வெள்ளி, 8 மே, 2015

சத்தமில்லாமல் நடைபெறும்

 சமூக நலத்துறை ஊழல்கள்.

  •  மகள் திருமணத்துக்கு தாய் தாலி அடமானம் 
  • குழந்தை பிறந்தபின் திருமண உதவி
  • ஆண் குழந்தைக்கு ரூ.10 லட்சம் 
  • கலப்பு திருமணத்திலும் கமிஷன்.
தமிழக பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த நிதிகள் எல்லாம் கீழ் தட்டு மக்களுக்கு உரிய நேரத்தில் போய் சேர்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி. அதிகளவு பணம் புழங்கும் துறைகளில் சமூக நலத்துறையும் ஒன்று. நிதி உதவி அளிப்பது ஒன்றே இத்துறையின் முக்கிய பணி என்பதால், ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 
2015-2016ம் ஆண்டுக்கு மட்டும் சுமார் 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதில் தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்துக்கு  மட்டும் 204 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மற்ற திருமண திட்டங்களுக்கு ரூ.499 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
சத்துணவு திட்டமும் சமூக நலத்துறையின் கீழ்தான் வருகிறது. 
ராணுவத்தில் ஊழல் செய்தால், அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து.
 சுகாதாரத் துறையில் ஊழல் செய்தால் அது, மனிதனின் உயிருக்கு ஆபத்து. சமூக நலத்துறையில் ஊழல் செய்தால் அது ஒவ்வொரு குடும்பத்துக்குள் புகுந்து விவாகரத்து, தற்கொலை, கடனாளியாக மாற்றுவது, நோயாளியாக உருவாக்குவது என்று மிக பெரும் ஆபத்தை உருவாக்கிவிடும். 
ஆனால், சமூக நலத்துறையால் நடவடிக்கையால் உரிய நேரத்தில் பணம் கிடைக்காத பல பெற்றோர் கடனாளியாக, ஊரைவிட்டும், தற்கொலை செய்யும் முடிவுக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்கின்றனர் .

முட்டையில் 100 கோடி ஊழல்: 

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு வாரம் 5முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. 
கடந்தாண்டு கணக்குப்படி இத்திட்டத்தில் 42,619 மையங்களில் 54.62 லட்சம் மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிடும் திட்டத்தில் பயனடைகின்றனர். இதற்காக வாரம் தோறும் 3.50 கோடி முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. 
கடந்த 2013க்கு முன்பு வரை மாவட்ட அளவில் டெண்டர் விடப்பட்டு மு்ட்டை சப்ளை செய்யப்பட்டது. 
ஆனால் இதில் கடந்த விதிமுறை மாற்றப்பட்டு மாநில அளவில் ஒரே டெண்டராக விடப்பட்டது. மேலும் முட்டை விலையில் அவ்வப்போது ஏற்படும் விைல மாற்றங்களுக்கு ஏற்ப கொள்முதல் செய்யும் நிலை மாறி ஆண்டு முழுவதும் ஒரே விலை நீிர்ணயிக்கப்பட்டது. 
இதில் மட்டும் சுமார் ரூ.100 கோடி வரை மெகா ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 எனவே முட்டை கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதால் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தான் முட்டை சப்ளை செய்வதற்கு அரசு தரப்பில் ஒ்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
அந்நிறுவனம் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களிடம் இருந்து முட்டை வாங்கி, அரசுக்கு சப்ளை செய்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு மார்ச் முதல் 2015 மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலத்துக்கு, ஒரு முட்டை ரூ.4.51 என்ற விலைக்கு தனியார் நிறுவனத்திடம் இருந்து அரசு கொள்முதல் செய்துள்ளது. 
ஆனால் இந்த காலத்தில் வெளி சந்தையி லும், பண்ணையிலும் 
ரூ 3.50 க்கும்  குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது.மொத்த கொள்முதல் என்றால் இன்னும் விலை குறையும்.ஆனால் அரசு வெளியே விற்கும் விலையை விட அதிக விலைக்கு வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது.
முன்பு திமுக ஆட்சியில் அந்தந்த மாவட்ட நிர்வாகமே முட்டை கொள் முதல் செய்து வந்தது .அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு குத்தகை கொடுக்கப்பட்டு அவர்களிடம் மட்டுமே அதிக விலைக்கு முட்டை வாங்க வற்புறுத்தப்ப்டுகிறார்கள்.இதில் பல கோடி அரசுக்கு நட்டம்.ஆனால் சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்த மட்டும் அரசிடம் நிதி இல்லாமல் போ ய் விட்டது.
 நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.இ.சி.சி) என்ற அமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. கடந்த மார்ச் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை என்.இ.சி.சி நிர்ணயம் செய்த அதிகபட்ச முட்டை விலையே 365 காசு தான். ஆனால் சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்ய வேண்டிய முட்டையை 1 ரூபாய் வரை கூடுதலாக கொடுத்து, அரசு கொள்முதல் செய்துள்ளது. 
ஆண்டுக்கு சுமார் 100 கோடி முட்டை சத்துணவுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் 45 கிராம் முட்டைக்கு, தனியார் நிறுவனத்தினர் கோழிப்பண்ணையாளர்களிடம் வாங்கும் போது, என்.இ.சி.சியின் விலையைவிட 30 காசு குறைத்து தான் வாங்குகின்றனர். இதன் மூலம் சத்துணவு முட்டை அதிகபட்சம் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் ரூ.2.75 வரையே வாங்கப்பட்டுள்ளது. 
தனியார் நிறுவனத்திடம் அதிக விலை கொடுத்து முட்டை டெண்டர் கொடுத்து கொள்முதல் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

