திங்கள், 22 ஜூன், 2015

உங்கள் செல்பேசி,உங்களுக்கான வசதி...,

மொபைல் போனில் இணைய இணைப்பினை மேற்கொள்கையில், பல வேளைகளில், தேவைப்படும் இணைய தளம் இறங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படும். 
இந்தியாவில், 20 கோடி மக்கள், இணைய இணைப்பினை, மொபைல் போன் வழியாக மேற்கொள்கின்றனர். 
ஒருவருக்கு ஒரு நொடி தாமதம் எனக் கணக்கிட்டாலும், அது பல ஆண்டுகள் வீணாவதற்குச் சமமாக இருக்கும். இதே நிலையே, வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும் இருக்கும் என கூகுள் கணக்கிட்டுள்ளது. 
இந்தியாவுடன், பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளையும் கூகுள் கணக்கில் கொண்டுள்ளது.
 எனவே, இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய செயலி ஒன்றை விரைவில், இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதனை கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டங்களை வடிவமைக்கும் பிரிவின் நிர்வாகி, ஹிராட்டோ டொகுசே தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த செயலியைத் தங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் பதிவு செய்துவிட்ட பின்னர், இணைய இணைப்பு செயல்பாட்டில் புதிய வேகத்தினைப் பயனாளர்கள் உணர்வார்கள் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். 
இதனை ஏற்கனவே சோதனை செய்து பார்த்ததில், 2ஜி இணைப்பில் கூட, இந்த செயலி, இணைய வேகத்தை 4 மடங்கு அதிகம் தந்ததாகத் தெரிகிறது. 
வேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி, இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் வாழும் மக்களுக்கு, இணைப்பினைத் தரும் முயற்சிகளையும் கூகுள் எடுத்து வருகிறது. 
இதன் Project Loon என்னும் திட்டத்தின் கீழ், மிக அதிக உயரத்தில், இணைய இணைப்பு தரும் சர்வர்கள் கொண்டுள்ள பலூன்கள் பறக்கவிடப்பட்டு, அதன் வழியாக, இணைப்பு தரப்படும். இந்த பலூன்கள் ஒரு நெட்வொர்க்காகச் செயல்படும். பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் உயரத்தில், stratosphere என அழைக்கப்படும் வளி மண்டலத்தில் இவை அமைக்கப்படும். 
அடுத்த ஆண்டு வாக்கில் இவை இந்தியாவில் அமைக்கப்படலாம் என கசிந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய இணைப்பினை வேகமாகத் தரும் முயற்சியில் ஏற்கனவே, பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் லைட் என்ற செயலியைத் தந்துள்ளது. 
அத்துடன் கூகுள் நிறுவனமும் தற்போது புதியதாக இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.

புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஐபோனுக்கு மாறிக் கொள்ள வகை செய்திடும் செயலி ஒன்றை Move to iOS என்ற பெயரில் தந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 
இதன் மூலம், வயர் இணைப்பு இல்லாமலேயே, பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம். Contacts, messages, photos, videos, mail, calendars , wallpapers and DRM-free music மற்றும் books ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ளலாம். 
இந்த செயலியை இயக்கினால், உங்களுடைய தற்போதைய ஆண்ட்ராய்ட் செயலிகளையும், ஐபோன் செயலிகளையும் ஒப்பீடு செய்கிறது. 
இலவச செயலிகள் அனைத்தும் தாமாகத் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. கட்டணம் செலுத்திப் பெற வேண்டியதை, அதற்கான வழிகளில் இறக்கம் செய்திட வேண்டும். 
இந்த செயலிகள் “ஐ ட்யூன்ஸ்” பிரிவில், இறக்கப்பட வேண்டி, விரும்பும் விஷயங்களாகப் பட்டியலிடப்பட்டுத் தயாராக இருக்கும்.
, ஒரே நேரத்தில் இரு செயலிகளை இயக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வீடியோக்கள் பார்த்துக்கொண்டே, இணையதளத்தில் விவரங்கள் தேடலாம். 

