ஆன்-லைன் வர்த்தகத்திலும் அந்நிய மூலதனம்?
ஆன்-லைன் வர்த்தகத்திலும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்திய ஆன்-லைன் இணைய வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட், ஸ்னாப் டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த போது, அங்கிருக்கும் பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் ஆன் லைன் இணைய வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும்.
அதன் மூலம் நாங்களும் இந்தியாவில் காலூன்றி வியாபாரத்தை பெருக்கி கொள்வோம் என கேட்டுக்கொண்டன.
இதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆன் லைன் இணைய வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை இந்தியாவில் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வர்த்தக தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமேசான், இபே, பிளிப்கார்ட், ஸ்னாப் டீல், ஜப்பான் பிளஸ் போன்ற சுமார் 60 முன்னணி ஆன்லைன் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பிளிப் கார்ட், ஸ்னாப் டீல் போன்ற இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆன்-லைன் வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை புகுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள சூழலில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. .900 கோடி அமெரிக்க டாலர் அளவில் நேரடி அந்நிய மூலதனம் நடைமுறையில் உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டைச் சேர்ந்த, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அவர்களுடன் போட்டியிட முடியாது.
ஆகையால் உள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை விழுங்கி பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களே ஒட்டுமொத்தத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும்.
இதனால் ஆன் லைன் வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தின. தற்போது தயாரிப்புப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவராமல் நேரடியாக தங்களது ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கின்றனர்.
அதாவது உற்பத்தி மையத்தில் இருந்து நேரடியாக நுகர்வோருக்கு செல்கிறது. இதன் காரணமாக ஆரம்ப கட்டத்தில் பொருட்களின் விலை மலிவாக இருந்தாலும் சந்தையில் போட்டி இல்லாமல் மாறும் பட்சத்தில் பொருட்களின் விலை கடுமையாக உயரவும் வாய்ப்புள்ளது.
மேலும் அந்நிய நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு உரிய வரி வசூலிப்பதிலும் சிக்கல் ஏற்படும். இந்தியாவில் சில்லரை வணிகத்தைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
இது குறித்து மிகப்பெரிய நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆன்னலன் வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவது என்பது இந்திய சந்தை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. முதலில் விலை குறைவானதாக இருக்கும்.
ஆனால் அதன் பின்புலத்தில் வேலை வாய்ப்புகளை முழுவதுமாக தடை செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் அமேசான் போன்ற நிறுவனங்கள் சிறு வணிகர்களை ஒடுக்கும் சூழலும், தரமில்லாத பொருட்களை சந்தையில் விற்கும் சூழலும் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்னாப் டீல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஆன்லைன் வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் அரசு சிறு, குறு, நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் பாதமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிளிப்கார்ட் நிறுவன அதிகாரி ஆன்லைன் வர்த்தகத்தில் நேரடி அந்நிய மூதலீட்டை பெருக்குவதன் மூலம் ஏற்படக்கூடிய வரி குறித்த பிரச்சனைகள் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று வலியுத்தினார்.
எது எப்படியோ ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக கருத்தப்படும் இந்திய சந்தையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்வதில் தற்போது பன்னாட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே போட்டி உருவாகியிருக்கிறது.
இதற்கு மத்தியில் இதுபோன்ற ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்கனவே இந்தியாவின் சில்லரை வர்த்தகம் மிகப்பெறும் அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக பல்வேறு புள்ளி விபரங்கள் வெளியாகியிருக்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் சில்லரை வர்த்தகத்தை ஒட்டு மொத்தமாக விழுங்க பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
அதற்கு ஏற்றவாறு மோடி அரசு இந்திய சில்லரை வர்த்தகத்தை காவு கொடுக்க கணக்கு போட்டு வருகிறது. ஆனால் இதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதை சுதேசியம் பேசும் பாஜக கவனத்தில் கொள்வதில்லை. இணைய வழி வர்த்தகத்தின் மூலம் நேரடியாக உற்பத்தி மையத்தில் இருந்து நுகர்வோருக்கு பொருட்கள் செல்லும் பட்சத்தில் முதலில் விலை குறைவாக தெரியும். ஆனால் அதில் போட்டியில்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்த துவங்கும்.
அப்போது அந்த நிறுவனம் வைத்ததுதான் விலை. அதுமட்டுமல்ல இந்திய சூழல் என்பது முழுக்க முழுக்க சங்கிலி தொடர் போன்ற வர்த்தக இணைப்பு இருக்கிறது.
