வியாழன், 4 ஜூன், 2015

நொந்து நூடுல்சான மேகி.

மேகி நூடுல்ஸ் என்ற நூலுணவை நெஸ்லே இந்தியா என்ற பன்னாட்டு நிறுவனம் இந்தியச் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 
இரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தானஉணவு என்று தொலைக்காட்சிகள், பத்திரிகை களில் பிரபல நடிகர்களைக் கொண்டு விளம்பரம் செய்யப்பட்டு, லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களின் முக்கிய உணவாக இது மாற்றப் பட்டுள்ளது. 
வேகமாக நகர்மயமாகிவரும், இயந்திரகதியான இந்திய மக்களின் வாழ்க்கையின்அவசரத் துக்கு ஏற்ற உணவு என்றே பலரும் இந்தஉணவை பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
குறிப்பாக இந்த நூலுணவை உட்கொள்ளும் குழந்தைகள் இதன் சுவைக்கு அடிமையாக்கப்படுகின்றனர்.
அதன் பிறகு மரபான, ஆரோக்கியமான, சத்தான உணவுகளைக் கொடுத்தால்அந்த குழந்தைகள் சாப்பிட மறுக்கின்றனர் என்பது பெற்றோர் கூற்று. நூலுணவின் சுவை குழந்தைகளின் சுவை நரம்புகளைக் கட்டுப்படுத்து கின்றன. 
இதற்கு அர்த்தம் குழந்தைகளின் உணவுப் பழக்கம் கூட பன்னாட்டு நிறுவனங் களால் கட்டமைக்கப்படுகின்றன என்பதே. 
தற்போது மேகி நூடுல்ஸ் நூலுணவு பாதுகாப்பற் றது என்ற தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதே சம், பீகார் மற்றும் தில்லியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த நூலுணவில் சோடியம் குளூட்டாமேட் (எஸ்.ஜி.எம்) என்ற சுவைகூட் டும் ரசாயனம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரசாயனம் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சியை பாதித்து, மூளைச் செயல்பாட்டை மந்தமடையச் செய்யக்கூடியது.
 உடல் பருமன், மனஅழுத்தம் ஏற்படுத்தக் கூடியது.
 அதிக கொழுப்புச்சத்து கொண்ட இந்த வகை உணவுகள்குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்புநிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
லாபத்தைப் பெருக்க வேண்டும் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வெறிதான், குழந்தைக ளின் ஆரோக்கியத்தைக் கூட புறந்தள்ள வைக்கி றது.
பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஊடக விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கிடைக்கிறது என்பதற் காக பன்னாட்டு நிறுவனங்களின் இது போன்ற ஆரோக்கியமற்ற, ஆபத்தான, நச்சான உணவுப் பொருட்களுக்குக்கூட தூதுவர்களைப் போல் செயல்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
மேகி நூலுணவு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரே உணவாக இருக்கவில்லை.
ஏற்கனவே கோகோ கோலா போன்ற குளிர்பானங் களும், டப்பா உணவுகளும், துரித உணவுகளும் பல்வேறு அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரையைத் தாங்கிக் கொண்டு இங்கு வெகுவேகமாய்ப் பரவி வருகின்றன. 
இந்தியர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் அரசின் கவனிப்பும் கண்காணிப்பும் அவசியம்.
தவறு செய்யும் நிறுவனங்களின் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோடியின் அந்நிய மூலதங்க்களுக்கும்,பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவான கொள்கையால் இது போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விடக் கூடாது.
அப்படி எடுக்கவில்லையென்றால் மோடி அரசுக்கு இந்திய மக்கள் நலனை விட பன்னாட்டு,அந்நிய ,பெரும் பணக்காரர்கள் நலந்தான் முக்கியம் என்பது உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடும்.
========================================================================
இன்று,
ஜூன்-04.