அதற்கு ஏற்றார் போல், திரை தானாகவே இரண்டாகப் பிரித்துக் கொள்ளப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஆப்பிளின் குரல்வழி உதவி அமைப்பான ‘சிரி’ செயலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த புதிய இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பணப்பரிமாற்றத்தை எளிமைப்படுத்த ஆப்பிள் பே மறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆப்பிள் செல்போனிலிருந்து, ஸ்மார்ட் வாட்சுக்கும் பணத்தை பரிமாற்றும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ.ஓ.எஸ்.9 இயங்குதளம் மெமரியில் குறைவான இடத்தையும், உயர்மட்ட பாதுகாப்பு வசதிகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.  குறைவான பேட்டரி பவரில் இயங்கும் தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த புதிய ஐ.ஓ.எஸ்.9 இயங்குதளம் சந்தையில் உடனடியாக விற்பனை கொண்டுவரப்பட்டுள்ளது .


தொலைபேசி, மொபைல் சேவை மற்றும் இணைய சேவைகளை வழங்கி வரும் பி.எஸ்.என்.எல், விரைவில் மொபைல் மணி பர்ஸ் (mobile wallet) சேவையினை வழங்க இருக்கிறது. 
இதற்கென ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதே போன்ற மற்ற சேவைத் திட்டங்களில் இருந்து இது வேறுபட்டிருக்கும். இதில் நாம் கட்டியுள்ள பணத்தை வர்த்தக நிறுவனங்களில் செலுத்தலாம் என்பது பொதுவான சேவை. 
ஆனால், பி.எஸ்.என்.எல். வழங்கும் இந்த சேவையில், மீதமிருக்கும் பணத்தில் ரொக்கமாகவும் பெற்றுக் கொள்ளலாம். 
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையங்களிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
 ஏ.டி.எம். கார்ட் இல்லாமல், எப்படி ஏ.டி.எம். மையங்களிலிருந்து பணத்தை, மொபைல் வாலட் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
 இவற்றுடன், ப்ரீ பெய்ட் கார்ட் ரீசார்ஜ், மொபைல் கட்டணம், திரைப்பட டிக்கட் பெறுதல், இணைய வர்த்தக தளங்களில் பொருட்கள் வாங்குதல் ஆகிய சேவைகளையும் மேற்கொள்ளலாம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் BSNL Buzz என்னும் சேவையையும் அறிமுகம் செய்திட உள்ளது. 
இது மொபைல் போன்களில் அறிவிப்பு வழங்கும் சேவையாகும். 
இதில் விளம்பரங்களை வழங்கி, விளம்பரங்கள் வழங்குவோரிடமிருந்து வருமானம் பெற பி.எஸ்.என்.எல். திட்டமிடுகிறது.
========================================================================
இன்று ,
ஜூன்-23.
  • பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
  • கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
  • புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
  • சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)

========================================================================
எகிறும் சர்க்கரை.

கட்டுக்கு கொண்டுவர..,

அதிக ஆற்றல் அளிக்கக்கூடிய காலை உணவு, மிதமான இரவு உணவு...
 இவை இரண்டும் உங்கள் ரத்த சர்க்கரை எகிறுவதைக் கட்டுப்படுத்த உதவும். அண்மைக்கால ஆய்வு முடிவு இது!

உலகில் 38 கோடிக்கும் அதிக மக்கள் நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 
பெரும்பாலும் டைப் 2 டயாபடீஸ்.
உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை அளவு அதீதமாக அதிகரிக்குமானால், அது இதயம் உள்பட பல உறுப்புகளின் பிரச்னைகளுக்கு வித்திட்டு, வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும்.
 இந்நிலையில் உணவு மூலமே ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அதிக கலோரி காலை உணவும் குறைந்த கலோரி இரவு உணவும் இணையும் போது, அது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. 
மருத்துவ ரீதியாகச் சொல்வதானால், முறையான உணவே ரத்த பிளாஸ்மாவில் அதிக குளுக்கோஸ் கலக்கும் Hyperglycaemia என்கிற நிலையைக் குறைக்கிறது.

(Hypoglycemia என்பது தாழ்நிலை சர்க்கரை. மேலே கூறியதற்கு நேர் எதிர் நிலை. இதையும் அதையும் குழப்ப வேண்டாம்!)

