உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி.....,?

பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, இன்றைய உலகில் தலைசிறந்த அறிஞர். அமெரிக்காவைச் சேர்ந்த 86 வயது மேதையான சாம்ஸ்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகள் குறித்து இடைவிடாமல் கடுமையாக விமர்சித்து வருபவர். இன்றைக்கு உலகின் பல பகுதிகளில் நிலவும் கொடுமைகளுக்கும் கோரத் தாண்டவங்களுக்கும் காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியமே என்று அவர் உறுதியாக வாதிடுகிறார்.
 2015 ஏப்ரல் 17ம் தேதி ‘ஈரோ நியூஸ்’ என்ற பத்திரிகையில் வெளியான அவரது பேட்டி, இன்றைய உலக நிலவரத்தை அலசி ஆராய்கிறது. நோம் சாம்ஸ்கியுடனான பத்திரிகையாளர் இசபெல்லா குமாரின் நேர்காணல் இது.

இசபெல்லா குமார்: 2015ம் ஆண்டு துவக்கத்திலிருந்தே இந்த உலகம் மிகவும் பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது; இந்த நிலையில் நம்பிக்கையுடன் வாழலாமா- இல்லையா என்பது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

நோம் சாம்ஸ்கி: உலக நிலைமைகள் ஒரு செங்குத்தான மலை
 உச்சியை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன; உச்சியிலிருந்து அதலபாதாளத்தில் விழுவதுதான் கடைசி முடிவாக இருக்கும். இது இப்படியே நீடித்தால் மனித குலம் ஒரு கவுரவமான வாழ்க்கையை தொடர முடியாது என்ற நிலையே ஏற்படும்.

எப்படிப்பட்ட, கூர்மையான சூழ்நிலைமைகள் அவை?

இரண்டு முக்கியமான நிலைமைகள் எழுந்துள்ளன. ஒன்று, சுற்றுச்சூழல் பேரழிவு. இது இப்போது கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது. அதை கையாள்வதற்கு நமக்கு நிறைய நேரம் இல்லை. ஆனால், அதை முறையாக கையாளாமல் தவறான வழியில்சென்று கொண்டிருக்கிறோம். மற்றொரு பிரச்சனை, கடந்த 70 ஆண்டுகளாக நீடித்து வரும் அணு ஆயுதப் போர் அபாயம் தற்போது தீவிரமடைந்துள்ளது. உண்மையில் நாம் எல்லோரும் இந்த நிலைமைகளுக்கு இடையில் உயிரோடு இருப்பதே அதிசயம்தான்.

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என்று வரும்போது நீங்கள் தத்துவஞானி என்பதால் அந்த பார்வையிலேயே பார்ப்பதாக ஒரு விமர்சனம் இருக்கிறது; புவியின் வெப்பநிலை உள்பட காலநிலை மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

மனித இனம் இந்த பூமியில் சுமார் ஒரு லட்சம்ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக் கிறது. அது இப்போது வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. மனித குலமானது அடுத்த சில தலைமுறைகளுக்கு எதை விட்டுச் செல்லப் போகிறது என்பதை தீர்மானித்தே ஆகவேண்டிய நிலையில் உள்ளது. இப்போது இருப்பதைவிட இன்னும் அறிவுப்பூர்வமான வாழ்க்கை யை வழங்கிவிட்டுச் செல்லப்போகிறதா அல்லதுஇத்தோடு அழிந்து போகப் போகிறதா என்பதை தீர்மானித்தாக வேண்டும். நமது பேரக்குழந்தைகள் ஒரு கவுரவமான வாழ்க்கை கிடைக்கப்பெற்றால் அவர்களுக்காக பூமிக்கு அடியில் மிகப்பெரும் அளவில் உயிரி படிம எரிபொருட்கள் காத்திருக்கின் றன என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறார் கள். ஆனால், நமது சமூகத்தின் கட்டமைப்புகள் இப்போதே அந்த வளங்களின் ஒரு துளியை கூட விடாமல் உறிஞ்சி எடுத்து லாபம் சம்பாதித்துவிட துடித்துக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் - காலநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் ஏற்படும் அழிவு வெகு தொலைவில் இல்லை என எச்சரிக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், உலகம் கூரிய மலை உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்று.
அணு ஆயுத யுத்தம் என்ற பேச்சு எழுகிற நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான ஒப்பந்தம் ஒரு முதன்மை கட்டத்தை எட்டியுள்ளது; இது ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை அளிக்கவில்லையா? உலகம் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா?
ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடர்வதை நான் விரும்புகிறேன். ஆனால், உண்மையில் நடந்து கொண்டிருப்பது வேறு விதமானது.மத்திய கிழக்கு பிரதேசத்தை இரண்டு நாடுகள் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆக்கிரமிப்புகள், வன்முறைகள், பயங்கரவாத தாக்குதல்கள், சட்டவிரோதச் செயல்களை நிரந்தரமாக கட்டவிழ்த்து விட்டுள்ளன. அவை பெருமளவில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள். அவர்களிடமுள்ள அணு ஆயுதங்களைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை.
பேராசிரியர் நோம் சாம்ஸ்கி                                                              பத்திரிகையாளர் இசபெல்லா  
நீங்கள் குறிப்பிடும்அந்த இரண்டு நாடுகள் எவை?

