சனி, 29 ஆகஸ்ட், 2015

மெகா காதலர்கள்.ஒரு குற்றக் கதை!

செல்லமாக வளர்த்த தன் மகள் ஷீனாவை, பிரபல டிவி பெண்  அதிபர் இந்திராணி முகர்ஜி கொலை செய்ததற்கு காரணம், பணவெறியா...? 
கள்ளக்காதல் வெறியா...? 
என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
இந்திராணியை ரகசியமான இடத்தில் தங்க வைத்து போலீஸ் அதிகாரிகள்  பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 
டிவி தொடர்களை மிஞ்சும் வகையில் நடந்த இந்த மிக கொடூரமான கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்திராணி இதுவரை எந்த தகவல்களையும் கூறாததால் போலீசார், உண்மை காரணத்தை கண்டுபிடிப்பதில் திணறி வருகின்றனர். 

இந்திராணி முகர்ஜி
வரலாறு.?
பிரபலமாகும் முன் இவர் வேலைக்கு ஆள் எடுக்கும் கன்சல்டன்சியில் பணியாற்றி வந்தார். 

அதன் பின் டிவி உலகில் புகுந்தார்; பெரிய இடத்து சகவாசங்கள் அதிகரித்தன; பணமும் குவிந்தது; பதவிகளும் தேடி வந்தன. முதல் கணவர் சித்தார்த் தாசுடன் இருந்தபோது வரை சாதாரண பெண்மணி தான். இவர்களுக்கு பிறந்த மகள் தான் ஷீனா; மகன் மிக்கேல்; பணமும், நட்புகளும் அதிகரிக்கவே, வெளியுறவுகளும் அதிகரித்தன. 
இதன் விளைவு சித்தார்த்தை விட்டு பிரிந்தார் இந்திராணி. சஞ்சீவ் கண்ணா என்பவரை மணந்தார். அவரையும் கழற்றி விட்டு, பெரிய கையான ஸ்டார் டிவி முன்னாள் தலைவர் பீட்டர் முகர்ஜியை வளைத்து போட்டார். 

போதாதா, பீட்டரின் ஐஎன்எக்ஸ் மீடியாவின் தலைவரானார் இந்திராணி. பீட்டரை மணந்தபோது, தன் மகள் ஷீனா, மகன் மிக்கேலே தன் தங்கை, தம்பி  என்று தான் அறிமுகம் செய்தார் இந்திராணி. அப்போது பீட்டருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்திருந்தன. 
மூன்றாவது தான் இந்திராணி. அவருக்கு முதல் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுல். ஷீனா, மிகவும்  சொகுசாகவே வளர்ந்த டீன் ஏஜ் பெண். 
எங்கு போனாலும் புது கார் தான்; 
லட்சக்கணக்கில் தான் ஷாப்பிங் செலவுகள்; 
தினமும் ஆயிரக்கணக்கில் ஓட்டல் பில்; 
மாதத்துக்கு நான்கு முறை வெளிநாட்டு பயணம் என்று மிகவும் வசதியாக வளரந்தவள். 
மகன் மிக்கேலோ, அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்று விட்டார். 
இந்திராணியின் சகவாசங்கள் பிடிக்காததால் தான் ஒதுங்கி இருந்தார்.   

 கடந்த 2002 ல் பீட்டரை மணந்த பின் தான் இந்திராணி வாழ்வில் கோடிகள் கொட்டின. அதுவரை கடந்து போன இரண்டு திருமண வாழ்க்கையில் அனுபவிக்காத சொகுசுகளை இந்திராணி அனுபவிக்க ஆரம்பித்தார். பீட்டர் ஸ்டார் டிவி முன்னாள் தலைவராக இருந்ததுடன், ஸ்டார் எக்ஸ் டிவி மீடியாவை நடத்தி வந்தார். 
அவரை கணவராக்கி கொண்ட போது 2002ல் கூட இந்திராணி, கன்சல்டன்சியில் தான் பணியாற்றி வந்தார். ஆனால், பீட்டருடன் சேர்ந்த பின்  பாதை மாறியது. மும்பையில் ‘மார்லோ’ என்ற பெயரில் பல கோடியில் பங்களா வாங்கினார் பீட்டர். 
ஐஎன்எஸ் மீடியாவில் இந்திராணி துணை தலைவர்; தலைவர் பீட்டர்.  பீட்டருடன் வாழ்க்கை ஓராண்டில் கசந்து விட்டதோ என்னவோ, மீண்டும் சஞ்சீவ் கண்ணாவுடன் மீண்டும் கள்ள நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக இருந்தபோது விதி என்ற மகள் பிறந்தாள். பீட்டருக்கும் இந்திராணிக்கும் பிறந்த ஒரு மகள் இருக்கிறாள். அவள் தான் மும்பை பங்களாவில் தங்கி வருகிறார். பீட்டருக்கு ஏற்கனவே முதல் மனைவியுடன் பிறந்தவன் தான் ராகுல். 
ராகுல் - ஷீனாவுக்கு காதல் மலர்ந்தது 2008 ல் தான். படிப்படியாக வளர்ந்து 2010ல் இருவரும் மும்பையில் ஒரு ஃப்ளாட்டில் ஒன்றாகவே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். 

