"நிதி ஆயோக் " - என்ன?

திட்டக்குழு’ கலைக்கப்பட்டு நிதி (NITI- national Institution for Transforming India) ஆயோக்உருவாக்கம் பற்றிய அறிவிப்பு அரசியல் மற்றும் சமூக தளத்தில் பெரியவிவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
தனது கன்னி சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி ‘திட்டக்குழு’ முந்தய கால தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது எனக் கூறினார்.அதேநேரத்தில் தற்போதைய உள்நாட்டு, பன்னாட்டுச் சூழல் பெருமளவு மாறியுள்ளது. 
இம்மாற்றங்களுக்கேற்ப இந்தியாவும் மாறவேண்டும். நாள்பட்ட பழைய வீட்டுக்கு சில சமயங்களில் பராமரிப்பு செய்யவேண்டியது இருக்கும்.
அதிக செலவுக்குப்பின்னும் அந்தச் சிறுசிறு பழுதுநீக்கங்கள் நமக்கு திருப்தி தருவதில்லை. அச்சூழலில் பழையவீட்டை இடித்துவிட்டு புதிய வீட்டைக் கட்டுவது காலத்தின் கட்டாயம் எனக் கூறினார். 
தற்போது நிதி ஆயோக் என்ற அமைப்பு திட்டக்குழுவிற்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மோடி அரசு அறிவித்துள்ளது.நிதி ஆயோக்கின் பிறப்பும் அதன் உள்ளடக்கமும் பல்வேறு கூறுகளைக் கொண்டது.முதலாவதாக ‘திட்டக்குழு’ கலைப்பு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலின் ஒரு முகம்.இரண்டாவதாக, தேர்தல் களத்தில் பிரதமர் மோடி வாக்களித்த “குறைந்த அரசு தேர்ந்த நிர்வாகம்” என்ற இலக்கை நிறைவேற்ற இப்புதிய அமைப்பு உதவும் என்ற நம்பிக்கை. 
மூன்றாவதாக, ஊழலற்ற ஆட்சி வழங்க ஊழலின் உற்றுக் காலான அரசின் தலையீட்டை சுருக்க திட்டக்குழுக் கலைப்பு தேவை. 
நான்காவ தாக, 21ம் நூற்றாண்டின் புதிய இந்தியா விற்கு தேவையான புதிய பொருளாதார அமைப்புகளை கட்ட பழைய அமைப்புக் களை களைவது அவசியம்.இந்திய வளங்களை திறன்மிக்க பயன் பாட்டிற்கு கொண்டுவந்து உற்பத்தியை பெருக்குவது, 
வேலைவாய்ப்பு மூலமாக வாய்ப்புக்களை பெருக்குவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவது ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக அன்றைய பிரதமர்நேரு அவர்களால் 1950 மார்ச் மாதம் ‘திட்டக்குழு’ துவங்கப்பட்டது என்பது வரலாறு.
திட்டக்குழு உருவாகும் பொழுது பல்வேறு வகையான செயல்திட்டங்கள் பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்டன.
 செயல்திட்டங்கள் பல் வேறு வகைப்பட்டனவாக இருந்தாலும் ஒருமித்த கருத்தோடு திட்டக்குழுவை உருவாக்கி அதன்மூலம் மக்கள் நலனை மேம்படுத்துவது மட்டுமே அனைவரின் குறிக்கோளாகவும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் பிரமிக்கத் தக்க தொழில்மயமாக்கம், இந்திய விடுதலை இயக்கத்தின் சுயச்சார்பு, சமத்துவம், பொருளாதாரச் சுதந்திரம் போன்ற சிந்தனைகள் திட்டக்குழு அமைப்பிற்கும் அதன் நோக்கங்களின் உருவாக்கத்திற்கும், அடிப்படை யாக அமைந்தது. இருப்பினும் கால மாற்றத்திற்கேற்ப வறுமை ஒழிப்பு, விலைவாசி ஏற்றம், உள்ளடக்கிய வளர்ச்சி,சமச்சீர் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு போன்றவை திட்டக்குழுவின் செயல்திட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன.
கடந்த 64 ஆண்டு கால வரலாற்றில் திட்டக்குழுவின் நடவடிக்கைகளில் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆண்ட பல்வேறு கட்சிகளும், கூட்டணிகளும் கட்சி பாகுபாடின்றி இயல்பாக பங்கேற்க வும், பங்களிக்கவும் செய்தன. 
