ஞாயிறு, 14 ஜூன், 2015

தேர்தல் களத்தில்.வரலாற்று நாயகர்கள்

1957 அப்போது கேரளத்தின் முதலமைச்சர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உலகத்திலேயே புரட்சியின் மூலமாக அல்லாமல் மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கம்யுனிஸ்ட் முதலமைச்சர் தோழர் இ.எம்.எஸ்.இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநில அரசு மக்களுக்காக என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்தார். 
அப்போது இந்தியா விடுதலை அடைந்து 10 ஆண்டுகள்தான் ஆகி இருந்தது. அப்போது இ.எம்.எஸ். அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர், 
பிற்காலத்தில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற மனித உரிமைப் போராளி கிருஷ்ணய்யர்.
கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பெரும் நில உடமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். 
இவர்களில் பலர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள். இவர்கள் இ.எம்.எஸ்.சையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் எதிர்த்து கலகக் கொடி பிடித்தனர். இவர்களின் பாச்சா ஒன்றும் இ.எம்.எஸ்.சிடம் பலிக்கவில்லை.
அப்போது கேரளத்தின் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே கத்தோலிக்க மத நிறுவனங்களின் ஆதிக்கத்தில்தான் இருந்தன. இவற்றின் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதோ கேரள மாநில அரசு. 
இக்கல்வி நிறுவனங்களை இ.எம்.எஸ் அரசு தனது சொந்தப் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. அப்பள்ளிகளை அதுவரை நிர்வகித்த நிர்வாகிகள் அகற்றப்பட்டனர்.
அதுவரை மழைக்குக் கூட பள்ளிக் கூட வராண்டாக்களில் ஒதுங்க அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்டோர் வீட்டுப் பிள்ளைகள் இப்பள்ளிக் கூடங்களில் லட்சக்கணக்கில் படிக்கத் துவங்கினர்.
தேயிலை, காபி, ரப்பர் தோட்டத் தொழிலாளர், விவசாயக்கூலித் தொழிலாளர் அனைவருக்கும் குறைந்தபட்சக் கூலி, இவர்கள் உயிரிழந்தால் இவர்களின் குடும்பப் பாதுகாப்பு உத்தரவாதச் சட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தினார்.
 அவர் செய்த ஒவ்வொன்றையும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே செய்தார்.1957ல் இப்போது இருக்கிற அளவிற்கு செய்தி தொடர்பு நிறுவனங்கள் கிடையாது. ஆனால் கேரளத்தில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை செய்து வருகிற மக்கள் நலத்திட்டங்கள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காட்டுத் தீயாய் பரவின.
அப்போதைய இந்திய பிரதமர் மனிதருள் மாணிக்கம் என்று புகழ் பெற்றிருந்த ஜவஹர்லால் நேரு இ.எம்.எஸ்.சின் நடவடிக்கைகளினால் அச்சத்திற்கு உள்ளானார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அக்ராசனர் இந்திரா காந்தி.அவர் காங்கிரஸ் தலைவர்களையும் கத்தோலிக்க மத குருமார்களையும் கொண்ட ஒரு முன்னணியை அமைத்தார்.
அதற்கு கேரள மறு விமோச்சன கூட்டணி என்று பெயரிட்டார்.இந்தக் கூட்டணி வரலாறு காணாத வன்முறைகளை, ரத்தக் களறிகளை கேரளா முழுவதிலும் கட்டவிழ்த்துவிட்டது.
இந்நேரத்தில்தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தேவிகுளம் பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் இடம் காலியானது. ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒற்றை உறுப்பினர் மெஜாரிட்டியில்தான் இ.எம்.எஸ். அமைச்சரவை கேரளத்தில் பதவியில் இருந்தது.கம்யூனிஸ்ட் வேட்பாளராக ரோசம்மாபுன்னூஸ் நிறுத்தப்படுகிறார். 
இவர் தேர்தலில் ஜெயித்தால்தான் இ.எம்.எஸ்சின் கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவியில் நீடிக்க முடியும்.ஆனாலும் இ.எம்.எஸ். கம்பீரமாக இப்படி அறிவிக்கிறார்: “தேவிகுளம் பீர்மேடு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதலமைச்சராகிய நானோ, எனது அமைச்சரவை சகாக்களோ செல்லமாட்டோம். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் அந்த தொகுதி வாக்காளர்கள் மட்டும்தான்.”அந்தத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரோசம்மாபுன்னூஸ் அமோக வெற்றி பெற்றார்.
இப்படியும் இஎம்எஸ் நம்யூதிரிபாட் போன்ற ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருந்திருக்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் இந்நிகழ்வு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே இன்னுமொரு வரலாற்று நாயகர் இருக்கிறார். 
 காமராஜர். 1954ல் இருந்து 1965 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் . 
இவர் ஒரு அமைதிப் புரட்சியாளர். 
