வேதகாலம் பொற்காலம் ?

வேதகாலம் பொற்காலம் என்றும் வேதகாலத்துக்குத் திரும்புவோம் என்றும்பழமைவாதிகளும் இந்து மதவெறியர் களும் இன்று முழக்கமிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 
உண்மையிலே வேதகாலம் பொற்காலமாக இருந்ததா? 
இப்போது வேதகாலத்துக்கு திரும்பினால் எப்படிஇருக்கும்? 
வேதகாலம் எனப்படுவது என்ன? 
வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? 
அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சமுதாயம் எப்படிப் பட்டது? 

அந்த சமூகவிழுமியங்களை இன்றுநடைமுறைப்படுத்த முடியுமா? இப்படிஏராளமான கேள்விகள் நம் முன்னே வரிசை கட்டுகின்றன. 

வேதங்களின் பெயர்களைக் கூட உச்சரிக்கக்கூடாது;

அப்படி உச்சரித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரவேண்டும் என்று மனுதர்ம சாஸ்திரத்தில் எழுதப்பட்டு அதைநடைமுறைப்படுத்தவும் செய்திருக்கிறார் கள். 
அதன்படி வேதங்களிலிருந்து விலக்கப்பட்ட பெரும்பான்மையான உழைப்பாளி மக்களான சூத்திரர்கள் இன்றுசநாதனவாதிகளின் முழக்கங்களை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேதங்களைப் படிக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் தானே இப்படியெல்லாம் சொல்ல முடிகிறது.

