வியாழன், 12 மார்ச், 2015

ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போக மாட்டார்கள்.
ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளே ஆதரவு தராத நிலையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு மத்திய அரசுக்கு மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்துள்ளது.

விவசாயிகளுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.


 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டத்தை பாஜக  அரசு 2014 இறுதியில் கொண்டு வந்தது.

விவசாயிகளுக்கு எதிரானது, பணக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் ஆதரவானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது இந்த அவசர சட்டத்துக்கு அதிமுகவும் கூட்டத் தோடு சேர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது,
மக்களவையில் முதல்முறையாக இந்த அவசர சட்டத்துக்கான மசோதா தாக்கல் செய்தபோதும் இடதுசாரிகள் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக கடும் எதிர்ப்பை அதிர்வு செய்தது.

இந்த மசோதா உள்பட 6 அவசர சட்டங்களுக்கான மசோதாக்களை நடப்பு கூட்டத் தொடருக்குள் நிறைவேற்றாவிட்டால் அவை காலாவதியாகிவிடும். அதனால் இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மத்தியில் உள்ள பாஜ அரசு மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி சமாதானப்படுத்தும் முயற¢சியை மேற்கொண்டனர்.

அதேபோல் எதிர்க்கட்சிகளுடனும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.பல வாக்குறுதிகள் [?]மோடியால் தரப்பட்டது.

தொடக்கம் முதலே அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜ கூட்டணியில் உள்ள சிவசேனா, தெலுங்கு தேசம், அகாலிதளம், லோக் ஜன சக்தி போன்ற கட்சிகள், எதிர்க்கட்சிகளின் `விவசாயிகளுக்கு எதிரானது என்ற னர்.
 அதைத் தொடர்ந்து  கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று 9 முக்கிய திருத்தங்களுடன் இந்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்தன.

கூட்டணியில் உள்ள சிவசேனா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இது மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
 எதிர்பாராத வகையில் இந்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு அளித்தது. மக்களவையில் வாக்கெடுப்பு நடக்கும்போது அனைத்து அதிமுக எம்.பி.க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வாக்கெடுப்பின்போது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி. கே.என். ராமச்சந்திரன் முன்பு அதிமுக எதிப்பு தெரிவித்துப் பேசிய அதே மசோதாவை புகழ்ந்து பேசியது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல  ஆளும் பாஜவுக்கும்   அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
 “தனியார் மருத்துவமனை, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிலம் அளிக்கக் கூடாது ,தொழிற்சாலைகளுக்கு அளிக்கலாம் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. சிறந்த  நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது’’ என்று அவர் தொடர்ந்து சம்பந்தமே இல்லாமல் பாஜக உறுப்பினர்களைவிட அதிகமாக புகழ்மழையைப் பொழிந்தார்.மக்களவையில் பெரும்பான்மை உள்ள பாஜவுக்கு, மாநிலங்களவையில் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. மக்களவையில் 37, மாநிலங்களவையில் 11 எம்.பி.க்களை அதிமுக கொண்டுள்ளது. ஒருவேளை கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டால் இந்த 48 எம்.பி.க்கள் ஆதரவு ஆளும் பாஜவுக்கு பெரிய பலமாக இருக்கும்.
அந்த நோக்கத்திலேயே அதிமுகவின் பக்கம் பாஜ சாய்ந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வரும் 2016 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரமாகவும் இதைக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பதற்காக, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜவின் ஆதரவைப் பெறுவதற்காகவே அதிமுக இந்த திடீர் பல்டி அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சென்னைக்கு வந்தபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவரை மத்திய அமைச்சர் சந்தித்து பேச வேண்டிய அவசியம் என்ன என்று மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
 நாடாளுமன்றத்திலும் சரி, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்த போதும், பல இக்கட்டான சூழலில் பாஜ அரசுக்கு ஆதரவாக அதிமுக பேசியது. ஆளும் பாஜவினருக்கு மேலாக மோடியையும், மத்திய அரசையும் அதிமுக எம்.பி.க்கள் பாராட்டி பேசினர்.
 திட்டக் குழு வை மாற்றி புதிய அமைப்பு கொண்டு வரப்பட்டபோது மத்திய அரசை விமர்சித்த அதிமுக, நாடாளுமன்றத்தில் இந்த திட்டம் மத்திய அரசின் மிகப் பெரிய தொலைநோக்கு திட்டம் என்று பாராட்டியது.

மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட்டை வெகுவாக பாராட்டினார் ஜெயலலிதா.
மாநில வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியை பறிக்க காரணமாக இருந்த வேளாண் பொறியாளர் தற்கொலை குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் மாநில பாஜ நிர்வாகிகள் மவுனம் சாதித்தனர். சமீபத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து மோடிக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா.
ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றோடு போக மாட்டார்கள் கதையாக
இந்த மாற்றங்களுக்கு காரணம் பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கு முறையீடு முடிவுக்கு வருவதுதான்.மத்திய அரசு தயவு ஜெயாவுக்கு தேவை .அதனால் முதலில் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசி பாஜகவை தன வழிக்கு கொண்டுவரும் நாடகம் தான் நடந்துள்ளது.
அதுவும் போக 2300 ஏக்கர் விவசாய நிலத்தை கார் தொழிற்சாலைக்கும்,கொக்கோ கோலா நிறுவனத்துக்கும்   தாரைவார்க்க இந்த சட்டம் உதவும் என்பதும் ஒரு காரணம்.
 ==========================================================================
தும்மலை தடுக்க...