இவர் தமிழகத்தை புயல் பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சிப் பாதையில் இழுத்துச் சென்றார்.அவர் பொறுப்பேற்ற சமயம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் இடம் காலியாக இருக்கிறது. அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது.
அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஒரு பழைய ஜீப்பில் ஏறி வேலூருக்குத் தனியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் காமராஜர்.குடியாத்தம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வி.கே.கோதண்டராமன் களம் காண்கிறார்.
1957ல் கேரள முதலமைச்சர் அந்த தேவிகுளம் பீர்மேடு தொகுதியின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரோசம்மாவின் வெற்றியில் தான் தனது அமைச்சரவையின் உயிர்த் துடிப்பு இருக்கிறது என்பதை அறிந்திருந்தும் கூட அந்த தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு செல்ல மறுத்தார்.
 தனது அமைச்சரவை சகாக்களுக்கும் தடை விதித்தார்.
அந்த அளவிற்கு காமராஜருக்கு நெருக்கடி இல்லைதான். 
அவர் குடியாத்தத்தில் தோற்றுப் போனாலும் எம்எல்சி ஆகி தமிழக முதல்வராகத் தொடரலாம்.
அதற்கு அவருடைய தன்மானம் இடம் தரவில்லை.தான் போட்டி இடுகிற குடியாத்தம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு எந்த ஒரு அமைச்சரும், அதிகாரிகளும் வரக் கூடாது என்றார். உதவிக்கு அவர் எப்போதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிற வைரவன் மட்டும்தான்.குடியாத்தம் தொகுதியில் தனது திறந்த ஜீப்பில் கிராமம், கிராமமாகச் சென்று ஓட்டுக் கேட்டார். 
அப்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். நான் இங்கே முதலமைச்சராக வரவில்லை. ஒரு வேட்பாளராக மட்டுமே வந்திருக்கிறேன். அதனால் நீங்கள் என்னிடம் மனு கொடுப்பது தவறு. நான் மனு வாங்குவதும் தவறு என்று கூறி மறுதளித்தார் காமராஜர்.அந்த மக்களிடம் காமராஜர் திருப்பிக் கேட்டார்:
இங்கே கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஓட்டுக் கேட்க வந்தால் இதே மாதிரி மனு கொடுக்காவா செய்வீர்கள்? 
கடைசி வரை குடியாத்தம் தொகுதி மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் அளிக்க மறுத்தார் காமராஜர்.
விடியற்காலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை ஒரு பழைய ஜீப்பில் ஒவ்வொரு கிராமமாக குடியாத்தம் தொகுதி முழுக்கவும் சுற்றிச் சுற்றி வந்தார் காமராஜர்.
ஒவ்வொரு நாள் இரவிலும் அவருடைய பிரச்சாரம் எங்கு முடிகிறதோ அந்த ஊரில் உள்ள காங்கிரஸ்காரர் வீட்டில் இரவு உணவு உண்டு தூங்கினார் காமராஜர்.
அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வி.கே.கோதண்டராமன், இப்பகுதியின் விவசாயிகள், பீடித் தொழிலாளர்களின் நன்மைக்காக பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியர். இவர் சுதந்திரமாக கட்சி வேலை செய்த காலத்தை விடவும் சிறையில் இருந்த காலமும் தலைமறைவாக இருந்த காலமும்தான் அதிகம்.“கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் அப்பழுக்கற்றவர். 
மக்களை நேசிப்பவர். 
என்னைப் பற்றியும் உங்களுக்கே தெரியும். அனைத்தையும் யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள்” என்று பல ஊர்களில் பெருந்தன்மையாக பேசி காமராசர் ஓட்டு சேகரித்ததாக காமராஜரின் உதவியாளர் வைரவன் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
வைரவன் அந்நூலிலேயே ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். 
அன்று பிரச்சாரம் முடிந்த ஊரில் உள்ள ஒரு காங்கிரஸ்காரர் வீட்டில் ஜன்னல் கதவுகளை எல்லாம் திறந்து விட்டு தூங்கியிருக்கிறார் காமராஜர். அப்போது மழை பெய்திருக்கிறது. 
அந்த வீட்டு முற்றத்தில் கயிற்றுக் கட்டிலை போட்டு போர்வை தலை யணை எல்லாம் விரித்து வைரவன் தூங்கியது காமராஜருக்கு தெரியும்.மழை பெய்வதை அறிந்த காமராஜர் பட்டென எழுந்து முற்றத்திற்கு ஓடியிருக்கிறார். மழை பெய்வதை அறியாமல் பகலெல்லாம் அலைந்த களைப்பில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் வைரவன்.“
அடே வைரவா அடே வைரவா எழுந்திரு... தலையணை, போர்வையை தூக்கிக்கிட்டு உள்ளே ஓடுடா” என்று வைரவனை வீட்டுக்குள் விரட்டி விட்டு, வைரவன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலை காமராஜரே வீட்டிற்குள் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.
1954ல் நடந்த இந்த நிகழ்வும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பெருந்தலைவர் காமராஜ் என்கிற பெருமை மிக்க இரு வரலாற்று நாயகர்கள் தேர்தல் களத்தில் மாசு மருவின்றி எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத்தான் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