 2012ல் ஷீனாவை கொலை செய்த சம்பவத்தில் பீட்டர் சிக்கவில்லை. 
காரில் ஷீனாவை ஏற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக தூக்கமருந்தை வாயில் திணித்து, கழுத்தை நெரித்து கொலை செய்த விவகாரத்தில் சிக்கியது இந்திராணி, அவளின் இரண்டாவது கணவன் சஞ்சீவ் கண்ணா. இதில் ஷீனாவுக்கும் இந்திராணிக்கும் கொலை நடந்ததற்கு முன் பல முறை சண்டை நடந்துள்ளது. 
ஒரு பக்கம் சஞ்சீவுடன்  கள்ள உறவு வேண்டும்; இன்னொரு பக்கம் பீட்டரின் சொத்துக்கள் வேண்டும்; இது தான் இந்தராணியின் திட்டம். 
இதற்கு குறுக்கே வந்தாரா ஷீனா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கிறது. 

இன்னொரு கோணம்:
 பீட்டரின் சொத்துக்களையும் பறித்து, சஞ்சீவ் கண்ணாவுடன் கள்ள உறவை மீண்டும் புதுப்பித்து கணவன் மனைவியாக வாழ்வது இந்திராணி போட்ட இன்னொரு திட்டம். இதற்காக, ஷீனாவை மட்டுமின்றி, மிக்கேலையும் ெகான்று விடுவது  என்று திட்டம் போட்டுள்ளார். காரணம்,  பின்னாளில் சொத்துக்களுக்கு உரிமை  கேட்க  கூடாது  என்பது தான். 

அவன், தனக்கு வளர்ப்பு அண்ணன் முறை வேண்டும் என்று ஷீனாவுக்கு தெரியுமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. ராகுல், என் கணவர் பீட்டரின் மகன்;  அவனை காதலிக்க கூடாது; அண்ணனை தங்கை காதலிக்க முடியுமா என்று டயலாக் பேசி சண்டை போட்ட இந்திராணி வாயை மூட ‘தங்கை’ விவகாரத்தை கையிலெடுத்தாள் ஷீனா. ‘ஷீனா, மிக்கேல் இருவரும் என் தங்கை, தம்பி  என்று தானே சொல்லியிருக்கிறாய்; அந்த உண்மையை உடைத்து போட்டு விடுவேன். நீ சொன்னது பொய் என்று பீட்டரிடம் சொல்வேன்; அப்புறம் உன் கள்ளக்காதலையும் உடைப்பேன்’ என்று புயலாய் ஷீனா கிளம்பியதும் தான் இந்திராணி விக்கித்து போய் விட்டாள். 
பீட்டரிடம் சொல்லி விடுவாளோ, அப்படி சொன்னால், தானும் சஞ்சீவும் போட்ட பிளான் எல்லாம் தவிடுபொடி ஆகி விடும்; பீட்டரின் சொத்துகளும் போய்விடுமே என்று பயந்து போனாள் இந்திராணி; அதன் பின் தான் சஞ்சீவுடன் சேர்ந்து ஷீனாவை கொல்ல திட்டம் போட்டிருக்கிறாள் . 
இப்போது ?
ரகசியமான இடத்தில் தங்க வைத்து மணிக்கணக்கில் இந்திராணியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். 
ஆனால், அவரோ வாய் திறக்கவே இல்லை. 
திரும்பி திரும்பி, ‘முறையற்ற காதல்;
 என் வளர்ப்பு மகன் ராகுல்; அவனுடன் காதல் என்றால் எப்படி பொறுத்துக் கொள்வேன்’ என்றே சொல்லி வருகிறாள். ஆனால், போலீஸ் நம்பவில்லை. தொடர்ந்து பல  கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 மும்பை அருகே காட்டில் புதைக்கப்பட்ட ஷீனாவின் உடலை  தோண்டி எடுக்க போலீஸ் முயற்சி செய்தது. ஆனால், மூன்றாண்டு கடந்த நிலையில், ஷீனாவின் உடலில் எலும்புகள் தான் மிஞ்சியிருந்தன. 
உடலின் சில பகுதிகளும் மிகவும் உருமாறிய நிலையில் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மும்பையில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெய்காட் கிராம காட்டில் ஷீனாவின் உடல் பகுதிகள்  தொண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
ஷீனாவின் மண்டை ஓடும் கிடைத்துள்ளது. 
சூட்கேசில் தான் ஷீனா உடல் பகுதிகள் இருந்தன. இப்போது இந்த தடயங்கள் எல்லாம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டன.