அமெரிக்காவும் இஸ்ரேலும்தான். இவை இரண்டும் உலகின் மிகப் பெரிய அணு ஆயுத நாடுகள்.சர்வதேச அளவில் நடந்த கருத்து வாக்கெடுப்புக ளில் - அதுவும் அமெரிக்க அமைப்புகள் சார்பிலேயே நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளில் - இந்த உலக அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது அமெரிக்காவே என்று பெரும்பான்மையான மக்கள்கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வேறு எந்த நாட்டையும் இந்த அளவிற்கு மக்கள் குறிப்பிடவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த உண்மையை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட மறுத்துவிட்டன; ஆனால் உலகம் முழுவதும் இந்த செய்தி பரவிவிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நீங்கள் எப்போதுமே பெரிதாக மதித்ததில்லை. ஆனால் ஈரானுடனான அமெரிக்காவின் ஒப்பந்தம் பரவாயில்லைதானே? அந்த அடிப்படையில் அவர் அணு யுத்த அச்சத்தை குறைக்க முயற்சித்திருக்கிறார் என்பது உண்மைதானே?

நல்லது. ஆனால் உண்மை நீங்கள் சொல்வது அல்ல. அவர் இப்போதுதான் ஒரு டிரில்லியன் டாலர் (100 ஆயிரம் கோடி) திட்டத்தை துவக்கியிருக்கிறார். அமெரிக்க அணு ஆயுத கட்டமைப்பை நவீன மயமாக்குவதற்கான திட்டம் அது. இதன் பொருள் என்னவென்றால் அணு ஆயுத கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவது என்பதே. அணு ஆயுத விஞ்ஞானிகளால் நடத்தப்படும் பத்திரிகையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகழ்மிக்க கடிகாரத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தை இரண்டு நிமிடங்களுக்கு தள்ளி வைத்து நிர்ணயம் செய்துள்ளனர். நள்ளிரவு என்பதுதான் ஒரு நாளின் முடிவு. இப்போது நள்ளிரவு என்பது மொத்தத்திற்கு மூன்று நிமிடங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் தற்போதுதான் இப்படி நடந்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவில் ரீகனின் ஆட்சி நடந்தபோது ஒரு பெரும் போரைத் தவிர்ப்பதற்கு இப்படி செய்யப்பட்டது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றுபட்டு செயல்படுவதை குறிப்பிட்டீர்கள். ஆனால் இப்போது, ஈரானுடனான அணு சக்தி உடன்பாட்டை எந்த விதத்திலும் விரும்பவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியிருக்கிறாரே...?

அது ஏன் என்பது நமக்கு தெரியும். ஈரான் என்பது மிகமிக குறைவாகவே ராணுவத்திற்கு செலவிடுகிற நாடு. அந்த பிராந்தியத்திலே எடுத்துக் கொண்டா லும் சரி, அல்லது அமெரிக்காவுடன் ஒப்பிட்டாலும் சரி இதுதான் உண்மை. ஈரானின் நீண்ட காலத்திட்டம் என்பது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுதான். நீண்ட காலமாகவே அது ஒரு தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தகுந்த முறையிலேயே தனது ராஜிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஈரான் தங்களுக்கு அடிபணியாமல் இருப்பதை இரண்டு பெரும் தீய நாடுகளான அமெரிக்காவும் இஸ்ரேலும் சகித்துக் கொள்ள தயாராக யில்லை. மூளை வேலை செய்கிற எந்தவொரு போர்த்தந்திர ஆய்வாளரும், ஈரான் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என்று சிந்திக்க மாட்டார்கள். அதையும் மீறி அந்த நாடு ஒரு அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயாராகுமானால் அந்த நிமிடமே அந்த நாடே நிர்மூலமாகிவிடும் என்பது அவர்களுக்கே தெரியும். தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள ஈரானின் ஆளும் மதகுருமார்கள் ஒருபோதும் நினைக்கமாட்டார்கள்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தராமல் அமெரிக்கா தானாகவே ஏதேனும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுவிடும் என்று நம்புகிறீர்களா?