இன்றையத் தேர்தல் ஆணைய செயல்பாடு,நடைமுறைகளை
 யும் ஆளுங்கட்சியினரின் அடாவடி பிரச்சாரத்தையும் அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க.பார்க்க வேதனைதான் மிஞ்சுகிறது. முடியுமா?-

கருப்பன் சித்தார்த்தன்.
 நன்றி : ஜனசக்தி.
 "பேரிடர் நிவாரண டீம் கூட அத்தனை வேகமாகச் செயல்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. 
ஆர்.கே. நகரில் ஜெ. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு முழுவதும் அமைச்சர்கள் - அதிகாரிகள் மேற்பார்வையில் மின்னல் வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருந்தன. 
மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு அவசர அவசரமாக ஜெ.வுக்குப் பிடித்த பச்சை நிறம் பூசப்பட, புது ஏ.சி. மெஷினும் பொருத்தப் பட்டது. 
தார் சாலை போடுவதற்கான 40 இயந்திரங் களைக் கொண்டு வந்து கடற்கரை சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டடத்திலிருந்து ராயபுரம் வழியாக தண்டையார்பேட்டை அலுவலகம் வரை புது ரோடு போடப்பட்டது. அதுபோலவே வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஜெ. திரும்பும் வழியான மகாராணி தியேட்டர், புதிய கல்லறை சாலை, கடற்கரை சாலை ஆகியவையும் புதுத் தாரில் ஜொலித்தன. 
போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் சாலை போடுவதற்கான பொருள்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். 
வேட்பு மனு தினமான ஜூன் 5ந்தேதி காலை 8 மணிக்கே கமிஷனர் தலைமையில் ஏ.சி.., டி.சி., ஜே.சி., ஆகிய காக்கி அதிகாரிகள் உட்பட 2000 போலீசார் வழியெங்கும் நிறுத்தப்பட்டிருந்தனர். 
வரவேற்பு ஆடம்பரங்களால் மதியம் 12 மணியிலிருந்து போக்குவரத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு நெருக்கடி அதிகமானது.இப்படியெல்லாம் கூட ஜெயாவை வரவேற்க மக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.
 இதெல்லாம் பரவாயில்லீங்க, என்று நம் காதைக் கடித்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், "சி.எம். நாமினேஷன்ங்கிறதால காலையிலிருந்து வியாசர்பாடி குடோனுக்குப் போக வேண்டிய குட்ஸ் ரயில் கூட வரலை. 
இந்த ஏரியா தேர்தல் பொறுப்பாளரான மந்திரி மோகன் ரயில்வே மினிஸ்ட்ரி கிட்டேயே பேசி, நாமினேஷன் முடிஞ்சி சி.எம். திரும்புற வரைக்கும் எந்த குட்ஸையும் அனுப்பாதபடி செஞ்சிட்டாரு. 
