தவறுகளின் கூடாரமா??

ஜெயலலிதா தரப்பின் சரியான வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அதற்கும், அவர்கள் தரப்பு சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும்.
 இது ஜெயலலிதா தரப்பு வருவாயை விட 76.75% அதிகமாகும். 
ஆனால் ஜெயா வெறும் 8.12% மட்டுமே அதிகம் சொத்து சேர்த்தார் என்று கூறி குமாரசாமி ஜெயாவை விடுவித்துள்ளார்.
நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, இந்தியன் வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

அந்தப் பட்டியலை நீதிபதி குறிப்பிட்டவாறு சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமேயானால்,
ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெற்ற கடன் 1,50,00,000
குணபூசனியிடமிருந்து மாற்றப்பட்ட கடன் 3,75,00,000
ஜெயலலிதா பெற்றக் கடன் 90,00,000
ஜெ ரியல் எஸ்டேட் பெற்றக் கடன் 25,00,000
ஜெ.எஸ். ஹவுசிங் பெற்றக் கடன் 12,46,000
ஜெ. பார்ம் ஹவுஸ் பெற்றக் கடன் 50,00,000
சசிகலா பெற்றக் கடன் 25,00,000
வி.என். சுதாகரன் பெற்றக் கடன் 1,57,00,000
ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெற்றக் கடன் 1,65,00,000
மகாலட்சுமி திருமண மண்டபத்திற்காக கடன் 17,85,274
ஆக மொத்தம் ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் மேலே கண்ட பட்டியலில் உள்ள பத்து கடன்தொகையையும் கூட்டல் கணக்குத் தெரிந்த யார் ஒருவரை விட்டுக் கூட்டச் சொன்னால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும்.
ஆனால் கர்நாடக மாநில உயர் நீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படை யில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் வியாக்ஞானம் செய்து, அவரை விடுதலை செய்திருக் கிறார்.
(ஜெயலலிதா தரப்பின் சரியான வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அதற்கும், அவர்கள் தரப்பு சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இது ஜெயலலிதா தரப்பு வருவாயை விட 76.75% அதிகமாகும். ஆனால் ஜெயா வெறும் 8.12% மட்டுமே அதிகம் சொத்து சேர்த்தார் என்று கூறி குமாரசாமி ஜெயாவை விடுவித்துள்ளார்)
இதைப் போலவே தான் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட மாளிகையின் மதிப்பையும் சுதாகரன் திருமணச் செலவையும் மிகவும் குறைத்துக் காட்டியிருக் கிறார். 
அப்படிக் காட்டியதற்காக அடிப்படை யாக எப்படி கணக்கிட்டார் என்று எதையும் தீர்ப்பிலே அவர் காட்ட  வில்லை. 
தன்னிச்சையாகவே ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளை யெல்லாம் குறைத்துக் காட்டியிருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது.
பவானி சிங் நியமனம் குறித்த வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் அளித்த தீர்ப்பில் பேராசிரியர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரின் எழுத்து மூலமான வாதங்களைப் பரிசீலித்து அதற்கு விளக்கமான தீர்ப்பினை அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தும், அவருடைய அறிவுரையினை நீதிபதி குமாரசாமி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தாகவே தெரியவில்லை.அந்த வாதங்கள் பற்றி தீர்ப்பில் ஒரு இடம் கூட வரவில்லை.அதை ஏன் ஏற்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டவில்லை.
குறிப்பாக இந்தத் தீர்ப்பு கூட்டுத் தொகையைக் கூட மிக மோசமான அளவுக்கு தவறாகக் குறிப்பிட்டு, அந்தத் தவறான தொகையின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கியிருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தீர்ப்பு முதலிலே ஒன்று எழுதப் பட்டு, பின்னர் அவசர அவசரமாக மாற்றப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலே தான் அமைந்துள்ளது.இந்தியா முழுக்க எதிரபார்த்த ஒரு வழக்கின் தீர்ப்பை இப்படி தப்பும் தவறுமாக ஏன் எழுதியுள்ளார்.அப்படி என்ன அவசரம்?

