இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. ?
பேஸ்புக் நிறுவனம், பெரிய அளவில் இயங்கும் மொபைல் போன் நிறுவனங்களுடனும், சாம்சங் எரிக்சன் மீடியா டெக், நோக்கியா, ஆப்பரா சாப்ட்வேர் மற்றும் குவால்காம் போன்ற மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடனும் இணைந்து, 2013 ஆம் ஆண்டில், Internet.org என்பதை அறிமுகப்படுத்தியது.
இணையம் என்பது நம் வாழ்க்கையின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்றாக மாறிய பின்னர், பல நாடுகளில் மிகக் குறைந்த அளவிலேயே இணைய இணைப்பு பயன்பாடு உள்ளது என்பது, அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதாகும்.
இலவச இணைப்பினை இந்த நாட்டின் மக்களுக்குத் தரும்போது, இந்த தடையை நீக்குவதாக அமையும். பேஸ்புக் சமூக தளம் இந்த இணைப்பினை வழங்கும்போது, இலவசமாகத் தகவல் பரப்புதல் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு இடையே தொடர்பு அதிகமாகும்.
இந்த தகவல் ஓட்டமும், மக்கள் இணைப்பும் நிச்சயமாய் நல்ல பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். இதன் மூலம், பேஸ்புக் உலக அளவில் 400 கோடி மக்களை இணைக்க முயற்சிக்கிறது.
வளரும் நாடுகளில், இந்த Internet.org முயற்சி மக்களுக்கு ஒரு கவர்ச்சியான விஷயமாகும். இதனால், பேஸ்புக் தளம் மக்களிடையே அதன் இலக்கினையும் தாண்டி வளர்ச்சி அடைகிறது. இந்த முயற்சியின் மூலம், பல வளரும் நாடுகளில் ஆழமாகப் பதிகிறது. இந்த நாடுகள், தகவல் தொழில் நுட்பத்தில் வளரும் நாடுகள் ஆகும்.
இந்த வகையில் இந்தியா, பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் அளவில் வளர்வதற்கான வாய்ப்புகளைத் தருகிறது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியா உலக அளவில் மூன்றாவது இணையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ 24.3 கோடி பேர் இணையத்தில் உலா வருகின்றனர்.
இருப்பினும் இந்திய ஜனத்தொகையில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக கிராமப் புறங்களில் இருப்பவர்களுக்குச் சரியான முறையில், வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதில்லை.
கிராமப் புறங்களில் இணையப் பயன்பாடு 19 சதவீதமே உள்ளது என்ற தகவல் இதனை உறுதிப்படுத்துகிறது. ஆனால், சீனா போன்ற நாடுகளில் கிராமப் புற இணையப் பயன்பாடு 46 சதவீதமாக உள்ளது என்ற தகவல், இந்தியாவில் இதை உயர்த்த ஏதாவது முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது.
இதனை உயர்த்த வாய்ப்புகள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 14% வளர்ச்சியைத் தற்போது இந்தியப் பயனாளர்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு 40% அதிகரித்து வருகிறது. இது சீனாவிலும், பிரேசில் நாட்டிலும், 25% அளவிலேயே உள்ளது என்ற நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா இணையப் பயன்பாட்டினை அதிகரிக்கலாம் என்பதே, பேஸ்புக் நிறுவனத்தின் திட்டமாக உள்ளது.
இதனால், பேஸ்புக் வளர்ச்சி அடைவதுடன், விளம்பரங்கள் சார்ந்த வர்த்தகமும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். பேஸ்புக் தளத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு இது உதவிடும்.
தற்போது பேஸ்புக் தளத்தின் வருமானத்தில், விளம்பரங்கள் பெரிய அளவில் பங்கெடுத்துள்ளன. விளம்பரதாரர்களுக்கும் இந்த முயற்சி அதிக வாய்ப்புகளை அளிக்கும்.
இந்தியாவில், ஏறத்தாழ 12 கோடி பேர் பயன்படுத்தும் தளமாக பேஸ்புக் வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சியின் அடிப்படையில், உலகிலேயே 100 கோடி பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட தளமாக வளர இதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது.
வரும் நாட்களில், Internet.org பேஸ்புக் தளம் மற்றும் இந்திய இணையப் பயனாளர்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கினைக் கொண்டிருக்கும். இது, மற்ற நாடுகளிலும் இந்த முயற்சியை மேற்கொள்ள பேஸ்புக் தளத்திற்கு உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
Internet.org வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் சேவையினைப் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திர மாநிலம், தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலங்களில் இருக்கும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் முதல் கட்டத்தில் இந்த வசதியினைப் பெறுகிறார்கள். இந்த தொலைதொடர்பு மண்டலங்களில் இயங்கும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெறலாம்.
