புதன், 26 ஆகஸ்ட், 2015

தேர்தல் ஆணையத்துக்குதான் கேவலம்இந்திய தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. 
அதன் நடவடிக்கையில் யாரும் தலையிட முடியாது என்று காலம் காலமாக ஆளும்  கட்சியாக இருப்பவர்கள் அடித்து சொல்கின்றனர். 
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை  ஆளும் கட்சி அதிலும் குறிப்பாக அதிமுக என்ன சொல்கிறதோ அதைதான் தேர்தல் ஆணையம் செய்கிறது என்று  சாதாரண பாமரனும் டீக் கடையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை கேட்கலாம். 
திமுக ஆட்சிக்காலத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரவீன்குமார் செயல்பட்டதாக அதிகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
தற்போது  தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை  செம்மைப்படுத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 

இந்த பணியின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையம் மீது  பகிரங்கமாகவே புகார் கூறி வருகின்றன. 
வாக்காளர் பட்டியலில் எதிர்க்கட்சியினர் பெயர்களை ஆளுங்கட்சியினர் உதவியுடன் தேர்தல் அதிகாரிகளே  நீக்கியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இதுபற்றி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆதாரத்துடன் டெல்லி மற்றும் சென்னையில்  உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை என்பது முட்டைதான்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2016ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. அதன்படி பார்த்தால், தேர்தலுக்கு இன்னும் 7  அல்லது 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த இடைப்பட்ட கொஞ்ச நாட்களில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க முடியுமா அல்லது  தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுமா? என்ற குற்றச்சாட்டை தமிழக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் மீது  வைத்துள்ளனர்.
மற்ற கட்சிகளுடன் கூட்டு சேராத ஜெயலலிதா தேர்தல் ஆணையத்துடனும்,காவல்துறையுடனும் கூட்டணி வைத்துள்ளார்.வரும் தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்குமானால் எதிர் கட்சிகள் எவ்வாளவுதான் உழைத்தாலும் வெற்றி கானல் நீர்தான் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து.
அதைத்தான் கடந்த மக்களவைத் தேர்தலும் இன்றைய ஆர்.கே நகர் இடைத்தேர்தலும் சொல்லுகின்றன.

ஆளும்கட்சியின் ஆதிக்கம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக திடீரென பக்கம் பக்கமாக அதிமுக அரசு சாதனை விளம்பரம் வெளியிடுகிறது. 
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு  முன்னதாக வெற்றிவேல் திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார். 
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிறகு, தொகுதி காலியாக  இருப்பது குறித்த அறிக்கையை சட்டப்பேரவை செயலகம் அனுப்ப பல மாத அவகாசம் எடுத்து கொள்கிறது. 
அதே சமயம், வெற்றிவேல்  ராஜினாமாவை அடுத்த சில மணிநேரத்தில் சட்டபேரவை செயலகம் அனுப்புகிறது. 
அதை உடனே தமிழக தேர்தல் அதிகாரிகள் இந்திய தேர்தல்  அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர். உடனே  இடைத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. 
இந்த ஒரு விஷயமே.. தேர்தல் ஆணையத்தில் ஆளும்  கட்சியின் ஆதிக்கம் ஓங்கி இருப்பதற்கு சாட்சி என்கின்றனர் பொதுமக்கள்.

நிறக்குருடர்களாக அதிகாரிகள்
மாலை நேரமானால் கண் தெரியாமல் சிலர் அவதிப்படுவார்கள். சிலருக்கு வண்ணம் தெரியாது. இவை பிறப்பின் குறைபாடுகள். 
ஆனால்,  பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாக்கு பதிவின்போதும், வாக்கு பட்டியல் தயாரிப்பின்போதும் அளிக்கும் தகவல்கள் தேர்தல்  ஆணையத்திடம் போகிறது. அதன் ஒரு நகல் அல்லது அது குறித்த தகவல் ஆளும் அதிகார மையத்துக்கு செல்கிறது. பத்திரிகையில் பக்கம் பக்கமாக  ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது சாலை சீரமைப்பு, கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டன. 
இது குறித்து எதிர்கட்சிகள் தேர்தல்  ஆணையத்திடம் புகார் அளித்தன. ஆனால், இன்றுவரை அதன்மீது நடவடிக்கை எதுவுமே இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

