ஞாயிறு, 14 ஜூன், 2015

அமெரிக்க பாதுகாப்பு"சீனாவுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இணைய தாக்குதலாளிகள் அமெரிக்க புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகள் பற்றிய அதிமுக்கிய இரகசியத்தரவுகளை இணைய வழியாக கைப்பற்றியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்."
அமெரிக்காவில் இப்படியானதொரு பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் குறித்த விவரங்கள் கடந்த வாரம் அமெரிக்க அரசால் வெளியிடப்பட்டது. 
அதைத்தாண்டி, இரண்டாவது இணையமீறல் சம்பவம் ஒன்று நடந்திருப்பது குறித்த விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதிஉயர் இரகசியத்தன்மை வாய்ந்த அமெரிக்க இணையம் மீதான அத்துமீறிய தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர் அச்சுறுத்தலுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகலாம் என்கிற அச்சங்களை தோற்றுவித்துள்ளது.
இந்த விஷயத்துடன் நேரடித்தொடர்புள்ள ஓ.பி.எம் எனப்படும் தனிநபர் முகாமைத்துவ அலுவலகம் இன்னமும் இது குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதனையும் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் இராணுவத்தினர் தம்மைப்பற்றிய பின்னணியை ஆராய்வதற்காக பணியில் சேரும்போதும், சேர்ந்த பிறகும் அரசுக்கு சமர்ப்பிக்கும் பின்னணி பாதுகாப்பு பரிசோதனை படிவங்களையே இந்த இணைய தாக்குதலை நடத்தியவர்கள் குறிவைத்திருந்ததாக அசோசியேட்டர் செய்திச் சேவையிடம் பேசிய அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இராணுவத்தினர் மட்டுமல்ல, அவர்கள் குடும்பம், நண்பர்கள் கூட அச்சுறுத்தப்படலாம்


இந்த படிவங்களில் அதிகாரிகளின் கண்ணின் நிறம் முதற் கொண்டு, அவர்களின் கடந்தகால நிதிநிலைமை, கடந்த காலங்களில் அவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா இல்லையா என்பது தொடர்பான விவரங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களின் விபரங்களும் இருக்கின்றன.
அரச ஊழியர்களின் பின்னணி விவரங்கள் இணையம் மூலம் அணுகப்பட்டதாக, இது குறித்து விசாரணை மேற்கொள்பவர்கள் அதிக அளவு நம்புவதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இணையத்தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தத் தகவல்கள் ஒரு தங்கச் சுரங்கம் போன்றவை என இது குறித்துக் கருத்து தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் ஒற்றர்களை வேவுபார்க்கும் அதிகாரி ஜோயல் பிரனர் கூறினார்.
சென்றவாரம் அமெரிக்காவின் அரச ஊழியர்களின் தனிப்பட்டத் தரவுகள் மீது நடத்தப்பட்ட இணையத்தாக்குதல் என்பது முன்பு கூறப்பட்டிருந்ததைவிட மிகப்பெரிய அளவில் நடந்திருப்பதாகவும் தற்போது தெரியவந்திருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் 4 மில்லியன் பேர் என ஆரம்பத்தில் கணக்கிடப்பட்டாலும், இது குறித்த விசாரணைக்கு நெருக்கமான அதிகாரிகள் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 மில்லியன் பேராக இருக்கலாம் என அசோசியேட்டட் பிரஸ் 
செய்தி சேவைக்கு தற்போது தெரிவித்துள்ளனர்.
========================================================================

========================================================================
முயற்சி திருவினையாக்கும்!

அகில இந்திய அளவில் முதல் பார்வையற்ற பெண் ஐ.எஃப்.எஸ். 
அதிகாரியாகி உள்ளார் சென்னையை சேர்ந்த 
பெனோ ஜெஃபைன்.

ஊனம் எதற்கும் ஒரு தடையல்ல என்பதை தனது அயராத உழைப்பால் நிரூபித்து இருக்கிறார் சென்னையை சேர்ந்த ஒரு பெண். சென்னையைச் சேர்ந்தவர் பெனோ ஜெஃபைன் (25). இவர், இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் ஐ.எஃப்.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்றுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் மின்னஞ்சலில் வெள்ளிக்கிழமை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் என்.எல்.சார்லஸ். இவரது மனைவி மேரி. இவர்களது மகள்தான் பெனோ ஜெஃபைன். பிறவியிலேயே பார்வையற்ற இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்வையற்றவருக்கான லிட்டில் ஃபிளவர் பள்ளியில் பிரெய்லி முறையில் பயின்றார். அதன்பிறகு, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், அதே பிரிவில் முதுகலைப் படிப்பை லயோலா கல்லூரியில் பயின்றார். அதன்பிறகு, திருவள்ளூரில் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். மேலும், ஆங்கிலத்தில் முனைவர் பட்டத்திற்கும் படித்து வந்தார்.
இந்நிலையில், இளங்கலைப் படிப்பைப் படித்தபோது இவருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுத வேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதை அறிந்த அவரது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் அத்தேர்வை எழுதுமாறு அவரை ஊக்குவித்திருக்கின்றனர். இதை தொடர்ந்து பெனோ ஜெஃபைன், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வை பிரெய்லி முறையில் எழுதி இருக்கிறார்.

கடந்த 2014, ஜூன் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் இவர் 343 ஆம் இடம் பெற்றார். இதையடுத்து, இவருக்கு மத்திய வெளியுறவுத் துறையில் உதவிச் செயலர் அந்தஸ்தில் ஐ.எஃப்.எஸ். அதிகாரி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெள்ளிக்கிழமை இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது.

அகில இந்திய அளவில் பார்வையற்றோர் பிரிவில் முதல் முறையாக பெண் ஐ.எஃப்.எஸ். அதிகாரியாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பெனோ ஜெஃபைன் தெரிவித்து உள்ளார்.

=================================================