இஸ்ரேலுக்கு ஆபத்தான அம்சங்கள் உள்ளன என்று தெரிந்தே அமெரிக்கா சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இஸ்ரேலின் கொள்கையை ஆதரிப்பதாக பெயரளவிற்கு அது கூறுகிறது. ஆனால் உண்மையில் கடந்த 40 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்து அதன் சொந்தக்கொள்கைகளின் மூலமாகவே ஏற்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததை நினைவு கூர்கிறேன். 1970 ம் ஆண்டில் இஸ்ரேல் என்பது உலகில் மிகவும் மதிக்கப்பட்ட, புகழப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. அந்த நாடு பல்வேறு துறைகளில் சிறந்த அணுகுமுறைகளை கொண்டிருந்தது. ஆனால் இன்றைக்கு மிகவும் வெறுக்கப் படுகிற நாடுகளில் ஒன்றாக, அச்சத்திற்குரிய நாடுகளில் ஒன்றாக அது மாறியுள்ளது. 1970களின் துவக்கத்தில் இஸ்ரேல் ஒரு முடிவினை மேற்கொண்டது. தங்களது பாதுகாப்பை விரிவுபடுத்து வதற்கு முன்னுரிமை அளிப்பது என்று எண்ணி, ஆபத்தான விளைவுகளைத் தரக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாதுகாப்பு கட்டமைப் பை விரிவுபடுத்துவது என முடிவு செய்துவிட்டால், அது உள்நாட்டிலேயே சமூக ஒழுங்கு என்ற கட்டமைப்பை சீர்குலைக்கத் துவங்கும்; ஆத்திரத்தை ஏற்படுத்தும்; எதிர்ப்பு உருவாகும்; தனிமை உணர்வுஅதிகரிக்கும்; படிப்படியாக இது அழிவை நோக்கி இட்டுச் செல்லும். அன்றைக்கு இஸ்ரேலின் இந்தக்கொள்கைகளை அமெரிக்கா ஆதரிப்பதாக அறிவித் தது. அன்று முதல் இஸ்ரேலின் நாசப்பாதைக்கு அமெரிக்காவே பெரும் காரணமாக அமைந்தது.

பயங்கரவாதத்தை பற்றி பேச வேண்டியுள்ளது. உலகம் முழுவதும் இது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்காவின் கொள்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு அனைத்து பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எந்த விதத்தில் பொறுப்பு?

இந்த உலகிலேயே மிகமிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிற நாடு அமெரிக்கா என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். உலகளாவிய பெரும் படுகொலை களுக்கான மிகப்பெரும் போர்த் திட்டம் அது. இப்படிப்பட்ட பெரும் பயங்கரவாதத் திட்டம் இதற்குமுன்பு அரங்கேறியதில்லை.

உலகளாவிய பெரும் படுகொலைகளுக்கான மிகப்பெரும் போர்த்திட்டம் என்று எப்படி சொல்கிறீர்கள்?

ஆமாம், ஆளில்லா விமானங்கள் மூலமாக கொத்துகொத்தாக குண்டுகளை வீசி கூட்டம் கூட்டமாக மனிதர்களை கொல்வது - மிகச் சரியாக,இதைத்தான் அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது. உலகின் பெருவாரியான பகுதிகளில் திட்டமிட்டு, பகிரங்கமாக, அனைவருக்கும் தெரிந்தே அமெரிக்கா இதைச் செய்து வருகிறது - இதில் எந்த ரகசியமும் இல்லை - மனிதர்களை கூட்டம்கூட்டமாக கொல்வதற்கு - தங்களுக்கு பாதக மாக இருப்பார்கள் என்று அமெரிக்க அரசு யாரையெல்லாம் சந்தேகிக்கிறதோ அவர்கள் அனைவரையும் கொன்று குவிப்பதற்கு இடைவிடாத தாக்குதலை அது மேற்கொண்டிருக்கிறது.ஏமன் நாட்டில் கண்ணில் படுகிற கிராமங்களில் எல்லாம் குண்டுகளை வீசுகிறீர்கள். உங்களுக்கு எந்த விதத்திலும் எதிரி என்று அறியப்படாத சாதாரண மனிதர்களையெல்லாம் இரத்த வெள்ளத் தில் சாகடிக்கிறீர்கள். அந்த மனிதர்கள் என்ன செய்தார்கள். அவர்களது அண்டை வீட்டுக்காரர்கள் பித்து பிடித்தவர்கள் போல அலைகிறார்கள். அவர்களெல்லாம் உங்களுக்கு பதிலடி கொடுத்துவிடு வார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்கள் உங்களைப் பழிவாங்குவார்கள் என்று நினைக்கிறீர்களா? அதிபயங்கரமான ராணுவத் தாக்குதல்கள் இவை. நம் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய பயங்கரவாத நாடு என்று அமெரிக்காவை குறிப்பிடுகிறீர்கள். இந்த இடத்தில் ஐரோப்பா எங்கே வருகிறது?