ஆளும் கட்சியினர் விண்ணப்பம் பதுக்கல்
வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் வழங்கும் படிவங்கள் ஒருவருக்கு ஒன்றுதான் வழங்க வேண்டும்.  ஆனால், ஆளும் கட்சியினருடன் கைகோர்க்கும் தேர்தல் அதிகாரிகளில் சிலர், மொத்த படிவங்களை ஆளும் கட்சியின் பிரமுகர்களிடம் கட்டுகட்டாக  வழங்கி விடுகின்றனர். 
அவர்கள் அந்த படிவங்களை வாங்கிச் சென்று பதுக்கி விடுகின்றனர். ஆளும் கட்சி ஆதரவு மற்றும் ஆளும் கட்சி அனுதாபிகள்  என்று தெரிந்தால் மட்டுமே விண்ணப்பங்களை தருகின்றனர். 
இதனால் தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிடுகின்றனர்.  மற்றவர்களுக்கு விண்ணப்பம் இல்லை என்று கூறி நிராகரித்து விடுகின்றனர்.

அதிகாரிகள் கூட்டணி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பொதுமக்கள் தொடர்புடைய அதிகாரிகளிடம் அளிக்கின்றனர். ஆனால், அவர்கள் அதில் ஆளும் கட்சிக்கு  நெருக்கமானவர்கள் கொடுக்கும் மொத்தம் விண்ணப்பங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிடுகின்றனர். தனி  நபர்களின் விண்ணப்பங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. 
இதனால் தேர்தல் நேரத்தில் வாக்களிக்க முடியாமல் செல்கிறது.

போலி கையெழுத்தில் பெயர் நீக்கம்
வாக்காளர் விண்ணப்பத்தில் பெயர் நீக்கம் செய்யக்கோரும் விண்ணப்பத்தை ஆளும் கட்சி பிரமுகர்களில் சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.  
குறிப்பாக தங்களுக்கு வேண்டாத அல்லது வேறு கட்சிகளை சேர்ந்தவர்களின் பெயர்களில் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படுகிறது. 
அதில் நான் வேறு  தொகுதிக்கு மாறிவிட்டதாகவும் தன் பெயரை தற்போதையை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று போலி கையெழுத்து போட்டு  சமர்பிக்கப்படுகிறது. 
அதன் அடிப்படையில் உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பே வாக்காளர்களிடம் ‘டீல்’
தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற குளறுபடிகளை தங்களது சாதகமாக்கிக் கொள்ள ஆளும்கட்சியினர் இப்போதே தயாராகி விட்டார்கள் என்றே  கூறப்படுகிறது. 
அதன்படி, ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 64 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களிலும் தனித்தனி  பொறுப்பாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதுபோன்று மக்களை தனித்தனியாக சந்திக்க ஆளுங்கட்சி முயற்சி செய்வதில் ஏதோ உள்நோக்கம்  இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் பணம் அல்லது அன்பளிப்புகளை வழங்க முடியாத சூழ்நிலை  ஏற்படலாம் என்பதால் இப்போது வாக்காளருக்கு லஞ்சம் கொடுப்பதை கொடுத்து கணக்கெடுக்கலாம்ர என தெரிகிறது.
கள்ளஓட்டு எப்படி?
தேர்தல் சமயத்தில் அதிகாரிகளின் துணையுடன் ஆளும் கட்சியினர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை பதிவு செய்கின்றனர். 
குறிப்பாக எந்த  வாக்குசாவடிக்கு எந்த அதிகாரி வரப்போகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் அரசியல் கட்சிகள், உடனே அந்த நபர் குறித்த  தகவல்களை சேகரிக்கின்றனர். 
அவரை மது, மாது, பணம், டிரான்ஸ்பர், பனிஷ்மென்ட் ஆகியவற்றை கூறி மடக்குகின்றனர். 

அதனால் ஒரு நபரே பல ஓட்டுகளை போடுகின்றனர்.
 ஆர். கே .நகர் தேர்தலில் ஒவ்வொரு நபரும் 10 ஓட்டுகளை ஒரு பூத்தில் போட்டுள்ளதாக  கூறப்படுகிறது. 