சென்ட்ரல் கவர்ன்மெண்ட், எலெக்சன் கமிஷன் எல்லாம் அவங்க நினைச்சபடி நடக்குது"" .என்றனர்.
அது மட்டுமா?
 "ஜெயலலிதா  வேட்பு மனுத் தாக்கலுக்காக அலுவல கத்தையே புதுப்பொலிவாக மாற்றி அமைத்த வரலாற்றை முதன் முறையாகப் படைத்திருக்கிறது தேர்தல் ஆணையம் 
மாடியில் இருந்த தேர்தல் அதிகாரி சவுரிராஜனின் அறையை ஜெயலலிதாவுக்காக கீழே மாற்றினார்கள்.
 "இன்டீரியர்" வேலைப்பாடுகள் முதல்வரின் அறையை ஞாபகப் படுத்தின. அந்த சிறிய அறைக்குள் மூன்று புதிய ஸ்பிளிட் ஏ.சி. மிஷின்கள் போடப்பட்டிருந்தன.
 டேபிள், நாற்காலி எல்லாமே புத்தம் புதிசு. டிரே கூட ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் தான்!" 
இப்படி ஜெயலலிதாவுக்கு கூஜா தூக்கும் தேர்தல் ஆணையம் இருக்கும் வரை தேர்தலில் எதிர்கட்சிகள் வெல்ல  முடியுமா என்ன?
உட்கார்ந்த படியே வேட்பு மனுத்தாக்கலை பெற வெண்டிய அதிகாரி ஒவ்வொரு வேட்பாளரிடமும் எழுந்து நின்றே வாங்கினார்.
காரணம் ஜெயலலிதாவிடம் உட்கார்ந்து வாங்க முடியுமா என்ன.அந்த மரியாதைதான்.நெல்லுக்கான நீர் புல்லுக்கும் பாய்ந்துள்ளது.

ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து பத்து சதவிகிதத்திற்கும் குறைவு தான் என்று நீதிபதி குமாரசாமி தெரிவித்திருக்கிறார். 
ஆனால் "இந்து" நாளேடு அவர் ஒவ்வொரு முறை தேர்தலில் நிற்க வேட்பு மனு தாக்கல் செய்கிறபோதும், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காகிறது என்று எழுதியது. 

"டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடோ, "ஜெயலலிதாவின் வங்கியிருப்பு நான்கு ஆண்டுகளில் ஐந்து மடங்காகியுள்ளது" என்று தலைப்பிட்டுள்ளது. 
========================================================================
இந்த மாத்திரை தயாரிக்கப்பட்டது:04/2016.
காலாவதி நாள்:03/2018.
இந்திய மக்கள் நலனை ஆட்சியாளர்கள் பாதுகாக்கும் விதம் ரொம்ப நன்னாயிருக்கு.
மாத்திரை விலைகளை கூட்டும் சுகாதாரத்துறைக்கு இவைகளை கண்காணிக்க மட்டும் முடியாதா?
========================================================================
இன்று,
ஜூன்-14.

  • உலக வலைப்பதிவாளர் தினம்
  • சர்வதேச ரத்தம் வழங்குதல் தினம்
  • அமெரிக்க கொடி நாள்
  • ஆப்கானிஸ்தான் அன்னையர் தினம்
  • ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது(1962)


========================================================================