சொத்துக் குவிப்பு குமாரசாமி!
"சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, விதிமுறைகளை மீறி, பெங்களூருவிலும், மைசூருவிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றும் மனு வழங்கியுள்ளனர்.
தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து, 'கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊழலுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, கடந்த, 24ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீது, சொத்து குவிப்பு புகார் கிளம்பி உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குமாரசாமியிடம் விசாரணை நடத்த உத்தர விடும்படி, ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே அமைப்பின் தலைவர் ராமலிங்க ரெட்டி, புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
*கடந்த, 1997ல், குமாரசாமி, கோலார் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியபோது, கர்நாடக வீட்டு வசதி வாரியம், கெங்கேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ஒதுக்கியது.
* பல்லாரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றிய போது, கெங்கேரி பிளாட் ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதற்கு பதிலாக, மைசூருவில், தனி வீடு ஒன்றை பெற்று உள்ளார்.
* கர்நாடக மாநில காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தில், முதல் பிரிவு உதவியாளராக பணியாற்றி வந்த குமாரசாமி மனைவி நாகரத்தினம்மா, பி.டி.ஏ.,வுக்கு விண்ணப்பித்த போது, தன் கணவர் பெயரில் உள்ள வீடு குறித்த தகவல்கள் எதையும் குறிப்பிடவில்லை. இதனால், பி.டி.ஏ., அதிகாரிகள் வீட்டு மனை ஒதுக்கீடு செய்தனர்.
சொத்து குவிப்பு விடுவித்தவரே ? |
* குமாரசாமி, தானாக முன்வந்து, தன் சொத்து விவரங்களை, கர்நாடக உயர் நீதிமன்ற
வெப்சைட்டில் வெளியிட்டபோது, குமார பார்க் மேற்கு பகுதியில் உள்ள போலஸ்குட்டஹள்ளியில் உள்ள, 'திவ்யா மேனர் அபார்ட்மென்ட்'டில், 29.47 லட்சம் ரூபாய்க்கு, பிளாட் ஒன்றை வாங்கியதாக தெரிவித்தார்.
மேலும், 2006ல், ஜூடிஷியல் ஊழியர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் மூலமாக, சிவநகர் ஜூடிஷியல் லே அவுட்டில், 4,000 சதுர அடி கொண்ட வீட்டுமனை பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
* பெங்களூரு உட்பட, பல இடங்களில், அசையா சொத்துகளை வாங்கியதோடு, அதை மறைத்ததற்கான தகவல்களை, நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றுள்ளோம்.
குமாரசாமியும், அவரது மனைவியும் பெங்களூரு, மைசூருவில் வாங்கியுள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்துவதோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
முன்பு நமது சுரனில் வெளியான செய்தி:
“ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள அவர் அதில் சரிபாதி வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்கு களிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கியுள்ளார்.
இதற்கு உதாரணமாக முத்திரைத்தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பி.டி. பருத்தி போன்ற வழக்குகளை கூறலாம். அதே போல நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ‘தலித் படுகொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை’ எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.
வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிற குமாரசாமி மீது இதுவரை பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இரு வீடுகள் பெற்றதாக புகார் எழுந்தது. அப்போது இவருடன் சர்ச்சையில் இடம்பிடித்த ஹெச்.எல். தத்து, குமாரசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.”
========================================================================
இன்று,ஆகஸ்ட்-28.
- வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
- ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
- குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
- சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
- காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)
========================================================================
உலகம் அறியாத ஒன்று!
59 வருடங்களுக்கு முன் இந்தியாவில், உலகத்தில் எவருமே அறியாமல் எட்டுபேர் கொண்ட குழு மட்டுமே அறிந்த ஒன்று நடந்தது.
ஆம்!
இந்திய அரசாங்கத்தின் முடிவு, ஆயுள்இன்சூரன்சை தேச உடமையாக்கும் முடிவு, மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது.இதனை நடைமுறைப்படுத்த தேவையான அவசரச் சட்டம் மிக மிக ரகசியமாக தயாரிக்கப்பட்டது.திறமையாக, எந்த சிக்கலும் ஏற்படாததாக, பார்த்துப்பார்த்து கவனமாக அமல்படுத்த திட்டம் தீட்டப்பட்டது.
அன்று இதனைச் சாதித்த நிதி அமைச்சர் சி.டி .தேஷ்முக், தன்னுடைய வரலாற்று நூலில் இதனை குறிப்பிடுகிறார்:“நான் எச்.எம் படேலை, வர்த்தக அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை சந்திக்க அனுப்பினேன்.
