பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் மத்திய மாநிலங்களில் மக்களை
அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் வந்து மிரள வைத்துக்
கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம்
என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, தமிழகத்துக்குள்ளும் வந்துவிட்டது.
இதுவரை 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள்.
12,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இத்தனைக்கும் இது
ஓர் உயிர்க்கொல்லி நோய் இல்லை.
எளிதாகத் தடுத்துவிடக் கூடியதுதான்.
உயிர்
காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், சுத்தமும்
சுகாதாரமும் குறைந்துள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பன்றிக்
காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவை நமக்குச் சவால் விடுவதைத் தவிர்க்க
முடியவில்லை.
தோற்றுத்தான் போகிறோம்.
ஊட்டச்சத்துக் குறைபாடும், நோய்
எதிர்ப்புச் சக்தியும் குறைந்து காணப்படுகிற நம் சமுதாயத்தில், தொற்றுக்
காய்ச்சலால் ஏற்படுகிற உயிர்ப் பலிகளை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை.
எல்லாவற்றையும்விட முக்கியக் காரணம், நம்மிடம் போதுமான எச்சரிக்கை
விழிப்புணர்வு இல்லை.
நோயை ஆரம்பத்திலேயே உறுதி செய்யும்
பரிசோதனைக்கூடங்கள் மிகவும் குறைவு.
இதனால், நோயைக் கணிப்பதற்குள்
நோயாளிக்கு மரணம் நெருங்கிவிடுகிறது.
பன்றிக் காய்ச்சல் தோற்றம்
முதன்முதலில் 2009-ல் மெக்சிகோவில் இந்தக் காய்ச்சல் பரவி, லட்சக் கணக்கில்
உயிர்ப் பலி வாங்கியது.
பன்றியிடம் காணப்பட்ட வைரஸும் மனிதரிடம் காணப்பட்ட
வைரஸும் ஒன்றுபோலிருந்த காரணத்தால், இதற்கு ‘பன்றிக் காய்ச்சல்’(Swine
Flu) என்று பெயரிட்டார்கள். இது காற்று மூலம் பரவும் தொற்றுநோய்.
பன்றியிடமிருந்து மனிதருக்குப் பரவுவதில்லை.
‘ஹெச்1என்1 இன்ஃபுளுயென்சா
வைரஸ்’ எனும் வைரஸ் கிருமி மனிதரைத் தாக்குவதால் பன்றிக் காய்ச்சல்
வருகிறது.
மற்ற பருவக் காலங்களைவிட, குளிர்காலத்தில் இந்த வைரஸ் அதிக
வீரியத்துடன் மக்களைத் தாக்கும் தன்மையுடையது.
தென்னிந்திய மாநிலங்களில்
இன்னமும் அதிக அளவில் குளிர் நீடிப்பதால் பன்றிக் காய்ச்சல் பரவ
சாதகமாகிவிட்டது.
எப்படிப் பரவும்?
நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித்
துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை
உண்டாக்கும்.
நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் வைரஸ் கிருமிகள்
ஒட்டிக்கொண்டிருக்கும்.அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால்
அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும்.
நோயாளி
பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு,
தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய்
எளிதாகப் பரவிவிடும்.
நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ
வாய்ப்புண்டு. ஆறு அடி தூரத்துக்கு இந்தக் கிருமிகள் பரவக்கூடியவை.
ஆகவே,
காற்றில் பரவும் மற்ற தொற்றுநோய்களைப் போல் மிக நெருக்கத்தில்
உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரவும் என்று அலட்சியமாக இருக்க முடியாது.
இந்தக் காய்ச்சல் மக்களிடம் வேகமாகப் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
மூன்று வகை நோயாளிகள்
.சாதாரண ஃபுளு காய்ச்சலைச் சேர்ந்ததுதான் பன்றிக் காய்ச்சல். இதன்
அறிகுறிகளை வைத்து நோயாளிகளை மூன்று வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
முதல் வகையில் மிதமான காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல்,
தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற
அறிகுறிகள் தெரியும்.
இவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்காது. எனவே,
ரத்தப் பரிசோதனை தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை
எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்தில் நோய் கட்டுப்பட்டுவிடும்.