அப்படி போடும் நபர்களுக்கு கட்சியில் பதவி மற்றும் ஒரு ஓட்டுக்கு ரூ. 500 வரை வழங்கப்படுகிறது. தங்கள் விருப்பப்படி ஓட்டுபோடச்  செல்லும் நபர்களின் ஓட்டு ஏற்கனவே பதிவாகி இருக்கும் என்பது அதிர்ச்சியான விஷயம். 
அதனால் தான் அங்கு உள்ள மொத்த வாக்குகளை விட அதிகமாக 300 வாக்குகள் பதிவான கூத்து நடந்தது.அதற்கு அந்த வாக்கு சாவடி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தேர்தல் ஆணையம் சொல்லி பல மாதங்களாகி விட்டன.ஆனால் ஒன்று நடக்க வில்லை.மேலிட உத்திரவுப்படித்தானே அவர் நடந்துள்ளார்.அப்படி நடவடிக்கை எடுப்பவர்கள்.அங்கு இருந்த காமிராவில் பதிவான படத்தை வைத்து கள்ள வாக்குகளை பதிவு செய்த நபர்களை பிடித்து உள்ளே  தள்ள வேண்டும் அல்லவா?ஆனால் இங்கு பணம் கொடுத்ததாகவும் கள்ள வாக்கு பதிவு செய்ததாகவும் திமுகவினர் மீது மட்டும்தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் நியாயமாக தேர்தல் நடக்காது என்று எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பது ஆளுங்க்கட்சிக்கல்ல அவமானம் கையாலாக தேர்தல் ஆணையம் அதிமுகவின் கையாளாக உள்ளது என்றுதான் அர்த்தம் .
அது தேர்தல் ஆணையத்துக்குதான் கேவலம்,அசிங்கம்.
நக்கீரன் வார இதழில் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத மற்ற சென்னை பகுதி கவுன்சிலர்கள்,எம்,எல்,ஏக்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் வாக்களித்து வருவதை படத்துடன் பிரசுரம் செய்தார்களே அதை வைத்து நடவடிக்கை எடுக்க வில்லையே ஏன் ?அந்த படங்களுடன் எதிர்கட்சியினர் தீர்த்தல் ஆணையரிடம் மனு கொடுத்தனரே அதன் மீது சக்சேனா எடுத்த நடவடிக்கை என்ன?
ஆக தேர்தல் ஆணையராக மாநிலங்களில் நியமிக்கப்படுபவர்களை தேர்தல் ஆணையமே மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நியாயமானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்வதுதான் கொஞ்சமாவது நடு நிலை இருக்க வாய்ப்பை எற்படுத்தும்.
                                                                                                                                     நன்றி:தினகரன்.


