வியாழன், 21 மே, 2015

பத்து கட்டளைகள்.


 

மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளும் போது அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கியமான 10 விதிமுறை கள்.அல்லது கட்டளைகள்.

"தும்மினால் கூட ஏதோ பிரச்னையாக இருக்குமோ என மருத்துவரிடம் அபிப்ராயம் கேட்கிற மக்கள் ஒரு ரகம்... உயிரைப் பறிக்கிற நோயைச் சுமந்து கொண்டு, ஒன்றுமே இல்லாதது போல அலட்சியமாக இருப்பவர்கள் இன்னொரு ரகம். தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தவறுவது, தேவையற்ற மருந்துகளை எடுத்துக் கொள்வது... இவை இரண்டுமே ஆபத்தானதுதான். "

1. மருந்துகளை எந்த அளவில் எந்த முறையில் மருத்துவர் எடுத்துக்கொள்ளச் சொல்கிறாரோ, அதே அளவில், அந்த முறையில்தான் சாப்பிட வேண்டும். கூடுதலாகவோ, குறைவாகவோ சாப்பிடக்கூடாது. ஒருமுறை ஒரு நோய்க்கு கொடுத்த மாத்திரையை அதே நோய் மறுபடியும் வரும் போது, மருத்துவரை கேட்காமல் நாமாகவே வாங்கிச் சாப்பிடக்கூடாது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

2. மருத்துவரின் ஆலோசனையில்லாமல் சுயமாக மருந்துக்கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடக்கூடாது. அது மிக ஆபத்தானது. நோயாளியை இறப்பு வரை கொண்டு செல்லும். அதனால் சுய மருத்துவம் கூடாது. விளம்பரங்களில் காட்டப்படுகிற மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தலைவலிக்கு, உடல் வலிக்கு என்று வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதித்துவிடும்.

3. ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிடுபவர்கள், குறித்து வைத்துக்கொண்டு, அடுத்த முறை செல்லும் போது மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாத்திரை பலனளிக்காவிட்டாலும், மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இது மாத்திரையை மாற்றி அளித்து சிகிச்சையை மேம்படுத்த உதவும்.

4. மருந்து, மாத்திரைகள் சாப்பிடும் போது, ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் கூற வேண்டும். ஒவ்வாமை ஏற்படுத்தும் மாத்திரைகளை நிறுத்திவிட வேண்டும். ஒரு மாத்திரையை வேண்டாம் என்று மருத்துவர் நிறுத்திவிட்டால் அந்த மாத்திரைகளை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் தூக்கிப்போட்டு விட வேண்டும். மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

5. தயாரித்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள் எக்ஸ்பயரி தேதி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். காலாவதி தேதியை உறுதி செய்தே மருந்துகளை வாங்க வேண்டும். அடிக்கடி எக்ஸ்பயரி தேதியை பரிசோதித்துக் கொள்வதும் அவசியம். எக்ஸ்பயரி ஆன மாத்திரைகள் வீட்டில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். முழு அட்டையாக வாங்காத மாத்திரைகளில் எக்ஸ்பயரி தேதி இருக்காது. அட்டையில் மட்டும்தான் ஓர் ஓரத்தில் அச்சிட்டு இருப்பார்கள். அதனால் மருந்துக்கடை பில்லில், எக்ஸ்பயரி தேதியை குறித்துக் கொடுக்க சொல்ல வற்புறுத்துவது அவசியம்.

6. தொலைபேசியில் மருத்துவரிடம் ஆலோசனை செய்யக்கூடாது. நோயாளியை நேராக பார்த்தால்தான் சில முக்கிய அறிகுறிகளைக் கண்டறிய முடியும். அடிக்கடி மருத்துவரை மாற்றவும் கூடாது. உங்களின் குடும்ப மருத்துவருக்கே முழுமையான தகவல்கள் தெரியும். சிறப்பு மருத்துவரிடம் புதிதாக சிகிச்சைக்கு செல்லும்போதும், குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதலின் படியே செல்ல வேண்டும்.

7. வயதானவர்களும் பார்வை தெளிவாக இல்லாதவர்களும் மாத்திரைகளை டேப்லெட் பாக்ஸில் காலை, மாலை, இரவு என தனியாக பிரித்து வைத்துக் கொள்வது நல்லது. ‘சரியான நேரத்துக்கு மாத்திரை சாப்பிட்டார்களா’ என அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பதும் அவசியம். சிலர் மாத்திரையின் சுவை பிடிக்காமல் துப்பிவிடுவார்கள். எல்லா மாத்திரைகளையும் சாப்பிட மாட்டார்கள். சில நேரங்களில் மாத்திரை சாப்பிடுவதை மறந்தும் விடுவார்கள். சிலர் மாத்திரைகள் சாப்பிட்டதை மறந்து விட்டு, மறுபடியும் சாப்பிடுவார்கள். கூடிய வரை, நாமே கையில் எடுத்துக் கொடுத்து சாப்பிட வைப்பது அவசியம்.

