வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

உங்கள் கணினியை வேகமாக இயங்க வைக்க

 ஐந்து எளிய வழிகள்

உங்கள் கணினி செய்யும் பிரச்சனையால் நொந்து நூலாகிவிட்டீர்களா, இதைப் படியுங்கள் ! 
" ஆனா இப்போதானே வாங்கினேன்" என்று நீங்கள் அலுத்துக்கொள்ளலாம். உண்மையில் அதை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, கணினி கடைகள் பழைய கணினிகளைக் கொடுத்துவிட்டு புதிய கணினிகளை தள்ளுபடி விலையில் விற்றபோது ( அல்லது அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில்) அதை நீங்கள் வாங்கியிருப்பீர்கள்.
" ஏன் இந்த கணினியின் பல்வேறு ப்ரொக்ரேம்களைத் திறக்க இவ்வளவு நேரமாகிறது " என்று நீங்கள் உங்கள் தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளுமளவுக்கு அலுப்புடன் உங்களையே கேட்டுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல நேரிட்டிருக்கும்
நீங்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் இல்லை, தினசரி சட்டையை மாற்றுவது போல கணினியை புதிது புதிதாக மாற்றிக்கொண்டிருக்க முடியாது என்ற நிலையில், உங்கள் கணினியைப் பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இதோ. கணினிகளைப் பற்றிய அறிவு உங்களுக்கு எந்த அளவு இருந்தாலும் பிரச்சனை இல்லை.

புதிய கணினி வாங்க முடிவு செய்யுமுன், வைத்திருக்கும் கணினியை சரி செய்ய முயலுங்கள்
1.கணினி வன் தட்டில் ( ஹார்ட் டிஸ்கில்- Hard disc) ஏற்பட்ட தகவல் விரிசல்களை ஒட்டுவது ( defragmentation) :


இதன் அர்த்தம் என்ன என்று கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இது கணினியைப் பராமரிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
கணினியில் உள்ள கோப்புகளுக்கிடையே இருக்கும் தகவல்களை உங்கள் கணினி படித்து, பயணம் செய்யும் வேகத்தை இந்த "தகவல் விரிசல்களை ஒட்டும்" வேலை விரைவுபடுத்துகிறது. தகவல்களை ஒழுங்காக அடுக்குவதன் மூலம் அதை கணினி செய்கிறது.
புதிதாக வாங்கிய நவீன வன் தட்டுகள் கூட காலம் செல்லச்செல்ல மந்தமடைகின்றன. இதற்குக் காரணம் கோப்புகள் கணினியில் சேமிக்கப்படும் முறைதான்.
இந்த வன் தட்டு புதிய கோப்புகளை எழுதவும், கழிக்கவும் செய்யும்போது, அந்த கோப்புகள் துண்டுதுண்டாக, வன் தட்டின் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்படுகின்றன. எல்லா தரவுகளும் ஒன்றாக வைக்கப்படுவதில்லை.இது கோப்புகளை நாம் அணுகுவதை மேலும் சிக்கலாக்குகிறது.
எனவே உங்கள் கணினியின் வன் தட்டெங்கும் தகவல்கள் கொத்துக் கொத்தாகப் பரவிக் கிடப்பதை ஒழுங்கு செய்வதன் மூலம், கணினியில் காலியாக இருக்கும் இடத்தை ( கணினியில் நினைவுக் கொள்திறன்- memory capacity என்ற அளவில்) உங்களால் அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும், தகவலை அணுகுவதையும் இது எளிதாக்கும்.
இதைச் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. இதைச் செய்யவென்றே உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன -- ஸ்மார்ட் டிப்ராக் 3 ( மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 கணினிகளுக்கு) மற்றும் ஐடிப்ராக் ( ஆப்பிள் ஓ.எஸ் எக்ஸ் கணினிகளுக்கு)
தேவையற்ற கோப்புகளை கணினியிலிருந்து அழியுங்கள்.
2. தேவையற்ற கோப்புகளை அழித்தல்

