புர்ரட்ச்ச்சி தலைவி

2001-ம் ஆண்டில் ஜெயா மீண்டும் தமிழக முதல்வராக அமர்ந்தவுடன், அவருக்கு எதிராக நடந்துவந்த ஊழல் குற்ற வழக்குகள் அனைத்தையும் சட்டமன்றத் தீர்மானம் ஒன்றின் மூலம் மூட்டை கட்டிவிடலாம் என அப்பொழுது ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (சுயேட்சை) இருந்த அப்பாவு கோரிக்கை வைத்திருக்கிறார். 
இதனை நிராகரித்த ஜெயா, “தான் இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன்” எனத் தன்னடக்கதோடு கூறியிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, அம்மாவைச் சட்டத்திற்கும் நீதிக்கும் தலைவணங்கும் கண்ணியமிக்கவராகக் காட்டுகிறார்கள்,
 அ.தி.மு.க.வினர். இது மட்டுமல்லாமல், உச்சநீதி மன்றம் எந்தவிதமான நிபந்தனையின்றிப் பிணை வழங்கியபோதும், தனக்குத் தானே நிபந்தனை விதித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெருந்தகையாக ஜெயாவிற்கு மகுடம் சூட்டி வருகிறார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெயா மீது சுமத்தப்பட்டன. “வாடா, வா, உன்னைக் கவனிச்சுக்கிறேன்” என்ற விதத்தில்தான் இந்த வழக்குகளை அவர் நீதிமன்றத்தில் சந்தித்தாரேயொழிய, சட்டப்படியெல்லாம் அவர் நடந்து கொள்ளவில்லை. “சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயா நீதிமன்றத்தில் எதிர்கொண்ட விதத்தை முழுவதுமாக விளக்கினால், அது கிரிமினல்களுக்குச் சாதகமாகப் போய்விடும் என்பதனால், அதனை நான் அதிகம் விளக்கவில்லை” என சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 
அவரது கூற்று மிகையானதல்ல. ஜெயா, தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் சிலவற்றைச் சந்தித்த விதத்தை கீழே தொகுத்துக் கொடுத்துள்ளோம். கிரிமினல் கும்பலுக்குத் தலைவியாக இருக்கும் தகுதியை மட்டுமே கொண்டவர் ஜெயா என்ற உண்மையை அவை உங்களுக்குப் புரிய வைக்கும்.
ஜெயாவின் முதல் தவணை ஆட்சியின் பொழுது (1991-96) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளிலிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா – சசி கும்பல் இலஞ்சம் வாங்கியது, 
ஜெயா பதவியில் இருந்த பொழுதே அம்பலமாகியது. மறைந்த தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த ஊழலை விசாரிக்க தொடுத்த வழக்கில், உயர்நீதி மன்ற நீதிபதி இலட்சுமணன், நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தார்.
நீதிபதி தினகர்
டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயாவைச் சட்டத்தை வளைத்து விடுதலை செய்தார் நீதிபதி தினகர்
ஜெயா, இந்த இடைக்காலத் தடையை சட்டத்தின் பொந்துகளில் புகுந்து உடனடியாக உடைத்துவிட்டாலும், தனக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிடும் என பீதியடைந்து போயிருந்தார்; நீதிபதி இலட்சுமணன் வேறு சில வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்ததால், அவரை மிரட்டிப் பணிய வைப்பது என்ற சூழ்ச்சியை மேற்கொண்டது ஜெயா – சசி கும்பல்.
இச்சதியின்படி நீதிபதி இலட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா – கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டதாகப் பொய் வழக்கு சோடிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது பொய்வழக்கு என்பது விரைவிலேயே அம்பலமாகி, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டாலும், ஜெயா கும்பலின் நோக்கம் நிறைவேறியது. “நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் தன்னைப் பாதிப்பதாக” க் கூறி, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இலட்சுமணன் விலகிக் கொண்டார்.