8. சில நோய்களுக்கு வாழ்நாள் முழுக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். உதாரணமாக நீரிழிவு உள்ளவர்கள்.  சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிட்டது என அவர்களாக மாத்திரைகளை நிறுத்தக் கூடாது. அது ஆபத்தானது. நீரிழிவு, ரத்த அழுத்தம், வலிப்பு ஆகியவற்றுக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் திடீரென மாத்திரைகளை நிறுத்தக்கூடாது.

9. வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரைகள், சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரைகள், தண்ணீரில் கரைத்துச் சாப்பிட வேண்டிய மாத்திரைகள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு முறை உண்டு. அப்படித்தான் சாப்பிட வேண்டும். நேரத்தை மாற்றி சாப்பிடக்கூடாது. அப்படிச் செய்தால் மாத்திரைகள் வேலை செய்யாமல் போய்விடும். சில மாத்திரைகளை சூரிய ஒளியில் படும்படி வைத்தால் அதன் வீரியத்தை இழந்துவிடும் என்பதால், குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டியிருக்கும். குழந்தை களின் கைகளுக்கு எட்டுமாறு மருந்து, மாத்திரைகளை வைக்கக் கூடாது.

10. மருந்துக்கடைகளில் மாத்திரைகள், மருந்துகள் வாங்கும் போது தவறாமல் பில் வாங்க வேண்டும். நீங்கள் இந்த மருந்தைத்தான் வாங்கியிருக்கிறீர்கள் என்பதற்கான முக்கிய சான்று அது. சட்ட ரீதியிலான முக்கிய ஆவணமாகவும் பில் செயல்படும். உறையில் எம்.ஆர்.பி. விலை எவ்வளவு அச்சிடப்பட்டுள்ளது என்றும் பார்க்க வேண்டும். எம்.ஆர்.பி. விலைக்குள் எல்லா வரிகளும் அடக்கம். அதற்கும் அதிக விலையை கொடுத்து மாத்திரை வாங்கக் கூடாது. மாத்திரைகள் சேதம் அடையாமல் சரியான வடிவில் இருக்கின்றனவா? நிறம் மாறாமல் உள்ளனவா? இவற்றையும் சோதித்து வாங்க வேண்டும். ‘மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த கம்பெனி மாத்திரை இல்லை, வேறு கம்பெனி மாத்திரை இருக்கிறது’ என்பார்கள் மருந்துக் கடைக்காரர்கள். இந்த சூழ்நிலை வரும் போது மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மருந்துக் கடைக்காரர் சொல்கிற மாற்று மருந்தைவிட, மருத்துவர் சொல்வதை உபயோகிப்பதே பாதுகாப்பானது.

உங்கள் உடலைப்பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்.?

* குழந்தை பிறக்கும்போது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

* நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. 

* நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமைானது. 

* நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினந்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. 

* பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலடங 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொரு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன. 

* நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 6,00,000 மைல்கள், அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம். 

* நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். 

* நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. 

* நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு. 

* முதல் எட்டு வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது. 

* மனித இதயம் சராசரியாக ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது. 

* உலரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது. 

* இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது. 

* மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன. 

* ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன. 

* நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது. 

* நமது மூளை 80% நீரால் ஆனது. 

* நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும். 

* நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான். மனித தலையில் சராசரியாக 100,000 தலை முடிகள் இருக்கும். 

* பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது. 

* மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது. 

* மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம், கண்கள் 31 நிமிடங்கள், மூளை 10 நிமிடங்கள், கால்கள் 4 மணி நேரம், தசைகள் 5 நாட்கள், இதயம் சில நிமிடங்கள். 

நன்றி:தினகரன்.
========================================================================
இன்று,
மே -21.
  • சிலி கடற்படை தினம்
  • இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
  • பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது(1859)
  • பாரீசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1904)
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம்(1991)
ராஜீவ் காந்தி (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். இவர் 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று தெறியப்பட்டது.
ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார். அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்தபோது, அவர் தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழியில், அவருக்கு பல நலவிரும்பிகள், காங்கிரஸ் கட்சி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மாலை அணுவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி தானு, அவரை அணுகி வாழ்த்தினாள். அவள் அவரது கால்களை தொட கீழே குனியும்போது அவளது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் வெடிபொருளை வெடிக்கச் செய்தாள். ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் கட்டப்பட்டு இருந்து வருகிறது.
========================================================================