நீதித்துறையின் ஒரு ப [வர்] க்கச் சார்பு?

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப் பது, பணக்காரர்களும் அதிகாரம் மிக்கவர்களும் ஊழலுக்காகவும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் ஒருபோதும் நீதியின் பிடியின் கீழ் கொண்டுவரப்பட மாட்டார்கள் என்ற இந்திய நீதித்துறை கட்டமைப்பைப் பற்றிய மறுக்க முடியாத உண்மையை மீண்டும் ஒரு முறை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

ஜெயலலிதாவும் அவரது மூன்று கூட்டாளிகளும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐசிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.100 கோடி அளவிற்கு அபராதமும் விதிக்கப்பட்டனர்.

ஆனால் இந்தத் தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி கொண்ட பெஞ்ச் ரத்து செய்துள்ளது. 
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட அதே நாளில், ஹைதராபாத்தில் ஒரு அமர்வு நீதிமன்றம், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் ராமலிங்க ராஜூவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது; 
அதுமட்டுமின்றி, அவர் மீதான தண்டனையை நிறுத்தியும் வைத்துள் ளது. மேற்படி ராமலிங்க ராஜூ, ரூ.7 ஆயிரம் கோடி நிதி மற்றும் கணக்கு மோசடி தொடர்பான வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.14 கோடி அபராதமும் விதிக்கப்பட்டவர்.

சந்தேகத்திற்கிடமான தீர்ப்பு
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன் றம் அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பின் விவரங்களுக்குள் செல்லத் தேவையில்லை; ஆனால், அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வித்தியாசமான சூழல் குறித்துப் பேசவேண்டியுள்ளது. இந்தவழக்கை நடத்தி வந்த சிறப்பு பொது வழக்கறி ஞர் உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்டார்;
 அவருக்கு பதிலாக புதிய சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 11ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்குப் பிறகு ஏப்ரல் 27ம் தேதி மேற்கண்ட புதிய சிறப்பு வழக்கறிஞரை உச்சநீதிமன்றம் நியமித்தது. 
அதற்குப் பிறகு புதிதாகஎந்த ஒரு விசாரணைக்கும் உத்தரவிடப்பட வில்லை; அந்தப் புதிய சிறப்பு வழக்கறிஞர் தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்வதற்கு ஒரே ஒருநாள் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த நிகழ்வே, இந்த வழக்கில் ஒட்டுமொத்த நீதித்துறை நடவடிக்கையையும் சந்தேகத்திற்கு உள்ளாக்குவதற்குப் போதுமானதாகும்.
விசாரணை நடப்பதே கடினமானதுதான்அரசாங்கப் பதவி வகிக்கும் எந்த ஒரு உயர் பொறுப்பில் உள்ள அரசியல்வாதியையும் ஊழலுக்காகவோ அவரது வருமானத்திற்கு பொருத்தமில்லாத வகையில் எந்தவிதத்தில் சொத்துக்களை குவித்திருந்தாலோ அவரைக் குற்றவாளியாக்கி சிறையில் அடைப்பது இயலாத காரியம் என்பதே உண்மையாக இருக்கிறது.
முதலில் இதுபோன்ற வழக்குகளில், ஒரு முறையான விசாரணையை உறுதிப்படுத்துவதே கடினமானதாகும்.
 கடந்த காலத்தில், இதுபோன்ற சொத்துக்குவிப்பு வழக்குகளில் விசாரணை நடவடிக்கைகள் என்பவை மத்தியக் குற்றப்புலனாய்வு கழகத்தால் (சிபிஐ) எப்படி ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டன என்பதைப் பார்த்திருக்கிறோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திலும் இதைக் கண்டோம். 
முலாயம் சிங் யாதவும் மாயாவதியும் இதுபோன்ற வழக்குகளில் விசாரிக்கப்பட்டனர்; 
இந்த விசாரணையில் அரசாங்கத்தின் நிர்ப்பந்தம் அளித்ததையும் பின்னர் தளர்த்தியதையும் பார்த்தோம்.லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர் ஜாமீன் பெற்று விட்டார்.
இதுபோன்ற வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில்தான் - அதாவது ஹரியானா முன்னாள்முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா மட்டும்தான் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். 
ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்றதற்காக அவருக்கும்அவரது மகனுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பணக்காரர்கள் ஜாமீன் பெறுவது எளிது
இன்னும் சொல்லப்போனால், கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்றபோதிலும் கூட பணக்காரர்களும் அதிகாரமிக்கவர்களும் ஜாமீன் பெறுவது மிகவும் எளிதாக இருக்கிறது. 
திரைப்படக் கலைஞர் சல்மான் கான், கண்மூடித்தனமாக காரை ஓட்டி மும்பை வீதி ஓரத்தில் படுத்திருந்த ஏழைகளின் மீது காரை ஏற்றியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 
இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்பட்ட அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து அவர் ஜாமீன் பெற முடிந்தது. 
அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் ஒரு நாள் கூட சிறைக்குச் செல்லவில்லை.
உயர்நீதிமன்றமானது அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்து, மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 
இதுதொடர்பாக குறிப்பிடுகிற தலைசிறந்த வழக்கறிஞரான ராஜீவ் தவாண், “ஜாமீன் வழங்குவது தொடர்பாக முடிவெடுப்பதில் நமது நீதித்துறையில் தெளிவான கோட்பாடுகள் இல்லை-குறிப்பாக தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு களில் அவர்கள் ஏழைகளாக இருந்தால் அந்த வழக்குகளில் நீதிபதிகள், சம்பந்தப்பட்ட குற்றத்தை குறிப்பிட்டு அந்த நபர்களுக்கு எதிராக தன்னிச்சையான முறையில் முற்றிலும் கடுமையா கவே நடந்து கொள்கிறார்கள்” என்கிறார்.