 குழப்பம்:

 இந்திராணி, அவளது இரண்டாவது கணவன் சஞ்சீவ் கண்ணா, மூன்றாவது கணவன் பீட்டர், இவர்களுடன் குடும்பம் நடத்திய முன்னாள் மனைவிகள், இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் என்று  எல்லாரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். 
போலீசுக்கு இந்திராணிக்கு இதுவரை உள்ள  கணவர் கள், காதலர்கள் பற்றியே சரியான விவரம் தெரியவில்லை. 
விசாரண நடத்தும் போதே அவர்களுக்கு தலை சுற்றுகிறது. யார், யாருடைய கணவன், எந்த ஆண்டுகளில் கணவராக இருந்தார்கள் என்பதை உறுதி செய்யவே முடியாமல் போலீஸ் தவிக்கிறது. சரியான தகவல்களும் கிடைக்காததால், இந்திராணியை சுற்றிய மர்ம வலைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்திராணி கார் டிரைவர் சியாம் ராய் சாட்சியம் தான் மிக முக்கியமானது; அவரிடம் விசாரணை செய்ததில் தான் இந்திராணியின் அட்டூழியங்கள்  அம்பலம் ஆயின. பத்தாண்டாக டிரைவராக இந்திராணியிடம் இருக்கும் சியாம், பல தகவல்களை கூறியுள்ளான்.   இவனை வைத்து தான் இந்திராணி, சஞ்சீவ் ஆகியோரை போலீஸ் வளைத்தது. 

பீட்டருக்கு தெரியாமல் சஞ்சீவ் கண்ணாவுடன் மீண்டும் உறவை புதுப்பித்த இந்திராணிக்கு , ஷீனாவை ெகால்ல எல்லா உதவியையும் செய்தது அவன் தான் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 2012  ஏப்ரல் 24ல் ஷீனா கொல்லப்பட்டாள்.  முன் தினம், சஞ்சீவ் கண்ணா, கொல்கத்தாவில் இருந்து மும்பை வந்து, காரில் ரெய்காட் காட்டு பகுதிக்கு சென்று பார்த்து திரும்பியிருக்கிறான்; ஷீனாவை எப்படி ெகான்று எரிப்பது, அல்லது புதைப்பது என்று அவன் திட்டமிட்டிருக்கலாம். 

 பீட்டர் முகர்ஜி

பீட்டரிடம் போலீசார் இன்னும் முழுமையாக விசாரிக்கவில்லை; 
அவர் ஒரு டிவி பேட்டியில், ‘ராகுலும், ஷீனாவும் என்னிடம் தங்கள் காதலை சொன்னார்கள். அப்போது ‘நான் இந்திராணியின் தங்கை இல்லை; மகள் தான்’ என்று சொன்னாள் ஷீனா;  ஆனால், நான் நம்பவில்லை. இந்திராணி சொன்னது தான் உண்மை என்று நம்பி விட்டேன். 
இதை அவளிடமும் கேட்டேன்; அவள் கோபப்பட்டாள். ஆனால் பதில் சொல்லவில்லை’ என்று கூறினார். அவரின் தகவல்களும் இந்த கொலையில் முக்கிய துப்பாக இருக்கும் என்று போலீஸ் நம்புகிறது. ஆனாலும், அவரை இன்னும் போலீஸ் தொடாமல் இருக்கிறது. 

