தோழர் மாயாண்டி பாரதி.
அவர் எங்கே சென்றாலும் அவரைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிடும்.
அவருடைய விமர்சனங்கள் கூர்மையாக இருக்கும்.
ஆனால் எவர் மனதையும் புண்படுத்தாது.
மார்க்சியத்தின் மீதும், அதன் இறுதி வெற்றி நிச்சயம் என்பதிலும் அவருக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.
‘டால்ஸ்டாயின் ஆறடி நிலம்‘, ‘அரசு என்றால் என்ன’ போன்ற சில நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையினருக்கு திருமணம் நடத்திவைத்த பெருமையும் அவருக்கு உண்டு.
12 ஆண்டுகள் சிறைவாசம், பல ஆண்டுகள் தலைமறைவு வாசத்தை அனுபவித்துள்ளவர்தான் ஐ.மா.பா.என்று அழைக்கப்படும் தோழர் மாயாண்டி பாரதி.
மாபெரும் தேசபக்தராகவும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த கம்யூனிஸ்ட்டாகவும் ஏழை- எளிய மக்களிடம் மிகுந்த பரிவு கொண்ட மாபெரும் மனிதாபிமானியாகவும் விளங்கினார் .
மிகச் சிக்கலான விஷயங்களைக் கூட சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி எழுதுவதிலும், விளக்குவதிலும் அவருக்கு இணை அவரேதான். ஏழை - எளிய மக்களுடன் மிகவும் ஒன்றிவிடுவார்.
கம்யூனிஸ்ட் இயக்கப் பாடகர்களாகயிருந்த பாவலர் வரதராஜன் மற்றும் அவரது தம்பிகளுக்கு ஐ.மா.பா. பல உதவிகள் செய்துள்ளார்.
அதே போன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மீதும் அவரது தாக்கம் அதிகமுண்டு.குழந்தைகள் மீது பாச மழையைப் பெய்த ஐ.மா.பாவின் தோல் பையில் அவர்களுக்காக மிட்டாய்கள், தின்பண்டங்கள் எப்பொழுதும் இருக்கும்.
புகழ்மிக்க சுதந்திரப் போராட்ட வீரரும், தொழிலாளி வர்க்க இயக்கத்திற்காக பல்லாண்டு சிறைவாசம், சித்ரவதைகளை அனுபவித்தவரும், தனது எழுத்தாற்றலால், பேச்சாற்றலால் ஏராளமானோரை மார்க்சிய இயக்கத்தின்பால் ஈர்த்தவருமான அருமைத்தோழர் ஐ.மாயாண்டி பாரதி 1917 ஆம் ஆண்டில் பிறந்தார்.
இருளப்பன் - தில்லை அம்மாளின் புதல்வரான இவர் துவக்கக் கல்வியை ஏட்டுப் பள்ளியிலும், பின்னர் ஸ்வீடிஷ் மிஷன் பள்ளியிலும் படித்தார்.
ஐந்தாவது வகுப்பை நகராட்சி பள்ளியிலும் பின்னர் உயர்நிலைப் படிப்பை அமெரிக்க மிஷன் நடுநிலைப் பள்ளியிலும் சௌராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.
பள்ளியில் படிக்கும் போதே சுதந்திரப் போராட்ட இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட மாயாண்டி, காங்கிரஸ் கட்சி நடத்திய கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் தவறாது பங்கெடுப்பார்.
தந்தையாருக்கு இது மிகுந்த வெறுப்பைத் தரும். ஏனெனில் அவர், சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்த நீதிக் கட்சிக்காரர்.
மாயாண்டியின் அண்ணன் கருப்பையாவும், சுதந்திரப் போராட்ட ஆர்வம் மிக்கவர். வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு பிரம்படிபட்டவர்.மாயாண்டியின் அரசியல் துவக்கம் என்பது 1931 ஆம் ஆண்டில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆவேச ஊர்வலத்திலிருந்து தொடங்குகிறது.