இந்த சங்கிலி இணைப்பே இந்திய சூழலில் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்களை கொடுத்து வருகிறது.
இந்த வேலை வாய்ப்புகள் ஆன் லைன் வர்த்தகத்தால் தடைபடும். அதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து மக்களிடம் வாங்கும் சக்தியும் குறையும்.
இதனால் சமூக கொந்தளிப்பு மட்டுமல்ல பொருளாதார சீரழிவும் ஏற்படும் என சில்லரை வர்த்தகர்கள் இணையத்தில் கடும் விமர்சனங்களை மோடி அரசு மீது வைத்து வருகின்றனர்.
========================================================================
ஊழலும், மனச்சாட்சியும்
விசாரணை நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்த டான்சி வழக்கில் பதினைந்துஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவை குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பின் சில வரிகள் ஊழலில் திளைக்காமல் இருக்கஅதிகாரம் கிடைத்தோரின் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வழிகாட்டியது.
இதே வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, டான்சி சொத்தை முதலமைச்சர் தனதாக்கிக் கொள்ள ஊழல் செயலில் ஈடுபடவில்லை.
எந்த சூழ்ச்சி மனதோடும் அதை அடையவில்லை என்று நற்சான்றிதழ் வழங்கியிருந்தார்.
அதனை மறுத்து உச்சநீதிமன்ற அமர்வுமனச்சாட்சியை தூங்கவைத்து ஆற்றிய செயலென தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.
“டான்சி சொத்தை வாங்கியதில் ஜெயலலிதா அமைச்சர்களுக்கான நடப்புவிதிகளை மீறியிருக்கிறார். நாங்கள் அவர் குற்றவாளியா அல்லவா? அதில் எதைக் கூறுகிறோம் என்பதல்ல முக்கியம்.
அவரது மனச்சாட்சிக்கு அவர் பதில் சொல்லியாகவேண்டும்.
இப்படித்தான் எல்லா வழக்கிற்கும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறதா?
மனசாடசி படி எல்லோரும் நடந்து கொள்ளுங்கள் என்று சொல்ல நீதிமன்றம் எதற்கு.அது தேவை இல்லா ஒன்றாகி விடுகிறதே.செய்த தவறுக்கு தண்டனை வழங்கத்தானே நீதிமன்றம்.
தாவுத் இப்ராஹீமையும்,லாலுவையும்,சவுதாலாவையும்,பெரறிவாளனையும் இனி மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி எல்லா வாழ்க்கையும் கை விட வேண்டியதுதானே.
ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 20% ஊழல் குற்றமில்லை என்கிறார் ஒரு 18.05 % கணகீட்டு நீதிபதி.
நடத்தைவிதிகளைவளைத்து சொத்துக் குவிக்க முயற்சிஇருந்தது என்ற வலுவான சந்தேகஅடிப்படையில் தண்டிக்க முடியாதுஎன்பதல்ல, விடுதலை வழங்குகிறோம்.
அவர் நிலத்தை ஒப்படைப்பதின் மூலம் பிராயச்சித்தம் தேட வேண்டும்”இவ்வாறு குற்றம் புரிந்த ஜெயலலிதாவின் மனச்சாட்சியை அந்த தீர்ப்பின் மூலம் அமர்வு தட்டி எழுப்ப முயற்சித்தது.
இதனை ஜெயலலிதா மட்டுமல்ல, அதிகாரம் பெற்ற அரசியல் தலைவர்களும் உணர வேண்டிய ஒன்றாகும்.இப்பொழுது சொத்துக் குவிப்புவழக்கில் ஜெயலலிதா விடுதலை என்ற செய்தி நமக்கு கூறுவதென்ன?
விசாரணை நீதிமன்றம் சாட்சியங்களை சாராமல் சொத்து ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு நடத்தை விதிகளை வளைத்து சொத்து திரட்டியதாக தண்டிக்கிறது. உயர்நீதிமன்றம் தடுமாறுகிற சாட்சியங்களை காட்டி விடுதலை செய்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?
நீதித்துறையும் மனச்சாட்சியை பின்பற்ற சிரமப்படுகிறது என்பதுதானே. இந்த வழக்கு மட்டுமல்ல பல பல ஊழல் வழக்குகளின் தலைவிதிகள் நமக்கு இன்னொரு செய்தியைவலியுறுத்துகின்றன.