========================================================================
நடுமூளை செயலாக்கம்
பிள்ளையார் சிலை பால் குடிப்பது, ஏசு சிலை கண்ணீர் வடிப்பது, பெண்ணின் சகோதரர்கள் பச்சைப் புடவை வாங்கித்தருவது போன்ற அறிவியலுக்குப் புறம்பான பல்வேறு மூட நம்பிக்கைகள் அவ்வப்போது  கிளப்பிவிடப்படுகின்றன. 
குறிப்பிட்ட நாளில் நகை வாங்கினால் அது பெருகும் என்பது போன்ற நம்பிக்கைகள் தொடர்கின்றன. அறிவியலுக்குப் புறம்பான இப்படிப்பட்ட நம்பிக்கைள் ஒரு புறம் இருக்க தற்போது , அறிவியலின் பெயராலேயே ஒரு புதிய மூட நம்பிக்கை தற்போது பரப்பப்படுகிறது.
பொதுவாகப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிற மனநிலையைப் பயன்படுத்திக்கொண்டு செய்யப்படுகிற இந்தப் புதிய மோசடி, தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் தொடங்கியிருக்கிறது.நடுமூளை செயலாக்கம்(மிட்பிரைன் ஆக்டிவேசன்) என்பதாக இந்த மோசடிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மூளைத்திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சியகங்கள் போல தொடங்கப்பட்டு, சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு 10 நாட்கள் அல்லது 15 நாட்கள் பயிற்சி என்ற பெயரில் குறைந்த அளவு  ரூ.25,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மனித மூளையின் இடப்பகுதி, வலப்பகுதி இரண்டுக்கும் இடையில் உள்ள நடுமூளைப் பகுதி இயக்கப்படுவதாகவும், அது செயல்படுகிறபோது கண்ணைக்கட்டிக்கொண்டு கூட படிக்கிற ஆற்றல் ஏற்பட்டுவிடுகிறது என்றும், படிக்கிற பாடங்கள் நன்றாகப் பதிவாவதால் தேர்வுகளிலும் போட்டிகளிலும் குழந்தைகள் சிறப்பாக சாதிக்க முடியும் என்றும் அந்த மோசடி நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன.
“இதை நம்பி இந்த நிறுவனங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு உண்மையில் பொய் சொல்வதற்கே கற்றுத்தரப்படுகிறது,” என்கிறார் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐஆர்ஏ) தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக். 
“கண்ணைக் கட்டிக்கொண்டு எதிரே உள்ள பொருள்கள் என்ன என்று சொல்வதைப் போன்ற, சாலையில் இருசக்கர வண்டி ஓட்டுவது போன்ற ஒரு ‘மாஜிக்’ தொழில்நுட்பம்தான் இது. உண்மையிலேயே கண்ணைக் கட்டிக்கொண்டு படிக்கலாம் என்றால் இருட்டறையிலும் படிப்பது சாத்தியமாக வேண்டும். ஆனால் அப்படி செய்துகாட்ட இந்த நிறுவனங்கள் தயாராக இல்லை,.கண்ணைக் கட்டிக்கொண்டு பொருள்களை சரியாகக் கூறுவது எப்படி என்று  மாஜிக் கலைஞர் அருண் கூறி அதை செய்தும் நிகழ்த்திக்காட்டினார். 
உண்மையில் நடுமூளைப் பகுதி ஒருங்கிணைப்புப் பணியை மட்டுமே செய்கிறது. 
அதற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருப்பதாக உலகின் எந்தப் பகுதியிலும் அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்லவில்லை .
இந்தப் பயிற்சியைப் பெறுகிற குழந்தைகளிடம், “உன் மூளையில் ஒரு அற்புத சக்தியைக் கொண்டு வந்திருக்கிறோம். இதைப் பற்றி உன் பெற்றோர் உட்பட யாரிடம் சொன்னாலும் அந்த சக்தி செயல்படாமல் போய்விடும்,” என்று சொல்லி அச்சுறுத்துகிறார்கள். 
ஆகவே அந்தக் குழந்தைகள் பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் பொய்சொல்வதற்குத்தான் பயிற்சியளிக்கப்படுகிறது. 
இது குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது, விமானங்கள் இருந்தன என்பன போன்ற தவறான கருத்துகளை பிரதமர் மோடி உட்பட அமைச்சர்கள்  பேசுகின்றன.
 தமிழகத்தில் அமைச்சர்களோ தீச்சட்டி,மண்சோறு ,அலகு குத்தல் ,யாகம் வளர்த்தல் என்று திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கையான பகுத்தறிவுக்கு எதிராக  மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கிறார்கள். 
ஆகவே இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு இப்படிப்பட்ட அரசுகள் முழு ஒத்துழைப்பு தருகிறது  .
இல்லையேல் இது போன்ற மூளையை வைத்து ஏமாற்றிவரும் நிறுவனங்கள் மீது  அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு வேறு  காரணம் இருக்கப் போவதில்லை
இந்த நிறுவனங்களை நடத்துவோர் யார் வேண்டுமானாலும் ரூ.50,000 உறுதித்தொகை செலுத்தட்டும். தாங்கள் சொல்வது அறிவியல்பூர்வமானது என்று அவர்கள் நிறுவுவார்களானால் அந்த இடத்திலேயே ரூ.5 லட்சம் வழங்க தயார் என்று அறிவியல் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.அதற்கு இந்த மூளை வளர்ச்சி நிறுவங்கள் இதுவரை பதில்  சொல்ல வில்லை.
தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மோசடிக்குத் தடைவிதிக்கக் கோரி பொது நல வழக்கும்  தொடரப்பட்டுள்ளது. 
அந்த விசாரணை வழக்கம் போல் மெதுவாகவே நடைபெறுகிறது. 
எனினும் தோழமை அமைப்புகளின் துணையோடு பள்ளிகளிலும் மக்களிடையேயும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
========================================================================
உலகின் அதிவேக 