நல்ல கேள்வி. மிகச் சமீபத்திய உதாரணமே நமக்கு இருக்கிறது. ஐரோப்பா என்பது ஒரு பெரிய சித்ரவதை கூடாரம். இது உண்மைதான். அவர்கள் ஒரு நாட்டை குறி வைத்துவிட்டால் அந்த நாட்டுக்கு எதிராக அந்த பிராந்தியத்திலேயே உள்ளதங்களுக்கு பிடித்தமான சர்வாதிகார ஆட்சியாளர் களை தூண்டிவிடுவார்கள். சித்ரவதையை கட்டவிழ்த்து விடுவார்கள். இதில் இங்கிலாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கு முக்கிய பங்குண்டு. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் உலகில் லத்தீன் அமெரிக்கா மட்டும்தான்(தென் அமெரிக்கா) இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபடாமல், அமெரிக்காவின் கட்டுப்பாட் டிற்கு வெளியிலேயே தலை நிமிர்ந்து நிற்கின்றன. ஒருகாலத்தில் லத்தீன் அமெரிக்கா நாடுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது அந்த கண்டமே உலகின் மிகப்பெரும் சித்ரவதை களமாக இருந்தது என்பதை நினைவு கூர்கிறேன். இன்றைக்கு அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு ஐரோப்பா ஆடுகிறது. எஜமானன்சொல்வதை கூலியாட்கள் நிறைவேற்றுகிறார்கள்.

ஆக, ஐரோப்பா என்பது அமெரிக்காவின் கைக்கூலி என்கிறீர்களா?

நிச்சயமாக. எந்த விதமான சுயேச்சையான நிலைபாட்டை எடுக்கத் தெரியாத கோழைகள்தான் அவர்கள்.

இந்த வரைபடத்தில் ரஷ்யாவின் விளாடிமிர் புடின் இங்கே வருகிறார்? 
அவர்தான் இன்றைக்கு உலகப் பாதுகாப்பிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்கா கூறுகிறதே, அது உண்மையா?

உலகில் உள்ள பல தலைவர்களைப் போல, அவர் தனது சொந்த மக்களுக்கு ஒரு அச்சுறுத்தல்தான். உள்நாட்டில் தனது மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறார்.ஆனால், அவரை மூளை குழம்பிப் போன, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கொடூரமான பிசாசைப் போல, எலியின் முகத்தை கொண்ட ஒரு பயங்கர ஜந்துவைப் போல அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விமர்சிக்கிறார்கள். அவருடைய கொள்கையைப் பற்றி பேசுங்கள், அது புரிந்துகொள்ளத்தக்கது. ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், ஒரு மேற்கத்திய ராணுவக் கூட்டணியுடன் சேருவது என்பது எந்தவொரு ரஷ்யத் தலைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த 1990ம் ஆண்டுகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது நேட்டோ ராணுவக் கூட்டணியுடன் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நேட்டோ ராணுவக் கூட்டணியை உலகின் கிழக்குப் பகுதியை நோக்கி ஒரு இஞ்ச் கூட முன்னேறவிட மாட்டோம் என்பதுதான் அன்றைக்கு முழக்கமாக இருந்தது. இன்றைக்கும் அதுதான் பொருந்தும்.

எனவே ரஷ்யாதான் ஆத்திரமூட்டலில் ஈடுபட்டது என்று அர்த்தமா?