என்றாலும், இந்த திட்டம் இலக்கு வைப்பது, எந்தவித டேட்டா திட்ட இணைய இணைப்பும் இல்லாமல் இருக்கும் கிராமப் புற மக்களைத்தான். இவர்களுடன், இணைய இணைப்பிற்கான திட்டங்களுக்குச் செலவு செய்திட வசதியில்லாமல் இருப்பவர்களையும் இந்த திட்டம் முக்கியமாகக் குறி வைத்துள்ளது.
இவர்கள் 40 இணைய தளங்களை இலவசமாக அணுகலாம். தங்களுடைய மொபைல் போனில், ஆப்பரா மினி, அல்லது யு.சி. பிரவுசர் மூலம் Internet.org தளத்தை அணுகி, இந்த வசதியைப் பெறும் வழியைப் பெறலாம்.
=============================================================================
”கூகுள் டாக்”
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வந்த ”கூகுள் டாக்” வசதி இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது.
ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ள மிகவும் பயனுள்ள கருவியாக ''ஜி டாக்” எனப்படும் கூகுள் டாக் இயங்கி வந்தது.
ஆனால், தான் வழங்கி வரும் வசதிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் செயல்பாட்டினை கூகுள் மேற்கொண்டு வருவதன் எதிரொலியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம். உலகில் மிகப் பெரிய அளவில், மொபைல் சாதனங்களில் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்த கூகுள் நிறுவனத்தால், அனைவரும் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய இன்ஸ்டண்ட் மெசேஜிங் சிஸ்டத்தினைத் தர இயலவில்லை.
முதலில் வாட்ஸ் அப் மெசேஜிங் திட்டத்தினை கூகுள் வாங்கிட முயற்சி செய்தது. 1000 கோடி டாலர் வரை தர முன் வந்தது. ஆனால், பேஸ்புக் நிறுவனம், மிகச் சாதுர்யமாக, அதனை 1,900 கோடி டாலருக்குத் தட்டிச் சென்றது.
எனவே, கூகுள் நிறுவனத்திற்கு, கூகுள் ப்ளஸ் சார்ந்த தன்னுடைய “ஹேங் அவுட்ஸ்” புரோகிராமினை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஹேங் அவுட், மெசேஜ் மற்றும் அழைப்புகளுக்கான வசதி கொண்டதாக இயங்குகிறது.
இதில் பல கூடுதல் வசதிகள் இருந்தாலும், தினந்தோறும் கூகுள் தரும் வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் கூட, கூகுள் ஹேங் அவுட் தரும் வசதிகளைப் பயன்படுத்தத் தயாராய் இல்லை.
அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்ற ஜனவரி 2015ல், வாட்ஸ் அப் 70 கோடி வாடிக்கையாளர்களையும், வி சேட் (WeChat) 50 கோடி பேரையும் கொண்டுள்ளது.
தற்போதுதான் இந்த பிரிவில் வந்திருக்கும் ஹைக் (Hike) 3.5 கோடி பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.
ஆனால், கூகுள் தரும் ஹேங் அவுட் வசதியை மிகக் குறைவானவர்களே பயன்படுத்தி வருகின்றனர்.
எத்தனை பேர் மாதந்தோறும் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை கூகுள் வெளியிடவில்லை.
கூகுள் போன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மெசேஜிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகிய அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்து, அதற்கு ஜி டாக் தேர்ந்தெடுத்தது.
ஆனால், இப்போது திடீரென, அதனையும் விட்டுவிட்டு, ஹேங் அவுட் வசதியைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கூகுள் ஹேங் அவுட், மற்றவற்றில் நமக்குக் கிடைக்காத சில வசதிகளைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, இதில் பலர் ஒரு குழுவாக சேட்டிங் செய்திடலாம். இந்த வசதி மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலர் இந்த வசதி இருப்பதனை அறியாதவர்களாகவே உள்ளனர். அண்மையில் கூகுள் ஹேங் அவுட் புரோகிராமிற்கு வெளியிடப்பட்ட அப்டேட் பைல், அதனை ஸ்கைப் புரோகிராமிற்குப் போட்டியாக அமைத்தது.
===========================================================================