அவர் பங்கேற்ற முதல் ஊர்வலமும் இதுதான்!
இதன்பின் மாயாண்டி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கடுமையான அடி உதைக்கு ஆளானார்.
உடல் முழுவதும் காயங்களுடன் வந்த அவரை, தந்தையார் ஈவிரக்கமின்றி அடித்து படுத்த படுக்கைக்கு ஆளாக்கினார். ஆனால் எத்தகைய அடி உதையும் மாயாண்டியை அசர வைக்க முடியவில்லை.
விடுதலை இயக்கத் தீ அவர் சிந்தனையில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.அதே 1931 ஆம் ஆண்டில் ஜதீந்திரநாத் வாசக சாலையின் திறப்புவிழா மதுரையில் நடைபெற்றது.
வங்காளத்தின் பிரபல காங்கிரஸ் தலைவர் பி.சி.ராய் அதில்கலந்து கொண்டார். அந்த விழாவில்தான் மாயாண்டிக்கு ‘பாரதி’ என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து அவர் மாயாண்டி பாரதி என்றும், ஐ.மா.பா. என்றும் அழைக்கப்படலானார்.
ஜதீந்திரதாஸ் வாசக சாலை, லாலா லஜபதி வாசகசாலை, அன்சாரி வாசக சாலை, ஜவஹர் வாலிபர் சங்கம், கமலா நேரு வாசக சாலை, விஸ்வகர்மா கைத் தொழிலாளர் சங்கம் போன்றவற்றில் தலைவராகவும், செயலாளராகவும் பல ஆண்டு காலம் செயல்பட்டார்.
பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், எழுத்தில் ஆர்வங்கொண்டிருந்த ஐ.மா.பா., சென்னைக்குச் சென்று ‘நவசக்தி’ ஏட்டிலும், ‘லோகோபாரி’ ஏட்டிலும் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
அச்சமயத்தில் ‘நவசக்தி’யை தமிழறிஞர் திரு.வி.க.வும், ‘லோகோபாரி’யை, பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பரும் நடத்தி வந்தனர்.1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது உலகப் போர் துவங்கிய போது ஐ.மா.பா. ஏகாதிபத்திய போரைக் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.
தேசபக்த ஆவேசத்தை தூண்டும் “படுகளத்தில் பாரத தேவி” என்ற சிறிய நூலை எழுதினார். இது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விருதுநகரில் இந்தப் பிரசுரத்தின் விற்பனையாளர், காங்கிரஸ் தலைவர் காமராசர் என்பதிலிருந்தே இதன் சிறப்பு விளங்கும்.
இப்பிரசுரத்தை எழுதி வெளியிட்டதற்காக ஆங்கிலேய அரசாங்கம் அவர் மீது பாய்ந்தது.
அவரைக் கைது செய்து ஓரிரு மாதம் சிறையிலடைத்தது. ‘லோகசக்தி’ பத்திரிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் ஜாமீன் கேட்கப்பட்டதால் அது நிறுத்தப்பட்டது.விடுதலையான பின் மதுரைக்கு வந்த ஐ.மா.பா. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
சாத்தூர் அருகே உள்ள கன்னிசேரியில் 1940 ஆம் ஆண்டில் “பட்டாளத்தில் சேராதே, பணம் காசு கொடுக்காதே” என்று பேசியதற்காக ஐ.மா.பா.விற்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும், 250 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்த மறுத்ததால் அவருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர், கோவை சிறைகளில் அவர் இருந்தபோது கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி.சிந்தன், மார்க்சிய அறிஞர் ஜமதக்னி ஆகியோர் நடத்திய மார்க்சிய அரசியல் வகுப்புகளில் கலந்து கொண்டு கம்யூனிஸ்டானார். தண்டனை முடிந்து வெளியே வந்த அவர், 1941 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே காமராசர், சஞ்சீவ ரெட்டி, ஏ.கே.கோபாலன், என்.ஜி.ரங்கா, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், என்.சங்கரய்யா, பட்டாபி சீத்தாராமய்யா ஆகியோருடன் ஐ.மா.பா.விற்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுதலையான ஐ.மா.பா., ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். 1944 ஆம் ஆண்டு இறுதியில்தான் விடுதலையானார்.