சிறையில் வாடும் ஏழைகள்

சல்மான் கான் ஜாமீன் பெற்ற வேகத்தைப் பார்க்கும் போது, பல்லாண்டு காலமாக வழக்கு முடிவுக்கு வராமல் விசாரணைக் கைதிகளாகவே நமது நாட்டின் சிறைகளில் 2.8 லட்சம் பேர் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமது நினைவுக்கு வருகிறது. இவர்களில் 40 சதவீதம் விசாரணைக் கைதிகள் (1.1 லட்சம் பேர்)ஜாமீன் பெறு
வதற்காக 6 மாதத்திற்கும் மேலாகபோராடிக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
இந்த விசாரணைக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் ஏழைகள்; சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் பலரும், அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்குரிய அதிகபட்ச தண்டனைக் காலத்தையும் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் ஏற்கெனவே கழித்துவிட்டார் கள் என்பதுதான் வேதனையானது. இது எந்தவிதத்திலும் ஏற்க முடியாத, நீதியற்ற நடைமுறை ஆகும்.
அதனால்தான் கடந்த ஆண்டுஉச்சநீதிமன்றமே தலையிட்டு, நாடு முழுவதும்உள்ள சிறைகளில் விசாரணைக் கைதிகளாகஇருப்பவர்களில், அவர்கள் மீது சாட்டப்பட் டுள்ள குற்றத்திற்கு அதிகபட்சம் என்ன தண்டனை விதிக்கப்படுமோ அந்த தண்டனை காலத்தில் சரிபாதியை சிறையில் கழித்திருந்தாலே அவர்களை மேற்கொண்டு விசாரிக்காமல் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.
பணக்கார வர்க்கத்தின் வழக்கறிஞர்கள்

பணக்காரர்களும் அதிகாரமிக்கவர்களும் தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள சட்டம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். வழக்கு உரைக்கும் 
தொழிலில் மிகச்சிறந்தவர்களாக இருக்கக் கூடிய - மிக மிக அதிகம் கட்டணம் வசூலிக்கக் கூடிய வழக்கறிஞர்கள் சமூகத்தின் இந்த பணக்கார வர்க்கத்திற்கு ஆதரவாக ஆஜராகிறார்கள். 
உச்சநீதிமன்றத்தில் இந்த சட்ட வல்லுநர்கள் ஒருமுறை ஆஜராவதற்கே ரூ.25 லட்சத்திற்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