எனவே உயர்ந்த சமூகநோக்கங்களுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு அமைப்பை காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைப்பது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட வாதமே ஆகும்.
இரண்டாவதாக, திட்டக்குழு கலைப்பு அரசின் வேலைப்பளுவைக் குறைத்து தேர்ந்த நிர்வாகத்திற்கு வழி வகுக்குமா? 
இவ்வாதத்தில் நுணுக்கமான இரு கூறுகளைப் பார்க்கலாம்.
வரலாற்று ரீதியாக, திட்டக்குழு நாட்டின் குறுகிய கால மற்றும் நீண்டகால கொள்கைகளை வகுப்பது தவிர மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பங்கீட்டு விசயங்களிலும் முக்கிய பங்காற்றி வந்தது.
 ஒட்டுமொத்த இந்தியா வின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான நிறுவனத்தின் வரம்பு பொருளாதாரத்தளத்தில் கலந்து, பரந்து விரிந்து கிடக்கிறது. கிடப்பதை தவிர்க்க இயலாது.
இவ்விறுகூறுகளையும் பிரிக்க இயலாது. முந்தையது நிர்வாகம் சம்பந்தப்பட்டது பிந்தையது அரசின் கடமை சம்பந்தப்பட்டது.அறிவிக்கப்பட்டிருக்கும் அமைப்பு திட்டக் குழுவின் பணியைத் தொடரும் எனவும் செயலூக்கமளிக்க பிரதமர் அலுவலகத்தின் பணிஏற்பாட்டுடன் இணைக்கப்படும். 
இத்தகைய ஏற்பாடு மத்திய அரசின் நிர்வாக சுமையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கும் என்பதே எதார்த்தம் ஆகும். இத்தகைய புதிய சுமையை ஏற்பதற்கான ஏற்பாடோ அல்லது அதற்கான திறனோ பிரத மர் அலுவலகத்தில் இல்லை. 
இத்த கைய ஏற்பாடு வரும்காலங்களில் அரசியல் ரீதியான கூட்டாச்சி முறையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கசப்பையே ஏற்படுத்தும் அபாயம்உள்ளது.
திட்டக்குழுவின் அனுபவம் உணர்த்துவது என்னவென்றால் இத்தகைய சிறு சிறு உராய்வுகள் நிதி ஒதுக்கீட்டில் எழுந்தாலும் அவை திட்டக்குழுவின் ஆண்டு ஒதுக்கீட்டை நிரா கரிக்கும் அளவிற்கு எழுந்துவிடவில்லை. இது திட்டக்குழுவின் மாநிலக் கூட்டாட்சி தத்துவங்களின் உணர்வுகளோடு ஒன்றியிருப்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 
மேலும் நிதி அமைச்சகத்திடம் அதிகார குவிப்பு என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும் ஆகும். 
ஆளும்கட்சியின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும்.பிரதமர் அலுவலகத்தின் அதிகார குவிப்பிற்கும் மட்டுமே இத்தகைய செயல்பாடு இட்டுச்செல்லும் மாறாக நிர்வாக செயல்திறனை மேம்படுத்தாது.
அதுபோலவே துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் ஆலோசனைகளை பெறுவது, அரசு சாரா தொண்டு நிறுவனங்களை திட்டசெயல்பாடுகளில் இணைப்பது போன்றவை அரசியல் தலையீட்டை குறைத்து நிர்வாக திறனை பெருமளவு அதிகரிக்கும் என்ற பரப்புரை உள்நோக்கம் கொண்டது. 
புதிய-தாராளமய உலகம் என்பது பெரும்-முதலாளிகளுக்கு மட்டுமே வளர்வதற்கும், வாழ்வதற்கும் உரிமை தருவதாக உள்ளது.1991க்கு பின் இத்தகைய புதிய-தாராளமய பொருளாதார கொள்கைகளை அனைத்து மாநிலங்களிலும் சீராகவும் முழுமையாகவும் அமல்படுத்திட முடியாத நிலை நிலவுகின்றது.
இத்தகைய சூழ்நிலையை மாற்றிட எல்லாவற்றையும் வர்த்தகமயம் செய்ய, தனியார்மயம் செய்ய தனியாரின் லாப வேட்கைக்கு தடையாக இருக்கின்ற அரசியல் இடர்களைத் தவிர்ப்பதற்கு இப்புதிய அமைப்பு ஏதுவாகும்.