இந்திராணி அப்பா பெயர் தான், ஷீனாவின் பள்ளி, கல்லூரி  சான்றிதழ்களில் ‘அப்பா’ என்று பதிவு செய்துள்ளார் இந்திராணி. அப்படியானால், உண்மையில் இந்திராணியின் கணவன்  சித்தார்த்துக்கு பிறந்தவர்  அல்ல ஷீனா என்பதும் தெரியவந்துள்ளது. திட்டம் போட்டு தான் இந்திராணி இப்படி செய்துள்ளாள்; மோசடியே தன் வாழ்க்கையாக மாற்றி கொண்டிருக்கிறாள் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.  இந்திராணியின் தந்தை உபேந்திர குமார் போராவுக்கு  இப்போது 80 வயதாகிறது. ‘நான் ஷீனாவின் தந்தை அல்ல; என் மகள் இந்திராணியுடன் நான் பேசி ஆண்டுகள் ஆனது’ என்று மட்டும் கூறினார் அவர். இந்திராணிக்கு இப்படி வஞ்சம் தீர்க்கும் எண்ணம், மோசடி எல்லாம் சிறிய வயதில் இருந்தே வந்திருக்க வேண்டும்; அதனால் அவரின் குடும்பத்தினர் பலரிடமும் விசாரணை நடத்த  போலீஸ் திட்டமிட்டுள்ளது.

கமிஷனர் ராகேஷ் மரியாவிடம் கதறி அழுது தன் இளம் வயது சம்பவங்களை சொன்னாள்  இந்திராணி. ‘நான் 17 வயது இருக்கும்போது  என் தந்தையே என்ைன பலாத்காரம்  செய்து விட்டார்; அதன் மூலம் கருத்தரித்த நான் ஷீனாவை பெற்றேடுத்தேன். அதன் பின் தான் நான் திருமணம் செய்து கொண்டேன்’ என்று கூறினார்.  தொடர்ந்து, இந்திராணி உறவு முறை, திருமணங்கள், கள்ளக்காதல் பற்றி கேட்ட போலீசுக்கு தலை சுற்றியது. ஷீனா கொலை பற்றி ஆரம்பத்தில் வாயை திறக்காத அவர், ‘என் மகள் அமெரிக்காவில் இருக்கிறாள். அவளை வரச்சொல்கிறேன்’ என்றே  கூறிவந்தாள். ஆனால், டிரைவர் சியாம் ராயை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தியதும் இந்திராணி நடுங்கி விட்டார்.   

 விசாரணையில் இந்திராணி சில சமயம் கதறி அழுது சில தகவல்களை சொன்னதாக தெரிகிறது. 17 வயது இருந்தபோதே, இந்திராணிக்கு பிறந்து விட்டாள் ஷீனா. அதன்  பின்னே, சித்தார்த்துடன் திருமணம் நடந்தது; அதன் பின் தான் நட்புகள், பணம் எல்லாம் இந்திராணிக்கு குவிய ஆரம்பித்தது. ‘சிறிய வயதில் இருந்தே தொடர்ந்து ஒரு தவறு மேல், இன்னொரு தவறு என்று பல தவறுகளை செய்து இப்போது கொலையில் முடிந்துள்ளது; ஷீனா மட்டும் தான் கொல்லப்பட்டாரா, இதற்கு முன் ஏதாவது சம்பவம் நடந்துள்ளதா என்றும் போலீஸ் விசாரித்து வருகிறது. இந்திராணி சொன்னதை வைத்து மகன் மிக்கேலிடமும் விசாரணை நடந்து வருகிறது. 