இரண்டாம்
வகையில், இந்த அறிகுறிகளுடன் காய்ச்சல் கடுமையாக இருக்கும். மூட்டுகளில்
வலி அதிகமாக இருக்கும். சோர்வு கடுமையாகும். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை
அவசியம். காய்ச்சலைக் குறைக்க ‘டாமிஃபுளு’ மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
மூன்றாம் வகையில், மேற்சொன்ன அறிகுறிகளுடன் மயக்கம், மூச்சு விடுவதில்
சிரமம், சளியில் ரத்தம், நெஞ்சுவலி போன்ற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும்.
இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
இவர்களுக்கு ‘டாமிஃபுளு’ மாத்தி ரைகளுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளும்
தேவைப்படும்.
யாருக்குப் பாதிப்பு அதிகம்?
பன்றிக் காய்ச்சல் வந்துவிட்டவர்கள் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை.
ஐந்து
வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள்,
ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்,
முதியவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா, காசநோய், சிறுநீரக நோய், சர்க்கரை
நோய், கல்லீரல் நோய், இதயநோய், புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோரை
இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்துவிடுகிறது.
இவர்கள்தான் மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தடுப்பது எப்படி?
இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால்
மூடிக்கொள்ள வேண்டும்.
கைகளை அடிக்கடி சோப்புப்போட்டுத் தண்ணீரில் கழுவ
வேண்டும்.
கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதும் சளியைச் சிந்துவதும்
கூடாது.கைகுலுக்காதீர்கள்.
பொதுஇடங்களுக்குச் சென்று திரும்பினால்,
வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம்
செய்யுங்கள். முகத்தையும் கண்களையும் சோப்புப்போட்டுக் கழுவி சுத்தம்
பேணுங்கள். வெளியில் செல்லும்போது முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு
முகமூடி அல்லது N95 ரக முகமூடியை அணியுங்கள்.
சுய மருத்துவம் வேண்டாம்.
காய்ச்சல், சளி உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
ஃபுளு காய்ச்சலைத் தடுக்க உதவுகின்ற ‘வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி
மூவகைத் தடுப்பூசி’யை (Trivalent inactivated vaccine - TIV) மழைக்காலம்
தொடங்குவதற்கு முன்னால் போட்டுக்கொள்ளலாம்.
இது ஓராண்டுக்கு நோயைத்
தடுக்கும்.
எனவே, வருடாவருடம் இந்தத் தடுப்பூசியைப்
போட்டுக்கொள்கிறவர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் எப்போதும் வராது.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் இப்போது ஆண்டுதோறும் குளிர்காலத்தில்
பரவுகிற பருவக் காய்ச்சலாக மாறிவருகிறது. நடைமுறையில், நோய் பரவி இறப்போர்
எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் மாநிலஅரசும் மத்தியப் பொதுசுகாதாரத் துறையும்
களத்தில் இறங்குகின்றன.
பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்துவதில் மாத்திரை,
மருந்துகளைவிடவும் மிக முக்கியமானது நோய்த்தடுப்பு. பன்றிக்
காய்ச்சலுக்குரிய கிருமிகளின் தன்மையைத் தொடர்ந்து கண்காணிப்பதும், நோய்
பரவ வாய்ப்புள்ள மழைக்காலத்துக்கு முன்பே அதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை உஷார்படுத்துவதும் நோய் தொடங்கிய
பகுதிகளில் சிறப்பு முகாம்களை ஏற்படுத்துவதும் இந்தக் கொள்ளைநோயால்
ஏற்படும் இறப்புகளைத் தடுக்க சரியான வழி.
பன்றிக் காய்ச்சலுக்குரிய தடுப்பூசி இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி
செய்யப்படுவதால், அதன் விலை 500-லிருந்து 1,000 ரூபாய் வரை இருக்கிறது.
இதனால், இதை மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே
போடுகிறார்கள்.
இதையே உள்நாட்டில் தயாரித்தால் இதன் விலை 100 ரூபாய்க்குத்
தர முடியும். அப்போது பொதுமக்களுக்கும் அதைப் போட முடியும்.
இதற்கு மத்திய
அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்களைப் பொறுத்தவரை பொது சுத்தம் மிக
முக்கியம்.
இப்படி அரசும் மக்களும் கைகோத்தால் மட்டுமே பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை அடியோடு ஒழிக்க முடியும்.
டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர்,
gganesan95@gmail.com
நன்றி:தமிழ் இந்து.
===============================================================================================================