  • தொங்கா விடுதலை தினம்(1970)
  • இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி பிறந்த தினம்(1959)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் இறந்த தினம்(1925)
  • முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன(1917)

========================================================================
நெஸ்லே உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் நூடுல்ஸில் நார்ச்சத்து இருப்பதாக ஏற்கனவே நூதன மோசடி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை மாதுரி தீட்சித் ஒரு தாயாக குழந்தைகளுக்குச் சமமாக விளையாடுவதாக விளம்பரம் ஒன்றில் நடித்திருப்பார். 
இந்த விளம்பரத்தின் மூலம நூடுல்ஸ் உண்பவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியத்துடன் இளம்வயதினர் போல ஊக்கத்துடன் ஓடியாடி விளையாட முடியும் என்றும், ஏனெனில் மேகி நூடுல்ஸில் நார்ச்சத்து உள்ளது என்றும், ஒரு தட்டு நூடுல்ஸ் சாப்பிட்டால் 3 சப்பாத்தி சாப்பிடுவதற்கு சமம் என்று விளம்பரம் செய்யப்பட்டது.
நெஸ்லே கம்பெனி தயாரிக்கும் மேகி நூடுல்ஸில் அப்படி நார்ச்சத்து உள்ளதா என்பது குறித்து நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி மையம் என்ற தில்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு ஆய்வு செய்தது. 
அந்த ஆய்வு மேகியின் நூதன மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. 
அந்த ஆய்வில் கூறியுள்ளதாவது:
நெஸ்லே கம்பெனி மேகி நூடுல்ஸில் 80 கிராம் கோதுமை மாவு உள்ளதாக கூறுகிறது. 
ஆனால் 5.3 கிராம் கோதுமை சத்து மட்டுமே உள்ளது.
மேகி நூடுல்ஸில் கூடுதல் அளவில் காய்கறிச் சத்து உள்ளதாக கூறியுள்ளது. 
ஆனால் ஒரு பாக்கெட்டில் ஒரு சிறிய அளவிலான காரட் தூள்களும் பட்டாணிகளும் பீன்சுளும் மிகச் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளன. 

ஆனால் ஒரு பாக்கெட்டில் 100 கிராம் சோடியம் உள்ளதால் மிகக்குறைந்த அளவில் இருக்கும் காய்கறித் தூள்களால் எந்த ஆரோக்கியமும் ஏற்படாது. 

அதற்கு மாறாக தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்ந்து அதனால் ஊளைச் சதையும் உடல் பருமனும் ஏற்பட்டு நீரிழிவு உள்ளிட்ட பல தொற்று அல்லாத நோய்கள் ஏற்படும்.

பிரபல உணவுப் பொருட்கள் தயாரிப்பு பன்னாட்டுக் கம்பெனியான நெஸ்லேவின் ‘மேகி நூடுல்சை’த் தொடர்ந்து பால் பவுடரையும் தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பாலுக்கு மாற்றாக “நான் புரோ”எனும் பால் பவுடர் பயன்படுத்தப்படுகிறது.
 இந்த நான் புரோ பவுடரில் புழுக்கள், வண்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
 இதனால் இந்த பால்பவுடர் தயாரிப்பிற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையில் கேப் டிரைவர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்தநெஸ்லேயின் நான் புரோ3 பால்பவுடரை உணவுப் பாதுகாப்பு பிரிவின் மருந்து பரிசோதனை மையத்தில் முதற்கட்டமாக சோதித்துப் பார்த்ததில், பால்பவுடரில் நுண்புழுக்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் உயிருடன் நுண் புழுக்கள் இருப்பதாலும், நுகர்வதற்கான தரநிலைகளின் தேவையை பால்பவுடர் பூர்த்தி செய்யவில்லை என்பதாலும் அது பாதுகாப்பற்றது என்று பெயர் கூற விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாம்பிளைக் கொடுத்த கேப் டிரைவர், தன் குழந்தை நெஸ்லே பால்பவுடரை எடுத்துக் கொண்ட பிறகு தோல்ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து பரிசோதனைக்கு அளித்துள்ளார்.

எனினும், இது குறித்து அரசின்உணவுப் பாதுகாப்பு பரிசோதனைமையத்திலிருந்து ஒட்டுமொத்தமான, விரிவான அறிக்கை வருவதற்காக தாங்கள் காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
=================================================
"அரசியலில் சாணக்கியன்.
அழகுத் தமிழின் ஆசான்.
ஓயாது உழைப்பதில் 
உதய சூரியன்.
92 அகவை காணும் இளைஞன்.
உன்னை வாழ்த்தவா முடியும்?
வணங்கத்தான் இயலும்.
உன் ஆசிகளை இந்நன்னாளில்
 எங்களுக்கு வழங்கிடு!"
==================================================
மோடியின் ஓராண்டு ஆட்சி- 

ஓராயிரம் வேதனை வேலைவாய்ப்புகளும், மேக் இன் இந்தியாவும்! 

ஒரு விசித்திரக் கோமாளித்தனம்!