தாலிக்கு வழங்கும் தங்கத்தில் முறைகேடு: 

தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும், திருமண உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஒன்று. 
இதில், ஏழை பெண்களுக்கு திருமணத்துக்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் வழங்க வேண்டும். இதற்காக கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு பட்ஜெட்டில் 204 கோடி ரூபாய் ஒதுக்கி வருகிறது.
 இதில் பல கோடி ரூபாய் மோசடி நடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
அதாவது, தங்கம் குறைவாக விற்கப்படும் காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் அதிகளவு தங்கம் வாங்கப்படுகிறது. 
ஆனால், அந்த தங்கத்தை உரிய காலத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. தங்கத்தின் விலை அதிகம் உள்ளபோது தங்கம் வாங்கியதாக கணக்கு காட்டப்படுகிறது. 
இதனால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட தங்கத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டுகின்றனர்.
 இதன் மூலம் ஆண்டுக்கு சில கோடிகள் தாலிக்கு தங்கம் மூலம் முறைகேடு நடக்கிறது. 
மேலும், துறையின் அமைச்சர் சொல்லும் கடையில்தான் தாலிக்கு தங்கம் வாங்க வேண்டும்.
 வேறு கடைகளில் வாங்கி பயனாளிகளுக்கு தரக் கூடாது. 
அதிலும் மேலிடத்துக்கு பல கோடிகள் செல்கிறது. 
இதுபோன்ற காரணங்களால்தான் தாலிக்கு தங்கம் திட்டத்தில் மோசடி நடக்கிறது. 

5 ஆயிரம், 10 ஆயிரம் லஞ்சம்:

 பட்டம் மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50 ஆயிரம் ரூபாய், பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
இதற்காக, திருமணத்திற்கு, 40 நாட்களுக்கு முன்பாக, மாவட்ட சமூக நல அலுவலகத்தில், விண்ணப்பிக்க வேண்டும். குடியிருப்பு முகவரி, வயது, கல்வித்தகுதி, குடும்ப ஆண்டு வருமானம், திருமணம் நடக்கவுள்ளதற்கான பத்திரிகை, கிராம நிர்வாக அலுவலர் சான்று போன்றவற்றுடன் விண்ணப்பித்தால், திருமண செலவுக்கு உதவும் வகையில் உதவித்தொகையும், நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. 
ஆனால், 50 ஆயிரம் நிதி உதவிக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும். இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது தாமதம் செய்யப்படும். 25 ஆயிரம் நிதிக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும். 
இந்த பணம் எல்லாம் மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் உள்ள அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் செல்றது என்கின்றனர் பணம் கொடுத்து நொந்து போன பொதுமக்கள்.

