மறக்கடிக்கப்பட்ட விடுதலை வீரார்கள்!
சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதான பாத்திரம் பற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் - காந்திஜி, நேருஜி,போன்ற முக்கிய தலைவர்களின் பங்களிப்பு, இவர்கள் செய்த தியாகம் ஆகியவை பற்றியும் நாட்டு மக்களுக்கு சிறப்பாக படம் பிடித்து காட்டப்படுகின்றன.
ஆனால் சுதந் திரப் போராட்டத்தில் பங்கேற்று அளப்பரிய தியாகம் செய்தமற்ற இயக்கங்கள் பற்றி பத்திரிகைகளில், தொலைக் காட்சிகளில் பேச்சு, மூச்சே கிடையாது.
வ.உ.சி மற்றும் அவருடன் உழைத்த தலைவர்கள் பற்றி திட்டமிட்டே விடுதலை வரலாற்றில் மட்டுமின்றி காங்கிரசு இயக்க வரலாற்றிலும் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் செய்த தியாகம், தொழிலாளி வர்க்கத்தின் முக்கியப் பங்குபோன்றவை மறைக்கப்பட்டு வருகின்றன.
சுதந்திரப்போராட்டம் பற்றி ஏராளமான நூல்கள் வெளியாகியுள் ளன. இவைகள் தொழிலாளர்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்துள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கவில்லை. ஆனால்தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியின்றி சுதந்திரமில்லை.
விடுதலைப் போராட்டத்தை வேகப்படுத்து வதற்கு, இறுதியாக வெற்றி பெறுவதற்கு தொழிலாளர்கள் முக்கியப் பங்காற்றினார்கள்.
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே தமிழக தொழிலாளர்கள் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய பங்கு மகத்தானது.
தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை பற்றிதிரு.வி.க. அவர்கள் 1921ம் ஆண்டிலேயே கீழ்க்கண்ட வாறு கூறியிருக்கிறார்.“தொழிலாளர் இயக்கத்தால் சுயராஜ்யம் விரைவில் வருமென்பது திண்ணம், அதனால் உண்மையாகச் சுயராஜ்யம் விரும்புவோர் அனைவரும் தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்து உழைத்தல் வேண்டும்.”
தூத்துக்குடியில் விடுதலைக்குரல்'
வ.உ.சி, |
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தூத்துக்குடி நகரத்தில் அந்நிய கம்பெனியான ஹார்விமில்லில் 1908ம் ஆண்டு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம் துவங்கினார்கள். இப்போராட்டத்திற்கு வ.உ.சிதம்பரனார் தலைமை தாங்கினார்.
நிர்வாகத்தின் அடக்குமுறையையும் மீறி 15 நாள் வேலைநிறுத்தத்திற்கு பிறகு கூலி உயர்வு பெற்று தொழிலாளர்கள் வெற்றிகரமாக வேலைக்கு திரும்பினார்கள்.சுதேசி இயக்கத்தில் குதித்த வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனி என்ற கம்பெனியை துவக்கி நடத்தினார்.
ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசு வஉசியை கைது செய்து ராஜ துரோக வழக்கு தொடுத்து ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறையில் அடைத்தது.தங்கள் தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண் டித்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக தூத்துக்குடி ஹார்வி மில் தொழிலாளர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்த வேலைநிறுத்தம் தூத்துக்குடி நகரத்தையே உலுக்கியது.போராட்டம் வெற்றிபெறவில்லை என்றாலும் பின்னி தொழிலாளர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகவும் ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும் வீரத்துடன் போராடி னார்கள்.
1922ல் வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வந்த போது காங்கிரஸ் கட்சி அவர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. பம்பாயில் அவர் இறங்கிய போது பெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. காலனி ஆதிக்கத்தின் சின்னமாகிய வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்தபோது தொழிலாளர்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்டினார்கள்.
சென்னை சூளை பகுதியில் ஆலைத்தொழிலாளர்கள் (பின்னி தொழிலாளர்கள் உள்பட) ஒன்றுகூடி டிராம் வண்டிகளை நிறுத்தினர். அவற்றின் கண் ணாடி சாளரங்களை உடைத்தனர். தொழிலாளர்களின் இந்த எழுச்சி மாநிலம் முழுவதும் பிரதிபலித்தது. காங்கிரசின் அடையாளப் பூர்வமான எதிர்ப்பைவிட தொழி லாளர்கள் வீதியில் இறங்கி போராடியது ஆங்கிலேய அரசுக்கு வளர்ந்து வரும் தொழிற்சங்க இயக்கத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது.
தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர் நிலை கண்டு மனிதாபிமானத்தோடு சேவை செய்யும் அதே வேளையில் தேசிய இயக்கத் திற்கு பரந்துபட்ட மக்கள் அடிப்படையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உந்தப்பட்டே செயல்பட்டனர். இந்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன்படுத்தியது.
அதே நேரத்தில் தொழிலாளர் இயக்கம் தங்கள் தலைமை யை மீறி போகாமலும் பார்த்துக் கொண்டது. 1920ம்ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங் கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தொழிலாளர்கள் பற்றி கீழ்க் கண்ட தீர்மானம் நிறைவேற்றியது.“தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் அமைத்து தங்களின் கோரிக்கைகளுக்காக போராடுவதை காங் கிரஸ் ஆதரிக்கிறது.
இந்தியாவின் வணிகத்தையும், இந்திய தொழிலாளர்களையும் அந்நிய கம்பெனிகள் சுரண்டுவதை தடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் கருதுகிறது.திருவிக, சிங்காரவேலு செட்டியார், சர்க்கரைச் செட்டியார், வி.வி.கிரி, எம்.எஸ்.ராமசாமி ஆகிய தொழிற்சங்க தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் ஆவர்.இதன் மூலம் தொழிலாளர்களை காங்கிரஸ் தலைமை யிலான தேசிய இயக்கத்திற்கு திரட்டுவதற்கு இவர் களால் முடிந்தது.
காங்கிரஸ் இயக்கத்தில் தொழிலாளர்கள்
சிங்காரவேலர் |
ரவுலட் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடை பெற்ற பல கண்டன இயக்கங்களில் காந்திஜி கலந்து கொண்டார்.
இதை ஒட்டி சென்னை கடற்கரையில் நடைபெற்ற லட்சம் பேர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் திருவிக ரவுலட் சட்டத்தை கண்டித்து பேசி இருக்கிறார்.
இக்கூட்டத்திற்கு சென்னை ராயப்பேட்டையில் இருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவாக சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த இயக்கத்தில் தொழி லாளர்களே பெரும் பகுதியினர் கலந்து கொண்டனர்.
1920 ஆகஸ்ட் 19 அன்று ஒத்துழையாமை இயக்கத்தை ஒட்டி சென்னை கடற்கரையில் காந்திஜி பேசிய கூட்டத் தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பகுதியினர் தொழிலாளர்களே. உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் சூளை மில் தொழிலாளர்கள் முழுமையாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் காங்கிரஸ் தேசிய இயக்கத்தில் பெருவாரியாக கலந்து கொள்வது பற்றி ஆங்கிலேயே அரசின் அறிக்கை 1921ல் கீழ்க்கண்டவாறு கூறியது.
“ஒத்துழையாமை இயக்கத்தில் உண்மையான அபாயம் ஆலைத் தொழிலாளர்கள், ரயில்வே தொழி லாளர்கள் மத்தியில் இந்த இயக்கத்திற்கு இருக்கும் செல்வாக்கேயாகும்“.காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கத்தில் தொழிலாளர்கள் பங்கேற்பதே மிகப்பெரிய அபாயம் என்று ஆங்கிலேய அரசு ரகசிய குறிப்பில் குறிப்பிடுகிறது என்றால் இதில் இருந்தே சுதந்திரப் போராட்டத் தில் தொழிலாளர்கள் முக்கியமான பாத்திரம் வகித் திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
1935ல் தோழர் பி.ராமமூர்த்தி, பி.சுந்தரய்யா, பி.சீனிவாசராவ், கே.முருகேசன் ஆகிய தலைவர்கள் சென்னை யில் பல தொழிற்சங்கங்களை துவக்கினார்கள்.
தோழர் பி.ராமமூர்த்தி மற்ற நகரங்களுக்குச் சென்று தொழிலாளர் போராட்டத்துக்கு வழிகாட்டினார். தானே, முன்னின்று போராட்டங்களை நடத்தினார்.
தோழர் அனந்தநம்பியார், எம்.கல்யாணசுந்தரம் திருச்சியிலும் மற்ற பகுதிகளிலும் ரயில்வே தொழிலாளர்களை திரட்டினார்கள். 1936ல் தோழர் கே.ரமணி முன் முயற்சியால் கோவையில் சோசலிஸ்ட் பஞ்சாலை தொழிலாளர் சங்கம் துவக்கப்படுகிறது.1940களில் தமிழகம் முழுவதும் பல தொழில்களில் உள்ள முக்கியமான தொழிற்சங்கங்களுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்களே தலைமை தாங்கினார்கள்.
1930 வரையில் காங்கிரஸ் ஆதரவு தலைவர்கள் தலைமையில் இருந்த தொழிற்சங்கங்கள் 1940களில் கம்யூனிஸ்ட்களின் தலைமையில் கீழ் வருகின்றன.