வேதங்களில் மிக முக்கியமானதாக கருதுவது ரிக் வேதம். 
இதுவே காலத்திற்கு முற்பட்டது. அதாவது கி.மு.2500 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இங்கே இருந்த தஸ்யூக்களை வென்று கி.மு. 1200-1000 ஆண்டுகள் வாக்கில் ரிக் வேதத்தின் ஆரம்ப கால ஸ்தோத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 
இந்த ஸ்தோத்திரங்கள் கி.மு.1000- 800க்குமிடையில் திருத்தி எழுதப்பட்டன.
கி.மு.600 வாக்கில் புதுப்பிக்கப்பட்டன.
 இந்த காலகட்டங்களில் அதாவது கி.மு.1000-800 களுக்குமிடையிலேயே சாம, யஜூர், அதர்வன வேதங்களும் உருவாக்கப்பட்டன எனலாம். 
இந்த வேதங்கள் ஆரியர்களின் நம்பிக்கைகள், சமூக நிலை, புனைவுகள், கடவுள்கள், உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் போன்றவை பற்றிய தொகுப்பு. ஆனால் ஆரியர்கள் நாகரிகத்தில் அதிக முன்னேற்றம் பெற்றிராத குலத்தவர்.
 நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். 
அவர்கள் குடியேறிய பகுதியான ஹரப்பா, மொகஞ்சதாரோ மக்களோ நாகரிகத்தில் மிகவும் முன்னேறியவர்களாகவும், நகர வாசிகளாகவும் இருந்தனர்.
செப்புக் கருவிகளை பயன்படுத்தினர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களை சாம, தான, தண்ட, பேதங்களால் வெற்றி கொண்ட ஆரியர்கள் இயற்றியதே இந்த வேதங்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.காலத்தில் முற்பட்ட ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களின் பல பகுதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சாம, யஜூர், அதர்வன வேதங்களின் கால சமூக வாழ்க்கையிலிருந்து ரிக் வேத கால மக்களது சமூகவாழ்க்கை வேறுபட்டிருந்தது.
ஆடு, மாடு, மேய்க்கும் நாடோடி வாழ்க்கையிலிருந்து பயிர்த்தொழில் செய்யும் வாழ்க்கைக்கும் நகரவாழ்க்கைக்கும் முன்னேறிக் கொண்டி ருந்ததை சாம, யஜூர், அதர்வன வேதங்கள் தெரிவிக்கின்றன. 
வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டு நினைவிலிருத்தப்பட்ட இந்த வேதங்களை கி.பி. 400 ஆம் ஆண்டுகள் வாக்கில் வாழ்ந்த ஸாயணாச் சாரியார் என்பவரே எழுதியவர்களில் முக்கியமானவர்.
 யாகம் முதலிய சடங்குகளுக்காக பல தருணங்களில் இயற்றப் பட்டு திருத்தி எழுதப்பட்ட சூக்தங்களின் (ஸ்லோகங்கள்) தொகுப்பே இன்றைய வேதங்கள். மொத்தமாக நான்கு வேதங்களிலும் சேர்த்து 20358 ஸ்லோகங்கள் இருக்கின்றன. 
ரிக் வேதத்தில் 10,522, யஜூர் வேதத்தில் 1984, சாம வேதத்தில் 1875,அதர்வன வேதத்தில் 5977 உள்ளன.
ரிக் வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப் பட்ட இடைச்செருகல்களும் உண்டு. குறிப்பாக வருணம் பற்றிய சுலோகம். மூல புருஷனைப் பலி கொடுத்ததன் மூலம் வருணம் உருவானதாக ஒரு இடத்தில் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. நெற்றியிலிருந்து பிராமணரும், தோள்களிலிருந்து ஷத்திரியரும், தொடைகளிலிருந்து வைசியரும்
, பாதங்களிலிருந்து சூத்திரரும் உருவாக்கப்பட்டனர் என்ற சுலோகம் காலத்தால் பிற்பட்டது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வருணத்தத் துவத்துக்கு ஒரு பழமையான கருது கோளை உருவாக்கப் புனைந்த தொன்மப்புனைவு தான் இந்த மூலபுருஷன் கதையும் வருணங்களின் தோற்றம் பற்றிய ஸ்லோகம். அதே போல நாடோடிகளான ஆரியர்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்தில் நுழைந்ததும் ஏற்பட்ட ஆச்சரியமான அதிசயமான உணர்வுகளும் பல ஸ்லோகங்களில் பதிவாகியுள்ளன. அங்கே ஏற்கனவே இருந்த தஸ்யூக்களை வெற்றி கொள்ள இந்திரனை உதவி செய்யுமாறு வேண்டி அழைக்கும் துதிப்பாடல்களின் தொகுப்பே ரிக் வேதம்.
யாகச்சடங்குகளுக்கான மந்திரங்கள் அடங்கிய வேதமே யஜூர் வேதம்.
சொன்னதையைத் திரும்பத் திரும்பச் சொல்வதும் அர்த்தமில்லாத ஒலிக்குறிப் புகள் கொண்டதும் ஆகும். 
யஜூர் வேதத் தில் உள்ள மந்திரங்களில் நான்கில் ஒரு பகுதி ரிக் வேதத்திலிருந்து பிறந்ததாகும்.
சாம வேதமும் புரோகிதர்கள் வேள்வி நேரத்தில் உச்சரிப்பதற்காக இயற்றப்பட்ட மந்திரங்களே நிறைந்தது. அவற்றில் ஆறுக்கும் குறைவான ஸ்லோகங்களைத் தவிர மற்றவை அப்படியே ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை.அதர்வன வேதத்தில் மாந்த்ரீகம் சம்பந்தப்பட்டது. பேய், பிசாசு, நோய் நொடி, வனவிலங்குகளைப் பற்றிய அச்சம் இவைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட மந்திரங்கள். அதுமட்டுமல்லாமல் பகைவரை அழிக்க மந்திரம், போர் வெற்றிக்கு மந்திரம், நோய் சாந்திக்கு, குழந்தைப்பேறுக்கு, நீண்ட ஆயுளுக்கு, செல்வம் குவிய என்று பல்வேறு மந்திரங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
இன்று அரசியல்வாதிகள், பணக்காரர்கள், தொடங்கி சாமானியர் வரை செய்யும் பெரும்பாலான வேள்விகளில் இந்த மந்திரங்களே ஓதப்படுகின்றன.இத்தகைய தன்மையுள்ள வேதங்கள் இன்றைய அறிவியல் யுகத்துக்குப் பொருத்தமானது தானா என்று சிந் தியுங்கள்?