எனவே அரசியல் என்பதற்குப்பதிலாக ஜனநாயக நெறிமுறைகளையும், ஜனநாயக நெறிமுறைகளை செயல்படுத்தும் அரசின் நிறுவனங்களையும் பொருள் கொண்டால், அவற்றிற்கு மாற்றாக நிபுணர்கள், தொழில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் கார்ப்பரேட் தொண்டு நிறுவனங்களின் தயவில் பொது நலனை பலியிடுவதற்கு இணையானது.
மேலும் அரசின் சுமை என்று பொதுவாகப் பேசுவதிலும் சிக்கல் உள்ளது. ஏனெனில் சுமைக்குறைப்பு என்பதில் அரசின் கடமையை சுருக்குவது என்பதுடன் இணைத்துப் பார்ப்பது அவசியம். 
அரசின் கடமையின் இணையான அரசின் செயல்பாட்டு வரம்பு பரந்துகிடப்பது வர்த்தக நோக்கங்களுக்கு இடையூராக உள்ளதாக உள்நாட்டு பெருமுதலாளிகளும், பன்னாட்டு பெருநிறுவனங்களும் கருதுகின்றன. கல்வி, சுகாதாரம், மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற துறைகள் அரசின் வரம்பிற்குள் சென்றுவிட்டால் அது தனியார் முதலாளிகளின் வர்த்தக நோக்கங்களுக்கு எவ்வளவு பாதகமாக அமையும் என்பதை புதிய பொருளாதாரச் சூழலில் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
இந்த வகையில் திட்டக்குழுவின் செயல்பாடுகள் சமூக நலன் சார்ந்த நோக்கங்கள் குறித்த விவாதத்திற்கான களமாக இருப்பதும் அது தனியார் இலாபவேட்கை வரம்பை கட்டுப்படுத்துவதுமே பெருமுதலாளிகளின் நலனுக்கு எதிராக நிறுத்தியுள்ளது.
 வலுகுறைக்கப்பட்ட புதிய அமைப்பின் பிறப்பை அரசின் சுமை குறைப்பு உக்தி என்று ஏற்பதா? தனியார் நலன் பேணும் தந்திரம் என்பதா? இதில் எங்கே தேர்ந்த நிர்வாகம் உள்ளது காலம் உறுதியாக தெளிவுபடுத்தும்.‘திட்டக்குழு’ என்பது இந்தியாவின் முழுமையான சமூக அரசியல் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படுகின்ற விவாதங்களின் களமாக இருந்து வந்தது. 
சுதந்திரத் தன்மையோடு பன்முகத்தளத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனத்தை அழித்துவிட்டு திட்டங்களை மேற்பார்வை மற்றும் மதிப்பீடு மட்டுமே செய்யும் நிதி ஆயோக்- உருவாக்குவது திட்ட உருவாக்கத்தில் ஜனநாயக நடைமுறைகளை நீக்குவதற்கும் மறுப்பதற்கும் மட்டுமே உதவும்.
நவீனம் தேவை என்ற சாக்கில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாட்டின், பொருளாதார, அரசியல், சமூக கொள்கைகளை ஒன்றிணைத்த ஒரு களத்தை காலத்திற்கு ஏற்றார்போல் மறுசீர் அமைப்பு செய்வதை விடுத்து கலைப்பது சரியல்ல.
நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக் குள் இயங்கும் அரசு நிறுவனங்களை ஊழல் குற்றம்சாட்டி தார்மீக கடமைகளை செய்வதில் இருந்து முடக்குவது என்பது இவ் ஏற்பாட்டின் உள்அடக்கம் ஆகும்.
 ஊழலுக்கான ஊற்றங்காலே தனியார்மயமும், தாராளமயமும் தான் என்பதை தேசத்தின் நிகழும் அன்றாட நிகழ்வுகள் பட்டவர்த்தனமாக எடுத்துகாட்டுகின்றன. 
தனியார்வசம் கொடுக்கப்பட்டுள்ள கிரானைட் குவாரிகளில் நடக்கும் இயற்கைவள கொள்ளைகள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அரசின் நெகிழ்வான விதிமுறைகளுடன் தனியார்மயமாக்கல் கொள்கை அலைக்கற்றை ஊழல் ஏற்படுவதற்கு சாத்தியத்தை ஏற்படுத் தியது என்பதை மறந்துவிட முடியாது. 