அந்த செய்தியை மக்கள் அறிய சுவர்களில் எழுத வேண்டியதாகும். அது என்ன செய்தி.ஊழலில் திளைக்கும் ஆட்சியாளர்களை சட்டவரம்புகளை தாண்டிநீதிமன்றங்களால் மட்டுமே தண்டிக்க இயலாது மனசாட்சியைகொன்று செயல் படும் ஆட்சியாளர்களை மக்கள்தண்டிக்க முன்வரவேண்டும். அவர்களால் மட்டுமே தண்டிக்க முடியும் என்பதே அந்தசெய்தி. மனச்சாட்சி என்பது பண்பாட்டால் உருவாகிறது.
இன்றைய அரசியலில் அந்த பண்பாடு தொலைந்து வெகு நாளாகிறது. இது சம்பந்தமாக சிலப்பதிகாரத்தின் சில வரிகள் நமது மரபு பண்பாட்டை காட்டுகிறது.
யானோ அரசன்; யானே கள்வன்!மன்பதை காக்கும் தென்புலம் காவல்என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுளென மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே
(சிலப்பதிகாரம் கொலைக்கள காதை)
இதே இந்தியாவில் நெய்வேலி ரயில் விபத்து நடந்தவுடன் ஒரு அமைச்சர் மனச்சாட்சி உறுத்தவே ராஜினாமா செய்தார்.
ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் நிதி அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பதவியை துறந்தார்.
இடைத்தேர்தல் நடக்கிற பொழுது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டை தவிர்க்க எந்த அமைச்சரும் பிரச்சாரத்திற்கு செல்லக்கூடாது என்று இ.எம்.எஸ்.அமைச்சரவை முடிவு செய்தது.
இந்த நடவடிக்கைகள் அனைத்து சட்டம் சொன்னதால் அல்ல. மனச்சாட்சி காட்டிய வழியாகும்.
ஆனால் இப்பொழுது காண்ப தென்ன?
அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்குவிப்பது, அமைச்சர்களுக்கான நடப்பு விதி மீறலே தவிர கிரிமினல் குற்றமல்ல என்ற விவரம் ஜெயலலிதா அமைச்சரவையை கவ்விப் பிடித்துவிட்டது.
அமைச்சரவையின் மனச்சாட்சியை மீளா தூக்கத்தில் தள்ளிவிட்டது என்றே தோன்றுகிறது. இதிலும் தமிழன் பண்பாட்டை காட்டும் புறநானூறு என்ன சொல்கிறது ஒரு அரசன் மக்களை மறந்து, அவனும் அவனது சுற்றமும் உட்கார்ந்து சாப்பிட நினைத்தால், நாடு நெல்வயலில் யானை புகந்தது போல் ஆகிவிடும்.
அதன் வாயில் போவதைவிட காலில் மிதிபடுவது அதிகம்.
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்.நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடுபரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,யானை புக்க புலம்போலத்,தானும் உண்ணான், உலகமும் கெடுமே
அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக் குவித்தால் நாடு கெடும் என்பது வரலாறு உணர்த்தும் பண்பாட்டுப் பாடமாகும்.
எனவே ஊழல் என்பது அறநெறி பிறழ்தல் மட்டுமல்ல அரசியல் பொருளாதார பிரச்சனையுமாகும். ஊழல் வறுமையை விளைவிக்கும்.
வறுமை அறியாமையை வளர்க்கும்.
கடவுள் தன்னை காப்பாற்றுகிறார் என்று ஜெயலலிதா கூறுகிறார்.
ஆனால் இதுவரை அவரை சட்டத்தில் இருந்து காப்பாற்றியது அவர் இரைத்த பணமும்,அவர் காட்டிய அதிகார பலமும்தான்.அவர் கூறியது பூல் கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் அநியாயங்களுக்குத்தான் துணை நிற்பாரா என்ற ஒரு மாபெரும் கேள்வியும் எழுகிறது அல்லவா?
உண்மையில் வரலாற்று ரீதியாக பார்த்தால் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக அரசியல் உறவுகளும் பகைமைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணமும், மக்கள் வாக்குகள் மூலம் வழங்கிய அதிகாரமும் அவரை மட்டுமல்ல அவர் போன்று சொத்துக்குவிக்க, மனச்சாட்சியை கொன்றவர்களை அரசியலில் உலாவ விடுகிறது.
இந்த உண்மை மக்கள் கண்ணில் படாமல் போவதால் கடவுள் காப்பாற்றுவதாக கூறுகிறார்.