வேதகால நாகரிகம்

நாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி, ஆரியர்கள் நாடோடிகள். ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள். நாகரிகத்தில் பின்தங்கியவர்கள். அவர்களுடைய உற்பத்தி உறவுகள் எப்படிப் பட்டதாக இருக்கும்? 
அவர்களுடைய சமூக மதிப்பீடுகள் அவர்களுடைய உற்பத்தி சக்திகளான ஆடு, மாடுகள், நாடோடி வாழ்க்கை இவற்றின் அடிப்படையிலேயே இருப்பது இயற்கை தான். 
எனவே அவர்கள் வாழ்க்கையில் சோம பானம் என்கிற போதையூட்டுகிற பானம் மிக முக்கியமானதாகிறது.
 அந்த சோம பானத்தை அவர்களுடைய முக்கியக் கடவுளான இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்துகிற ஸ்லோகங்களும், அப்படி குடித்து திருப்தியடைந்த தேவர்களும் ஆரியர்களுக்கு அவர்கள்கேட்டதையெல்லாம் கொடுக்கிறவர்களா கவும் மாறுவதைப் பற்றி 120 க்கும் மேற் பட்ட ஸ்லோகங்கள் ரிக் வேதத்தில் இருக்கின்றன.
அதே போல சுரா பானமும் தானி யங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை மதுவாகும். 
இதைத் தவிர பிராமணர்கள் வேறு மது வகைகளைக் குடிக்கக்கூடாது என்று போதாயன தர்ம சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு பானங்களும் அனுபூதியும், மரணமற்ற சாகாநிலையையும் அளிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.இனக்குழு வாழ்க்கையிலிருந்து அரசுகள் உருவாகிக்கொண்டிருந்தது. நிலப்பிரபுத்துவக்கால கட்டம் நிலைபெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத் தில், அரசு என்ற இயந்திரம் உருவாகிக் கொண்டிருந்த போது அரசர்கள் தங் களுடைய நாட்டு எல்லையை விரிவுபடுத்த, அருகிலிருக்கும் நாட்டு அரசர் களிடம் அங்கீகாரம் பெறுவதற்கு நடத் தப்படுவது அசுவமேதயாகம். 
கருநிறஅசுவம் (குதிரை) ஒன்றை அவிழ்த்து விட்டு அதை நாடுகளெங்கும் சுற்றி வரச்செய்து அதை யாகவேள்வியில் பலி கொடுத்து, அப்படி பலி கொடுக்கப்பட்ட குதிரையோடு அரசனின் மனைவி புணர்ந்து எழுவதான சடங்குகள் கொண்டது.
இந்த மாதிரியான யாகத்தை சில பதிலிகளை வைத்துஇப்போதும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது கோமேத யாகம்.பசுவைக் கொன்று, கொல்லப்பட்ட பசுவின் கொழுப்பை இறந்து போன முன்னோர்களுக்கு யாகவேள்வியில் அர்ப்பணித்து, பசுவின் இறைச்சியை யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பது உண்டு.
 இன்னும் யஜூர் வேதத்தில் எத்தகைய லட்சணமுள்ள பசுக்களையும் காளைகளையும் எந்தெந்தகடவுள்களுக்கு யாகத்தில் பலி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.
 யஜூர் வேதத்தில் புருஷமேதம் என்று சொல்லப்படுகிற யாகத்தில் நரபலி எப்படிக் கொடுப்பது என்பதைப் பற்றிக்கூறப்பட்டிருக்கிறது.
 இதன் நடைமுறைகள் அசுவமேதயாகத்திலுள்ள நடைமுறைகளை ஒத்திருக்கும்.
சர்வ மேதம் என்ற யாகத்தில் விசுவகர்மா யாகம் வளர்த்து ஆத்மவதை செய்து கொள்வதைப் பற்றி விவரிக்கிறது. வாஜபேய யாகத்தில் விலங்குகளைப் பலி கொடுப்பதைப் பற்றியும், எந்தெந்த மிருகங்களை, மிருகங்களின் எந்தெந்தப் பாகங்களை யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல ராஜசூய யாகத்தின் முக்கியமான சடங்கே சூதாட்டம் தான். 
மகாபாரதம் நினைவுக்கு வருகிறதா?
சமூக உறவுகளைப் பொறுத்தவரை புராதன கால மனித குலத்தின் மதிப்பீடுகளையே கொண்டிருந்தனர். 
மிருகங்களுடன் ( பெண் ஆடு, கிடா, காளை) புணர்ச்சியில் ஈடுபடுவது நல்லது என்று யஜூர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 