இதற்கெல்லாம் உச்ச நீதி மன்றத்திலே தான் உண்மையான விளக்கம் கிடைத்திட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் இதுவரை ஜெயலலிதா ஆதரவு நடவடிக்கைகள் மட்டும் எடுத்திருந்தாலும் அங்குதான் மேல் முறையீடு செய்ய முடியும்.வேறு வழி?

கர்நாடக அரசின் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா இந்தத் தீர்ப்பு பற்றி மிக விளக்கமாகக் கூறி, உச்ச நீதி மன்றத்திலே மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். 

தீர்ப்பில் நேர்ந்ததவறுகள்.

ஜெயலலிதாவும், அவரோடு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் வங்கிகளிலிருந்து வாங்கியகடன்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வருமானமாக கணக்கில் கொள்ளவில்லை என்றும், அவற்றையும் கணக்கில் கொண்டால் சட்டப்படியான அவரது வருமானம் அதிகமாக இருக்கும் என்றும் நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் நிர்ணயிக்கிறார்.
இதனடிப் படையில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து 8.12 சதவிகிதம் மட்டுமே என்றும், இது அனுமதிக்கத் தக்கது என்றும் குறிப்பிட்டுள் ளார்.
ஆனால் தண்டனை பெற்றோர் வாங்கிய கடன்களை நீதிபதி கூட்டுகிற போது, 13.50 கோடிரூபாய் கூடுதலாக கடன் வாங் கியதாக தவறாக காட்டப்பட் டுள்ளது. 
இந்த ஒரு தவறை மட்டும் நேர்செய்தாலே ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76 சதவிகிதத்திற்கும் மேல் வரும். இது சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்கா சரியாகவே சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்பளித்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.


 பிறழ் சாட்சிகள் குறித்த நீதிபதியின் கருத்தும் தவறானதாகும். 
தமிழகத்தில் அஇ அதிமுக ஆட்சிப் பொறுப்பி லிருந்த போது சாட்சிகள் மிரட்டப்பட்டார்கள்; அதன் காரணமாக பிறழ் சாட்சிகளாக மாறுகிறார்கள் என்கிற காரணத்தினால் தான் கர்நாடகா மாநிலத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட் டது. 
இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாமல் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு கொடுத்த சாட்சியங்களை ஏற்க முடியாது என்றுதற்போது நீதிபதி குமாரசாமி கூறியிருப்பது உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எந்த நோக்கத்திற்காக வேறு மாநிலத்திற்கு மாற்றியதோ அதன் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாகும்.


1995ம் ஆண்டு கட்டுமானப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை கணக்கிடும் போதுஒரு சதுர அடிக்கு 280 ரூபாய்என்று கணக்கில் கொண்டிருக் கிறார் நீதிபதி. 
இது அப்போது பொதுப்பணித்துறை நிர்ணயித்திருந்த ரூ. 315/-ஐ விட குறைவாகும். 
சாதாரணமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கான தொகையைவிட போயஸ் கார்டனிலும், அதுபோன்ற இடங்களிலும் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான செலவை பொதுப்பணித்துறை நிர்ணயித்துள்ள தொகையை விடவும் குறைத்து நிர்ணயித்திருப்பதும் நிச்சயமாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


இதே போன்று வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ஜெயலலிதா செலவிட்ட தொகை ரூ. 28,68,000/- என்று சொல்லப்பட்டிருக்கிறது. 
1995ஆம் ஆண்டில் ஓட்டிஸ் லிப்ட்விலை ரூ. 15,000/- தான் என்றுகுறிப்பிட்டிருப்பது சரியான முறையில் செலவுகள் கணக்கிடப்படவில்லை என்கிற ஐயத்தைஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை சந்தாசேர்ப்பு சம்பந்தமாக எந்தஅறிவிப்பும் தனது பத்திரிகையில் வெளியிடவே இல்லாமல் ரூ. 14 கோடிக்கும் அதிகமான தொகைபெற்றதாக சொல்லியிருப்பதை ஏற்க முடியாது என சிறப்புநீதிமன்ற நீதிபதி கூறியிருந் தார். 
ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியதை எவ்வித கேள் வியுமின்றி நீதிபதி குமாரசாமி அப்படியே ஏற்றிருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றது.