மோடி ஆட்சி இந்திய மக்களுக்கு இழைத்த மிகப்பெரிய துரோகம், அது வேலைகளை உருவாக்குவதாக உறுதி அளித்ததுதான்.
 கடந்த பொதுத்தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை ஏற்க நியமிக்கப்பட்ட பின்னர் 2013 ஆகஸ்ட்11ம்தேதியன்று திருவாளர் நரேந்திரமோடி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் பேரணியில் ஆற்றிய உரையில், இளைஞர்கள் மத்தியில் உள்ள வேலை இல்லாத் திண்டாட்டத்தை பற்றியும் காங்கிரஸ் ஆட்சி வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி விட்டதையும் சுட்டிக்காட்டினார். 
அன்றிலிருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், தாம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தொடர்ந்து உறுதி அளித்தார்.
பிரதமரான பிறகு தனது முதல் சுதந்திர நாள் உரையின்போது, ``இந்தியா வளர வேண்டுமென்றால் அதிகமான, மிக அதிகமான வேலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று, செங்கோட்டையிலிருந்து மோடி இடி முழக்கமிட்டார். “நமக்கு தொழில்மயமாக்குதல் தேவையாக உள்ளது; 
அப்போதுதான் மக்கள் வருமானமில்லாத விவசாயத்தை விட்டு, நல்ல வருமானம் அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு மாறுவார்கள்” என்றார். ஆனால் எப்படி தொழில்மயமாதல் நடைபெறும் என்று அவர் விளக்கவில்லை.
இதற்குப் பிறகு செப்டம்பர் 25ம்தேதியன்று ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரம் அறிவிக்கப்பட்டது. 
வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்தியாவிற்கு அவசியம் வர வேண்டும்; அவர்கள் இங்கு உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும்; பொருட்களை உற்பத்தி செய்ய இளம் இந்தியர்களை வேலைக்கு நியமிக்க வேண்டும்; அவற்றை கம்பெனிகள் வெளிநாடுகளில் விற்றுக்கொள்ள வேண்டும் என்று மோடி அறிவித்தார்.
இது ஒரு விசித்திரமான, கோமாளித்தனமான திட்டமாகும். இப்படியாக, ஓராண்டு கடந்து விட்டது. 
மோடி 18 நாடுகளுக்கு சென்று வந்துவிட்டார் . ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தில் ஒரு முதலீடும் அசைந்ததாகத் தெரியவில்லை. 
இந்தப் பின்னணியில், சிம்லாவிலுள்ள தொழிலாளர் அமைப்பு, எட்டு அடிப்படைத் தொழில்களான உடைகள் உள்ளிட்ட ஜவுளித்துறை, தோல், உலோகங்கள், ஆட்டோ மொபைல்ஸ், செயற்கை நவரத்தின கற்கள், நகைகள், போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம், பிபிஓ எனப்படும் கால் சென்டர்கள் மற்றும் கைத்தறி, விசைத்தறி ஆகியவற்றில் வேலைவாய்ப்பு மாற்றங்கள் எப்படி ஏற்பட்டுள்ளன என்பது குறித்து ஒரு காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது எந்தப் பக்கம் காற்று வீசுகிறது என்பதைத் தெளிவாக முன்வைக்கிறது.இந்த அறிக்கையின்படி, கடந்த 2014ல் 4.2 லட்சம் வேலைகள் உருவாகியுள்ளன. 
2014ல் மோடி ஆட்சிக்கு வந்த புதிதில் மீடியாக்களால் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். 
ஆனால், கடந்த 2013ல் இதே 8 தொழில்களில் உருவாக்கப்பட்ட வேலைகள் 4.19 லட்சம் ஆகும். காங்கிரசிலிருந்து பாஜக எள்ளளவும் மாறுபட்டது அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
மோடியின் மந்திரம் தோல்வியடைந்துவிட்டது. 
அவருடைய உறுதி மொழிகள் காங்கிரசைப்போன்று வெற்றுக்குடுவையாக மாறி விட்டன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் சந்தையில் 1.2 கோடிப் பேர் புதிய தொழிலாளர்களாக சேருகின்றனர். 
இந்நிலையில், வெறும் 4 லட்சம் புதிய வேலைகள் உருவாவது எந்த வகையிலும் உதவாது.