இத்தகைய ஊழல்கள் அனைத்தும் இந்தியா என்று புதிய-தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியதோ அன்று முதல்தான் தொடங்கியது என்பதையும் மறுக்கமுடியாது. 
குறிப்பிட்டு சொன்னால் ஊழலின் ஊற்றுக்கண் என்பது அரசு நிறுவனங்கள் அல்ல தனியாரின் இலாப நோக்கமே என்பது புரியும். அரசின் நெறிமுறைகளும், சமூக நோக்கங்களும் இல்லாத வெற்றிடத்தில் ‘ஊழல் இலாப வெறிகள்’ அதிகரிக்குமே தவிர குறையாது.

எனவே இந்திய அரசு ஊழல்களை ஒழிக்க ‘திட்டக் குழுவை’ கலைப்பது என்பது எவ்வகையிலும் பயன்தராது. சுதந்திர இந்தியாவின் அடித்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை வகுத்து அரசுக்கு தரும் மத்திய நிறுவனமான ‘திட்டக் குழுவின்’-கலைப்பு என்பதோடு இத்தகைய அரசு நிறுவனங்களின் ‘கலைப்பு’ என்பது நிற்கப்போவது இல்லை.
புதிய பொருளாதார கொள்கையின் அடுத்தகட்டமான ஏதேச்சதிகாரம் பொருந்திய அரசை கட்டமைக்க புதிய நிர்வாக அமைப்பு முறைகள் அவசியம். 
இதற்காக பெரும் முதலாளிகளுக்கு எது நல்லதோ அதுவே நாட்டிற்கு நல்லது என்று கொள்ளும் சித்தாந்தமும் தேசியத்தை நினைவுபடுத்தும் எந்தஒரு நிறுவனத்தையும் நிர்மூலப்படுத்துவது என்கின்ற நடைமுறையும் ஒருசேர இப்புதிய நிறுவனத்தின் பிறப்பில் காணலாம்.
மேலும் அதிகாரக்குவிப்பு அரசு இயந்திரங்களை ஜனநாயக அமைப்பில் இருந்து பிரித்தெடுத்து தனியார் நலன்களோடு கலப்பது என்பது நாஜிகளின் பாதைக்கு இட்டுச்செல்லும் என்பது வரலாறு குறிக்கும் எச்சரிக்கை. 
இதை மறக்கும் சமூகத்திற்கு காலம் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ள அதே தண்டனையை மறுபடியும் வழங்கும். 
எனவே அரசு அத்திசை நோக்கி பயணிக்கக் கூடாது என்பது தான் தங்களை வாக்களித்து தீர்வு செய்த  மக்கள் நலம் ஆகும்  .
=================================================

வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்சே!


நிலைமை இத்தனை வேகமாக மாறும் என்று ராஜபக்சே எதிர்பார்த்திருக்கவில்லை.
கடந்த நவம்பர் இறுதியில் கொழும்பு நகரில் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, `ராஜபக்சேவுக்கு எதிராக நானும் களத்தில் குதிக்கிறேன்’ என மைத்ரிபால சிறிசேன அறிவிக்கும்வரை, இந்த `மாமன்னரை’ எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்றே சிங்கள மக்களும் இலங்கை ஊடகங்களும் கருதி வந்தனர்.
`மாமன்னர்’ என்ற வார்த்தையை ராஜபக்சே ஆதரவு ஊடகங்கள் தாராளமாகவே பயன்படுத்தி வந்தன.
2009ல் எல்டிடிஇ அமைப்பை இறுதிகட்டப் போரில் வீழ்த்தியவுடன் ஊடகங்களும் ஆளும் வர்க்கச்சார்புள்ள புத்தபிக்குகளும் ராஜபக்சேவை `மாமன்னர்’என்றே அழைக்கத் துவங்கினர்.
 மன்னர் என்ற நினைப்பு வந்துவிட்டதாலோ என்னவோ அப்போது முதல்மஹிந்தா ராஜபக்சே இலங்கையின் ஜனநாயகத்தை இன்னும் தீவிரமாக காலில் போட்டு மிதிக்கத் துவங்கினார்.
அதற்கு அடுத்து நடைபெற்ற ஜனாதிபதி தேர்த லில் 58சதவீத வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். 