என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததும் நேட்டோ ராணுவம் கிழக்கு ஜெர்மனிக்குள் உடனடியாக புகுந்து ஆக்கிரமித்தது. அதற்குப் பிறகு ஒரு கட்டத்தில் ரஷ்யாவின் எல்லை வரையில் நேட்டோ ராணுவத்தை கிளிண்டன் விரிவுபடுத்தினார். இன்றைக்கு உக்ரைனில் புதிதாக அமைந்துள்ள அரசு அதே பாதையில் பயணிக்கிறது. நேட்டோ கூட்டணியில் இணைவது என்று உக்ரைன் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

ஆனால், நேட்டோவில் இணைந்து கொள்வது தங்களது நாட்டுக்கு பாதுகாப்பு என்று அவர்கள் நினைக்கிறார்கள், அது சரிதானே?

இல்லை இல்லை. இது பாதுகாப்பு அல்ல. உக்ரைனில் ஏற்கெனவே இருந்த அரசாங்கம் வீழ்ந்தவு டன், உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியா வெளியேறிவிட்டது. இந்த நிலையில் நேட்டோவில் உக்ரைனை சேர்ப்பது அதற்கு பாதுகாப்பு அல்ல, மாறாக உக்ரைன் மிகப்பெரும் போரை சந்திக்கப் போகிறது என்ற அச்சுறுத்தலே இதில் அடங்கியிருக்கிறது. இது ரஷ்யாவுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலே ஆகும். அங்கு யார் ஆட்சியில் இருந்தாலும் இதற்குகட்டாயம் எதிர்வினை புரிவார்கள். இது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.
ஐரோப்பாவை பற்றி பேசும்போது நாம் கிரீஸை பற்றியும் பேச வேண்டியுள்ளது.அங்கு சிரிசா கூட்டமைப்பின் ஆட்சி அமைந்துள்ளது. இது, கிழக்கு உலகை நோக்கி கிரீஸ் நகருகிறது என்பதற்கான அடையாளமாக கொள்ளலாமா? அதேபோல ஸ்பெயினில், ஹங்கேரியில் போடேமாஸ் இயக்கத்தினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அப்படியானால் ஐரோப்பாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்று பொருள் கொள்ளலாமா?
ஹங்கேரியில் நடந்திருப்பது முற்றிலும் வேறுபட்ட மாற்றம். கிரீஸை பொறுத்தவரை அந்நாட்டைச் சீரழித்த ஐரோப்பிய யூனியன் தலைமையகம் மற்றும் ஜெர்மானிய வங்கிகளின் கொள்கைகளை இனியும் ஏற்க முடியாது என்று உறுதியளித்த காரணத்தால்தான் மக்கள் செல்வாக்கைப் பெற்று சிரிசாகூட்டமைப்பு ஆட்சிக்கு வந்துள்ளது. மேற்படி கொள்கைகள் தான் கிரீஸ் நாட்டை மீள முடியாதகடன் வலைக்குள் தள்ளியது. சரிபாதி இளைஞர் கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட கிரீஸ் பொருளாதாரம் அழிக்கப்பட்ட நிலையில் அங்கு புதிய ஆட்சி வந்துள்ளது.
எனவே அவர்களது கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டுமா?
கட்டாயமாக.ஜெர்மனிக்கு எப்படி செய்தார்களோ அதேபோல. 1953ல் ஜெர்மனியின் கடன்கள் அனைத்தையும் ஐரோப்பிய நாடுகள் தள்ளுபடி செய்தன. அதனால்தான், போரால் ஏற்பட்டிருந்த பாதிப்புக்களை சரிசெய்து ஜெர்மனி முன்னேற முடிந்தது.

இதர அனைத்து ஐரோப்பிய நாடுகளின் நிலை என்ன?

இதே கதைதான்.
ஆக, போர்ச்சுக்கல்லின் கடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும்; ஸ்பெயினின் கடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று சொல்கிறீர்களா?
யார் அந்த கடனை வாங்கினார்கள்? யாருக்காகஅந்த கடனை வாங்கினார்கள்? உண்மையில் இந்தகடன்கள் சர்வாதிகார ஆட்சியாளர்களால் வாங்கப்பட்டவை. கிரீஸில் ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சிநடந்தது. அதை அமெரிக்கா ஆதரித்தது. அவர்கள்தான் அந்த நாட்டை கடன் வலையில் தள்ளினார் கள். அந்த சர்வாதிகாரியின் ஆட்சியைவிட கடன்கள் தான் மிகவும் கொடூரமானவை. சர்வதேச சட்டத்தில் அமெரிக்காவே ஒரு விதியை புகுத்தியது. அந்த விதியை இப்போது அவர்களுக்கே பயன்படுத்தலாம். இதுபோன்ற பெரும் கடன்களை திருப்பி செலுத்தவேண்டியதில்லை என்பதுதான் அந்த விதி.இதர கடன்கள் என்ன வகையைச் சேர்ந்தவை? ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு வங்கிகள் கிரீசுக்கு கொடுத்த கடன்கள். இந்த கடன்கள்திரும்பி வராது என்று தெரிந்தே கொடுக்கப்பட் டவை. எனவே கிரீஸ் அதை திருப்பி கொடுக்க வேண்டியதில்லை.