மிகக்குறைவாக கூலி வாங்கும் பணிகளில் தங்களது சகோதரர்களுடனும் ,சகோதரிகளுடனும்இணைந்து கொள்வார்கள். '
நகரங்களுக்கு இடம் பெயர்வார்கள். மோசமான நிலைமைகளில்வாழ்வார்கள். நோயையும், உடல் ஊனத்தையும், இயலாமையையும் எதிர்கொள்வார்கள்; அல்லது நிலங்களில் பசித்த வயிற்றுடன் பணிபுரிவார்கள்.போதிய வருமானத்திற்கு வழியில்லாத குறைந்த வேலை, போதிய வேலை கிடைக்காமலிருத்தல் ஆகியவையே இந்தியாவை பாதிக்கும் கொள்ளை நோயாக உள்ளது.
மோடி ஒட்டு கேட்கும்போது இது அவருக்குத் தெரியாமல் இல்லை. அவர் இந்தியாவின் பரிதாப நிலைகுறித்து முதலைக்கண்ணீர் வடித்தார். பின்னர் அவர் தனது உறுதி மொழிகளை மறந்துவிட்டார். அதனால்தான் தனது துயரமான பாதையில் மக்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கும்போது அவரோ உலகம் சுற்றுகிறார். 
4 கோடி ரூபாய்க்கு அறைகளை எடுத்துத் தங்குகிறார். உலகத் தலைவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்.

தொழில் உற்பத்தி 2014-15 களில் 2.8 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளதாக அரசு புள்ளி விபரம் கூறுகிறது. கடந்த 2013-14ல் (-0.1விழுக்காடு); அதற்கு முந்தைய 2012-13 ஆண்டுகளில் (1.1 விழுக்காடு) இருந்தது. இவை காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த தேக்க நிலையாகும்.

அது உயரவே இல்லை. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியில் உற்பத்தித் துறையானது 2.3 விழுக்காடுதான் உயர்ந்துள்ளது. சுரங்கத் தொழிலில் 1.4 விழுக்காடு கூடியுள்ளது. 
இது மிகவும் மந்தமான வளர்ச்சி ஆகும்.ஏப்ரலில் வெளியிட்டுள்ள அரசின் புள்ளி விபரங்கள் காட்டுவது, கடந்த 5 மாதங்களாக இந்தியாவின் ஏற்றுமதி இறங்குமுகமாகவே உள்ளது என்பதுதான்.
 இது ஆச்சரியத்திற்குரிய விசயமல்ல;
ஏனெனில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்கள் நெருக்கடியின் பிடியில் இருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விசயமாகும்.
ஆனால், மோடி எப்படி வேலைகள் உற்பத்தி செய்யப்படும் என்று உறுதி மொழி அளிக்கிறார்? 
எப்போது அந்நிய முதலீட்டாளர்கள் மேக் இன் இந்தியா திட்டத்திற்குள் வருவார்கள்? 
அவர்கள் எப்போது ஏற்றுமதி செய்வார்கள்?
 சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் காட்டுவது என்னவென்றால், இந்தியாவில் அந்நிய நிதி முதலீடுகள் அதிகரித்து வரும் போக்கைப் பார்க்கலாம்.
ஆனால் அதில் மிகவும் பெரும்பான்மையானது பங்குச் சந்தைக்கே சென்றுள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளுக்காக அல்ல.
2014-15 ஆண்டில் 75 பில்லியன் டாலர்கள் (1பில்லியன் டாலர் =63953450000ரூபாய்) இதில் 40 பில்லியன் டாலர் (54 விழுக்காடு) பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2013-14 ஆண்டில் மொத்த அந்நிய முதலீடு 22 பில்லியன் டாலர்கள். 
அதில் 5 பில்லியன் (22 விழுக்காடு) டாலாகள் பங்கு சந்தையில் இடப்பட்டுள்ளது. 
எனவே, அந்நிய முதலீட்டை கொண்டுவருவதிலும் மோடி தோல்வியே அடைந்துள்ளார்.மாறாக, மோடியின் கார்ப்பரேட் ஆதரவு - மேற்கத்திய ஆதரவு வெற்றுப்பிரகடனங்கள் சூதாட்ட முதலீட்டாளர்களையே அழைத்து வந்துள்ளன.
 இவ்வகை முதலீடுகளினால் வேலைவாய்ப்புகள் உருவாகாது. மாறாக, உள்ளதையும் பறிக்கும்! 
நன்றிwww/facebook.com/cpimcc
தமிழில்: சேது.
============================================================================================================