இரண்டு முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்று தான் கொண்டு வந்த விதியைத் தானே திருத்தி தற்போது மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடு கிறார்.
எல்டிடிஇ அமைப்பை வீழ்த்தியதால் பெரும் பான்மை சிங்கள மக்களிடையே கிடைத்த செல் வாக்கு வீரியம் இழக்கும் முன்பே அதை மீண்டும் ஒருமுறை பயன்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், இரண்டாண்டுகள் கழித்து நடக்க வேண்டிய ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துகிறார் ராஜபக்சே. ஜனவரி 8ம்தேதி இலங்கையில் அந்தத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு, ராஜபக்சே வேட்புமனு தாக்கல் செய்தது வரை, களத்தில் அவரை எதிர்ப்பதற்கு இணையான ஒரு ஆள் இல்லை என்ற நிலையே இருந்தது. 
`என் நிழலோடுதான் நான் போட்டியிட வேண்டும் போலிருக்கிறது’ என்று எகத்தாளம் பேசினார். ஆனால் நவம்பர் இறுதியில் மைத்ரி பால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
யார் இந்த மைத்ரிபால சிறிசேன?நேற்று வரை ராஜபக்சேவின் வலதுகரமாக இருந்தவர்; ராஜபக்சே அரசின் இரண்டாவது முக்கிய அமைச்சராக, சுகாதாரத்துறை பொறுப்பினை வகித்தவர்; ராஜபக்சே சார்ந்துள்ள ஆளும் இலங்கை சுதந்திரா கட்சியின்(எஸ்எல்எப்பி) பொதுச் செயலாளர்.ஆளுங்கட்சியின் மிக முக்கியப் பொறுப்பிலிருக் கும் இவர் ராஜபக்சேவுக்கு எதிராக களமிறங்குவதற்கு காரணம் என்ன? 
அவரே சொல்கிறார் : “ராஜபக்சேவின் ஆட்சியில் அதிகாரம் ஒட்டுமொத்தமாக அவரது கையிலும் அவரது குடும்பத்தின் கையிலும் குவிந்துவிட்டது; நிர்வாகச் சீர்கேடும் ஊழலும் புற்றுநோயாக பரவத் துவங்கிவிட்டன.
 நாட்டின் பொருளாதாரம், நிர்வாகம், வளங்கள் மற்றும் கட்சியின் நிர்வாகம் உட்பட அனைத்தும் ஒரே குடும்பத்தின் நபர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டன. இறுதிக்கட்டப் போருக் குப் பிறகு கிடைத்த செல்வாக்கின் காரணமாக உண்மையிலேயே தன்னை ஒரு மன்னராகவே கருதத் துவங்கிவிட்டார்”.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, “எனவே அவருக்கு எதிராக ஜனாதிபதி தேர்த லில் போட்டியிடுகிறேன்“ என மைத்ரிபால அறிவித்தபோது, அவருக்கு அருகே அதே ஆளும் சுதந்திராகட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஜனாதிபதியு மான சந்திரிகா குமாரதுங்க மட்டுமல்ல, முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதான தலைவர்களெல்லாம் ஆஜராகியிருந்தனர்.தனிநபராக அல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக ராஜபக்சேவை எதிர்த்து மைத்ரிபால போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.இதற்கு பிறகு இலங்கையின் அரசியல் நிலவரம் வேகமாக மாறியது. ராஜபக்சே அரசாங்கத்திலிருந்து 21 எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்து வெளியேறினர். மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மட்டுமின்றி பிரதான இன சிறுபான்மைக் கட்சிகள், பல்வேறு தொழில்சார்ந்த அமைப்புகள், நாட்டின் அதிகாரக் கட்டமைப்பில் செல்வாக்கு செலுத்தும் சில முக்கிய புத்தபிக்குகள் உள்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
மிக முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கை முஸ்லிம் காங்கிரசும் ஆதரவு தெரிவித் ததைத் தொடர்ந்து மைத்ரிபாலவின் வலு அதிகரிக்கத் துவங்கியது.
2005ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ராஜபக்சே கடந்த பத்தாண்டுகளில் எதிர்கொள்கிற மிகப்பெரும் அரசியல் சவாலாக தற்போதைய தேர்தல் மாறியுள்ளது. 1.5கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இலங்கையில் 70சதவீதத்திற்கும் அதிகமானோர் பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்களே. 