திரு.வி.க, |
பொருளாதாரக் கோரிக்கை களுக்காக வலுவான போராட்டங்கள் நடைபெற்றன. கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டங்களை ஒடுக்க ஆங்கிலேய அரசு அடக்குமுறையை தொடுத்தது. அடக்குமுறையை தொழிலாளர்கள் உறுதியாக எதிர்த்து போராடி பல தியாகங்கள் செய்திருக்கிறார்கள்.1946ல் நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் மகத்தான எழுச்சி ஏற்பட்டது.
1945ல் சிங்கப்பூரில் நேதாஜி திரட்டிய இந்திய தேசிய ராணுவத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு டில்லி செங்கோட்டையில் அடைக்கப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
கப்பற்படை எழுச்சி
1946ல் பம்பாயில் கடற்படை வீரர்களின் எழுச்சி துறைமுகத்தில் துவங்கியபோது அதை ஆதரித்து பம்பாய்நகர தொழிலாளர்களும் பொதுமக்களும் பொது வேலைநிறுத்தம் செய்தார்கள்.
இந்த ஆதரவு இயக் கத்தை ஒடுக்க பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பம்பாய் நகரத்தில் 102 பேர் கொல்லப் பட்டனர்.
கடற்படை எழுச்சியை ஆதரித்து தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், ஹர்த்தால் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.பிரிட்டிஷ் படையில் உள்ள இந்திய கப்பற்படை வீரர்களின் எழுச்சி, இதை ஆதரித்து நாடு முழுவதும் தொழி லாளர்கள், விவசாயிகள் மற்ற பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராடியது.
பிரிட்டிஷ் ஆட்சியை குலுக்கியது. இனியும் இந்தியாவை அடக்கியாள முடியாது என்ற முடிவுக்கு பிரிட்டிஷ் அரசுக்கு வருகிறது. தாமதித்தால் சுதந்திர போராட்டத்தின் தலைமை காங்கிரஸ் கையி லிருந்து தொழிலாளி வர்க்கத்தின் கைக்கு மாறிவிடும் என்ற கவலையும் பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது.இதன் விளைவு அந்நியர் ஆட்சி அகன்று 1947 ஆகஸ்ட் 15ம் தேதியன்று பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு மூவர்ண கொடி செங்கோட்டையில் ஏறியது.
பாரபட்சமின்றி சுதந்திரப் போராட்ட வரலாற்றை பரிசீலிக்கும் ஒருவர் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய காரணம் தொழிலளார்களும், முப்படைகளையும் சேர்ந்த ராணுவ வீரர்களும் நடத்திய மகத்தான வீரமிக்க வேலைநிறுத்தங்களும் சாகசங்களுமே என்ற முடிவுக்கு வர முடியும்.
நாடு தழுவிய தொழிலாளர்கள் எழுச்சியில் தமிழகத்து தொழிலாளர்களின் பாத்திரம் மகத்தானது.காங்கிரஸ் இயக்கம் பலமாகாத காலத்திலேயே சுயராஜ்யம் என்ற முழக்கத்தை எழுப்புவதற்கு காங்கிரஸ் தயங்கிய காலத்திலேயே 1920ம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற ஏஐடியுசியின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் சமன்லால், தேசம் தழுவிய இயக்கத்தில் இருந்து தொழிலாளர்கள் தனியாக பிரிந்து போக முடியாது;
நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்றுபேசியிருக்கிறார்.
இந்த அறைகூவலுக்கு ஏற்ப தமிழக தொழிலாளர்கள் சுதந்திரத்திற்காக போர்க்குரல் எழுப்பி னார்கள். அளப்பரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள்.
இதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15.
வெறுமனே ராட்டையில் நூல் நூற்றும்,உண்ணாவிரதமும் இருந்ததால் கிடைத்தது அல்ல இந்த விடுதலை.
போராளிகள் கையில் நாட்டை ஒப்படைத்தால் அன்று வளர் நிலையில் இருந்த கம்யூனிஸ்ட் நாடாக இந்தியா மாறிவிடலாம் என்ற காரணத்தினால்தான் தங்கள் சொல்லுக்கேற்ப இந்திய மக்களை கட்டுப்படுத்தும் காந்தி முன்னிலை படுத்தப் பட்டார்.
-தீக்கதிர்
சுதந்திர தின பொன்விழா மலரில்(1997)
வெளியான கட்டுரையின் பகுதிகள்.
14.08.1947 'தி இந்து 'நாளிதழின் முதல் பக்கம்.
=================================================================================