ஐரோப்பாவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதா? கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அது, தீவிர தேசிய வாத சக்திகளின் எழுச்சிக்கு காரணமாக இருக்கிறது. இது என்ன வகையான மாற்றம்?

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றன. அதில் முதன்மை யானது பெரும் பொருளாதார நெருக்கடி. இதற்கு காரணம், ஐரோப்பிய யூனியனின் அதிகாரிகள், நேட்டோவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து செயல்படும் ஐரோப்பிய ராணுவ கமிஷன் மற்றும் பன்னாட்டு பெரும் வங்கிகள் - குறிப்பாக ஜெர்மானிய வங்கிகள். தங்களிடம் பெற்ற கடன்களையெல்லாம் கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டுமென்று இந்த வங்கிகள் அளிக்கும் நிர்ப்பந்தம், இதற்காக சமூகநலத் திட்டங்களையெல்லாம் ஒழித்துக் கட்டுவது என்ற நிலை. இதை ஐரோப்பிய மக்கள் எவரும் விரும்பவில்லை. மக்கள் நல அரசு என்பது, இந்த உலகின் நவீன சமூகத்திற்கு ஐரோப்பாஅளித்த மிகப்பெரிய பங்களிப்பாகும். ஆனால் பெரும் பணக்காரர்களும் அதிகார வர்க்கத்தினரும் மக்கள் நல அரசு என்ற கோட்பாட்டை ஒருபோதும் விரும்பவில்லை. எனவே அவர்களைப் பொறுத்தவரை மக்கள் நலத்திட்டங்களை ஒழிப்பது நல்லதுதான். இது இனவாத முகமாக அங்கு வெளிப்படு கிறது. ஐரோப்பா எப்போதுமே தீவிர இனவாதம் பேசும் பிரதேசமாகும். அமெரிக்காவை விடவும் ஐரோப்பாதான் இனவாதத்தை முன்வைப்பதில் முதன்மையானது என்பதே எனது கருத்து. இன்றைக்கு அது பகிரங்கமாக வெளியில் தெரியாது. ஏனென்றால், ஐரோப்பிய மக்கள் வரலாறு நெடுகிலும் மிகப்பெரும் இனப் படுகொலைகளை கண்டவர்கள். அந்த வேற்றுமையை மறந்து ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
கடைசிக் கேள்வி. இன்னும் உங்களுக்கு நம்பிக்கையளிப்பது எது?
இரண்டு விசயங்கள் நம்பிக்கையளிக்கின்றன. லத்தீன் அமெரிக்கா எனும் மிகப்பெரும் பிரதேசம் சுதந்திரமாக முடிவெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. லத்தீன் அமெரிக்கா நாடுகளின் உச்சி மாநாடு விரைவில் பனாமாவில் நடைபெற உள்ளது.சமீப காலமாக நடந்து வரும் இதுபோன்ற மாநாடுகளில் ஏகாதிபத்திய அமெரிக்கா முற்றிலும் தனிமைப் பட்டு போய்உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இது ஒரு மிகப்பெரிய மாற்றம். அதனால்தான் ஒபாமாவேறு வழியின்றி கியூபாவுடன் உறவை புதுப்பித்துக்கொள்ள முன்வந்திருக்கிறார். இதைச் செய்யாவிட் டால் இன்னும் தனிமைப்படுவோம் என்பதை அமெரிக்கா தற்போது உணர்ந்துள்ளது.கியூபாவை தனிமைப்படுத்த நீண்ட காலமாக முயற்சித்த அமெரிக்கா கடைசியில் தானே தனிமைப்பட்டு போனது.மற்றொரு நம்பிக்கை ஐரோப்பாவின் சிரிசா கூட்டமைப்பும் போடேமாஸ் இடதுசாரி இயக்கத்தினரும் ஆட்சிக்கு வந்திருப்பது. பன்னாட்டு பெரும் வங்கிகளின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்து கிளம்பியிருப்பது. உலகெங்கிலும் இது பரவவேண்டும் .பரவும்.

- தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி:தீக்கதிர்.
============================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?