ஓய்வூதியம் வழங்க ஆயிரம் லஞ்சம்: சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உழைக்க முடியாத நிலையில் உள்ள முதியோர், ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும், மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
அதன்படி 35.39 லட்சம் பேர் பயனடைகின்றனர். 
இதற்காக ஆண்டுக்கு ரூ.4,300 கோடி செலவிடப்படுகிறது.
 இதனால், செலவை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு தத்தளித்து. 
இதனை தொடர்ந்து உதவித்தொகை பெற்று வந்தவர்கள் குறித்து மறு ஆய்வு செய்ய 
கடந்த ஆண்டு தமிழக அரசு திடீரென உத்தரவிட்டது. 
அதன் படி 5 லட்சம் பேர் வரை உதவித்தொகை பெற்று வந்தவர்களை ரத்து செய்தது. இதன் பின்னரும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. உதவித் தொகை கிடைக்க வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும். இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதேபோல கலப்பு திருமணம் செய்தால் பணம், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். அதற்குக்கூட லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் சான்றிதழ் கொடுக்கும் அவலநிலை உள்ளது.

முதியவர் தற்கொலை: 

கடந்த இரண்டு வருடங்களாக முதியார் உதவித்தொகை 2 மாதத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேலாகவும் உதவி தொகை் வழங்காமல் இழுத்தடிககப்பட்டு வருகிறது.
 இந்த பிரச்னை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் வறுமையின் பிடியில் சிக்கி தவித்த முதியோர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: 

பெண் கல்வியை ஊக்குவிக்கவும், பெண்சிசு கொலையை தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 
இத்திட்டத்தின் படி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 
அதன்படி ஒரு பெண் குழந்தை உள்ள பயனாளி குடும்பங்களில், குழந்தையின் பெயரில், 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பயனாளி குடும்பங்களில், குழந்தைகளின் பெயரில், தலா, 25 ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்யப்படுகிறது. 
குழந்தைகள் மீதான முதலீட்டு தொகை, 20 ஆண்டுகளுக்கு பின், முதிர்ச்சி அடையும்போது, பயனாளிக்கு ரொக்கமாக வழங்கப்படுகிறது.
 இது தவிர, திட்டத்தில் சேர்ந்த, ஐந்து ஆண்டுகளுக்கு பின், ஊக்கத்தொகையாக, மாதம், 150 ரூபாய் வழங்கப்படும் இத்தொகை, அக்குழந்தையின் கல்விக்கு பயன்படும் வகையில், 18 வயது முடிந்தவுடன், முதிர்வு தொகையாக, மூன்று மடங்கு அளவில் உயர்ந்து, பயனடையும் வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 தற்போது அந்த பணத்தை பெறுவதற்கு  பெண்களுக்கு திருமணம் நடந்து விடுகிறது. 
பெற்றோருக்கு அவர்கள் அணிந்து இருக்கும் செருப்பு தேய்ந்துவிடுகிறது. 

காலாவதி சத்துமாவு மாத்திரைகள்: 

இந்த திட்டத்தில் சத்துமாவு, சத்து உருண்டை மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 
இவை எல்லாம் மொத்தமாக வாங்கப்பட்டு மையம் தோறும் விநியோகம் செய்யப்படுகிறது. 
அவரை குறிப்பிட்ட மையத்துக்கு வரும்போது காலாவதியான நிலை அல்லது குறுகிய காலத்தில் காலாவதியாகும் நிலையில்தான் வந்து சேர்கிறது. எனவே, இவற்றை யாரும் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இந்த சத்துமாவு வாங்குவதிலும் 10 முதல் 15 கமிஷன் கொடுப்பதால், தரமற்ற பொருட்களையே வா்ங்குகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முடங்கிய திருநங்கைகள் நல வாரியம்: 

தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். 
இவர்களின் மேம்பாட்டுக்காக கடந்த 2008ல் திமுக ஆட்சிகாலத்தில் திருநங்கைகள் நல வாரியம் உருவாக்கப்பட்டது. 
இந்த வாரியத்தின் மூலம் மாற்று பாலின அறுவை சிகிச்சை மற்றும் அடையாள அட்டை வழங்குதல், திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், திறன் வளர்க்கும் பயிற்சிகள் மற்றும் உரிய வேலைவாய்ப்பு ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
 ஆனால், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  திமுக ஆரம்பித்த காரணத்தால் இந்த நல வாரியம் முடக்கப்பட்டு விட்டது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று,

மே -08.
  • உலக செஞ்சிலுவை தினம்
  • தென்கொரியா பெற்றோர் தினம்
  • செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த தினம்(1828)
  • ஜான் பெம்பர்ட்டன், கொக்ககோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை கண்டுபிடித்தார்(1886)


==============================================
திருக்குறளும்

பகவத் கீதையும், 


                                                                                                                          - மீனாட்சி சுந்தரம்.