நீதி தேவதையும் நீதியும்
நீதி என்பது எப்போதுமே நீதி தேவதையின் உருவத்திலேயே காட்டப்படுகிறது; அந்த நீதி தேவதை கண்களைக் கட்டியவாறு, கைகளில் நீதித்தராசை ஏந்தியவாறு காணப்படுகிறாள். 
கண்களைக் கட்டியிருப்பது எதற்காக என்றால், நீதி என்பது புறநிலை சார்ந்தது- அதாவது முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டது - எந்தவிதமான பாரபட்சமும் இல்லாதது என்பதை குறிப்பதாகும்.
 ஆனால் உண்மையில், நீதி என்பது வர்க்கங்களைப் பொறுத்தவரை கண்ணை மூடிக் கொண்டு இருக்கவில்லை.
நடைபாதையில் படுத்துறங்க வேண்டிய அவலத்தில் இருக்கும் மனிதர்கள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கியதில் உடனடியாக செயல்பட்டநீதிமன்றம், அதே நடைபாதையில் வசிக்கிற ஒரு நபர் சிறு திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுவிட்டால், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதியாக மட்டுமே வைக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர் மீதான குற்றத்தை உறுதி செய்யப்பட முடியாவிட்டாலும் கூட, அவரை ஜாமீனில் விடுவதற்கு ஒருபோதும் பரிசீலிப்பது இல்லை.

முதலாளித்துவத்தில், இது குற்றமல்ல!
முதலாளித்துவ அமைப்பு முறையைப் பொறுத்தவரை, சட்டவிரோதமான வழிகளில் ஒரு தொழிலதிபரோ, 
அல்லது ஒரு அரசியல் வாதியோ, அல்லது ஒரு உயர் அதிகாரியோ, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பது என்பது ஒரு குற்றம் அல்ல என்பதே இன்றைக்கும் உறுத்திக் கொண்டிருக்கக்கூடிய உண்மையாக இருக்கிறது. இது நமது அரசியல் அமைப்பு முறையில் எதிரொலிக்கிறது; நீதித்துறையிலும் செல்வாக்கு செலுத்துகிறது.
     -பிரகாஷ் காரத்,                                                      தமிழில் ;எஸ்.பி.ராஜேந்திரன்
======================================================================
‘சட்டமும் நீதித்துறையும் சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்கின்றன’
பல்லாண்டுகளுக்கு முன்பே நீதித்துறையில் வர்க்கச் சார்பு இருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் சுட்டிக்காட்டினார். 
1967ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது இ.எம்.எஸ்., “மிடுக்கான உடை அணிந்த, பானை வயிறு கொண்ட பணக்கார மனிதருக்கும், பக்கிரிபோல் உடையணிந்த, படிக்காத, ஒரு ஏழை மனிதனுக்கும் இடையே ஒரு வழக்கில் ஆதாரங்கள் சரி சமமாக நிற்கும் போது நீதிபதியானவர் அந்தப் பணக்கார மனிதருக்குஆதரவாகவே தீர்ப்பினை எழுதுவார்” என்று குறிப்பிட்டார். 
மேலும், “நீதித்துறை என்பது தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும், உழைக்கும் வர்க்கங்களின் இதர பிரிவினருக்கும் எதிராகவே நிறுத்தப்பட்டுள்ளது” என்றும் இ.எம்.எஸ். குறிப்பிட்டார்.
“சட்டமும் நீதித்துறை எனும் கட்டமைப்பும் அடிப்படையில் சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்கிறது” என்றும் இ.எம்.எஸ். கூறினார். நீதித்துறை கட்டமைப்பு பற்றிய இந்த உண்மையைக் கூறியதற்காக கேரள உயர்நீதிமன்றம் தோழர் இ.எம்.எஸ். மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.அவருக்கு ரூ.1000 அபராதமும் விதித்தது. 
அபராதம் மட்டுமின்றி ஒரு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
தோழர் இ.எம்.எஸ். அவர்களுக்காக வி.கே.கிருஷ்ணமேனன் ஆஜராகி வாதாடினார்.
அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயத்துல்லா தலைமையிலான பெஞ்ச், கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையே உறுதி செய்தது; ஆனால், அபராதத்தொகையை ரூ.50 ஆகக் குறைத்தது; 
ஒரு வார காலம் சிறைத்தண்டனை என்றும் உத்தரவிட்டது. அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த பிரபல வழக்கு, நீதித்துறையின் உயர்மன்றங்கள் அவற்றின் வர்க்க இயல்பைப் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றன என்பதை பளிச்செனக் காட்டியது.
இந்த வழக்கில் பல நீதிமான்களும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை விமர்சித்தனர். 
இ.எம்.எஸ். முன்வைத்த விமர்சனத்தில் நீதிபதிகள் மீதான காழ்ப்புணர்ச்சியோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட நீதிபதி மீதான தனிப்பட்ட விமர்சனமோ அல்லது ஒரு குறிப்பிட்ட தீர்ப்பு குறித்த குற்றச்சாட்டோ இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கில், இன்னும் சொல்லப்போனால் சுதந்திரமாக கருத்துச் சொல்லும் உரிமை என்பது பறிக்கப்பட்டதாகவே விமர்சனம் எழுந்தது. 
பணக்காரர்களும் அதிகாரமிக்கவர்களும் நீதியின் மாமன்றங்களில் தங்களுக்கான வழிகளை தேடிப்பெற்றுக் கொள்ள முடிகிறது என்பதை நாம்பார்க்கிறபோது, அன்றைக்கு தோழர் இ.எம்.எஸ். நீதித்துறை கட்டமைப்பு குறித்து குறிப்பிட்ட அம்சங்களை இப்போது நினைவுகூர வேண்டிய தேவை உள்ளது.
                                                                                               -பிரகாஷ் காரத்  
=======================================================================
பார் கவுன்சில்.யார் கவுன்சில்?