 • 1996-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க., ஜெயா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. இச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஜெயா தொடர்ந்த வழக்கில் அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிபரான், “சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது சட்டப்படி செல்லும்” எனத் தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்திருந்த ஜெயா, தனது ஆதரவோடு நடந்துவந்த பா.ஜ.க. கூட்டணி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி லிபரானை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஜெயாவின் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து வந்த மற்றொரு நீதிபதி, ஜெயாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிய மறுத்ததால், அசாமுக்கு மாற்றப்பட்டார்.
 • “கொடைக்கானல் ப்ளஸண்ட் டே” விடுதி ஊழல் வழக்கில், ஜெயாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூவரும் அ.தி.மு.க. காலிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 
 • 2001-ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின்பு இந்த வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது. அ.தி.மு.க. குண்டர்களின் மிரட்டலுக்குப் பயந்து, 22 அரசு சாட்சிகளும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக பல்டியடித்தனர். \
 • இதனால் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 
 • 2001 இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்புகளால் ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. “இவ்வழக்கை சேலத்திற்கு மாற்றியும், சீனிவாசன் என்ற குற்றவியல் வழக்குரைஞரை அரசு வழக்குரைஞராக நியமித்தும்” சென்னை உயர்நீதிமன்றம் 22.08.03 அன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன்
சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோதமான முறையில் ஜெயாவின் பினாமி கம்பெனிகளை விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி அருணா ஜெகதீசன்.
எனினும், வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததன் மூலம், சேலம் நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற முடியாமல் முடக்கி வைத்தது, அ.தி.மு.க. அரசு. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 14 மாதங்கள் ஆன பிறகும் கூட வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்படாததை எதிர்த்து, கோகிலவாணியின் தந்தை மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் பொழுது, மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட மூல வழக்கைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் நோக்கத்தோடு, “மூல வழக்கின் கேஸ் கட்டு காணாமல் போய்விட்டது; அதனை டிசம்பர் 2003-லிருந்து தேடிக் கொண்டிருக்கிறோம். புதிதாகக் கேஸ் கட்டுத் தயாரிக்கக் கால அவகாசம் வேண்டும்” எனக் குண்டைத் தூக்கிப் போட்டது தமிழக அரசு.
இப்படி அ.தி.மு.க.வால் அரசு அதிகாரத்தோடு உருவாக்கப்பட்ட எல்லா தடைகளையும் மீறி அக்கட்சியைச் சேர்ந்த 28 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, ஜெயா “நீதி”க்குத் தலை வணங்கவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களுக்குப் பல இலட்ச ரூபாய் கருணைத் தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம், நீதிமன்றத் தீர்ப்பை எள்ளி நகையாடி விட்டார்.
 • தமிழக முதல்வர் என்ற பதவியைப் பயன்படுத்தித் தான் அடித்தக் கொள்ளையைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளும் விதமாக, தனது “வளர்ப்புப் பிராணி” சுதாகரனின் திருமணத்தை 1995-ம் ஆண்டின் இறுதியில் நடத்தினார் ஜெயா. அந்தத் திருமணம் தொடர்பாக நடந்து வந்த அதிகார முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும்படி கோரி, பல வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணையின் பொழுது, “வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கே என்ன பாதுகாப்பு?” என நீதிபதி புலம்பியதிலிருந்தே, நீதிபதிகள் – நீதிமன்றங்கள் மீதான ஜெயாவின் ‘பாசத்தை’ப் புரிந்து கொள்ள முடியும். “அதிகார முறைகேடுகள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு முதல்வர் ஜெயா பொறுப்பல்ல” எனத் தீர்ப்பெழுதி, தனது தோலைப் பாதுகாத்துக் கொண்டார், நீதிபதி.
அருண் ஜெட்லி - ஜெயா
நிதியமைச்சர் அருண் ஜெட்லி போயசு தோட்டத்தில் ஜெயாவைச் சந்தித்த சில நாட்களிலேயே அவர் வருமான வரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
 • டான்சி நில பேர ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபொழுதே அதில் தலையிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இவ்வழக்கிலிருந்து ஜெயாவை விடுதலை செய்த உயர்நீதி மன்ற நீதிபதி தங்கராசு, “டான்சி நிலத்தை வாங்கியதில் ஜெயா எவ்வித மோசடியிலும் ஈடுபடவில்லை; மாறாக, வழக்குதான் மோசடியானது” எனப் பொருள்படும்படி தனது தீர்ப்பை அளித்தார். நீதிபதி தங்கராசு, அ.தி.மு.க.வின் மந்திரி ஒருவரின் சிபாரிசின் பின்னணியில்தான் நீதிபதி பதவியைப் பெற்றார் என்பதும்; டான்சி நிலபேர வழக்கில் தீர்ப்புக் கொடுக்கும் முன் உல்லாசச் சுற்றுலாவாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதும் பின்னர் அம்பலமாகியது.
 • நீதிபதி தங்கராசின் தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபொழுது, “தனி நீதிமன்றத்தில் 80 சதவீத அளவு விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், அதில் உயர்நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டாம் என்று நாங்கள் கருதுகிறோம். இது எங்கள் தீர்ப்பு அல்ல; கருத்துதான். உங்கள் கட்சிக்காரர் (ஜெயா) மீண்டும் சிறப்பு நீதிமன்ற விசாரணையைச் சந்திக்க விரும்புகிறாரா?” எனக் குற்றவாளியிடமே தீர்ப்பைச் சொல்லும் உரிமையை வழங்கினார்கள் நீதிபதிகள்.டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பெற்ற ஜெயா, அத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 
 • இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தினகர், “டான்சி நிலம், அரசு சொத்தே அல்ல; அரசு ஊழியர், அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது நன்னடத்தைக் குறித்த விதிமுறைதானே தவிர, சட்டமல்ல” எனச் சட்டத்தையே வளைத்து, புதிய விளக்கம் கொடுத்து, ஜெயாவை வழக்கில் இருந்தும், தண்டனையிலிருந்தும் விடுதலை செய்தார்.
 •  நீதிபதி தங்கராசு தீர்ப்புக்கு முன் சிங்கப்பூர் சென்று வந்தார்; நீதிபதி தினகர் தீர்ப்புக்குப் பின் ஒரு மாத ஓய்வில் போனார்.நீதிபதி தினகரின் தீர்ப்பை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையும், அதனின் தீர்ப்பும் மிகவும் விநோதமாக அமைந்தன. சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த “பந்த்”-ஐ தடை செய்து ஞாயிற்றுக்கிழமை கூடி தீர்ப்பு அளித்த உச்சநீதி மன்றம், டான்சி நில பேர வழக்கில் விசாரணை முடிந்த பிறகும், தீர்ப்பு வழங்காமல் 14 மாதங்கள் இழுத்தடித்தது. அதன்பின் வந்த தீர்ப்போ, ஜெயாவின் விடுதலையை உறுதி செய்ததோடு, அவரின் மனசாட்சியிடம் மண்டியிட்டது.
  “முதல் குற்றவாளியான ஜெயலலிதா குற்றமிழைத்திருக்கிறாரா, இல்லையா என்கிற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவர் தமது மனசாட்சிக்குப் பதில் அளிக்கும் வகையில் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுப்பதே பரிகாரமாக அமையும்.” – இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதிய வெங்கடராம ரெட்டி, ராஜேந்திரபாபு என்ற இரு நீதிபதிகளுக்கு ஜெயாவிடமிருந்து என்ன பரிகாரம் கிடைத்ததோ, அது அந்த “ராமனுக்கு”த்தான் தெரியும்!
நீதித்துறையை விலை பேசும் ஜெயா
சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தபோது, ஜெயா-சசி கும்பலின் லெட்டர் பேடு கம்பெனிகளை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது, ஜெயா-சசி கும்பல். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்குத் தெரியாமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்ததையும்; இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கிடையாது என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சென்னை உயர்நீதி மன்றம். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கிற்குப் பதிலாக, வேறொரு அ.தி.மு.க. கைக்கூலி வழக்குரைஞர் ஆஜரானதையும் சென்னை உயர்நீதி மன்றம் அனுமதித்தது. இப்படி சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட இவ்வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் அந்த லெட்டர் பேடு கம்பெனிகளை வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்த கேலிக்கூத்தும் அரங்கேறியது.
