மே -1. உழைப்பாளர் தினம்.

உலகில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் [கை நீட்டி அல்லது ஏ.டி.எம்.அட்டை மூலம் சம்பளப்பணம் பெறும்] உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
கருத்தாலும் -கரத்தாலும் உழைக்கும் அனிஅவ்ருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். 
பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.
1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது.
 பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.

 இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 
1827-ல் பிலடெல்பியாவில் கட்டிடங்கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834-ல் நியுயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். 
நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. 
பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன். 1837-ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. 
எல்லோருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. 
பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய, உடனேயே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.
 இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. 
உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.
1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.
1861-62-ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கம், இயந்திர தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866, ஆகஸ்டு 20-ஆம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச. சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஒரு இளைஞர். இவர் லண்டனில் இருந்த முதலாவது இனடர் நேஷனல் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்த அவரால் முடிந்தது.
1875-ம் ஆண்டு சுரங்க தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிர போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.
அமெரிக்க தொழிற்துறை மற்றும் உள்நாட்டு சந்தை 1880-90-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873-ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லா திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலை நாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியை தந்தது.
1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.
1885-ல் கூட்டமைப்பு மாநாடு அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினார். இந்த போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரி’ன் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. 
 வேலை நிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பெளடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான்.
‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலை இருந்த போதிலும் 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள் என கணக்கிடப்படுகிறது..
சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. 
மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத்தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது. அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது,
அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ‘வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம்’ என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும் போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. 
உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஒரு ஈர்க்கும் முனையாக மாறியது. மே தின ஆர்ப்பாட்டங்களின் போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். 
உலகத்தொழிலாளர் ஒற்றுமை; எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை; ஏகாதிபத்திய போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு; 
தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை; 
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை; 
போன்றவை அந்தக் கோரிக்கைகளில் சிலவாகும்.
இன்றோ அரசுப்பணிகளில் சேருவொரும், மென்பொருள் நிறுவனத்தில் இருப்போரும் தங்களை மாத சம்பளம் பெறுபவர் என்பதையே மறந்து 12 நேரம் உழைக்கிறார்கள்.தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.அதன் பலனை 35 வயதில்  திறனற்ற்வர் என்ற முத்திரையை முகத்தில் குத்தி தங்களை திடீரென வெளியே தள்ளும் போது அனுபவிக்கிறார்கள்.
டிசிஎஸ் சம்பவத்திற்கு பின்னர் தொழிற்சங்க அருமை சிலருக்கு புரிந்து வருகிறது.அனைவருக்கும் வரவேண்டும்.அணி சேர்ந்து போராடி புது விதிகள் செய்ய வேண்டும்.
தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆயிரம் கோடிகள் கணக்கில் பணம் பண்ணும் முதலாளிகளுக்கு சங்கம் நாஸ்காம் இருக்கையில் பணிபுரிபவர்களுக்கு ஏன் 
இல்லை?
=================================================================================
இன்று,
மே-01.
# மே தினம்[தொழிலாளர் தினம்.


  • இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)
  • நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(1931)
  • புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?