சாய்ந்தது செம் மரம் மட்டுமல்ல.



அடிக் கடி  நாம் செய்திகளில் வாசிக்கும் "செம்மரம் கடத்தல்"செய்தி நம்மை அவ்வளவாக பாதித்ததில்லை.
ஆனால் செம்மரம் கடத்தியதற்காக 20 தமிழ் கூலித்தொழிலாளர்கள் ஆந்திர காவல் துறையினரால் அநியாயமாக சுட்டுக் கொள்ளப் பட்டிருப்பது நம்மை பாதித்துள்ளது.
இந்த செம்மரம் கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து சொகுசாக வாழ்பவர்கள் அரசியல் பின்னணியில் இருக்க,அவர்களுக்கு மரம் வெட்டி தர கூலிக்கு அப்பாவி மலைவாழ் மக்களை  தேடி தரும் முகவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்து பாதுகாப்பாக இருக்க வேலை வாய்ப்பின்றி உணவுக்கு உழைப்பாக மரம் வெட்ட வந்த அப்பாவி மலை வாழ் மக்கள் காவல்துறையினரின் கணக்குக்காக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் பலருக்கு கல்வியறிவு இல்லாததால் செம்மரம் வெட்டுவது,கடத்துவது சட்ட விரோதம் என்பது கூட தெரியாதாம்.
வெயிலை தனக்குள் உள் வாங்கிக்கொண்டு  குளிர்ச்சியை கொடுக்கும் 
சக்தி செம்மரத்திற்கு உண்டு.
 இதனால், சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய், ஏமன், சீனா போன்ற நாடுகளில் செம்மரங்களில் கட்டில், மேஜை செய்கின்றனர்.
அமெரிக்காவில் செம்மர பட்டையில் இருந்து, 'வயாகரா' தயாரிக்கின்றனர். இதனால், செம்மரத்திற்கு சர்வதேச சந்தையில் விலை அதிகம்;
 செம்மரத்தில் பல ரகங்கள் உள்ளன.ரகங்களுக்கு தக்க படி விலை நிர்ணயிக்கின்றனர். 
சாதாரண செம்மரம், ஒரு டன், 10 லட்சம் ரூபாய்;
 உலகத் தரம் வாய்ந்த, முதல் தர செம்மரம் ஒரு டன், 40 லட்சம் முதல், 90 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. 
 செம்மரங்களை தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்ய நிபுணர்களபெங்களூரு, டில்லி, மும்பை போன்ற பகுதிகளில் உள்ளனர்.
எனவே இந்த செம்மரம் கடத்தல் வலைப்பின்னல் இந்தியா முழுக்க பரவி கிடக்கிறது.
இந்த வலையில் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,காவல்துறையினர் ஆகியோர் உள்ளனர்.இதுவரை செம்மரம் கடத்தல் விவகாரங்களில் கைது,காவல் துறையினரால் கொலை ஆனவர்கள் அனைவருமே மரம் வெட்டி மலைவாழ் மக்கள்தான்.கடத்தல்காரர்கள்,அவர்களின் முகவர்கள் யாரும் இதுவரை இந்த கதிக்களுக்கு ஆளானதில்லை என்பதில் இருந்தே இந்த செம்மரம் கடத்தல் வலையினரின் செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்.புரளும் கோடிகளையும் கண்டு கொள்ளலாம்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ஸ்ரீசைலம், சேஷாசல காடுகளில் செம்மரங்கள் உள்ளன. 
ஆனால், அவற்றை வெட்ட ஆந்திராவில் ஆள் கிடையாது. இதனால், வேலுார் மாவட்டம் ஜமனா மரத்துாரில் உள்ள மலைவாழ் மக்களை  கடத்தல்கும்பல் செம்மரம் வெட்ட பயன் படுத்துகின்றனர்.
இதற்காக, முகவர்கள் [ஏஜன்ட்கள் ] நியமித்துள்ள னர். 
, கூலிகளை அழைத்து வர; மரங்களை கடத்த; குடோன்களில் மறைத்து வைக்க; சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்க்க, தனித்தனி முகவர்கள் உள்ளனர்.
இதை சாதா நிலையில் உள்ள  மனிதர்கள் செய்ய முடியாது என்பதால், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில்லரை பிரமுகர்களை முகவர் களாக நியமித்\துள்ளனர். வேலுார் மாவட்டத்தில், இப்படிப்பட்ட முகவர் கள்
 பலர் உள்ளனர்.அனைவரும் லட்சாதிபதிகளாக உயர்ந்துள்ளனர்.
இதனால் பணத்தாசை காட்டி மரம் வெட்ட ஆட்களை தயார் செய்வது எளிதாக உள்ளது.