 • சொத்துக் குவிப்பு வழக்கைப் போலவே, வருமான வரி வழக்கிலிருந்தும் ஜெயா-சசி கும்பல் விடுவிக்கப்பட்டிருப்பது விநோதங்களும் மர்மங்களும் நிறைந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்த சமயத்தில் வருமான வரி வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். பின்னர் தேர்தல்கள் நடைபெறவிருப்பதைக் காட்டி விசாரணைக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென ஜெயா கேட்டுக் கொண்டவுடன் தனது தீர்ப்பையே மாற்றிக் கொண்டது உச்சநீதி மன்றம்.இவ்வழக்கை விசாரித்த சென்னை பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு திரும்ப திரும்ப உத்தரவிட்டதை ஜெயாவும் சசியும் ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை. 
ஒருபுறம் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்துவந்த ஜெயா, இன்னொருபுறம் பா.ஜ.க. அரசில் தனது நண்பரான அருண் ஜெட்லி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் இறங்கினார். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாத குற்றத்திற்கு உரிய அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக ஜெயா-சசி கும்பல் வருமான வரித் துறைக்கு மனுச் செய்ய, அந்த மனுவை ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சகம் தடாலடியாக அறிவிக்க, வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வேறுவழியின்றி வழக்கை முடித்து வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய ஜெயா-சசி கும்பல் பா.ஜ.க. அரசின் தயவால் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டுத் தப்பித்துக் கொண்டது.
***
ஜெயா வழக்கைச் சந்தித்த விதம் ஒவ்வொன்றும் சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் வரம்பு மற்றும் கையாலாகாத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அதற்கும் அப்பாற்பட்டு, இன்றைய அதிகார அமைப்பில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் உள்ளிட்டு யாரையும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியும் என்றும் அவர் எடுத்துக் காட்டிவிட்டார். ஜெயா போன்ற சாதி, பணம், அரசியல் செல்வாக்கு கொண்ட கிரிமினல்களை இன்றுள்ள சட்டம், நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டு தண்டித்துவிட முடியாது எனப் புரட்சியாளர்கள் கூறிவருவதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களைக்கூட, சட்டத்திற்கு சவால் விடும் தனது நடவடிக்கைகளின் மூலம் திணறடித்து வருகிறார், அவர். அந்த வகையில் ஜெயா புர்ரட்ச்ச்சி தலைவிதான்!
– திப்பு____________________________
புதிய ஜனநாயகம்
========================================================================
இன்று,
‘அப்பா தினம்’, ‘அம்மா தினம்’, ‘எய்ட்ஸ் தினம்’, ‘உலக சுற்றுச்சூழல் தினம்’, ‘யோகா தினம்’ என கொண்டாடப்படுவது போல, நகை கொள்ளை தினம் என்று ஒன்றை கொண்டாடலாம் போல...! 
அந்தளவுக்கு 2015ம் ஆண்டு நகைக்கொள்ளை ஆண்டாகவே மாறி விட்டது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கணக்கிட்டால் சுமார் 10 ஆயிரம் பவுன் வரை (மதிப்பு சுமார் ரூ.22 கோடி) கொள்ளை அடிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இன்றைய சூழலில் பெண்கள் வெளியே போய்ட்டு வீட்டுக்கு வந்தாலோ, அல்லது நாம் வெளியூர் போய்ட்டு வீட்டுக்கு வந்தாலோ நகைகள் பத்திரமாக இருந்தால் நாம்தான் உலகத்திலேயே கொடுத்து வைத்தவர் என்று எண்ணிக்கொள்ளலாம். 
தமிழ் நாட்டில் நகைக்கொள்ளை என்பது அன்றாடம் தவிர்க்க முடியாத ஒரு சம்பவமாகவே மாறி விட்டது. 
ஜெயலலிதா முன்பு பதவியேற்றவுடன் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓ டி விட்டதாகக் கூறினார்.இந்த முறை பதவியேற்பில் வாழ்த்த ஆந்திரக் கொள்ளையர்களுடன் வந்து விட்டார்களோ?

========================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.