அதே போல அதர்வன வேதத்திலே சகோதர சகோதரிகளுடன் உறவு கொள்வது, தந்தை மகளுக்கிடையேயான உறவு, பாலியல் வீரியத்தை வேண்டியும், பாலியல் சுகத்தை வேண்டியும், பல ஸ்லோகங்கள் யஜூர், அதர்வன வேதங்களில் இருக் கின்றன.
வேதகாலத்தில் பெண்களுக்கு முக் கியத்துவம் இல்லை. 
அதோடு அவர்கள் ஆணின் சுயசொத்தாகக் கருதப்பட் டார்கள். பெண் ஆணின் அடிமையாகவே கருதப்பட்டாள். வரதட்சணை கொடுக்கும் வழக்கமும் இருந்தது.பெண்கள் அறிவில் குறைந்தவர்களாகவும் கருதப்பட்டனர்.
 எனவே பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.
உடைகளைப் பொறுத்தவரை கோவணமும், துண்டும் உடுத்தியதாகவும் மீசை, தாடி, குடுமி உடையவர்களாகவும் இருந்தனர் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 
ஆரியர்கள் அசைவர்கள். பசு, குதிரை, ஆடு, எருமை உடும்பு, ஆமை, பன்றி, முள்ளம்பன்றி, முயல், காண்டாமிருகம் போன்ற மிருகங்களைக் கொன்று சாப்பிட்டனர். பால், தயிர், நெய் போன்ற பொருட்களைப் பயன்படுத் தினர்.
 கோதுமையும், பார்லியும் முக்கிய உணவுப் பொருட்களாக இருந்தன.
ஆரம்ப காலகட்டத்தில் விவசாயம் அறியாத ஆரியர்கள் அவர்கள் வெற்றிகொண்ட ஹரப்பா வாசிகளான தஸ் யூக்களிடமிருந்தே விவசாயத்தைக் கற்றிருக்கலாம் என்று கருதுகிற ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ரிக் வேதத்தில் விவசாயத்தோடு தொடர்புடைய சடங்குகள் விரிவாகச் சொல்லப்படுகின்றன.
அனைத்து நோய்களையும் வேள்விகள் மூலம் குணமாக்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. 
இப்படி வாழ்க்கையின் எல்லா சமூகவிஷயங்களிலும், மதிப்பீடுகளிலும் மனித குல நாகரிகத்தின் ஆரம்ப காலத்தில் மனிதசிந்தனையின் தொடக்க கால கற்பனைகளில் உருவானவையே வேதங்கள்.எனவே வேதகாலம் என்பது அனைவருக்குமான பொற்காலமாக இல்லை.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேண்டுமா னால் அது பொற்காலமாக இருந்திருக்கலாம். 
ஆரியர்கள் வரும் முன்னர் இங்கு கலாச்சாரத்திலும்,வாழ்வியல் முறையிலும்,அறிவியலிலும் முன்னெறியிருந்தவர்கள் திராவிடர்கள் எனும் தமிழர்கள்தான்.அவர்கள் ஆரியர்களின் காட்டுமிராண்டி த்தனமான 
வாழ்க்கை முறை ,போர் முறைய்னால் தெற்கே குடி புகுந்தார்கள்.பின் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு அடிமையாகி சூத்திரராகியும் போனார்கள்.
மனித குலம் அந்த வேதகாலத்தி லிருந்து எவ்வளவோ தூரம் கடந்து வந்து விட்டது. தொழில், அறிவியல், பகுத்தறிவு, வாழ்க்கை மதிப்பீடுகள் என்று வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உலகளாவிய சிந்தனைப்போக்குகளோடு கலந்து உறவாடி புதிய பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. 
வரலாற்றை பின்னோக்கி சுற்றுவது அறிவுடைமை ஆகாது. அதிலும் புராதன நாகரிக கால கட்டத்தை நோக்கி வரலாற்றுச் சக்கரம் சுற்றவும் சுற்றாது. வேதகாலம் திரும்பவும் திரும்பாது. 
திரும்பவும் கூடாது.

                                                                                                                      -உதயசங்கர்.

துணை நூல்கள்- 1. வரலாறும் வக்கிரங்களும் - ரொமிலா தாப்பர்2. வேதங்கள் ஓர் ஆய்வு-சனல் இடமருகு.
நன்றி:தீக்கதிர்.
========================================================================
இன்று.
  • எப்ரல் -;27.
  • டோகோ விடுதலை நாள்(1960)

  • சியேரா லியோனி விடுதலை நாள்(1961)

  • தென்ஆப்ரிக்கா விடுதலை தினம்

  • லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது(1840)

  • ஜெராக்ஸ் பார்க் முதன் முறையாக கணிணி மவுஸை அறிமுகப்படுத்தியது(1981)இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு