சனி, 23 மே, 2015

இந்திய நீதித்துறையை அம்பலப்படுத்தியுள்ளசெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு!

சஞ்சய்தத் வழக்கு!!

சல்மான்கான் வழக்கு!!!அமீத்ஷா வழக்கு!!!!                                                                                        -அ.சகாய பிலோமின் ராஜ்

”செயலலிதா விடுதலை செய்யப்பட்டவுடன் ‘வாட்ஸ் அப்’பில் ஒரு குறும்புச்செய்தி பரவி நாட்டையே கலங்கடித்தது. “தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைந்துள்ளார். சல்மான்கான் மற்றும் செயலலிதாவுக்கு இந்திய நீதிமன்றங்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புகளுக்குப் பிறகு தாவத் இப்ராஹிமுக்கு இந்திய நீதித்துறையின் மீது அபார நம்பிக்கை வந்துவிட்டது”. என்பதாக அந்த செய்தி அமைந்திருந்தது.”
சில வாரங்களுக்கு முன் கர்நாடக தலைமை நீதிபதியாக இருந்த திரு. திரேந்திர ஹிரலால் வகேலா அவர்கள் திடீரென்று ஒடிசா மாநிலத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். செயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அவரை பணிமாற்றம் செய்தது நீதித்துறை வட்டாரத்தில் பல சந்தேகங்களை எழுப்பியது. “அது வழக்கமான நடவடிக்கைதான்” என்று மிகச்சாதாரணமாக விளக்கம் தரப்பட்டது. ஆனால் நீதிபதி வகேலாவோ, “இந்த நீதித்துறையில் ஒரு மாநிலத்தின் தலைமை நீதிபதியாக இருக்கின்ற எனக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் பாமர மக்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவையெல்லாம் ஏனோ பத்திரிகையில் பரவலாக விவாதிக்கப்படவில்லை. 

அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்பாக, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜீ ஒரு முறை “மக்களே! எதற்கெடுத்தாலும் நீங்கள் நீதிமன்றத்தை நம்பி வந்து ஏமாந்து போக வேண்டாம், உங்கள் உரிமைகளை தக்கவைத்துக் கொள்வதற்கான மாற்று வழிகளைக் கண்டறியுங்கள்” என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அதே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜீ, அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து பற்றி ஒரு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். தத்து எப்படி தனது வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்களை நாட்டின் பல பகுதிகளில் வாங்கிக் குவித்துள்ளார் என்பது பற்றியதே அந்த சர்ச்சை. ஏராளமான ஆதாரங்களுடன் பத்;திரிகையாளர்களுக்கும் சமூகத்தில் அக்கறையுள்ளோருக்கும் இது பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார் என்பதை சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இது செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு உச்சக்கட்டத்தை அடைந்துவரும் நிலையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 
செயலலிதா தனக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை தனது அனைத்து அதிகாரங்களையும், செல்வாக்கையும் பயன்படுத்தி 18 ஆண்டுகள் இழுத்தடித்தார் என்பதே இந்திய நீதித்துறையின் தரத்தை எடுத்தியம்புகிறது. சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு பல நீதிபதிகள்தான் மாறினார்களே தவிர, வழக்கு முடிவுக்கு வரவில்லை. இறுதியாக, நீதிபதி மைக்கிள் டி குன்ஹா அனைத்து அழுத்தங்களையும், அரசியல் தலையீடுகளையும் தகர்த்தெறிந்துவிட்டு நீதி வழுவாது தனது கடமையை செவ்வனே செய்து முடித்தார்.
இந்த வழக்கில் எதிரிகளுக்காகவே வாதாடுகின்ற ஒரு வழக்கறிஞராக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் மாறிப்போனார். அப்படிப்பட்ட ஒரு அரசு தரப்பு வழக்கறிஞர் இருக்கும்போதே இந்த வழக்கை நீதிபதி மைக்கிள் டி குன்ஹா ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். அவரைப் போன்றவர்களால்தான் நீதித்துறை மீது மக்களுக்கு சற்று நம்பிக்கை இருந்து வந்தது. அந்த 18 ஆண்டுகள் மக்கள் வரிப்பணம் எத்தனை கோடி ரூபாய் இந்த ஒரு வழக்கிற்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தால் அது இன்னும் நீதித்துறையைப் பற்றிய பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்.
இந்த வழக்கில் சிறப்பு விசாரணை நீதிமன்றம் மிகவும் விவரமான தீர்ப்பினை சான்றாவணங்கள் அடிப்படையிலும், ஏராளமான தொடர்புடைய சாட்சிகளின் சாட்சியங்களின் அடிப்படையிலும் வழங்கியது. குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது. செயலலிதா உட்பட நால்வருக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனை, செயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த தண்டனையை நிறுத்தி வைக்கச் சொல்லி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தபோது, அந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஜாமீன்; வழங்க மறுத்துவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் வழக்கமான சட்ட நடைமுறைகளையெல்லாம் கடந்து அவர்கள் அனைவருக்கும் மிக எளிதாக ஜாமீன் வழங்கி தண்டனையையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இந்த வழக்கிலும் நாட்டின் முன்னணி சட்ட நிபுணர் ஃபாலி நரிமன் செயலலிதாவுக்காக ஆஜராகிறார்.
நீதிபரிபாலணத்தில் சிறிதும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சாதாரணமாக எந்தவொரு வழக்கறிஞரும் தனது நெருங்கிய உறவினர் ஒருவர் நீதிபதியாக இருக்கும் ஒரு நீதிமன்றத்தில் வழக்காடமாட்டார்கள். ஆனால், அந்த நாகரீகத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு தனது மகன் நீதிபதியாக அமர்ந்திருக்கும் உச்சநீதிமன்றத்தில் செயலலிதாவுக்காக எவ்வித கூச்சமும் இன்றி வாதாடி ஜாமீன் பெற்றுத் தந்திருக்கின்றார் ஃபாலி நரிமன். 
2014 அக்டோபர் மாதம் செயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதிலிருந்து கடந்த மே 11 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கியது வரை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இந்த வழக்கில் காட்டிய சிறப்புக் கவனமும், வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைகளும் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியிருக்கிறது.
அரங்கேறிய நிகழ்வுகள் அனைத்தும் நீதித்துறையின் மீது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வளைதளங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு நீதித்துறை கடும் விமரிசனத்திற்குள்ளாகி கேவலப்பட்டு நிற்கிறது. உச்சநீதிமன்றத்தையும், உயர்நீதிமன்றத்தையும் விவரம் தெரிந்தவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு நீதித்துறை ஊழலும், மோசடியும் நிறைந்த அமைப்பாக மாறிவருவதை மக்கள் கவனித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி “ஊழலில் ஊறித்திளைக்கும் அரசுக்கு அதே அளவிற்கு ஊழலில் ஊறித்திளைக்கும் நீதித்துறை தேவையாக இருக்கிறது” என்று கூறியது இன்றைய இந்திய அரசியலில் மிகச்சரியான கூற்றாகவே தென்படுகிறது.
நாட்டின் பிரதமர் மோடி செயலலிதாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்கிறார். 
தமிழக பா.ச.க. வினர் ‘செயலலிதா வழக்கில் பா.ச.க. தலையீடு இல்லை’ என்று எந்த காரணமுமின்றி முழங்குகின்றனர். தமிழக பா.ச.க.விற்கு  பொறுப்பு வகிக்கும் முரளிதர்ராவ் சொத்துக்குவிப்பு வழக்கில் வெற்றி பெற்ற செயலலிதாவை வாழ்த்துகிறார். தமிழக பா.ச.க. தலைவர் தமிழிசை சௌந்தரராசன் ‘இந்த விடுதலை செயலலிதாவுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது போல இனி தமிழக மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்’ என்று முழங்குகிறார். தமிழக பா.ச.க. பாராளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் “ஆற்றல்மிக்க செயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்று நல்லாட்சி தர வேண்டும்” என்று வாழ்த்துகிறார். இவர்களின் வாழ்த்துக்களையும், தீர்ப்பின் விவரங்களையும் ஆராயும் எவருக்கும் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள செயலலிதாவும் மற்றவர்களும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது ஓரளவு புரிந்துவிட்டது.
செயலலிதா வழக்கில் குதறப்பட்ட நீதியின் 20 அம்சங்கள்
1.உச்ச நீதிமன்றம் செயலலிதா மற்றும் மூவரின் ஜாமீன் மனுவை வழக்கமான சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக அவசரமாக சில நாட்களிலேயே விசாரித்து (அபராதத் தொகையைக் கூட குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் செலுத்தாதபோதே) ஜாமீன் வழங்கி தண்டனையையும் நிறுத்திவைக்கிறது.
2. வழக்கத்திற்கு மாறாக மேல்முறையீட்டு மனுவை குறிப்பிட்ட நாளுக்குள் (18.12.2014) தாக்கல் செய்யச் சொல்லி நாள் குறிக்கிறது. அந்த வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடுகிறது. இது இதுவரை இந்திய நீதித்துறையில் நடந்திராத ஒரு விநோதமான நிகழ்வாகும். வழக்கமாக மேல்முறையீட்டு மனுக்கள் மிகவும் காலம் தாழ்த்தி எண் வரிசை அடிப்படையில்தான் விசாரணைக்கு எடுக்கப்படும். (பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மேல்முறையீட்டு வழக்கே நிலுவையில்தான் உள்ளது)
3. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை பெற்றிருந்தாலும், அவர்கள் மேல்முறையீடு செய்துவிட்டு, மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் பதவிகளில் அமர்வதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 (4) இடம் தந்து வந்தது. எனவே விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மேல்முறையீடு செய்துவிட்டு தொடர்ந்து அதிகாரமிக்க பதவிகளில் அமர்ந்து வந்தனர். வழக்கமாக அந்த மேல்முறையீட்டு மனுக்கள் மிகவும் கால தாமதமாகத்தான் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பல சமயங்களில் 5 முதல் 10 ஆண்டுகள் கூட ஆகலாம். இந்தநிலை தண்டிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் சாதகமாகவே இருந்து வந்தது.
4. இது நியாயமல்ல என்பதை உணர்ந்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் என்பவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) யை மாற்றி அமைக்க வேண்டி ஒரு பொதுநல வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார். அந்த வழக்கில் 10.07.2013 அன்று உச்ச நீதிமன்றம், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் குற்றங்களில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தாலும் அந்த மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை அவர்கள் எந்தப் பதவியிலும் அமரக் கூடாது என்று தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பு  செயலலிதாவுக்கும் மேல்முறையீடு செய்துவிட்டு பதவிக்கு வர தடையாக இருந்தது. ஆனால், மீண்டும் யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத வகையில், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தலைமை நீதிபதி தத்து செயலலிதா வழக்கில் மேல்முறையீட்டு மனுவை அதி விரைவாக 4 மாதத்திற்குள் முடிக்கச் சொல்லி உத்தரவிட்டு அந்தத் தடையையும் தகர்த்தெறிந்தர். இது செயலலிதாவை மீண்டும் பதவியிலமர்த்த வேண்டுமென்று மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்டதாகவே அனைவராலும் கருதப்படுகிறது.
5.மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு முதல் பதிலிறுப்பாளராக (1ளவ சுநளிழனெநவெ) சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் அவசரப்போக்கு காரணமாகவோ என்னவோ, அதை பதிவாளரும் பொருட்படுத்தவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியும் அதைக் கண்டுகொள்ளாமலேயே வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டார்.  
6.கர்நாடக அரசுதான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அந்த சட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறையே செயலலிதாவுக்கு சாதகமான அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நியமித்தது. இதை பலமுறை எடுத்துச் சொல்லியும் உயர்நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ளாதது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
7.பவானிசிங் ஏற்கனவே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு சிறப்பு விசாரணை நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளானவர் என்பது ஊரறிந்த உண்மை. இருந்தபோதிலும் உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவரை வழக்காட அனுமதித்ததோடு அவர் வழக்காடுவதை எதிர்த்த மனுக்களையும் தள்ளுபடி செய்கிறார். 
8. அப்படி தள்ளுபடி செய்யப்பட்ட அன்பழகனின் மனுவை உச்ச நீதிமன்றமாவது உடனடியாக அவசரகால மனுவாக ஏற்று விசாரித்து நீதி வழங்கியிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை. கூடுதலாக, ‘மேல்முறையீட்டு வழக்கிற்கு தடைவிதிக்க வேண்டும்’ என்ற அன்பழகனின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஆக மொத்தத்தில் சட்டப்படியான அரசுதரப்பு வழக்கறிஞர் இல்லாமலேயே இந்த வழக்கு நடந்து முடிய ஏற்பாடு செய்து கொடுத்து இந்த வழக்கில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
9.மேல்முறையீட்டு மனுவின் மீது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அரசு வழக்கறிஞரின் நியமனம் செல்லும் என்று ஒருவரும், செல்லாது என்று மற்றொருவரும் தீர்ப்பு வழங்கி கூடுதல் சிக்கலை உண்டாக்கினர்.
உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் திருவிளையாடல்கள்:
10.எனவே அன்பழகனின் மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்தமுறை மூவரும் ஒருமித்த கருத்துடன் சட்டத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்து, “தமிழக அரசின் இலஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமித்தது செல்லாது. இது மிகவும் மோசமான நடைமுறை” என்று உறுதிபடச் சொன்னது.
11.பவானிசிங் நியமனம் சட்டப்புறம்பானது என்றும் அவர் முன்வைத்த வாதங்களை ஏற்கக்கூடாது என்றும் சொல்லிவிட்டு, அதற்காக மறு விசாரணை நடத்தத் தேவையில்லை என்றும் திருவாய் மலர்ந்தது. இது ஒரு விநோதமான தீர்ப்பாகவே கருதப்படுகிறது. (உண்மையில் சட்டத்தின்கண் அது சரியானதல்ல) சட்டப்புறம்பான ஒருவர் அரசு வழக்கறிஞராக இருந்து நடத்திய வழக்கில் மறு விசாரணையின்றி எப்படி நீதி கிடைக்கும்? என்ற கேள்விக்கு பதில் இல்லை. இது ஒரு மர்ம முடிச்சு.
12.மேலும், அன்பழகன் தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தங்களது வாதங்களை நேரடியாக முன்வைப்பதற்குக் கூட வாய்ப்பு தரப்படவில்லை.
 அதற்குப் பதிலாக, அவர்கள் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தங்கள் வாதுரையை தாக்கல் செய்யலாம் என்று தீர்ப்பில் கூறியது. அதோடு அப்படி எழுத்துப்பூர்வ வாதுரையை தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே அவகாசம் கொடுக்கிறது. இவையனைத்தையும் பார்க்கின்ற போது செயலலிதாவை வழக்கிலிருந்து விடுதலை செய்ய மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்றிருப்பதாகவே கற்றறிந்த வழக்கறிஞர்கள் ஏராளமானோர் உறுதிபட தெரிவிக்கின்றனர்.
18 ஆண்டு காலம் நடைபெற்று வந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை எதிரிகளுக்கு எதிராக நடத்த ஒரே நாளில் அரசு தரப்பு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும். அவரும் அன்பழகனின் வழக்கறிஞரும் தங்களது தரப்பு வாதங்களை ஒரே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்; அந்த வாதுரை இத்தனை பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டியதன் அவசியமும் அவசரமும் என்ன? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், எவ்வித சட்ட அடிப்படையும் இல்லாது பல உத்தரவுகளை மளமளவென்று மூவர் அமர்வு பொழிந்து தள்ளியது.
13. இன்னும் வேடிக்கை என்னவென்றால், மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி குமாரசாமி எப்படி இந்த வழக்கின் தீர்ப்பை எழுதவேண்டும் என்று வழிகாட்டுதல்களையும் மூவர் அமர்வு சுட்டிக்காட்டுகிறது. அவையெல்லாம் ஊரை ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்டவையோ என்று தோன்றுகிறது. இல்லையென்றால், இந்த வழக்கில் அந்த வழிகாட்டுதல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டு உச்சநீதிமன்றத்தின் மூவர் அமர்வு தானாகவே வழக்கை மேல்முறையீடாக எடுத்துக்கொள்ளுமா? அப்படி எடுத்துக்கொள்வதுதானே நியாயம்?
14.மேலும், வழக்கின் தீர்ப்பினை மே மாதம் 12 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் துரிதப்படுத்தியதைப் பார்க்கும்போது, எதற்காக இந்த வழக்கில் இத்தனை அவசரமும், ஆதங்கமும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
நீதிபதி குமாரசாமி தீர்ப்பின் குளறுபடிகள்:
15.இறுதியாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வாசித்துப்பார்க்கும் போதுதான் எத்தனை குளறுபடிகள், தவறுகள், முரண்பாடுகள் அந்தத் தீர்ப்பில் அடங்கியுள்ளன என்பது புலப்படுகிறது.
16.நீதிபதி குமாரசாமி வேண்டுமென்றே வருமானத்தைக் கணக்கிடும்போது அவர் பெற்ற கடன்களை வெகுவாக கூட்டிக் காட்டியுள்ளார்.
17.1977 ல் நடந்த கிருஷ்ணானந்த் அக்னிகோத்தாரி எதிர் மத்தியப்பிரதேச மாநிலம் என்ற வழக்கில், ஒரு அரசு அதிகாரி வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துக்கொண்ட சொத்து மொத்த வருவாயில் 10 சதவீதத்திற்கு அதிகமாக இல்லாதபட்சத்தில் அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வழங்கப்பட்ட தீர்ப்பினை தனக்கு துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளார்.
மேலும், ஆந்திர மாநில அரசின் அரசாணை ஒன்றையும் தனது தீர்ப்புக்கு உரம் சேர்ப்பதாக சுட்டிக்காட்டி விடுதலை செய்திருக்கிறார். ஆனால், எப்படி ஆந்திர மாநில அரசு தனது அரசு ஊழியர்களுக்காக பிறப்பித்த அரசாணை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்து சொத்துக்களைக் குவித்தவருக்கு பொருந்தும் என்று ஏராளமானவர்கள் வியப்புடன் கேட்கின்றனர். ஆக மொத்தத்தில், குற்றவாளிகளை எப்படியாவது விடுவித்தாக வேண்டும் என்பதே நீதிபதியின் பிரதான நோக்கமாக இருந்திருப்பதை இந்தத் தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
18.அதிலும் குமாரசாமி கோட்டை விட்டுவிட்டார் நீதிபதி. கூட்டலில் மிகப்பெரிய தவறினை இழைத்துவிட்டார். ஓரு கூட்டல் கணக்குக்கூட ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்குத் தெரியாதா அல்லது செயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்பதே நீதிபதியின் பிரதான நோக்கமாக இருந்ததா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உண்மையில் இவர்தான் தீர்ப்பினை எழுதினாரா அல்லது வேறு யாரும் எழுதியத் தீர்ப்பில் இவர் கையொப்பமிட்டாரா என்றும் பலர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். எதிரிகள் வாங்கிய கடன் 10 கோடியை 24 கோடியென்று கணக்கிட்டதன் மர்மம்தான் என்ன என்று சிறு பிள்ளைகள் கூட கேள்வியெழுப்புகின்றன. வருமானத்துக்கு அதிகமான சொத்தை 10 சதவிகிதத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான், 76 சதவிகிதத்தை 10 சதவிகிதம் என்று தவறாக கணித்துவிட்டதாகத் தெரிகிறது.
19.மிகப்பெரிய ஊழல் நடந்துள்ள ஒரு மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கும்போது நீதிபதி எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று உச்சநீதிமன்றம் காட்டிய எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படாததை இந்தத் தவறுகள் மிகத் தெளிதாகச் சுட்டிக்காட்டுகின்றன.
20. சொத்து மதிப்பை தன்னிச்சையாக குறைத்துக் காட்;டியுள்ள நீதிபதி அதற்கான காரணத்தை கண்டிப்பாக தனது தீர்ப்பில் சொல்லியாக வேண்டும். ஆனால் அப்படி எந்தக் காரணத்தையும் தனது தீர்ப்பில் சொல்லவில்லை. அது வெளிப்படையாகச் சொல்லக்கூடிய காரணம் அல்ல என்பதால் தவர்த்துவிட்டாரோ என்னவோ?  
இறுதியாக…
இப்படி ஒட்டுமொத்தமாக இந்த வழக்கின் போக்குகளைக் கவனிக்கும்போது எந்த அளவிற்கு இந்த வழக்கில் மோசடி நடந்திருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் கவனமுடன் குமாரசாமியின் தீர்ப்பை வாசிக்கும் அனைவருக்கும் இது நன்கு புரியும்;. இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல என்று பெரும்பான்மையோர் நம்புகின்றனர். அடுத்த கட்டத்திற்கு இந்த வழக்கை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்குத்தான் முதலில் உண்டு. அதை கர்நாடக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆச்சார்யா தெளிவுபடக்கூறி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன என்றும் அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார். அதையே கர்நாடக தலைமைச் செயலரும் ஏற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இப்போது அரசின் கையில்.
21 ஆம் தேதி அமைச்சரவை கூடி முடிவு செய்யும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வருகின்ற 23 ஆம் தேதியே மீண்டும் முதலமைச்சராகி விடுவது என்று செயலலிதா தனது பரிவாரங்களை முடுக்கிவிட்டுள்ளார். ஆந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகளை வென்றெடுத்த வீரத்தாய் என்று கூட பலரும் செயலலிதாவை புகழ்ந்து பாடக்கூடும். முத்திய அரசில் வீற்றிருக்கும் பா.ச.க. தனது பரிவாரங்களுடன் செயலலிதா முதலமைச்சராகும் நிகழ்வில் கலந்து கொண்டு பூரிப்படையலாம்.
ஆனால் அதற்கு முன்பாக டிராபிக் ராமசாமி இந்த வழக்கில் தானும் ஒரு புகார்தாரர் என்ற முறையில் ஏற்கனவே துரிதமாக செயல்பட்டு நாட்டில் நீதி செத்துவிடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மேல்முறையீட்டு வழக்கை தொடுத்துள்ளார். இப்போதாவது உச்ச நீதி மன்றம் தீர்ப்பினை நிறுத்தி வைத்து மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமா? அடுத்த கட்டத்திலாவது நீதி வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஓன்று மட்டும் நிச்சயம் உலகமே இந்திய நீதித்துறையை மிகவும் கவனமுடன் கண்காணித்து வருகிறது. இதை உச்சநீதிமன்றம் நினைவில் கொண்டு மேல்முறையீட்டு மனுவை கவனமுடன் விசாரிக்கும் என்று நம்புவோம்.
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை பீடத்தில் நீதியரசர் தத்து ,பாஜக அரசு இருக்கும்வரைஅது நடக்குமா என்பதுதான் தெரியவில்லை.
நன்றி:கீற்று.
சென்னை அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை மாலை அஇஅதிமுக பொதுச்செயளாலர் ஜெயலலிதா புகழ் பாடும்   பேனர்  கீழே விழுந்தது. எல்.ஐ.சி சிக்னலில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் மேல் பகுதியில் விழுந்தது.  நல்ல வேளை உயிர் சேதம் இல்லை.காவல்துறையினர் இறந்த ஜெயா பீனர்களைஅக் கண்டு கொள்ளாமல் பாதுகாப்பு வழங்கும் வரை தமிழ் நாடு உருப்பட போவதில்லை.
========================================================================
இன்று,
மே-23.

  • மெக்சிகோ மாணவர் தினம்
  • ஜமைக்கா தொழிலாளர் தினம்
  • நெதர்லாந்து, ஸ்பெயினிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1568)
  • ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1949)
  • மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளி வந்தது(1929)
1430 - ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.
1568 - நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
1813 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று "விடுவிப்பாளர்" எனத தன்னை அறிவித்தார்.
1846 - மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
1865 - வாஷிங்டன்டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
1915 - முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
1951 - திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.
1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
பிறப்புகள்
1920 - காயத்திரி தேவிஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)
1951 - அனத்தோலி கார்ப்பொவ்ரஷ்ய சதுரங்க வீரர்.
1707 - கரோலஸ் லின்னேயஸ்தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778)
இறப்புகள்
1906 - ஹென்ரிக் இப்சன்நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828)
1997 - அல்பிரட் ஹேர்ஷ்லிநோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
சிறப்பு நாள்
World Turtle Day
==============================================