*செம்மரம் வெட்டும் வேலைக்கு, 20 - 25 வயதுள்ள இளைஞர்களை மட்டும் பயன்படுத்துகின்றனர்.

*காட்டுக்கு வெளியே வெட்டினால், ஒரு கிலோவுக்கு, 200 ரூபாய் கூலி.

*நடு காட்டில் வெட்டினால், ஒரு கிலோவுக்கு, 600 - 800 ரூபாய் கூலி. கொடுக்கின்றனர்.

*மரத்தை வெட்டி, அதை தலைசுமையாக எடுத்து வந்து, வேன்களில் ஏற்றிவிட வேண்டும். மாட்டிக் கொண்டால் கடத்தல்காரர்கள் பொறுப்பு ஏற்க மாட்டார்கள். 
தங்கள் சொந்த பொறுப்பில் தான் வெளியே வர வேண்டும்.

*மரத்தை வெட்ட, பேட்டரி ரம்பம் மட்டும் கொடுக்கின்றனர்.

*தேவையான உணவை, மரம் வெட்டுவோர் எடுத்து செல்ல வேண்டும்.

*ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 100 கிலோ மரத்தை வெட்டுகின்றனர்.

*சராசரியாக, தினமும், 5,000 - 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

* மலைவாழ் மக்கள் நல்ல பலசாலிகள். தொடர்ந்து, ஒரு வாரம் மரம் வெட்டினால், 50 ஆயிரம் - ஒரு லட்ச ரூபாய் வரை, சம்பாதிக்கின்றனர்.

* ஏஜன்ட்களுக்கு, 24 பேரை பிடித்து அனுப்பினால், 40 ஆயிரம் ரூபாய் கமிஷன்.

* கூலிகளை ஆந்திராவிற்கு அனுப்பி வைக்கும் ஏஜன்ட்டுக்கு, 10 பேரை அனுப்பினால், 25 ஆயிரம் ரூபாய் கமிஷன்.

* கடத்தப்பட்ட செம்மரங்களை குடோனில் மறைத்து வைக்க, அதன் மதிப்புக்கு தக்கபடி, 20 முதல், 30 சதவீதம் கமிஷன் கொடுக்கின்றனர்.
மலைவாழ் மக்கள் நிலங்களை பிடுங்க்கிக்கொள்வதும்,அவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு அரசு வழி வகைகள் செய்யாததும்.அவர்களுக்கு கல்வி அறிவு இல்லாததுமே இது போன்ற கடத்தல் மரம் வெட்ட சென்று பணம் சம்பாதிக்கும் ஆசையை அவர்களுக்கு உருவாக்கியுள்ளது.மலைவாழ் மக்களிடம் தமிழக அரசு இந்த செம்மரம் கடத்தல் பற்றிய விழிப்புணர்வையும்,அவர்கள் உயிர்கள் பலியாகும் நிலையை பற்றியும் உணர்த்த வேண்டும் .அவர்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் .
========================================================================


          "உத்தம வில்லன் "
========================================================================
இன்று,
ஏப்ரல்-8.

  • ஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் பிறந்த தினம்(1938)
  • முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆர்மபமானது(1867)
  • லியாகத்-நேரு ஒப்பந்ததத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன(1950)
  • எகிப்தில் சூயஸ் கால்வாய், மீளத்திறக்கப்பட்டது(1957)
  • சூயஸ் கால்வாய்.
  • ஒரு கால்வாய்க்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிட முடியும்?
    ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சூயஸின் பெயர்தான் கால்வாயே தவிர, உண்மையில் அது ஒரு சிறிய கடல் என்றுதான் சொல்லவேண்டும். அத்தனை நீளம். அத்தனை ஆழம். பிரும்மாண்டமான கப்பல்களெல்லாம் மிக அநாயாசமாக வரும். யுத்த தளவாடங்களை, போர் விமானங்களை ஏற்றிக்கொண்டு ராணுவக் கப்பல்கள் அங்கே அணிவகுக்கும். வெள்ளம் வரும். எல்லாம் வரும்.
    மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட கால்வாய் இது. இன்று நேற்றல்ல. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இப்படியொரு கால்வாய்க்கான சாத்தியத்தையும் அவசியத்தையும் அந்நாளைய எகிப்து மன்னர்கள் யோசித்திருக்கிறார்கள்.
    முதலில் நேரடியாக இரு கடல்களை ஒரு கால்வாய் வெட்டி இணைக்கலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை. மாறாக, ஒரு கால்வாயை வெட்டி எகிப்தின் அங்கவஸ்திரம் மாதிரி தேசமெங்கும் ஓடும் நைல் நதியில் எங்காவது இணைத்துவிட்டால், நைல் நதி கடலுக்குப் போகும் பாதை வழியே கப்பல்கள் செல்லலாம் என்றுதான் யோசித்தார்கள். இந்த யோசனை, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர்கள் துத்மோசிஸ் 3 (Thuthmosis III), பராநெகோ (Pharaoh Necho) ஆகியோருக்கு இருந்திருக்கிறது. சில சில்லறை முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
    அதற்குச் சில காலம் கழித்து (எத்தனை காலம் என்று துல்லியமாகத் தெரியவில்லை) ஈரானியர்கள் (அப்போது பெர்சியர்கள்) எகிப்தின் மீது ஒரு சமயம் படையெடுத்து வென்றிருக்கிறார்கள். அப்போது எகிப்தின் ஆட்சிப்பீடத்தில் ஏறிய மன்னர் டேரியஸ் 1 (Darius I) இந்தக் கால்வாய்த்திட்டத்தை உடனே செய்துமுடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
    அப்போது ஒரே கால்வாயாக அல்லாமல் இரண்டு தனித்தனி கால்வாய்களை வெட்டி, இரு எல்லைகளில் இணைத்து, நடுவே ஒரு பொதுச் சரடாக நைல் நதியை இணைத்திருக்கிறார்கள். சிலகாலம் இந்தக் கால்வாய் ஒழுங்காக இருந்திருக்கிறது. இடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்களால் நாசமாகி, மீண்டும் கால்வாய் சரி செய்யப்பட்டு, மீண்டும் நாசமாகி, ஒரு கட்டத்தில் கால்வாய்த் திட்டத்தையே கைவிட்டுவிட்டார்கள். சூயஸ் கால்வாய் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்கிற முடிவுக்கு அப்போதைய எகிப்து மன்னர்கள் வந்துவிட்டார்கள்.
    சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு மறுபிறப்பு அளித்தவர் நெப்போலியன். அவர் பிரான்சின் சக்கரவர்த்தியாக இருந்தபோதுதான் (கி.பி. 1800 காலகட்டம்) ஐரோப்பாவையும் இந்தியாவையும் கடல் மூலமாக இணைப்பதற்கு இந்தக் கால்வாய்த்திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் முடியும் என்று சொன்னார்.
    சொன்னதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பொறியாளர்களையும் அங்கே அனுப்பி வேலையை உடனே ஆரம்பிக்கச் செய்தார். (நெப்போலியன் அப்போது எகிப்து மீது படையெடுத்து வெற்றி கண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)
    நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சு பொறியாளர்கள், எகிப்துக்கு வந்து பார்த்து முதலில் சர்வே எடுத்தார்கள். நிலப்பரப்பின் மீதான ஆய்வைத் தொடர்ந்து நடத்தி முடித்தவர்களுக்கு, அப்படியொரு கால்வாய் கட்ட சாத்தியமே இல்லை என்றுதான் முதலில் தோன்றியது. ஏனெனில், அவர்கள் கணக்குப்படி மத்திய தரைக்கடலுக்கும் செங்கடலுக்கும் பத்து மீட்டர் உயர இடைவெளி இருந்தது.
    அதை மீறி கால்வாய் வெட்டுவதென்றால் ஏகப்பட்ட நிலப்பரப்பு நீரில் மூழ்கி நாசமாகிவிடும். பரவாயில்லை என்றால் கால்வாய் வெட்டலாம் என்று சொன்னார்கள். நெப்போலியன் யோசித்தார். இறுதியில் அவரும் பின்வாங்கிவிட்டார்.
    ஆனால், அந்தப் பொறியாளர்களின் கணக்கு தவறு என்று சிறிதுகாலம் கழித்து வேறொரு பிரெஞ்சு பொறியியல் வல்லுநர் நிரூபித்தார். அவர் பெயர் ஃபெர்டினாண்ட் (Ferdinond de Lesseps). இவர் வெறும் பொறியாளர் மட்டுமல்ல. கெய்ரோவுக்கான பிரெஞ்சு தூதரும் கூட.
    ஃபெர்டினாண்ட் வகுத்தளித்த வரைபடம் மிகவும் சுத்தமாக இருந்தது. கால்வாய் கட்டுவதில் பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்றே ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.
    ஆகவே 1859-ம் ஆண்டு எகிப்து அரசு கால்வாய் வெட்டத் தொடங்கிவிட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் தருவிக்கப்பட்டார்கள். இரவு பகலாக வேலை பார்க்க உத்தரவிடப்பட்டது. உண்மையிலேயே ஒரு வேள்வி போலத்தான் அந்த வேலையை எடுத்துக்கொண்டார்கள்.
    இறுதியில் 1867-ல் சூயஸ் கால்வாய் கட்டிமுடிக்கப்பட்டது. எட்டு வருடங்கள்! மிகப்பெரிய விழாவெல்லாம் எடுத்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய மன்னர்களையெல்லாம் அழைத்து, ஊரைக்கூட்டிக் கொண்டாடினார்கள். அன்றுமுதல் சர்வதேசக் கடல் வாணிபம் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கெல்லாம் மாநகரப் பேருந்துகள் மாதிரி கப்பல்கள் அடிக்கடி வந்துபோகத் தொடங்கின. ஆப்பிரிக்காவை அணுகுவது சுலபமானது. மத்தியக்கிழக்கின் வர்த்தகமே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது.
    இருபதாம் நூற்றாண்டில் இந்த வர்த்தகப் பாதைக்கு இன்னும் கணிசமான மவுசு உண்டானது. சூயஸ் கால்வாய் இல்லாத ஒரு சூழலை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்கிற நிலை ஏற்பட்டது. குறிப்பாக இஸ்ரேலுக்கு.
    புதிதாகத் தோன்றிய தேசமான இஸ்ரேல், தன்னுடைய உள்கட்டுமானத்தை வலுப்படுத்திக்கொள்ள வர்த்தக வருமானத்தையே பெரிதும் நம்பியிருந்த காலம் அது. இயந்திரங்கள், பேரீச்சம்பழங்கள், ஆயுத உதிரிபாகங்கள் ஆகியவைதான் அப்போது இஸ்ரேலின் பிரதானமான ஏற்றுமதிச் சரக்குகள். சூயஸ் கால்வாய் பக்கத்திலேயே இருந்தபடியால் இஸ்ரேலின் இவ்வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சூடுபிடித்தன. நல்ல வருமானமும் இருந்தது. ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் வலுவான வர்த்தகத் தளங்களை நிறுவும் முயற்சியில் அவர்களுக்குக் கணிசமான பலன் கிடைக்கத் தொடங்கியிருந்தது.