எனவே கடவுளைவிட மக்கள் வல்லவர்கள் என்பதை மக்கள் உணரச் செய்வது நமது கடமையல்லவா?
குவித்து வைத்த 2000 காலணிகளை வளர்ப்பு மகன் சுதாகரன்
திருமணத்திற்கு வந்தவர்கள் விட்டுச் சென்றவை என்கிறார் குமாரசாமி.அப்போது குவிந்துள்ள 4000 பட்டுப்புடவைகள் அதே தீர்மானத்துக்கு வந்தவர்கள் விட்டுச்சென்றதுதானா?
திருமணத்துக்கு வந்த அனைவரும் 8 எண் பெண்கள் செருப்பைத்தான் பயன் படுத்தினார்களா.ஆச்சரியம்.
‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழா துஞற்றுபவர்’
வே.மீனாட்சிசுந்தரம்
நன்றி:தீக்கதிர்.
========================================================================
இன்று,மே -17.
- உலக தொலைத் தொடர்பு தினம்
- அர்ஜெண்டினா ராணுவ தினம்
- நார்வே அரசியல் நிர்ணய தினம்
- நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது(1792)
- வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்(1498)
இன்று ரத்த அழுத்த நாள்.
60 வயதுக்கு மேல் தான் வரும் பிபீ என்று சொல்லப்படும் ஹைபர்டென்ஷன் நோய், இளைய வயதிலேயே வர ஆரம்பித்து விட்டது. காரணம், டென்ஷன். படிக்க டென்ஷன், படித்தால் வேலையில்லையே என டென்ஷன், வேலையில் சேர்ந்தால் சம்பளம் டென்ஷன்; பதவி டென்ஷன், ஆபீசில் டென்ஷன், வீடு திரும்பினால் டென்ஷன். சாப்பிட்டால் டென்ஷன்; பேசினாலும் பேசாவிட்டாலும் டென்ஷன், பிள்ளைகள் படித்தாலும் டென்ஷன், படிக்காவிட்டாலும் டென்ஷன், வாடகை தர டென்ஷன், வீடு வாங்குவதில் டென்ஷன்... இப்படி ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும், ஏன் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும் கூட டென்ஷன். இன்னொரு பக்கம், பீட்சா, பர்கரில் ஆரம்பித்து உணவு மற்றும் மது, சிகரெட் போன்ற பழக்க வழக்கங்கள் வேறு அதிகமாக பரவி வருகிறது.
இவற்றால் பெரும்பாலும் 35 வயதுக்குள் உள்ள ஆண், பெண்களுக்கு தான் சிக்கல். ஆண்களுக்கு மட்டுமே இருந்த பழக்கங்கள், இப்போது பெண்களையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டதால் தான் அவர்களுக்கும் பிபீ பிடித்துப் போய்விட்டது. பெண்களுக்கு பாதிப்பு வந்தால் அவர்களை மட்டுமல்ல, அவர்கள் தாயாகும் போது, அவர்கள் வயிற்றில் வளரும் பிஞ்சு சிசுவையும் பாதிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் குழந்தைகள் கண்ணுக்கு கண்ணாடி அணியும் நிலை, அவர்களின் பெற்றோரால் தான் ஏற்படுகிறது என்பது போல, பிபீயும் வாரிசை பல வகையில் தொற்றுகிறது என்பது நிபுணர்கள் கருத்து. பிபீ என்பது வழக்கமாக எல்லாருக்கும் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும்.
இந்த அளவுக்குள் இருந்தாலே, கட்டுப்படுத்தி வந்தாலே பிரச்னை வராது; ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு அவர்கள் கருவுற்ற 20 வாரங்களிலோ, அல்லது கருவுறுவதற்கு முன்போ 140/90 என்று வந்து விட்டால் கண்டிப்பாக டாக்டரை பார்க்க வேண்டும். இதில் போதிய விழிப்புணர்வு இன்னும் பல பெண்களிடம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட பெண்களில் 25 முதல் 30 சதவீதம் பேருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு எந்த வகையிலாவது ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் விழிப்போடு இருப்பது நல்லது என்பது டாக்டர்கள் அறிவுரை. பெண்கள் பொதுவாகவே, உணவுகளில் அதிக பழங்கள் சேர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
நாம் சில உணவு, பழக்க வழக்கங்களில் ஒதுங்கி இருந்தால். ரத்த அழுத்தம் - வராமல் இளம் வயதிலேயே ஒதுக்கி வைக்கலாம்;..!
நன்றி:தினகரன்.
========================================================================