொருளாதார அந்தஸ்தினைப் பெற்றிருக்கிறார்கள்.
அந்த வகையில் தீண்டப்படாத தலித்துகள் சமூகத்திலும் மதரீதியான அம்சங்களிலும் மட்டுமல்ல... அரசியலிலும் கூட தீண்டப்படாதவர்களாகவே இருந்ததும் இருப்பதும் தொடர்கிறது.
                                                                                                  - பேராசிரியர் இர்பான் ஹபீப்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகப்பொருளாதாரம் முற்றிலும் தாராளமயமாக்கப்பட்டு - முற்றாக உலகமயமாக்கப்பட்ட இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இதற்கு முன்பு உலகமகா யுத்தங்களின் போதும் உலகப் பொருளாதார பெருமந்தத்தின்போதும் என்ன நிகழ்வுகளை இப்பூவுலகம் கண்டதோ அதே போன்ற நிகழ்வுகளை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் உலகமயமாக்கப்பட்ட இந்த நாளில், மூலதனம் என்பது தொழிலாளியின் உழைப்பு என்பதைவிட மிக வேகமாக வேறு வேறு இடம்நோக்கிச் செல்வதாக மாறியிருக்கிறது.
எனவே ஒரே நாட்டிற்குள்ளேயே மூலதனம் நீடிக்கும் என்ற நிலை தற்போது இல்லை. 
இத்தகைய பின்னணியில் இந்தியாவில் இந்துத்வா கும்பலின் ஆட்சி அமைந்துள்ளது. 
இந்துத்வா சிந்தனைப் போக்கிலிருந்தே இந்தியாவில் பாசிசம் உருவாகும். இன்றைக்கு இந்த அரசு பின்பற்றத் துவங்கியுள்ள மிகத் தீவிரமான தாராளமயக் கொள்கைகளும் அதன் விளைவாக மிக வேகமாக அதிகரிக்கப்போகிற ஏற்றத்தாழ்வுகளும் பாசிசத்தை நோக்கிய போக்குகளை உருவாக்கும் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு பேராபத்தை விளைவிக்கும்.
                                                                                            - பேராசிரியர் பிரபாத் பட்நாயக-
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சமூக ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வேறுபாடுகளையும் உள்ளடக்கியதாக நவீனகாலத்தில் மாறியிருக்கிறது. அது மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.மதமாற்றம் குறித்து தற்போது தீவிரமான விவாதம் எழுந்துள்ளது. 
மதம் மாற்றம், சாதி மாற்றத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி முக்கியமானது. 
மதம் மாறுவதால் சாதி ஒருபோதும் மாறாது என்பதே உண்மை. இந்தியாவின் சாதிய கட்டமைப்பு எதன்மீது நின்று கொண்டிருக்கிறது என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆதிக்க சாதியாக இருக்கக்கூடிய ஒரு சமூகம், தமிழ்நாட்டில் ஆதிக்க சாதியாக இருக்கக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அடைந்துள்ள வளர்ச்சியைவிட முற்றிலும் மாறுபட்டது.
மாநிலத்திற்கு மாநிலம் - பிராந்தியத்திற்கு பிராந்தியம் சமூக ஏற்றத்தாழ்வு என்பது வேறுபடுகிறது. 
நமது வரலாற்றிலும் சமூகத்திலும் ஏற்றத்தாழ்வின் அடிப்படையான அம்சமான சாதியக் கட்டமைப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. 
சாதி என்பதே இந்திய சமூகத்தின் அடிப்படையான நிறுவனமாக இருக்கிறது. அதுவே இந்த சமூகத்தை எண்ணற்ற பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளது.-
                                                                                               -பேராசிரியர் ரொமிலா தாப்பர்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?