    வர்த்தக ரீதியில் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் இந்தக் கால்வாய், மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. முதல் உலகப்போரின் போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் சூயஸ் கால்வாயை மூடி, எதிரிக்கப்பல்கள் நகர முடியாதபடி செய்து திக்குமுக்காட வைத்தது சரித்திரத்தில் மிகப்பெரியதொரு சம்பவம். இரண்டாம் உலகப்போரிலும் சூயஸ் கால்வாயின் பங்கு இதே போல குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகவே விளங்கியிருக்கிறது. முசோலினியின் படைகள் (ஹிட்லரின் கூட்டணி நாடான இத்தாலியினுடைய படைகள்) ஆப்பிரிக்காவுக்குப் போவதைத் தடுக்கிற விஷயத்தில் இந்தக் கால்வாய்தான் ஒரு கதாநாயகன் போலச் செயல்பட்டிருக்கிறது!
    இந்தப் பின்னணியில்தான் நாம் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்க முடிவு செய்ததை அணுக வேண்டும்.
    புவியியல் படி நாசர் முடிவெடுத்தது சரிதான். சூயஸ் கால்வாய் என்பது முழுக்க முழுக்க எகிப்து நாட்டுக்குள் ஓடும் ஒரு கால்வாய். இரண்டு கடல்களை இணைக்கிற படியால் அது பொதுச்சொத்தாக இருந்ததே தவிர, எகிப்து அதைத் தன் தனிச்சொத்து என்று சொன்னால் சட்டப்படி யாரும் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் உண்மையும் கூட.
    ஆனால், இந்தக் கால்வாயை எகிப்து மட்டுமே தன் கைக்காசைப் போட்டு வெட்டவில்லை அல்லது கட்டவில்லை. நிறைய வெளியார் உதவிகள் அதில் இருக்கிறது. குறிப்பாக சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கு பிரான்ஸ் அளித்த உதவிகள் சாதாரணமானதல்ல. பின்னால் பிரிட்டனும் ஏகப்பட்ட நிதியுதவிகள் செய்திருக்கிறது. வேறு பல நாடுகளும் தம்மாலான உதவிகளைச் செய்திருக்கின்றன. கால்வாய்க் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தபோது எழுந்த பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள், அரசியல் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்தான் முன்வந்து தீர்த்துவைத்திருக்கின்றன.
    இப்படி சூயஸ் கால்வாய்த் திட்டத்தில் பல தேசங்கள் சம்பந்தப்பட்டதால், பங்குபெற்ற ஒவ்வொரு தேசத்துக்கும் அந்தக் கால்வாயைப் பயன்படுத்துவதில் பங்கு உண்டு என்று ஒப்பந்தம் ஆனது. ‘பங்கு’ என்றால் நிஜமாகவே பங்கு. Share என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அந்தப் பங்கு. பத்திர வடிவில் எழுதிக் கொடுக்கப்பட்ட பங்கு. சூயஸ் கால்வாயில் எப்படிப் பிற தேசங்களுக்குப் பங்கு உண்டோ, அதே போல எகிப்துக்கும் ஒரு பங்கு மட்டும்தான் முதலில் இருந்தது. தனது தேசத்தின் வழியே அந்தக் கால்வாய் செல்ல அனுமதியும் இடமும் அளித்ததற்கான பங்கு.
    என்ன பிரச்னை ஆனது என்றால், 1875-ம் ஆண்டில் எகிப்தை ஆண்டுகொண்டிருந்த மன்னர் இஸ்மாயில் பாஷா என்பவர் தாங்கமுடியாத பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, தனது தேசத்துக்கான பங்குகளை பிரிட்டனிடம் விற்றுவிட்டார். சூயஸ் கால்வாயில் தனக்கிருந்த பங்கை விற்று அவர்கள் கடனை அடைத்தார்களா, அல்லது புதிய நிதி உதவிகள் ஏதும் அப்போது பெறப்பட்டதா என்பது பற்றிய தெளிவான விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. (கிடைக்கும் தகவல்கள் எதுவும் முழுவதுமாக நம்பக்கூடியவையாகவும் இல்லை.)
    ஆகவே, எகிப்திலேயே ஓடும் சூயஸ் கால்வாயைச் சொந்தம் கொண்டாட எகிப்துக்கு உரிமை கிடையாது என்று ஆகிவிட்டது.