ஒரு தேக்கரண்டியில் சமையல் உப்பை எடுத்துக்கொண்டு, அதில் எட்டில் ஒரு பங்கு உப்பை 200 மிலி இளம் சூடான தண்ணீரில் கலந்து  கொள்ளுங்கள்.

இப்போது சுத்தமான துணியை அந்த தண்ணீரில் நனைத்து பிழிந்துகொண்டு, திரி போல சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாசி துளையிலும்  விட்டு மூக்கை சுத்தப்படுத்தினால் தும்மல் நிற்கும்.

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது முகத்தில் சிறு துணியை கட்டிக்கொள்ளலாம்.
இதனால் தூசுகள் மூக்கின் உள்ளே செல்ல வழி  ஏற்படாது.

ஏசி அறையில் அமர்ந்து வேலை பார்த்தால், மாஸ்க் பயன்படுத்தலாம்.

இதனால் குளிர்ந்த காற்று மூக்கினுன் செல்லாது. 

==========================================================================
தும்மல் 

சாதாரணமாக கருதப்பட்ட தும்மல் எவ்வளவு வலிமையானது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் அலட்சியமே பல நோய்களுக்கு வழி  வகுக்கிறது.
இதில் முக்கியமானது காற்றில் பரவும் பன்றிக் காய்ச்சல், இது தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.
மனித உடலில் சாதாரணமாக ஏற்படக்கூடிய உடலியல் மாற்றங்களில் தும்மலும் ஒன்று. காற்று தவிர வேறு எந்த அந்நிய பொருளும் மூக்கில் நுழைந்தால், மூக்கு அதை ஏற்க மறுப்பதால் ஏற்படக்கூடிய செயல்தான் தும்மல்.
நமது நாசித் துவாரத்தில் முடியிழைகள் அதிகளவில் இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்கு தெரியாத தூசு, துகள் இருந்தால்  அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை.
 இங்கு உள்ள ஒரு மென்மையான சவ்வுப் படலம் நிறமற்ற திரவத்தை சுரக்கிறது.
அளவுக்கு  அதிகமான தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்தால், இந்த சவ்வுப்படலம் தூண்டப்பட்டு, உடனே அவற்றை வெளியே தள்ளும் முயற்சியில் அதிக நீரை  சுரக்கிறது.
 இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்று தசைகள் ஒன்று சேர்ந்து சுவாச பாதையில் உள்ள காற்றை  அழுத்தமாகவும், வேகமாகவும் மூக்கு வழியே வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேற்றும்போது மூக்கின் வழியே உள்ளே நுழைந்த எந்த அந்நிய  பொருளும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் தும்மலாக வெளியேற்றப்படும்.

சாதாரண தும்மல் சில நிமிடங்களில் நின்றுவிடும்.
ஆனால் சிலர் தொடர்ச்சியாக தும்முவார்கள். மூக்கில் அரிப்பு ஏற்பட்டு ஒரு கைத்துண்டு நனைகிற  அளவுக்கு கூட மூக்கிலிருந்து நீர் வெளியேறும். இதற்கு ஒவ்வாமை தும்மல் என்கின்றனர். வீட்டில் படியும் தூசு, ஒட்டடை, பஞ்சு, சணல், கயிறு,  கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும்.
இதுபோல் குளிர்ந்த காற்று, ஊதுவத்தி,  சாம்பிராணி போன்றவற்றின் புகை, பார்த்தீனிய செடியின் முள்ளிழைகள், பூக்களின் மகரந்தங்கள், பூஞ்சைகள் முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழி  வகுக்கும். படுக்கை விரிப்புகள், பாய், தலையணை, மெத்தை ஆகியவற்றில் காணப்படும் பூச்சிகள், வளர்ப்பு பிராணிகளின் உடலிலிருந்து வெளியேறும்  முடிகள் காரணமாகவும் இது தூண்டப்படுகிறது.

பொதுவாக, சாதாரண உடலியல் மாற்றத்தால் தும்மும்போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் தும்மல் விடும் நபர்களின் அருகில்  இருப்பவர்களின் உடல்நிலைக்கு ஏற்றாற்போல் ஜலதோஷம் தொற்றிக் கொள்ளும். அதே சமயம் தும்முபவர்கள் காற்றில் பரவும் கிருமிகள் மூலம்  பாதிக்கப்பட்டவராக இருந்தால், அதை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் கண்டிப்பாக அந்த நோய் பரவும். இது சங்கிலி தொடர்போன்று பரவி ஏராளமான  மனித உயிர் அழிய வழி ஏற்படுத்தும்.
இதுபோல் அவ்வப்போது நிகழ்வதும் உண்டு.
இதை தடுக்க சுகாதார துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து  வருகிறது.தலைவலி தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதைப்போல, பரவும் நோயின் அபாயம் தமக்கு வந்த பின் தான் உணர வேண்டுமா? 
யாருக்கோ, எங்கோ நோய் பரவினால் எனக்கென்ன என்றில்லாமல், தும்மல் வந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம். தும்மல் வருவதற்கு முன்  கைக்குட்டையை பயன்படுத்த தயங்காதீர்கள்..

=========================================================================