அந்த மக்களிடையே, எல்டிடிஇ அமைப்பை வீழ்த்தியதைப் பற்றி `பெருமிதம்‘ பேசி மட்டுமே வாக்கு சேகரித்துவிட முடியும் என்று இந்த முறையும் அவர் போட்ட கணக்கு தவறாக முடியும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால் மைத்ரிபால சொல்வது போல, ஒட்டுமொத்த அதிகாரமும் ஜனாதிபதியின் கரங்களில் குவிக்கப்பட்டுள்ளன.
அவரது குடும்பத்தின் ஆட்சி அரசாங்கத்தின் அதிகார மையங்கள் எங்கும் பரவிக்கிடக்கிறது. ஒரு சகோதரர் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர்; மற்றொரு சகோதரர் நாடாளுமன்ற சபாநாயகர்; மூன்றாம் சகோதரர் பாதுகாப்புத்துறை செயலாளர்; அவர்தான் ஒட்டுமொத்த ராணுவத்தையும் கட்டுப் படுத்துகிறார். 
ராஜபக்சேவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர்; தம்பி மகன் ஒரு மாகாணத்தின் முதலமைச்சர்.
இப்படி குடும்பத்தின் ஆட்சியாக மாறியிருப்பது மட்டுமல்ல...
ராஜபக்சேவின் ஆட்சியில் இலங்கையின் ஜனநாயகமே நெருக்கடியின் பிடியில் சிக்கியிருக்கிறது என்பதுதான் அடிப்படையான பிரச்சனை.மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வேண் டும் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் தமது கட்சிக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்தில் இது தொடர்பான விதியை நீக்கினார்.
நீதிபதிகள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், உயர் காவல்துறை அதிகாரிகள், ராணுவப் படையின் தளபதிகள் ஆகிய அனைவரையும் நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கே அளிக்கும் சட்டத்திருத்தங்களை கொண்டுவந்தார்.நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியை, அவர் ராஜபக்சேவுக்கு எதிராக தீர்ப்புரையில் குட்டு வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக, நாடாளு மன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி பதவியைப் பறித்தார். அந்த இடத்தில், தன் சொற்படி சேவகம் செய்யும் நபரை தலைமை நீதிபதியாக நியமித்தார்.
இதைவிட இன்னும் கூடுதலாக, நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பிரச்சனைகளுக்காக நடந்த பல்வேறு போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தைப் பிரயோகித்தார். 2013ம் ஆண்டு குடிநீர் கேட்டு நடந்த பொதுமக்கள் போராட்டம் ஒன்றில் ராணுவத்தை ஏவி அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டார். அதில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இது மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.மறுபுறத்தில் போதை மருந்து கடத்தல், குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களுக்கு ராஜபக்சே அரசின் காவல்துறை முழு பாதுகாப்பு அளித்து வருகிறது.மற்றொருபுறத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போருக்குப் பிறகு தமிழ்மக்களின் நிலைமையில் எந்தமுன்னேற்றத்தையும் ராஜபக்சே அரசு ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்பதே உண்மை.
 இந்நிலையில் தமிழ்மக்களின் பெரும் ஆதரவினைப் பெற்று ஆட்சியமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண அரசாங்கத்திற்கு எந்தவிதமான நிதி உதவியும் செய்யாமல் திட்டமிட்டு பழிவாங்கி வருகிறது.நாட்டின் அனைத்து மாகாண அரசுகளுக்கும் உள்ள காவல்துறை மற்றும் நில நிர்வாகத்துறை அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டுவிட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 
கிட்டத்தட்ட ஒரு ராணுவ ஆட்சியாக ராஜபக்சே ஆட்சி மாற்றப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில், மீண்டும் ராஜபக்சே வென்றால் ஒரு சர்வாதிகார ஆட்சியாகவே மாறும் என்ற நிலைமையே அங்கு இருக்கிறது.
இந்தப் பின்னணியில் ஜனவரி 8ல் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எதிராக ஒரு பலம் பொருந்திய வேட்பாளராக மைத்ரிபால சிறிசேன களமிறங்கி இருப்பது ராஜபக்சேவின் வீழ்ச்சிக்கான துவக்கமாக மாறியிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேன


"தென் இலங்கை"  நிலைமை?