1945 ஆம் ஆண்டில் மதுரை நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளில் பங்கெடுத்தார்.
பின்னர் சென்னைக்குச் சென்று கட்சியின் ஏடான “ஜனசக்தி”யின் ஆசிரியர் குழு உறுப்பினரானார்.1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது ஐ.மா.பாவும் கைது செய்யப்பட்டார்.
1949ம் ஆண்டில் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
தலைமறைவாகயிருந்த கட்சித் தலைமை அவரை கட்சி ஊழியர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நடப்பு அரசியலை போதிக்கும் பணிக்காக நெல்லை மாவட்டத்திற்கு அனுப்பியது. தலைமறைவாகயிருந்து அங்கே செயல்பட்டு வரும்போது, மீளவிட்டான் அருகே கூட்ஸ் ரயிலைக் கவிழ்த்தாக ஐ.மா.பா. மீது குற்றம் சாட்டப்பட்டது.
காவல்துறையினர் அவரை அந்த மாவட்டம் முழுவதும் வலைவீசித் தேடி இறுதியில் அவரை மேலப்பாளையம் அருகே கைது செய்தனர்.ஐ.மா.பா. அங்கே மிகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டார். அவரது குறுக்கு எலும்பு, கைவிரல்கள் ஒடிக்கப்பட்டன.
பின்னர் உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.1954 ஆம் ஆண்டில் ஐ.மா.பா. - பொன்னம்மாள் திருமணம் மதுரையில் நடைபெற்றது. அதே ஆண்டில் அவர் ‘ஜனசக்தி’ ஆசிரியர் குழுவில் துணை ஆசிரியரானார்.அமெரிக்காவில் ரோசன்பர்க் தம்பதியை, சோவியத் ஒற்றர்கள் என்ற பழி சுமத்தி அமெரிக்க அரசாங்கம் மின்சார நாற்காலியில் வைத்து கொன்றது.
அதைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க அலுவலகம் முன்பு ஆவேசமான ஆர்ப்பாட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. கல்வீச்சு நடைபெற்றது. இதன் காரணமாக அன்றிரவில் ஐ.மா.பா. உள்ளிட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குப் பின்புதான் விடுதலை செய்யப்பட்டனர்.
1964 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவேற்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய பொழுது ஐ.மா.பாவும் தன்னை அதில் இணைத்துக் கொண்டார்.
அவ்வாண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதியன்று தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் வைக்கப்பட்டனர்.
ஐ.மா.பா.வும் அவர்களில் ஒருவர். 16 மாத காலத்திற்குப் பின் விடுதலையான அவர், மதுரை நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளர்ச்சிப் பிரச்சாரத்திலும், இளைஞர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்துவதிலும் முன்னின்றார்.
1969 ஆம் ஆண்டில் “தீக்கதிர்” நாளேடு மதுரைக்கு மாற்றப்பட்டபின் ஐ.மா.பா. அதில் இணைந்து சுமார் 20 ஆண்டு காலம் பணியாற்றினார்.
பின்னர் உடல்நிலை காரணமாக ஓய்வு பெற்ற ஐ.மா.பா., மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர் சமிதியை பராமரிப்பதிலும், முதிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவிகள் செய்வதிலும் முழுக்க முழுக்க தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
'
ஜனசக்தி’யிலும், ‘தீக்கதிரிலும்‘ பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள், குறிப்புகளை ஐ.மா.பா. எழுதியுள்ளார். அவரது எழுத்தில் நகைச் சுவை கலந்த கூர்மை இருக்கும்.
ஆனால் அவரின் இழப்பு தாளா சோகத்தை மட்டுமேதரும்.
===========================================================================