மேலும் தனக்கு வாதிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை, எழுத்து மூலம் வாதங்களை முன்வைக்கவும் ஒரு நாள் அவகாசமே வழங்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட 2 மாத காலமும் அதைக் கவனித்து பதிலளிக்க அரசு தரப்பு ஆஜராகவில்லை 
என்பது உட்பட பல அம்சங் களை அரசுத் தரப்பு வழக்கறிஞர்பி.வி.ஆச்சார்யா சுட்டிக்காட்டியிருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

தீர்ப்பில் பக்கம் 851 & 852 கூட்டினால், 24 + கோடி சரியாக வருகிறது.. --- ஜெயா  ஆதரவாளர்கள்.

"நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் பக்கம் 850, 851 இல் சொல்லியுள்ள விபரங்கள் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற கடன் பரிமாற்றம் மற்றும் வங்கியில் நிறுவனங்கள் மற்றும் A1 to A4 ஆல் பெறப்பட்ட கடன்கள் விபரம். அதில் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற கடன் விபரங்களை நீதிபதி குமாரசாமி எடுத்துக்கொள்ளவில்லை.
வங்கிகளில் இருந்து நிறுவனங்களும் A1 to A4 ஆல் பெறப்பட்ட கடன்களை மட்டும் நீதிபதி எடுத்துக்கொண்டு பக்கம் 852 இல் பட்டியல் போட்டு தெரிவித்துள்ளார். எனவே பக்கம் 852 இல் விபரங்கள் மட்டுமே வழக்கில் கணக்கீட்டிற்கு சேர்க்கப்பட்டுள்ளது."மேலும் மொத்த விபரங்களும் இப்பக்கத்தில் எடுத்து பத்து இனங்களாகக் காட்டப்பட்டு அதைத்தான் கூட்டியுள்ளார்.[அப்ஸ்ட்ராக]

அரசுத் தரப்பு வழக்குரைஞர்பி.வி.ஆச்சார்யா ,

"ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு சொல்லி கொள்ள முடியாத வகையில், தவறுகளின் கூடாரமாக உள்ளது. சுமார் 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 800 பக்கங்கள் வரை இந்த வழக்கின் பின்னணி, அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு சாட்சிகள் உள்பட பல விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளிகள் மீது என்னென்ன குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது என்பதை தீர்ப்பில் குறிப்பிடவில்லை. குறிப்பாக 2 விஷயங்கள் மட்டுமே தீர்ப்பில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

அதில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு மற்றும் ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் உள்ள வீடுகள் ரூ.13 கோடியில் புனரமைப்பு செய்யப்பட்டதாக டிவிஏசி உறுதிபடுத்தியது. அதேபோல் கொடநாடு தேயிலை தோட்டம் ரூ.7 கோடியில் வாங்கியது உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களின் மதிப்பு ரூ.27 கோடியாக காட்டியுள்ளதை, தீர்ப்பில் ரூ.5 கோடி என்றும், வி.என்.சுதாகரனுக்கு ரூ.6 கோடி செலவு செய்து திருமணம் செய்துள்ளதை டிவிஏசி நிரூபித்தும், தீர்ப்பில் ரூ.26 லட்சம் செலவு செய்தாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களை தவிர, தீர்ப்பில் வேறு எதையும் குறிப்பிடவில்லை.

மேலும் தீர்ப்பில் ஜெயலலிதாவின் மொத்த வருமானம் ரூ.37,59,02,466 என்றும் செலவு ரூ.34,76,65,654 கழித்தால் ரூ.2,82,36,812 மட்டுமே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 10 சதவீதம் சொத்து சேர்த்திருந்தால், அதை கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது. அதனடிப்படையில் பார்க்கும்போது ஜெயலலிதா 8.12 சதவீதம் மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதால் விடுதலை செய்யப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் தீர்ப்பின் 852வது பக்கத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், இந்தியன் வங்கியில் அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகள் பெயரில், ரூ.10,67,36,274 கடன் வாங்கியதாக டிவிஏசி கூறியுள்ளது. 

ஆனால் ரூ.24,17,31,274 கடன் வாங்கியதாக கூறியுள்ளார். அப்படியானால் டிவிஏசி சொல்வதை காட்டிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ரூ.13,49.95,000 கூடுதலாக பெற்றுள்ளார்கள் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் ஒப்புக் கொள்கிறார். இதனடிப்படையில் பார்க்கும்போது தீர்ப்பில் ஜெயலலிதாவின் வருமானம் ரூ.34,76,65,654 என்று கூறப்பட்டுள்ளது. அதில் வங்கி கடனாக கூடுதலாக காட்டியுள்ள ரூ.13,49,95,000 கழித்தால் ரூ.21,26,65,654 வருகிறது. இந்த தீர்ப்பில் மேலே குறிப்பிட்டுள்ள ெஜயலலிதாவின் சொத்து மதிப்பான ரூ.37,59,02,466ல் ரூ.21,26,65,654 கழித்தால் வருமானத்திற்கும் அதிகம் சேர்த்த சொத்தின் மதிப்பு ரூ.16,32,36,812 வருகிறது. 

அதை பார்க்கும் போது சதவீதம் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகம் சேர்த்தது 76.07 சதவீதமாகும். இவ்வளவு சொத்து சேர்த்தவரை எப்படி நீதிபதி குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்துள்ளார் என்பது புரியாத புதிராகவுள்ளது. இது தவிர தீர்ப்பில் பல இடங்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 801 பக்கம் தொடங்கி தீர்ப்பின் கடைசி பக்கம் வரை ஒவ்வொரு பக்கத்திலும் குளறுபடியான அம்சங்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நான் கேள்வி கேட்பேன். இதற்காக யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. தீர்ப்பில் என்னென்ன குழப்பங்கள் உள்ளது என்பதை அரசிடம் தெரிவித்துள்ளேன். மேலும் இது தொடர்பாக தீர்ப்பு அம்சங்களை படித்து குறிப்பெடுத்து வருகிறேன். குளறுபடியான தீர்ப்பின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வரை ஓயமாட்டேன். "

                                                    -அரசுத் தரப்பு வழக்குரைஞர்பி.வி.ஆச்சார்யா ,
====================================================

 நீதிபதி
குமாரசாமி?


ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் ஒட்டுமொத்தமாக விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதிகுமாரசாமியை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 ஆண்டுகள் வழக்கறிஞராக வலம்வந்த குமாரசாமி 1995ல் பெங்களூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பொறுப்பேற்று சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரித்தார். 
குடும்பநல நீதிமன்றம், லோக் ஆயுக்த நீதிமன்றம் ஆகியவற்றில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின், 2005ல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், 2007ல் நிரந்தரநீதிபதியாகவும் பதவியேற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். 
இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் விடுமுறைகாலங்களில் சிருங்கேரி கோயிலுக்கும், திருப்பதிகோயிலுக்கும் சென்றுபூஜை செய்து வருவார்கள்.
ஆயிரம் வழக்குகளுக்கு மேல் சந்தித்துள்ள அவர்அதில் சரிபாதி வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். 
ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்குகளிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதீர்ப்பையே வழங்கியுள்ளார்.

முத்திரைத்தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பி.டி. பருத்தி போன்ற வழக்குகளை கூறலாம். 
அதே போல நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் `தலித் படுகொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை’ எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.

வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிற குமாரசாமி மீது தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இரு வீடுகள் பெற்றதாக புகார் உள்ள்து. 

அப்போது இவருடன் சர்ச்சையில் இடம்பிடித்த ஹெச். எல். தத்து, குமாரசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

இப்போதும் உச்ச நீதிமன்ற நீதிபதி தத்து தலையீட்டில்தான் ஜெயலலிதா வழக்கில் குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.என்று தெரிகிறது.
=================================================================================

இன்று,

மே -13.

  • டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது(1648)
  • பிரேசில் அடிமைமுறையை முற்றிலுமாக ஒழித்தது(1888)
  • இந்திய பார்லிமென்ட்டின் இரு சபைகளின் முதலாவது அமர்வு இடம்பெற்றது (1952)
  • இந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் இறந்த தினம்(2001)

==============================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?