    இதெல்லாம் பத்திர அளவில் நிகழ்ந்த விஷயங்கள். அதற்காக எகிப்து கப்பல்கள் எதுவும் சூயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமலெல்லாம் இல்லை! ஆனால், கால்வாயின் கட்டுப்பாடு முழுவதுமாக அப்போது பிரிட்டன் வசம் போய்விட்டது. எப்படி ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரு நபரிடம் அதிகமாக இருந்தால், அந்நிறுவனம் அவரது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் வருமோ அப்படி!
    உடனே பிரிட்டன் சூயஸ் கால்வாயைப் பாதுகாக்கவென்று ஒரு தனி படைப்பிரிவு ஏற்படுத்தி, எகிப்துக்கு அனுப்பிவிட்டது.
    இதெல்லாம் மன்னர்கள் காலத்தில் நடந்தது! அவர்கள் காலமெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து, நாசரின் சர்வாதிகார ஆட்சி வந்தபோது இந்தப் பழைய ஏற்பாடுகளையெல்லாம் முதலில் தூக்கி அதே சூயஸ் கால்வாயில் விட்டெறிந்துவிட்டார். சூயஸை நாட்டுடைமை ஆக்குவதாகவும் அறிவித்தார்.
    அதனால்தான் உடனே அனைத்து நாடுகளும் வெகுண்டெழுந்து எகிப்துக்கு எதிராகப் போர் முரசு கொட்டின.
    இஸ்ரேல் ஏற்கெனவே கடும் கோபத்தில் இருந்தது. என்னதான் உதட்டளவில் அமைதி, அமைதி என்று பேசினாலும் எகிப்து எல்லையில் இஸ்ரேலுக்கு எப்போதும் பிரச்னைதான். இவர்கள் அந்தப் பக்கம் ஊடுருவுவது, அவர்கள் இந்தப் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்று ஒரு நாள் தவறாமல் ஏதாவது சம்பவம் நடந்தபடிதான் இருந்தது. தவிரவும் 1948 யுத்தத்தின் இறுதியில் காஸா பகுதி எகிப்து வசம் போனதிலும் இஸ்ரேலுக்கு மிகவும் வருத்தம்.
    வாகான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எகிப்தின் மீது போர் தொடுத்து, இழந்த பகுதியை மீட்டுவிடமாட்டோமா என்றுதான் அவர்கள் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில்தான் நாசர் சூயஸ் கால்வாயை நாட்டுடைமை ஆக்கி, யுத்தத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கத் தயாரானார்.
    ஒரு பக்கம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டுப் படைகள் இஸ்ரேலுடன் கைகோத்துப் போரிடத் தயாராக இருந்தன. எதிர்ப்பக்கம் எகிப்து.
    இதில் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் சூயஸ் கால்வாய்ப் பிரச்னை மட்டும்தான் போரிடக் காரணம். இஸ்ரேலுக்கு நில ஆக்கிரமிப்பு ஆசையும் உடன் சேர்ந்து இருந்தது. இரண்டு பெரிய தேசங்களின் துணை இருப்பதால் எப்படியும் எகிப்தை யுத்தத்தில் வீழ்த்தி, ஓரளவுக்காவது நிலங்களைப் பிடிக்கலாம் என்பது இஸ்ரேலின் கனவு.
    பிரிட்டனுக்கு இஸ்ரேலின் இந்த எண்ணம் தெரியாமல் இல்லை. ஆனால் அரபு மண்ணில் பிரிட்டன் போன்ற முதலாளித்துவ தேசம் கூட்டணி வைக்க இஸ்ரேலை விட்டால் வேறு நாதி கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.
    1956-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அது நடந்தது. இஸ்ரேல் ராணுவம் எகிப்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியான சினாய்க்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த எகிப்து ராணுவத்தினரை சூயஸ் கால்வாய் வரை ஓடஓட விரட்டிக்கொண்டே போகத் தொடங்கியது.
                                                                                                    நன்றி :  - பா.ராகவன்.
    "நம்மால் ஒரு சேது சமுத்திரத் திட்டத்தை  ஒரே நாட்டினுள் மத்திய அரசால் செயல்படுத்தமுடியவில்லை.ஆனால் சூயஸ் கால்வாய் திட்டம் எவ்வளவு இடையூறுகளைத் தாண்டி இன்று கப்பல்களை தன வழியே செல்ல வைத்துக்கொண்டிருக்கிறது.'

  • =======================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?