செவ்வாய், 24 மார்ச், 2015

நில பறிப்பு? சொத்து குவிப்பு??“அரசு தனது திட்டங்களுக்கு நிலம் எடுக்க மசோதா கொண்டு வந்துள்ளது. இதில் தனியார் - கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன் ஏதும் இல்லை. தனியாருக்கு நிலம் எடுக்கத்தான் சட்டம் கொண்டுவருவதாக கம்யூனிஸ்டுகள் மற்றும் எதிர் கட்சியினர் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள்...?”

நாடு முழுவதும் பாஜகவினர்,அவர்களின் ஆதரவாளர்கள்,அடிவருடிகள்,சொம்புகள் இன்ன பிறர் இப்படித்தான் பேசி வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை வானொலியில் பேசியமோடியும்  இதைத்தான் கூறியுள்ளார்.
"விவசாயிகளுக்கு எதிராக தான் ஒன்றும் செய்யப்போவதில்லை"
 சரி, நிலம் கையகப்படுத்தல் மசோதாவுக்கும் தனியார் பெரும் நிறுவனங்களுக்கும் உண்மையிலேயே தொடர்பில்லையா?

அதற்கு நிலம் கையகப்படுத்தல் சட்டம் பற்றிய அடிப்படை நிலையை புரிந்து கொள்வோம்.

நிலம் கையகப்படுத்தல் சட்டத்திருத்த மசோதா - 2013, முந்தைய காங்கிரஸ் கூட்டணி 2 அரசினால் நில மறுசீரமைப்புக் கொள்கை யை வலியுறுத்தும் பத்து அம்சங்களை அடிப்படை யாகக் கொண்டு 2012 இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது இடதுசாரிகள் உட்பட  சில எதிர்க் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன் காரணமாக விவசாயிகளைப் பாது காக்கும் அம்சங்கள் திருத்தமாக அரசு ஏற்றுக்கொண்டது.
அப்போது அதனால் பல கட்சிகளும் ஆளும் கூட்ட ணியில் அங்கம் வகித்த திமுகவும் ஏற்றுக் கொண்டு ஆதரித்தது.
ஆனால் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு பல கட்சிகளால் ஏற்றுக் கொண்ட இந்த மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்த்தது.

ஆனால்  பாஜக அரசுஅமைந்தவுடன் ஏற்கெனவே இச்சட்டத்தில் இருந்த விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மீனவர்கள் ஆகியோரைப் பாதுகாக்கும் அம்சங்களை புறந்தள்ளி விட்டு கார்ப்பரேட் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி,
 `நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு மற்றும் மறு குடியமர்த்தல் தொடர்பான நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமைச் சட்டம் 2013 -"  என்ற பெயரில் திருத்தி அவசரச் சட்டமாகக் கொண்டு வந் துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது 80சதமானம் நில உரிமையாளர்களின் ஒப்புதலும், பொது மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களுக்கு நிலத்தை எடுக்கும்போது 70சதமானம் நில உரிமையாளர்களின் ஒப்புதலும் தேவை என முந்தைய மசோதாவில் இருந்தது.
ஆனால் தற்போதைய அவசரச் சட்டம் -மேற்கண்ட விதிமுறைகளைத் தளர்த்தி 50சதமானம் ஒப்புதல் இருந்தாலே போதும், என்பதோடு பாதுகாப்பு, ஊரக உள்கட்டமைப்பு, குறைந்த விலை வீட்டுவசதி, தொழில்துறை வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட 5 துறைகளுக்கும், பொது மற்றும் தனியார்கூட்டு நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் விவசாயிகளின் ஒப்புதல் பெறுவதிலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது.

முந்தைய மசோதாவில் நீர்ப்பாசனத் திட்டங்கள் தவிர எந்தவொரு திட்டத்திற்காகவும் நிலம் யைகப்படுத்தப்படுவதால் ஏற்படப்போகும் சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீடு செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதாவது இடம்பெயரும் மக்கள் தொகை, நிலமற்றோர் மற்றும் தன் வாழ்வாதாரத்திற்காக குறிப்பிட்ட நிலத்தை மறைமுகமாகச் சார்ந்திருப்போர் மற்றும் நிறைவேற்றப்படப்போகும் திட்டத்தின் மூலம் அவர்கள் அடையப்போகும் பலன்கள் ஆகியவையே இந்த அம்சங்கள்.
பாஜக அரசின் அவசரச் சட்டம், சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீடே தேவையில்லை என்றாக்கியுள்ளது.
 `பொது நோக்கம்‘ என்ற பெயரில் நிலம் எடுக்க அனுமதியை வழங்கிட வகை செய்துள்ளது.

பல பயிரின சாகுபடி நிலங்கள் மற்றும் வளமான விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற முந்தைய சட்டத்தின் பிரிவை மாற்றி அவற்றையும் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று மோடி அனுமதி அளித்து சட்டத்தை திருத்தியுள்ளார்.இது விவசாயிகளுக்கும் இந்தியா விவசாய நாடு என்பதற்கும் பலத்த அடி இல்லையா/ உணவுப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் திட்டம் என்பது தெளிவாகிறது அல்லவா/.