சூப்பர் கம்ப்யூட்டர் தியான்கே-2

உலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2.சீனாவின் தியான்கே-2 
 உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு கடந்த ஜூலை மாதம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் நடைபெற்றது. 
இதில் உலகின் அதிவேக கணினியின் பட்டியலை லிப்னக்என்ற அளவுகோல் கொண்ட சிறந்த 500 திட்டங்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. 
இதில் சீனாவின் மீத்திறன் கணினியான தியான்கே-2 தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.
தியான்கே 2தமிழில் பால்வழி என்ற மீத்திறன் கணினி 33.86 ஐம்மதிப்பு புள்ளிச் செயல்பாடுகள் கொண்டது. 
அதாவது ஒரு வினாடியில் 33,860 ட்ரில்லியன் கணித்தல்களைச் செய்யக்கூடியது.
இது சன் யாட் சென் பல்கலைக்கழகமும், குவாங்ஜோகு மாகாண நிர்வாகக்குழு ஒத்துழைப்புடன் 1300 பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 
இம்மீத்திறன் கணினியானது 3.12 மில்லியன் ப்ராசசர் இணைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் கட்டமைப்புக்கு இன்டெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஐவி பிரிட்ஜ் மற்றும் சியோன் பி ஆகிய கம்ப்யூட்டர் சில்லுகள் பயன்படுத்தப்படுகிறது. 
இது முற்றிலும் லினக்ஸ் இயங்குதளத்தில் செயல்படுகின்றது. இதில் மேம்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலம் 54.9 ஐம்மதிப்பு புள்ளிச் செயல்பாடு வரை தியான்கே-2 கணினியால் அதிகரிக்க முடியும்.
லினக்ஸ் வகை இயங்குதளமான கைலின் மூலம் இயக்கப்படவிருக்கும் தியான்கே-2 மீத்திறன் கணினி, இதற்கு முன்னர் உலகின் அதிவேகக் கணினியாக இருந்த அமெரிக்காவின் டைட்டான் மீத்திறன் கணினியைப் போல் ஏறத்தாழ இரண்டு மடங்கு வேகமுடையது. 
அமெரிக்க சக்திவளத்துறையினரால் பயன்படுத்தப்படும் டைட்டான் மீத்திறன் கணினியின் உச்சபட்ச செயற்பாட்டுத் திறன் 17.59 ஐம்மதிப்பு புள்ளிச் செயல்பாடு ஆகும்.
தியான்கே-2 மீத்திறன் கணினியானது குவான்சு நகரிலுள்ள தேசிய மீத்திறன் கணினி நிர்வாகத்தில் நிறுவப்பட்டு தென்சீனாவின் கல்வி மற்றும் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
மாநாட்டில் இடம்பெற்ற சுமார் 500 மீத்திறன் கணினிகளில் 485 கணினிகள் லினக்ஸ் இயங்குதளத்தில் இயங்குகின்றன.மீத்திறன் கணினிகளில் 97 சதவிகிதம் லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது. 
மீதம் உள்ள 3 சதவிகிதம் யுனிக்ஸ்  மற்றும் விண்டோஸ் மூலம் இயங்குகின்றது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்ற அமெரிக்கா 233 கணினிகள் கொண்டு முதல் இடத்திலும், ஐரோப்பிய நாடுகள் 141 கணினிகள் கொண்டு இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. 
சீனா தொடர்ந்து முதல் இடத்தை பிடித்தாலும் 3 புதிய கணினிகளுடன் 61 கணினிகளிலிருந்து 37 ஆக குறைந்துள்ளது. 
11 கணினிகளுடன் இந்தியா இடம் பெற்று உள்ளது. 
இதில் 79 வது இடத்தை இந்திய அறிவியல் கழகத்திலுள்ள மீத்திறன் கணினி பிடித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உலகின் அதிவேக கணினியை தயாரிக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார். 
இதன் படி சீனாவின் தியான்கே-2 யை விட ஆற்றல் உடையதாக இருக்கும் என்றும் 2025 ஆம் ஆண்டின் மீத்திறன் கணினியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
                                                                                                                                                                                       - சிந்துஜா சுந்தரராஜ்

========================================================================
இன்று,
ஆகஸ்ட்-26.

  • அமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்
  • புனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்(1910)
  • தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)
  • அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)பெண்ணை கொலை மிரட்டல் மிரட்டி பணம் பறித்தவன்,நிலம் பறித்தவ் அமைச்சராக இருக்கிறான்.ஆனால் மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தியதால் சிறையில் அடைக்கப்பட்ட மாணவ, மாணவிகள் இன்று வரை விடுதலை செய்யப்பட வில்லை.
எப்போது கிடைக்கும் விடுதலை...?


========================================================================