ஒரு விடயம் மட்டுமே புரியவில்லை.

இந்த சட்ட,நீதித்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் ஜெயலலிதா என்றால் ஒரு சார்பு நிலையுடன் நடந்து கொள்வது ஏன்?எப்படி?எதற்கு?
மைக்கேல் டி குன்கா  சொத்து குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை வழங்கியதும் அதிமுகவினர் நீதிபதியை போட்டு தாக்கியது எவ்வளவு நாற்றத்தை இந்தியா முழுக்க பரப்பியது.
கழுதை ,பன்றி,நாய் போன்ற உருவங்களில் குன்கா படத்தைப் போட்டு தமிழகம் எங்கும் கட் அவுட்களை வைத்தார்களே .அப்போதெல்லாம் இந்த பார் கவுன்சில் எங்கே போய் கவுந்து கிடந்தது.
ஒட்டு மொத்தமாக கோட நாடு இன்ப சுற்றுலா போய் விட்டார்களா?தமிழகத்தில்  நடந்தது ஒன்றுமே தெரிய வாய்ப்பிலாமல் போய் விட்டதா?
நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சோம்பு சங்கம் உண்ணாவிரதம் இருந்ததை தொலைக்காட்சியில் பார்க்கவில்லையா.அங்கு குன்காவை கழுவி ஊற்றியதை கேட்கவில்லையா?
இப்போது மட்டும் உணர்ச்சி பீறிட்டு வரக் காரணம் என்ன?
 ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமியை விமர்சனம் செய்தால் அவதூறு வழக்கு பாயும் என்று தமிழ்நாடு பார்கவுன்சில் எச்சரித்துள்ளது.
 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
"அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யக்கூடாது.
ஒரு நீதிபதி பிறப்பிக்கும் தீர்ப்பில் குறைபாடுகள் இருந்தால், உள்நோக்கம் இல்லாமல் அந்த தீர்ப்பை விமர்சனம் செய்வதில் தவறில்லை.ஆனால், அரசியல் காரணங்களுக்காக தீர்ப்பு மீது மட்டுமில்லாமல், நீதிபதி குமாரசாமியையும் கடுமையாக விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல. தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, குமாரசாமி இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளார் என ஒருமையில் பேசுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி வகிக்கும் ஒரு நீதிபதியை ஒருமையில் குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல.
கட்சித் தலைவர்கள் தங்களது அரசியல் நாடகத்தை, நீதித்துறை நடவடிக்கையின் வாயிலாக அரங்கேற்றம் செய்யக்கூடாது. இனிமேல் நீதிபதி குமாரசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்" 
என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வழங்கியதும் ஒரு நீதிபதிதானே.
அதுவும் நேர்மையான நீதிபதி.
அவரை கண்டித்து தீர்மானங்கள்,பதாகைகள் வைத்தால் பரவாயில்லையா?
அதுதான் நேர்மைக்கு ,சட்டத்துக்கு தரும் மரியாதையா?
ஒட்டு மொத்த உலகமே சிரித்து கிண்டலடிக்கும்  தீர்ப்பை வழங்கியவருக்கு
 பாதுகாப்பா?அதுதான் பார்கவுன்சில் ஆற்றும் பணியா?இந்த திடீர் மீசை துடிப்புக்கு காரணம் என்ன கட்சி அபிமானமா?வேறு ஏதாவதா?சம்பந்தப்பட்ட நீதிபதியே தனது தவறை எண்ணி பதில் தர முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்.
இதில் வக்கீல்கள் சங்கம் மீசையை முறுக்குவது ஏன் ?
மைக்கேல் டி குன்கா வை அவமரியாதை செய்தவர்களில் எத்தனை பேர்களின் மீது இந்த பார்கவுன்சில் வழக்கு தொடர்ந்துள்ளது?
பட்டியலை வெளியிடுமா?
சொல்லப் போனால் நேர்மையாக தீர்ப்பு வழங்கிய குன்காவை அதிமுகவினர் ஊர் தோறும் அசிங்கப்படுத்தியத்தை விட குளறுபடியான தீர்ப்பை வழங்கிய குமாரசாமியை நாகரிகமாகத்தான் தாக்கி அறிக்கைகள் வருகிறது.நாய்,குரங்கு,பன்றி தொர்றாங்க்கள் அவருக்கு குன்காவை போல் தரப்படவில்லை. இதற்கே பார் கவுன்சில் மீசை துடிப்பது ஏன் ?
பார்கவுன்சில் வக்கீல்களுக்க்கான சங்கம்,நீதிபதிகள்சங்கமே இதுவரை ஒன்றும் சொல்லவில்லை.
என்னவோ நீதித்துறையில் சமீப காலங்களில் நடந்து வருபவை மக்களுக்கு அதிருப்தியை தந்துவருகிறது.
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா ?இது ஜெயலலிதா கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் படப்பாடல்தாங்க.
நமது எம்ஜிஆருக்கு