கொல்கத்தா தொழிலதிபருக்கு இப்போது 60 வயதாகிறது. 
அங்குள்ள கிளப் வட்டாரத்தில் இவர் மிகவும் அறிமுகமானவர். ஷீனா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்திராணியின் மாஜி கணவர் சஞ்சீவ் கண்ணாவும் இந்த தொழிலதிபரும் நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்திராணி உறவு வைத்திருந்த அந்த தொழிலதிபர் அரசியல் தொடர்புடைய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். 
அவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன என பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திராணிக்கும் சஞ்சீவ் கண்ணாவுக்கும் பிறந்த பெண்ணின் பெயர் விதி. ஷீனாவும் மிக்கேலும் தனது குழந்தைகள் அல்ல என்று சித்தார்த் தாஸ் ஏற்கனவே கூறிவிட்டதாக தெரிகிறது. இதை வைத்து பார்த்தால் இந்திராணியின் வாழ்க்கையில் நான்காவது நபர் ஒருவர் இருக்கக்கூடும் என தெரிகிறது. 
இந்திராணிக்கு ஐந்தாவது நபர் ஒருவருடனும் தொடர்பு இருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அந்த நபருக்கும் ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சி மெகா தொடர் போல் நீளும் காதலர்கள் எண்ணிக்கை
பயம் தருகிறது .
========================================================================
* ஸ்டார் நியூஸ் சேனல் தலைவர் பொறுப்பில் இருந்த போது தான், இந்திராணியின் நட்பு கிடைத்தது பீட்டருக்கு. அவர்களின் கள்ளக்காதல் இறுகவே, அடுத்த திட்டம் தீட்டுகின்றனர். ஸ்டார் சேனல் பதவியை உதறி விட்டு, தனியாக ஐஎன்எக்ஸ் என்ற மீடியா குரூப்பை ஆரம்பித்தார்.
 
* அந்த குரூப்பின் தலைவர் பீட்டர்; துணை தலைவர் இந்திராணி;  பங்குதாரர்களிடம் இருந்து  முதலீடு திரட்டினர்; கோடிகோடியாக பணத்தை குவித்தனர்; அந்த பணத்தில் மூன்று சேனல்கள்  ஆரம்பித்தனர். இவர்களின் பணத்தை சிறிதுசிறிதாக  வெளியே எடுத்துவிட்டு, பங்கு தாரர்களின் பணத்தையும் சூறையாட திட்டம் போட்டனர். 

* இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் சேனல் உட்பட மூன்று சேனல்களும் நெருக்கடியில் சிக்கின; பங்கு முதலீடு போட்டவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அவர்களை ஏமாற்ற நியூஸ் 9 ரேட்டிங்கை காட்டி, சேனல் பிரபலமாக தான் இருக்கிறது என்று  பொய் கூறினர்.
 
* ஆனால், சேனல் கவலைக்கிடமான நிலையில் தத்தளித்தது. காரணம், அதில் போட்ட பணம் பெரும்பாலும் சுரண்டப்பட்டதே காரணம்.  பல கோடிகள் சுருட்டப்பட்டது தெரியவந்தது. 

* கிட்டத்தட்ட 168 கோடி ரூபாய் வரை சுருட்டி விட்டு  இருவரும் விலகியதாக பேட்டி ஒன்றில் வேதனையுடன் கூறினார்  நியூஸ் எக்சில் பணியாற்றிய பிரபல பத்திரிக்கையாளர் வீ்ர் சிங்வி. 

* 2007 ல் ஐஎன்எக்ஸ் குரூப்பில் நுழைந்த இந்திராணி, பீட்டர் இரண்டே ஆண்டில் வெளியேறி விட்டனர். இந்த சேனல்கள் பணம் இழப்புக்கு இவர்கள் காரணமா என்றும் போலீஸ் விசாரித்து வருகிறது. 

========================================================================
இன்று,
ஆகஸ்ட்-29.
  • இந்திய தேசிய விளையாட்டு தினம்
  • செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)
  • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)
  • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
========================================================================
      இன்னும் 25 ஆண்டுகளில் 2040இல் நடக்கும் போர்களின் காரணமாக குடிநீர்தான் இருக்குமாம்.


90 முதல் 95 வயது கொண்டோர் நடைப் போட்டியில் 10 கிலோ மீட்டர் துரத்தை 92 நிமிடத்தில் கடந்து 
தங்கப்பதக்கம் பெற்ற சிறிராமுலு .முன்னாள் படை வீரார்.
உலகின் இவ்வார  பரபர புகைப்படங்கள் சில.