‘‘காலை உணவில் அதிக கலோரி இருந்தாலும், ஓரளவே குளுக்கோஸ் அதிகரிக்கிறது. இரவு உணவில் குறைவான கலோரி இருந்தாலும் கூட, அதிக குளுக்கோஸ் உருவாகிறது.
 இதன் செயல்பாடு நாள் முழுக்கத் தொடர்கிறது’’ என்கின்றனர் டெல் அவிவ் விஞ்ஞானிகள். 30-70 வயதுடைய இருபாலரிடமும் தொடர்ச்சியாக இச்சோதனை நிகழ்த்தப்பட்டது.
 முதல் குழுவுக்கு அதிக கலோரி காலை உணவும்  குறைந்த கலோரி இரவு உணவும் வழங்கப்பட்டது.

(காலை உணவு: 704, மதிய உணவு: 603, இரவு உணவு: 205...  கிலோ கலோரி அளவீடு படி)
இரண்டாம் குழுவுக்கு குறைந்த கலோரி காலை உணவும் அதிக கலோரி இரவு உணவும் வழங்கப்பட்டது.

(காலை உணவு: 205, மதிய உணவு: 603, இரவு உணவு: 704...  கிலோ கலோரி அளவீடு படி) அதாவது,  இரு குழுக்களுக்கும் காலை உணவும் இரவு உணவும் முறையே மாற்றி வழங்கப்பட்டது. 

காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் உட்கொண்ட முதல் குழுவுக்கு குளுக்கோஸ் அளவு 20 சதவிகிதம் குறைந்து காணப்பட்டது. அதோடு, இன்சுலின், ஏ மற்றும் பி இன்சுலின் சங்கிலிகளை இணைத்து அதன் சீரிய செயல்பாட்டுக்கு உதவும் C-peptide என்கிற அமினோ அமிலம், இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற GLP-1 எனும் ஹார்மோன் ஆகியவற்றின் அளவும் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
காலையில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் உட்கொண்ட இரண்டாம் குழுவுக்கு இந்த நற்பலன் கிட்டவில்லை. 
அதோடு, மதிய உணவுக்குப் பின் இக்குழுவின் ரத்த சர்க்கரையானது, முதல் குழுவை விட, 23 சதவிகிதம் அதிகம் இருந்தது.இரண்டு குழுக்களும் ஒட்டுமொத்தத்தில் ஒரே அளவு கலோரிதான் எடுத்துக் கொண்டனர். 
ஆனால், எப்போது, எவ்வளவு சாப்பிட்டார்கள் என்பதில்தான் இந்த அதிரடி மாற்றமே!
ஆரோக்கிய உணவே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை. அதிலும் குறிப்பாக நீரிழிவாளர்களுக்கு உணவே ஓரளவு மருந்தும் கூட. மேலே பகிர்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வு கூறுவதும் அதைத்தானே? 
அனைத்து ஊட்டச்சத்துகளையும் சரியான அளவீட்டில் அளிப்பதுதான் ஹெல்த்தி டயட். நமது உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளையும் அளிக்கக்கூடிய ஒரே ஓர் உணவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 
அதனாலேயே நாம் வெரைட்டியாக சாப்பிட வேண்டி இருக்கிறது!

நமது உடலுக்கு எவ்வளவு கலோரி தேவைப்படுகிறது, என்னென்ன ஊட்டச்சத்துகள் அவசியம் ஆகியவற்றைப் பொறுத்தே, மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணரும் உணவுத் திட்டத்தைப் பரிந்துரைக்கிறார்கள்.
  நமது உடல் தேவையின் அடிப்படையில் ஊட்டச்சத்துகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. 
உடலுக்கு அதிக அளவு தேவைப்படும் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரோட்டீன் (புரதம்), ஃபேட் (கொழுப்பு) ஆகியவை மேக்ரோநியூட்ரியன்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. 

வைட்டமின்களும், மினரல்களும் (தாதுக்கள்) உடலுக்குக் குறிப்பிட்ட அளவே தேவை. இவை மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவை மிகக்குறைந்த அளவுதான் தேவை என்றாலும், மிகமிக முக்கியமானவை. 
உணவுத் திட்டத்தைப் புரிந்துகொள்வதற்கு, இந்த ஊட்டச்சத்துகள் பற்றியும் அறிந்துகொள்வது அவசியம். 