திருவோடு பெருமைக்குரியதே!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது எம்ஜிஆர்’ 13.05.2015 புதனன்று 136 பக்கங்களுடன் ரூ.3 விலையில் வெளியாகியுள்ளது. 
பத்திரிகை உலகில் இது ஒரு சாதனைதான். 
அதிமுகவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ‘வாரிய’த் தலைவர்கள் என பலரும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வெற்றிபெற்றதை வாழ்த்தி, வணங்கி விளம்பரம் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு விளம்பரத்திலும் வசனமழை பொழிகிறது. பெரும்பாலான விளம்பரங்களில் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்‘ என்ற மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபத வரிகள் இடம்பெற்றுள்ளன. பிற்காலத்தில் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய கவிதை வரிகள் பயன்படுத்தப்படும் என்று தெரிந்திருந்தால் பாரதி இந்த வரியை எழுதியிருக்கவே மாட்டார்.
விளம்பரம் கிடைக்காத சில பக்கங்களில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து சொல்லியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வசைமாரி பொழியப்பட்டுள்ளது. 
ஒரு பெட்டிச் செய்தியின் தலைப்பு ‘மாண்புமிகு நீதித்துறை மீது மனநோயாளிகள் பாய்ச்சல்’ என்பது. 
விசார ணை நீதிமன்ற நீதிபதி மைக்கேல்  டி குன்ஹா அதிமுகவினரின் கைகளில் மாட்டிக்கொண்டு என்ன பாடுபட்டார் என்பதை மறந்து விடுவதற்கில்லை. 
அப்போதெல்லாம் மாண்புமிகு நீதித்துறையை விமர்சித்தவர்களுக்கு என்ன வியாதி என்பதை நமது எம்ஜிஆர்தான் கூற வேண்டும்.