இப்போதெல்லாம் 200 GBக்குக் குறைவான அளவுள்ள கணினியின் வன் தட்டை எளிதில் நிரப்பி விட முடியும். ஒரு வன் தட்டு நிரம்ப நிரம்ப, அந்தக் கணினி எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்கக் கஷ்டப்படும்.
உங்கள் கணினியில் ஒரு வேளை ஏராளமான , நீங்கள் பயன்படுத்தாத பழைய கோப்புகள் இருக்கலாம். அவை உங்கள் கணினியில் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்.
எது அது மாதிரி பழைய தேவையற்ற கோப்பு என்பதை அறிந்து கொள்வது , புதிய செயலி (app) ஒன்றை தரவிறக்கம் செய்வது போல எளிதான வேலைதான்.
சந்தையில் கணினிகளுக்காக ( பி.சி மற்றும் மேக் கணினி ஆகிய இரண்டுக்குமே) பல்வேறு ப்ரோக்ராம்கள் இருக்கின்றன. பி.சி கணினிகளுக்கு ஸ்பேஸ் ஸ்னிஃப்ஃபர் (SpaceSniffer) மற்றும் விண்டிர்ஸ்டாட் (WinDirStat) போன்ற ப்ரொக்ராம்களை வைத்து உங்கள் வன் தட்டில் எந்த கோப்புகள் அதிக இடத்தை ஆக்ரமித்துக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிய முடியும்
உங்கள் கணினி ஓஎஸ் எக்ஸ் உலவியில் இயங்கும் மேக்கிண்டோஷ் கணினியாக இருந்தால், இதைச் செய்வது இன்னும் எளிது. ஃபைண்டர் ( Finder) என்ற தேடல் வசதியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். இது நீங்கள் உங்கள் மேக் கணினியில் எல்லாக் கோப்புகளையும் நேரடியாக பார்த்து அழிக்க உதவும். செயலிகள், நிரல்கள், வன் தட்டுகள், கோப்புகள், டிவிடி ட்ரைவ்கள் போன்றவை உட்பட . நீங்கள் உங்கள் கோப்புகள் மற்றும் ஃபோல்டர்களை இங்கிருந்தே ஒழுங்குபடுத்திக்கொள்ளலாம். மேக் கம்ப்யூட்டரில் எங்கு வேண்டுமானாலும் தேடிப்பார்த்து உங்களுக்கு வேண்டாத எந்த விஷயத்தையும் அழித்துவிடலாம்.
3.தானே தொடங்க ஆரம்பிக்கும் நிரல்களைத் தவிருங்கள்

இது உங்கள் கணினியை வேகப்படுத்தும் மிக வேகமான வழிகளில் ஒன்று. குறிப்பாக, கணினியை தொடங்குவதை துரிதப்படுத்துவதற்கு.
உங்கள் கணினியில் அது தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் நிரல்கள் என்ன என்பதைப் பார்த்து, அது அதே நேரத்தில் செயல்படத் தொடங்கவேண்டியதில்லை என்று நீங்கள் நினைத்தால், அதைத் தடுப்பது சாத்தியம்தான்.
ஒ.எஸ்.எக்ஸ் , அதன் ஆக்டிவிட்டி மானிட்டர் (Activity Monitor) மூலமும், விண்டோஸ் அதன் "டாஸ்க் மேனேஜர்" மூலமும் இதை செய்ய அனுமதிக்கின்றன. உங்களிடம் மேக் கணினி இருந்தால், "சிஸ்டம் ப்ரெஃப்ரென்ஸஸ்"ஐப் பார்த்து, பின்னர் அதிலிருந்து "யூசர்ஸ் அண்ட் குரூப்ஸ்" என்ற வழியைத் தேர்ந்தெடுத்து, பின்னர் நீங்கள் நிறுத்த விரும்பும் நிரல்களை தேர்ந்தெடுக்கலாம்.
உங்களிடம் பி.சி கணினி இருந்தால், இலவசமாகக் கிடைக்கும் "ஆட்டோரன்ஸ்" என்ற கருவையைப் பயன்படுத்தலாம். இது தானாக இயங்கத் தொடங்கும் நிரல்களைக் கட்டுப்படுத்துகிறது.
வைரஸ் எதிர்ப்பு நிரல்களை வாங்குமுன் யோசியுங்கள் - கணினிக்கேற்ற நிரல்களை வாங்குக !
4. வைரஸ்கள் மற்றும் கெட்ட நிரல்களை அழித்தல்