`பொது நோக்கத்திற்காக’ நிலம் கையகப்படுத்துதல் என்கிற கருத்தில் எது பொது நோக்கம் என்ற வரையறை காணப்படவில்லை மோடியின் திருத்தத்தில்.அரசு சொல்லுவதெல்லாம் பொது நலன்,பொது நோக்கம்தான்.கோக கோலா தொழிற்சாலைக்கு நிலம் பறிப்பதும்,அம்பானி,அதானி நிலக்கரி சுரங்கம் ,எரிவாயு எடுப்பும் கூட பொது நோக்கம்தான் மோடியின் பாஜக அரசுக்கு.
எனவே நோக்கம் பற்றி  இதில் போதுமான அளவுக்கு வரையறுக்கப்படவில்லை.
ஊரக உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவை தொடர்பாகவும் சரியான விதிமுறைகள் இல்லாமல் இருக்கின்றன.

முந்தைய மசோதாவில் நிலம் கையகப்படுத்தும் எந்தவொரு நிறுவனமும், கம்பெனிச் சட்டம் 3வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.
தற்போதைய சட்டமோ `தனியார் நிறுவனங்கள்’ என்பதன் அர்த்தத்தை விரிவுபடுத்தி உடமையாளர்கள், பங்குதாரர்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் லாப நோக்கமற்ற அமைப்புகள் ஆகியவை என வரையறுத்துள்ளது.

இதன் மூலம் கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவதிலிருந்து தப்பிப்பதற்காக தனிநபர் மற்றும் சமூகநலன் சார்ந்த அமைப்புகள் என மாற்றி மேற்கண்ட பிரிவையே கேலிக்கூத்தாக்கியுள்ளது.

 நீதிமன்றம் செல்ல முடியாது.
முந்தைய மசோதா நிலம் கையகப்படுத்தப்பட்ட நிறுவனத்தால் 5 ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வராமலோ அல்லது நிலத்தை இழந்தோர்க்கு இழப்பீடு வழங்குவதற்கு தவறும்பட்சத்திலோ, மீண்டும் அந்த நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்றிருந்தது.
அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்லவும், நியாயம் பெறவும் சட்டவழிவகை இருந்தது.
ஆனால் தற்போதைய அவசரச் சட்டமோ 5 ஆண்டுகள் என்ற காலவரம்பை நீக்கியுள்ளது. இதன் காரணமாக நிலத்தை இழந்தவர்கள், பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு நீதிமன்றம் செல்லவோ, தடையாணை பெறவோ உள்ள சட்டத்தின் வாய்ப்பை மறுக்கிறது.
மொத்தத்தில் பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்கள் அரசு கொண்டுவந்து  விடுதலை இந்தியாவில் காலாவதியான `நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894’ நிலத்தின் மீதான பரிபூரண உரிமையை ஜமீன்தார்கள் மற்றும் பெரும் நிலச்சுவான்தார்களுக்கு வழங்கியதென்றால், மோடி அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் நிலத்தின் மீதான பரிபூரண உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது .

அப்போது அடிமை இந்தியா.மக்கள் போராட வாய்ப்பின்றி,வாய்ப்பூட்டு சட்டத்தில் அடிமைகளாக வேறு வழியின்றி ஏ ற்றுக்கொண்டனர்.
ஆனால் விடுதளைக்குப்பின்னர் இந்தியாவில் மோடி கொண்டுவந்த இந்த சட்டம் பெரும் நிறுவனங்களுக்கும்,அந்நிய முதலீடு என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்குமே வழி வகுக்கும்.மக்களுக்கு எதிரானது என்பதை தெளிவாகத்தெரிந்தும் இந்திய அளவில் விவசாயிகளும்,மக்களும் வாளாவியிருப்பதை பார்க்கையில் இன்னமும் அடிமை வாழ்வை விட்டு இந்திய மக்கள் வெளிவர வில்லை என்றுதான் தெரிகிறது.
விவசாயிகள் வாதாட பலவழிகளை  கொண்டிருந்த முந்தைய சட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா இன்றைய அடிமை சட்டத்தை பலமாக வரவேற்று ஆதரிப்பதை பார்த்தால் ஜெயாவின் நோக்கம் மக்கள்,விவசாயிகள் நலன் அல்ல.
தன்னுடைய பச்சை சுய நலன் மட்டும் தான் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தனக்கு சார்பாக வந்து விட மத்திய மோடி அரசு உதவவேண்டும் என்பதைத்தவிர இச்சட்டத்தை ஆதரிக்க அவருக்கு வேறு ஒரு காரணமும் இல்லை.
அதைத்தான் அவரை பார்த்து சென்ற மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் பேசி சென்றிருப்பார் என்பதை இந்த அ .தி.மு.க, ஆதரவு காட்டிக்கொடுத்து விட்டது.
 விவசாயிகள் -மக்கள் நலனுக்கெதிரான ஜெயாவின் ஆதரவுக்கு கை மேல் பலன் கிடைக்கும் என்றுதான் தெரிகிறது.