கார்போஹைட்ரேட்  தினசரி செயல்பாடுகள் புரிய நமது உடலுக்கு முதன்மை ஆற்றல் மூலமாகத் திகழ்வது இதுதான். 
வேதி அமைப்பின் படி, இது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ் என இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. நீரிழிவாளர்களுக்கு காம்ப்ளக்ஸ் வகையே உகந்தது. ஏனெனில், இவை மெதுவாக உடைவதால், ரத்த சர்க்கரை அளவும் மெல்ல மெல்லத்தான் உயரும். சிம்பிள் வகையை விட, இது இன்னொரு விதத்திலும் சிறந்தது. சக்தியோடு, வைட்டமின், மினரல், ஃபைபர் (நார்ச்சத்து) ஆகியவற்றையும் அளிப்பதே காரணம். 
தானிய / சிறுதானிய வகைகள், அரிசி மற்றும் சில காய்கறிகள், பழங்களில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மிகுதியாகக் காணப்படுகிறது. நீரிழிவாளர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் போது, அதன் அளவு மிக முக்கியம். 
இவை சத்துகளை அள்ளித் தந்தாலும், ரத்த சர்க்கரையையும் எகிறச் செய்யுமே!

புரோட்டீன் கடினமாக உழைக்கும் தசைகள், உறுப்புகள் மற்றும் திசுக்களை கட்டமைக்கவும் பழுதுபார்க்கவும் உதவுபவை புரோட்டீன் எனும் புரதச்சத்தே. மீன், கோழி, இறைச்சி ஆகியவற்றில் இச்சத்து மிகுந்து காணப்படுகிறது. முட்டையிலும் புரதம் ஏராளம். 
வெஜிடேரியன்கள் கவலைப்பட வேண்டாம்... தினை போன்ற சிறுதானியங்கள், கிரீன்பீஸ் (பச்சைப் பட்டாணி), பாதாம் போன்ற நட்ஸ் வகைகள், பீன்ஸ், சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை, டோஃபு, பச்சை இலைக் காய்கறிகள், எள், கசகசா, பூசணி விதை, பால், சோயா மில்க், சீஸ், பீனட் பட்டர் உள்பட புரதம் நிறைந்த உணவுகள் பல உள்ளன. 

உடலுக்குப் போதுமான கார்போஹைட்ரேட் கிடைக்காத போது, புரதமே உடைக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. 
நம் ஆற்றலில் 10-20 சதவிகிதம் புரதச்சத்து மூலமே பெறப்படுகிறது. புரத உணவுகளை அதிக கொழுப்பு இல்லாதவையாகத் தேர்வு செய்வது அவசியம்.

ஃபேட் உடலியலுக்கு அவசியமான திசுக்களையும் ஹார்மோன்களையும் உருவாக்கித் தருவது ஃபேட் எனும் கொழுப்புச்சத்தின் பணியே. எண்ணெய், நட்ஸ் வகைகள், வெண்ணெய் உள்பட பல பொருட்களிலிருந்து கொழுப்பு கிடைக்கிறது. ‘அளவுக்கு மிஞ்சினால்  அமிர்தமும் நஞ்சு’ என்பது கொழுப்புக்குத்தான் ரொம்பவே பொருந்தும். 
உணவில் கொழுப்புச்சத்து அதிகமாவது பல பிரச்னைகளுக்கு அடிகோலும். சில கொழுப்பு வகைகள் ஆரோக்கியத்துக்கு உதவும்தான். 
ஆனால், எல்லா கொழுப்பும் நல்ல கொழுப்பல்ல!

சுகர் ஃப்ரீ என விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை தாராளமாகச் சாப்பிடலாமா சுகர் ஃப்ரீ என விளம்பரப்படுத்தப்படுகிற எல்லாமும் ஆரோக்கியமானவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 
அவற்றிலும் கலோரி, கார்போஹைட்ரேட், எக்ஸ்ட்ரா கொழுப்பு எல்லாம் இருக்கக்கூடும். உண்மையில் சில சுகர் ஃப்ரீ பொருட்களில், அதன் ஒரிஜினலில் உள்ள அதே அளவு கலோரி உள்ளது. 
ஆகவே விளம்பர வார்த்தைகளில் மயங்க வேண்டாம்!
நன்றி:தினகரன்.
========================================================================