ஊழல்களுக்கெல்லாம் பதில்சொல்ல
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், அது ஜூலை 21இல் தொடங்கியதிலிருந்தே நடைபெறாமல் முடங்கி இருக்கிறது.
இதற்குப் பிர தான காரணம், மோடி அரசாங்கத்தின் பிடிவாதம்தான். அது, தன்னுடைய ஒரு மத்திய அமைச்சருக்கு எதிராகவும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச முதலமைச்சர்களுக்கு எதிராகவும் ஆழமான அளவில் குற்றச்சாட்டுக்கள் இருப்பதையே அங்கீகரிக்க மறுப்பதுதான் இதற்குக் காரண மாகும்.
இம்மூவரின் வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க மறுப்பதுடன், இவை தொடர்பாக இதுநாள்வரை பிரதமர் மோடி வாய்மூடி மவுனம் காத்து வருகிறார்.
அவர் இவை குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கிறார். அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இதர அமைச்சர்களோ காங்கிரஸ் முதல் அமைச்சர்களுக்கு எதிராக எதிர்க்குற்றச்சாட்டுகளை வீச முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜக, எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதமானது என்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்றும் குய்யோமுறையோ என்று கூவி, உண்மையான நிலை மையை மூடிமறைக்க முயன்றுகொண்டிருக்கிறது.
இவர்களின் செய்கை, போலித்தனமான நடிப்பு என்பது மட்டுமல்ல, உள்ளொன்று வைத்துப் புறமொன்று மேற்கொள்ளும் வஞ்சக நடவடிக்கையுமாகும். இதே பாஜக, 15ஆவது மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில், நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் சீர்குலைத்ததில் அதிகபட்ச அளவிற்கு ‘ரிக்கார்டு’ ஏற்படுத்திய ஒரு கட்சியாகும்.
அதிலும் அவ்வாறு சீர்குலைத்த சம்பவங்களில் அதிகமான அளவு ஊழல் பிரச்சனைகள் மீதுதான் என்பதையும், அவற்றின்மீது ஐமுகூ அரசாங்கம் போதுமான அளவிற்கு ஆர்வம் காட்ட மறுக்கிறது என்பதற்காகவும்தான் என்பதையும் இப்போது அக்கட்சி வசதியாக மறந்துவிட்டதுபோல் காட்டிக்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஐந்து நாட்களுக்கு 25 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துள்ள மக்களவை சபாநாய கரின் முடிவு நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சபாநாயகரின் இச்செய்கை இதர எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவற்றையும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் மக்களவையின் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்கச் செய்திருக்கிறது.
ஐமுகூவில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன், சமாஜ்வாதிக் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இவ்வாறு விலகி இருக்கின்றன.
லலித்கேட் மற்றும் வியாபம் ஊழல்கள் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சனைகள் விரைவில் முடிந்துவிடக்கூடியவை அல்ல என்பதை நரேந்திர மோடியும், பாஜகவும் உணர்ந்துகொள்ள வேண்டும். சுஷ்மா சுவராஜும், வசுந்தரா ராஜேயும் லலித் மோடியைக் காப்பாற்றத் தங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்திருந்தபோதிலும், லலித்மோடி மீதான வழக்கில் விசாரணை நடை பெறும் சமயத்தில் அவரை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தாக வேண்டும், சிறப்பு நீதிமன்றம் ஒன்று, லலித் மோடிக்கு எதிராக பிணைவிடாப் பிடியாணை (ஜாமீனில் விட முடியாத வாரண்டு) பிறப்பித்திருக்கிறது.
தற்போது கொலையும் செய்யும் ஊழல் என்று பெயரெடுத்திருக்கிற வியாபம் ஊழலால் பரவிக்கொண்டிருக்கும் கறை குறித்து மோடி அரசாங்கம் கண்டுகொள்ளாமல் கண்களை எத்தனை காலத்திற்கு மூடிக்கொண்டிருக்க முடியும்?
பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் இத்தகைய ஊழல்களுக்கெல்லாம் பதில்சொல்ல வேண்டியதில்லை என்று நாடாளுமன்றம் நிலை எடுக்குமானால், வேறு யார் இதனைச் செய்ய முடியும்?
பிரதமர் மோடி, தவறிழைத்தவர்களுக்குக் கேடயமாக நின்றுகொண்டிருப்பதன்மூலம், தன் மீதான நம்பகத்தன்மையையும் அரசியல் ஆளுமையையுமே கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
========================================================================