சிங்கள கிராமப்புறங்கள் நிறைந்த இலங்கையில் தென்பகுதி ராஜபக்சேவுக்கு சாதகமான பகுதியாகவே கருதப்பட்டுவருகிறது.குறிப்பாக, மஹிந்த ராஜபக்சேவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் அவர் மேற்கொண்டிருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் காரணமாக, அப்பகுதியில் வசிப்பவர்கள் தமக்கே வாக்களிப்பார்கள் என்று ராஜபக்சே தரப்பு நம்புகிறது.தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான பிரபா கணேசன், கிராமப்புற வாக்குகள் அனைத்தும் அரசாங்கத்துக்கே கிடைக்கும் என்கிறார்.
ஆனால், ராஜபக்சேவுக்கு எதிரான அதிருப்தி வடக்கு - கிழக்கில் இருந்து உருவானதாக கருதுவது தவறு, உண்மையில் மாற்றத்திற்கான வேட்கை தெற்குப் பகுதியில் இருந்துதான் துவங்கியது என்கிறார் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான டாக்டர் குமரகுருபரன்.
கொழும்பு நகரில் வசிக்கும் தமிழர்களைப் பொறுத்தவரை, தற்போதைய ஆட்சிக்கு எதிரான மன நிலையையே கொண்டிருக்கிறார்கள்.
கொழும்பு நகரில் ஆங்காங்கே தென்படும் பேனர்களைத் தவிர, தேர்தல் தொடர்பான பரபரப்பை அதிகம் காண முடியவில்லை. 
ஆனால், அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லச் செல்ல தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பல சிறிய பிரச்சாரக் கூடாரங்களைக் காண முடிந்தது.
வாதுவ போன்ற சிங்கள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததை பெரிய விஷயமாக மக்கள் கருதுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர், வன்முறைக்கு உள்ளான அளுத்கம, பேருவளை போன்ற பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் மக்களை பொறுத்தவரை தற்போதைய ஜனாதிபதி மீது கடுமையான அதிருப்தி வெளிப்படுகிறது.இலங்கையின் முக்கிய முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் சில நாட்களுக்கு முன்புதான் எதிர்க்கூட்டணி வேட்பாளருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
ஆனால், இந்தப் பகுதி மக்களைப் பொறுத்தவரை ஜூன் மாதம் நடந்த வன்முறைச் சம்பவம்தான் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் `பாக்கெட் மீட்டிங்’ என்று கூறப்படும் சிறுசிறு கூட்டங்களை எதிர்கட்சிக் கூட்டணி நடத்திவருகிறது.இந்தக் கூட்டங்களில் புத்த பிக்குகள் சிறிசேனவுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.
ஜனாதிபதி ராஜபக்சேயின் கோட்டையாகக் கருதப்படுவது அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை.கொழும்பு நகரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அதிவேக நெடுஞ்சாலை, வாகன ஓட்டிகளுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த எக்ஸ்பிரஸ் சாலையை அடைவதற்கு முன்பாக வரும் தங்கல்ல, ஹூன்கமா போன்ற பகுதிகளில் மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் அலுவலகங்கள் நிறைய கண்ணில் படுகின்றன.
இந்தக் கூட்டணியிலிருந்து சமீப காலமாக பல தலைவர்கள் வெளியேறிவரும் நிலையில், தங்கல்ல போன்ற இடங்களில் முன்பு வைக்கப்பட்ட பேனர்களில் இருக்கும் ஜனாதிபதியின் படம் திரைகளின் மூலம் மூடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
தெற்கு மாகாணத்தின் பெரும்பகுதி வாக்காளர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தங்களுக்குக் கை கொடுக்கும் என நம்புகிறது ஆளும்கட்சி.
எனினும், தங்களின் கடுமையான தேர்தல் பிரச்சாரமும், ஆளும் கூட்டணியிலிருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேறியிருப்பதும் தங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறார்கள் சிறிசேன முகாமைச் சேர்ந்தவர்கள்.
                                                                                                                                                                       =
                                                                                                                                                                                  ‘பிபிசி தமிழோசையுடன்
"தோல்வி பயம் பக்செக்கு அதிகம்.சென்ற ஆண்டு கடைசியில் தனக்கு சொந்தமான சொகுசு கார்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டாராம்,.தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள் இலங்கை விமானத்தில் அனைத்து பயணச்சீட்டுகளையும் முடக்கி விற்று விட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டதாம்.அந்த பயணச்சீட்டுகள் அனைத்தும் பக்செவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாம்."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ’


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?