வைரஸ்களுக்கு எதிரான மென்பொருள் இல்லாமலேயே கணினியை பராமரிக்க முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வைரஸ்களுக்கு எதிரான மென்பொருட்கள் கணினி நினைவு மற்றும் அதன் செயல்படு திறனை அதிகம் பயன்படுத்துகிறது என்றும் , குறிப்பாக பழசாகிவிட்ட கணினிகளில் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் வல்லுநர்களாக இல்லாதவர்களுக்கு, பிரச்சனை ஏற்பட்ட பின் வருந்துவதைக் காட்டிலும் முன்னரே பாதுகாப்பாக இருப்பதே சாலச் சிறந்தது. எனவே வைரஸ்களுக்கு எதிரான மென்பொருளை வைத்துக்கொள்வது நல்லது.
உங்கள் கணினிக்கேற்ற வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். மைக்ரோசாப்ட்டின் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ், பாண்டா க்லவுட் வொய் அவிரா போன்றவைகளை வைத்துக்கொள்ள குறைந்த அளவு கணினி நினைவாற்றலும் , செயல்படு சக்தியும்தான் தேவைப்படும். பி.சி கணினிகளுக்கு இது போன்ற பொருத்தமான மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன.
மேக் கணினிகள் வைரஸ்களால் பாதிக்கப்படுவதில்லை என்ற புனைவு வெகுவாகப் பரவியிருந்தாலும், ஆப்பிள் கணினிகள் இயல்பாகச் செயல்படுவதைக் காட்டிலும் மெதுவாக இயங்கினால், நீங்கள் சந்தேகப்படவேண்டும்.
அவாஸ்ட் (Avast) அல்லது சோஃபோஸ் (Sophos ) வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் கணினியில் வைத்துக்கொள்ளவேண்டும் . இவை இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள்.
பழைய கணினியைக் குப்பையில் போடு முன், இந்த ஐந்து வழிமுறைகளை ஆராயுங்கள் !
5. இணையச் செயலிகளைப் பயன்படுத்துங்கள்

கூகிள் டாக்குமெண்ட்ஸ்( Google Docs) , அடோபி பஸ்வோர்ட்( Adobe’s Buzzword) , ஸோஹோ (Zoho) அல்லது பீப்பெல் ( Peepel) போன்ற செயலிகள் இருக்கும் போது மைக்ரோசாப்டின் ஆபிஸ் நிரலை ஏன் கணினியில் நிறுவ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
உங்கள் உலவியில் இயங்கக் கூடிய இணையச் செயலிகளால் ஏறக்குறைய எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.
அவைகளுக்கு இரண்டு அனுகூலங்கள் இருக்கின்றன. ஒன்று அவைகளை இயக்குவது மெலிதான வேலை, இரண்டு, அவை வன் தட்டை அதிகம் ஆக்ரமிப்பதில்லை.
இந்த ஐந்து வழிமுறைகளை நீங்கள் முயன்று பாருங்கள். அப்படியும் உங்கள் கணினி விரைவாக இயங்கத் தொடங்கவில்லையெனில், அதன் பிறகு  நீங்கள் கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை அழைப்பது பற்றியோ அல்லது புதிய கணினி வாங்குவது பற்றியோ முடிவு செய்யுங்கள். !
 நன்றி:பி.பி.சி.தமிழ் ,
-------------------------------------------------------------------------------------------------------------