காவிரி பிரச்சனையில் ஜெயலலிதா துணிச்சலாக போராடியதால்தான் கர்நாடகம் பழிவாங்கிவிட்டது என்ற அளவுக்கு அதிமுகவினர் சென்றனர். சில போஸ்டர்களில் ‘காவிரியை நீயே வச்சுக்கோ, அம்மாவை திருப்பித் தா’ என்று ஒரு குழந்தை அழுவது போல போட்டிருந்தார்கள்.
 இப்போதும் கர்நாடகத்திலிருந்துதான் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. காவிரி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கடவுளை மனிதன் தண்டிப்பதா? என்று கூட அதிமுகவினர் கேட்டனர்.
இப்போது கடவுள் யார், மனிதன் யார்? 
என்று குழப்பமாக இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து `மேல்முறையீட்டுக்கு ஏற்பாடு செய்யணும்‘ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதுபோலவும் அதற்கு ஒருவர் ‘அதெல்லாம் இருக்கட்டும், நீங்க மொதல்ல திருவோட்டுக்கு ஏற்பாடு செய்யுங்க... அடுத்த தேர்தலுக்கு பிச்சை எடுக்கணும்ல...’ என்று கூறுவதுபோல அந்தக் கேலிச்சித்திரம் அமைந்துள்ளது. தனக்குத் தேவையென்றால் தோழமைக் கட்சிகள் என்று கொஞ்சுவதும், தேவையில்லை என்றால் இவ்வாறு பேசுவது என்பதும் அதிமுகவுக்கு கைவந்த கலை.
 பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா உட்பட அதிமுகவினர் தோல்வியடைந்து சுருண்டு கிடந்த வேளையில், எத்தனை தலைவர்களின் வீடுகளில் அதிமுகவினர் ஏறி இறங்கினார்கள் என்பது தமிழகம் அறிந்த செய்தி. 
அது ஒருபுறமிருக்கட்டும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையைத் தொடர்ந்து அதிமுகவினர் அடித்த கூத்துக்கள் இன்னும் நூறாண்டு காலத்திற்கு சிரிப்பை வரவழைக்கும். மொட்டை அடிப்பது துவங்கி, மண் சோறு சாப்பிடுவது வரை, திருவிளக்கு பூஜை முதல், சத்ரு சம்ஹார யாகம் வரை நடத்தினார்கள். 
கோயில்களை சுற்றுவதே அமைச்சர்களின் பிரதான தொழிலாயிற்று. ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் என்ன ரேட் என்று தீர்மானிக்கப்பட்டது. நாக்கில் வேல் குத்தினால் எவ்வளவு, வாயைச் சேர்த்து வைத்துக் குத்தினால் எவ்வளவு என்று சம்பளம் தீர்மானிக்கப்பட்டது. 
சில அமைச்சர்களே கோயில்களில் உருண்டு புரண்டனர். 
நீதியையும் சட்டத்தையும் நம்பாமல் இப்படி கோயில் கோயிலாக அலைந்தனர்.அவர்களுடன் அரசு அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர்களும் அலைந்தது எவ்வளவு வேடிக்கை.கட்சியே ஆட்சியாகி போனதோ?
இருந்தாலும் ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ என்ற நடுக்கத்திலேயே இருந்தனர். 
கடைசியில் கும்பிட்ட சாமி கைகொடுத்ததோ இல்லையோ, கொடுத்த சாமி கைகொடுத்துவிட்டதாக குதூகலிக்கின்றனர். “கொடுக்குற சாமி கூரையை பிச்சுக்கிட்டு குடுக்கும்” என்ற பழமொழி மாறி கோர்ட்டை பிச்சுக்கிட்டும் கொடுக்கும் என்று இப்போது சிலர் பேசுகிறார்கள். 
தீர்ப்பை விமர்சிப்பவர்களையெல்லாம் வசைமாரி பொழிகிறார்கள் அதிமுகவினர். 
ஆனால் கூட்டல் கணக்கில் நீதிபதி குமாரசாமி பெரிய ஓட்டை விட்டிருப்பது தெரியவந்ததும் அவரே கூட்டல் கணக்கை சரி செய்வதாக அறிவித்திருக்கிறார். கணக்கு சரியானால் சரி. மேற்குவங்கம், கேரள மாநிலங்களில் நீண்டகாலம் ஆட்சி செய்த பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அணிக்கு உண்டு. 
திரிபுராவில் இப்போதும் கட்சி தலைமையிலான இடதுமுன்னணிதான் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது.
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நிருபன் சக்ரவர்த்தி, தசரத் தேவ், இ.கே.நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகிய கம்யூனிஸ்ட்டுகள் முதல்வர்களாக இருந்துள்ளனர். தற்போது திரிபுரா முதல்வராக மாணிக் சர்க்கார் இந்தியாவின் ஏழை முதல்வர் என்று பத்திரிகைகளால் பாராட்டப்படுகிறார்.
இவர்களில் யாரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியதும் இல்லை, சிறை சென்றதும் இல்லை. இதுதான் உண்மையான பெருமை.விடுதலைப்போராட்ட காலத்தில் துவங்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னமும் திருவோட்டோடுதான் இருக்கிறது என்பது கம்பீரமான உண்மை. ஊரார் சொத்தை ஆட்டையைப் போடுவதுதான் அவமானத்துக்குரியது.
- மதுரை சொக்கன்.
======================================
இன்று,
  • மே 15.
  • உலக குடும்ப தினம்

  • பராகுவே விடுதலை தினம்(1811)

  • மெக்சிகோ, தென்கொரியா ஆசிரியர் தினம்

  • டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)

  • மாஸ்கோவில் சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது(1935)

========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?