நாடாளுமன்ற தேர்தல் முறையில் இருக்கும் குறைபாட்டால் ஆட்சியை பிடித்த இந்துத்வாவாதிகள் ஆரண்ய காண்ட பழமையை நடப்பிற்கு கொண்டுவர முனைப்பு காட்டுவதால் வட புல குல வாழ்க்கை கட்டத்து சமூக ஆவணமாக இருக்கும் கீதை இன்று அரசியல் முக்கியத்துவம் பெற்றுவிட்டது, பாஜக அரியணை ஏறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, நவீன அறநெறிச் சாரமாக பகவத் கீதையை பயன்படுத்த அறிவியலையும் கீதையையும் இணைத்து ராமகிருஷ்ண மட துறவிகள் உயர்கல்வி வளாக மாணவர்களுக்கு புகட்டிவிடத் தொடங்கிவிட்டனர்.
பகவத் கீதையின் வினோதம் என்னவெனில் பிரிட்டன் நாட்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற காலனியவாதிகளுக்கு 18ம்நூற்றாண்டில் வழிகாட்டிய தர்ம நூலாக இருந்தது என்பதுவும் 20ம் நூற்றாண்டில் விடுதலைக்கு போராடிய திலகர், காந்தி, நேரு போன்ற தலைவர்களுக்கு மனச்சாட்சியாகவும் ஆனது என்பதுதான். 
1785ம் ஆண்டிலேயே சார்லஸ் வில்கின்ஸ் கல்கத்தாவிலிருந்த ஈஸ்ட் இந்தியா கம்பெனி அரசு உதவியுடன் பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
அடிமை புத்தியை பேண கீதை பயன்படும் என்று காலனியவாதிகள் அன்று கருதினர். இந்தியாவை வசப்படுத்த துடித்த பிரெஞ்சு மற்றும் ஜெர்மனிய வர்த்தகர்களும் பகவத்கீதையை அடுத்த சில ஆண்டுகளிலேயே மொழிபெயர்த்து வெளியிட்டுவிட்டனர். 
ஏன் தற்காப்பிற்காக போரிட அவசியப்பட்ட ஆதி கால குல வாழ்க்கையை பிரதிபலிக்கும் கீதையை பழமையாக பார்க்காமல் அறிவியல் சாயம் பூசுகின்றனர்?பணத்தை குவிக்கும் வினைகளை நியாயப்படுத்த ஒரு அறநூலாக பகவத்கீதை பயன்படும் என்று கருதுகின்றனர். 
தற்சமயத்தில் இந்திய சந்தையை பங்கு மூலதன நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்ற இந்துத்வா அரசியல்வாதிகள் வேகம் காட்டுகின்றனர்.
கீதையின் சாரத்தை அதாவது வர்ணாஸ்ரம தர்மத்தை நவீன முறையில் புகுத்த வழிகாட்டும் அறிவாளிகளுக்கு கொழுத்த சம்பளம்.பதவிகள். புகழ் இவைகளை வாரி வழங்குவதில் அமித்ஷா- மோடி வகையறா தயக்கம் காட்டுவதில்லை என்பதை பார்க்கிறோம்.
ஐரோப்பாவில் முதலாளித்துவம் தலைதூக்க பைபிளுக்கு புதிய விளக்கம் கொடுத்து புராட்டஸ்டென்ட் மார்க்கம் உதவியது போல் கீதையை இந்துத்வா அரசியல்வாதிகள் இந்து முதலாளித்துவ கலாச்சாரத்தின் அடையாளமாக ஆக்கிட முயற்சிக்கின்றனர்.
ஆனால் அவர்களது முயற்சிகள் எதிர்வினையை உருவாக்குவதை காணமுடியும்.
குறளா? கீதையா? 
எது சரியான அறவழி காட்டுகிறது என்பது தத்துவவாதிகளின் தர்க்க உரலில் இடிபடுவதை காணலாம். 
மானுட உறவைப் பற்றி திருக்குறள் தரும் விளக்கமும் பகவத்கீதையின் விளக்கமும் எதிரும் புதிருமாக நிற்கின்றன. 
பகவத் கீதையின் முதல் பகுதி முழுவதும் போரிட மறுக்கும் அர்ஜூனனின் வாதங்களை பதிவு செய்யும் ஸ்லோகங்களே..
“ பரந்தாமா! என்ன வினோதமிது! 
அரண்மனை ஆடம்பர வாழ்க்கைக்காக சொந்த பந்தங்களை கொல்லுகிற பெரிய பாவத்தை செய்ய முடிவு எடுத்துவிட்டோமே- 
சொந்த பந்தங்களை கொன்று சுகவாழ்வு பெறுவதைவிட பிச்சை எடுத்து உயிர்வாழ்வது மேல்” (பகவத்கீதை முதல் பகுதி 44, 45 வது ஸ்லோகம்) என்று புலம்புகிறான்.
போரிட மறுக்கும் அர்ஜூனனுக்கு கிருஷ்ணபரமாத்மா கர்மவினை என்ற கோட்பாட்டைக் கூறி போரிட போதிக்கிறார்
 - எல்லாம் வல்ல தன்னை நம்பச் சொல்கிறார். 
குருவாக ஏற்கச் சொல்கிறார். பலனை எதிர்பாராமல் சொந்த பந்தங்களையும், நேசித்த குருவையும் கொல்லத் தூண்டுகிறார். 
போரில் வென்றால் ராஜியம் கிடைக்கும் உயிர்துறக்க நேர்ந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று எல்லாம் வல்ல கிருஷ்ணன் விஸ்வ ரூபத்தைகாட்டி அர்ஜூனனை சண்டைக்குத் தயாராக்குகிறார். 
கீதை மானுடர்களை பரமாத்மாவின் விஸ்வரூபத்தை நம்பச் சொல்கிறது. ஆனால் திருக்குறளோ ஏ! மானுடா! உனது அறிவுதான் தீயது செய்யாமல் உன்னைத் தடுக்கும். 
அறிவுதான் பகையை தடுக்கும் அரண் என்று போதிக்கிறது.
“சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு” “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் (421) 
உள்ளழிக்க லாகா அரண்.
கேள்வி என்ன வெனில், கடவுளை சார்ந்து இராமல் அறிவை சார்ந்து நிற்கச் சொல்லும் குறளை புறக்கணித்துவிட்டு ஆளுவோர் ஏன் கீதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? 
முதலாளித்துவம் நீடிக்க வேண்டுமானால் பணத்தை குவிக்கும் போர் குணம் பரவவேண்டும். பணம் என்பது ஒரு சமூகத்தின் கூட்டுழைப்பால் உருவாகும் மதிப்பின் அடையாளம் என்று பார்க்காமல் அற்புத சக்திபடைத்த ஒன்றாக பாமரர்கள் மனதிலே பதியவைக்க வேண்டும்..
மானுட உழைப்பை ஏற்றத் தாழ்வாக பாகுபடுத்துவதை தர்மமாக ஆக்க வேண்டும்..