அவருடைய சம்மதத்தை பெற -பிரதமரின் ஆமோதிப்பை பெற-அகில இந்திய ரேடியோவின் டைரக்டர் ஜெனரல் மூலமாக இன்று இரவு நிதியமைச்சர் நாட்டுமக்களுக்குஒரு அறிவிப்பு செய்யவிருக்கிறார் என்று செய்தி சொல்ல !
என்ன சொல்லவிருக்கிறேன் என்பதை டைரக்டர் ஜெனரலுக்கும் சொல்லவேண்டாமென்று கூறிவிட்டேன்.”அன்று இரவு ஒரு அவசரச் சட்டம் தயாராக இருந்தது.
அன்று இரவு அது கையெழுத்தாயிற்று. மறுநாள் காலை 9 மணிக்கு இதற்காக பொறுக்கி எடுக்கப்பட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அதிகார உத்தரவைக் காட்டி அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆயுள் இன்சூரன்ஸ் தேச உடமையாக்கப்பட்டது. இது இந்திய அரசாங்கத்தால் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட, இனி எப்போதும் நடத்த முடியாத சம்பவமாகும்.
ஏன் இவ்வளவு ரகசியம்?
முன்னமேயே தெரிந்திருந்தால், கோடிக்கணக்கான ரூபாய் கம்பெனி பணத்தை முதலாளிமார்கள் தங்கள் சொந்த வங்கிக் கணக்கிற்குமாற்றிவிடுவார்கள் என்பதுதான் காரணம்.
எச்.எம்.படேல், பி.கே.கவுல், எ.ராஜகோபாலன் ஆகிய மூவரும்தான் தளபதியாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்கு உதவியாக வையாபுரி, எம்.ஐ.ராவ் ஆகியோர் இருந்தனர். இந்த நடவடிக்கையை அமைச்சரவையின் ஆமோதிப்புக்காக வைக்கவில்லை.
பிரதமரிடம் மட்டும் சொல்லிவிட்டு -அதுவும் தேதி குறிப்பிடாமல் சொல்லிவிட்டு செய்தார்கள் !
பல்வேறு துறையைச் சேர்ந்த 47 அதிகாரிகளை முக்கிய நகரங்களுக்கு 17ம்தேதியே அனுப்பினார்கள். அவர்களுக்கு ஏன் செல்கிறோம், என்பதைச் சொல்லவில்லை.
அவர்களிடம் சீல் வைக்கப்பட்ட கவர்கள் கொடுக்கப்பட்டன.
அதில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.இந்த அதிகாரிகளுக்கான பயணச் செலவுக்கான பணத்தை அரசு கஜானாவிலிருந்து எடுக்கவில்லை. மூத்த அதிகாரிகள் தங்கள் சொந்த வங்கிக்கணக்கிலிருந்து கொடுத்தார்கள். ரகசியம் அந்த அளவு காக்கப்பட்டது !19-1-56 அன்று இரவு 8.30 க்கு நிதி அமைச்சர் வானொலி மூலம் இன்சூரன்ஸ் நிர்வாகம் அரசு வசம் வருவதற்கான அவசரச் சட்டம்பற்றி அறிவித்தார்.கம்பெனி முதலாளிகள் அவசரச் சட்டம் பற்றிய விதிகளை அறிய தொலைபேசியில் காத்துக் கிடந்தனர்.
மறுநாள் 20-1-1956 அன்று விடிந்ததும் அந்தந்த அலுவலக வாயிலில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கதவு திறக்க காத்திருந்தனர்.கம்பெனியின் கணக்குப் புத்தகங்களில் கோட்டைப் போட்டு கையெழுத்திட்டனர்.
வழக்கம் போல வர்த்தகம் எந்த பாதிப்புமில்லாமல் தொடர்ந்தது !
இப்படி ஒரு நடவடிக்கைக்காக 1951ம் ஆண்டிலிருந்து போராடியது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.
அப்படி நாட்டுடமையாக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வரவு செலவு ஆண்டுக்கு பல்லாயிரம் கோடிகள் .அவற்றை இன்றைய மோடி அரசு மீண்டும் தனியார் அந்நியர்களிடம் ஒப்படைக்கப் பாடு படுகிறது.
நேற்றைய தனியார் நிறுவனங்கள் பங்கு வீழ்ச்சியால் இந்தியா தடுமாறிய போது பங்கு சந்தையில் தந்து கோடிகளை கொட்டி பங்கு களை வாங்கி பங்கு சந்தையின் மூர்ச்சையை தெளிவித்தது எல்.ஐ.சி.தான்.
- காஸ்யபன்