பொதுவாக உழைப்பை சிறுமைப்படுத்தவேண்டும் அதிலும் உடலுழைப்பை கேவலப்படுத்தவேண்டும்.
இத்தகைய அறநெறி சூழலில்தான் முதலாளித்துவம் நீடித்து இருக்க முடியும்.கீதையின் சாரமே உழைப்பை சிறுமைப்படுத்தும் வர்ணாஸ்ரம தர்மம் ஆகும். இதற்கு எதிர்மறையாக குறள்.
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்கிறது
இது முதலாளித்துவத்திற்கு பொருந்துமா?. 
உழைப்பவர்களை குதிரை மற்றும் மாடு போல் நிர்வகிப்பதற்கும், வல்லவனை பூசிக்க வைப்பதற்கும் குல தர்ம பகவத் கீதை உதவுவது போல் குறள் உதவுமா? 
நிச்சயம் உதவாது. 
ஒரு வேளை முதலாளித்துவத்தை பேண கீதை உதவலாம் ஆனால் முதலாளித்துவம் 120கோடி இந்திய மக்களை சாதி சமய உட்பூசல் இல்லாமல் வாழவைக்குமா? 
வறுமையை. அறியாமையை விரட்டுமா? 
செய்யாது என்பது உலக அனுபவம். 
எனவே கீதை அந்த கால குல வாழ்க்கை பழமையை புரிய உதவும் ஆவணமே தவிர வழிகாட்டும் அறநூலாகாது. 
இதனைப் புரிந்து கொள்ள குறள் உதவுகிறது.திருக்குறளை படியுங்கள் .வாழ்வில் மென்மையடையுங்கள்.
நன்றி:தீக்கதிர்.