வியாழன், 20 ஆகஸ்ட், 2015

தும்மல் குறித்துதும்மலுக்கான நெடி வந்தும் தும்மல் வராமல் அவதிப்பட்ட அனுபவம் நமக்கிருக்கும். தும்மல் போட வேண்டி துணியின் நுனியை மூக்கில் விடுவது, வெளிச்சத்தை உற்றுப் பார்ப்பதென பல முயற்சிகளை செய்து தவிப்பது ஒரு வகையென்றால், இருபதிலிருந்து முப்பது முறை விடாமல் தும்மிக்கொண்டே இருக்க நேரிடும் அடுக்குத் தும்மல் இன்னொரு வகை. 
உடலையே உலுக்கி விடக்கூடியது இந்த அடுக்குத் தும்மல். இது போன்ற பிரச்னைகளுக்குப் பயந்துதான் புழுதி பறக்கும் சாலைகளில் பயணிப்பவர்கள் கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொள்கின்றனர். நம்மை அவதிக்குள்ளாக்கும் அடுக்குத் தும்மல் குறித்துப் பேசுகிறார் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிறப்பு நிபுணர் கைலாஷ்...

‘‘நம்முடைய மூக்கில் Mast என்ற செல் உள்ளது. இந்த செல் மிகவும் உணர்ச்சிகரமானது. மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும்போது காற்றில் கலந்துள்ள சிறுசிறு தூசி,  துகள்கள் மற்றும் மிதமான வாசனை ஆகியவற்றை மூக்கில் உள்ள Mast செல் உணரும். அதேவேளையில், மிகவும்மென்மையான இந்த செல் மிளகாய்தூள் நெடி, ஹோமப் புகை, சென்ட், கற்பூரம், ஊதுவத்தி, பெயின்ட் போன்றவற்றின் நறுமணம், ஆசிட், பிளீச்சிங் பவுடர், சிகரெட் புகை போன்றவற்றை நாம் நுகரும்போது அவற்றை தடுப்பதற்காக தும்மலை உண்டாக்கும். 
இதன் காரணமாக தொடர்ந்து தும்மல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். அதைப்போன்று ஒருசிலர் காலையில் தூங்கி எழுந்தவுடனே இடைவிடாமல் அடுக்கடுக்காக தும்மிக் கொண்டே இருப்பார்கள். அன்றாடம் நாம் பயன்படுத்தும் படுக்கை, போர்வை, படுக்கை விரிப்பு ஆகியவற்றில் காணப்படும் Mite என்ற கிருமி, ஒவ்வாமையால் ஏற்படும் இந்த தொடர் தும்மலுக்கு (Allergic Rhinitis) முக்கிய காரணமாக அமைகிறது. அடுக்குத் தும்மல் பரம்பரையாக தொடர்ந்து வருகிற பிரச்னை. 

வீட்டில் யாருக்காவது இப்பிரச்னை இருந்தால், அவருடைய வாரிசுகளுக்கு கண்டிப்பாக அடுக்குத் தும்மல் வர வாய்ப்பு உள்ளது. ஆனால், இப்பிரச்னை தொற்று கிடையாது. தாய்ப்பால் குடிக்கும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அடுக்குத்தும்மல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இக்குழந்தைகள் தாய்ப்பாலை நிறுத்திய பின்னர், தூசு, புகை காரணமாக மாசு அடைந்த இடத்துக்கும், நறுமணம் அதிகமாக உள்ள பகுதிக்கும் செல்லஆரம்பிக்கும்போது, இவர்களுக்கு அடுக்குத்தும்மல் வர வாய்ப்பு உள்ளது. 

வேலை செய்யும் சூழல், மகரந்த தூள் அதிகமாக உள்ள இடம் ஆகியனவும் விடாது விரட்டும் தும்மலுக்கு காரணமாகலாம். உதாரணத்துக்கு மாவு அரைக்கும் இடம், பஞ்சு தொழிற்சாலை போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு அடுக்குத் தும்மல் பாதிப்பு இருக்கும். நியூசிலாந்து நாட்டினர்தான் இவ்வகை தும்மலால் அதிக  அளவில் பாதிப்பு அடைகின்றனர்.  அங்கு ஏராளமாக மகரந்த தூள் இருப்பதுதான் காரணம். உலக மக்கள் தொகையில் அதிகமானோர் (இருபத்தைந்து சதவிகிதத்தினர்) அடுக்குத் தும்மல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இவ்வகை தும்மலுக்கான மருந்து, மாத்திரைகள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன.
அடுக்குத் தும்மலால் பாதிக்கப்பட்ட நபர் தும்ம தொடங்கினால், இருபதில் இருந்து முப்பது தடவை வரை இடைவிடாமல் தும்முவார். கண், காது, மூக்கு ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மேலும் கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடியும். பொதுவாக, நமது உடலில் IgE (Immunoglobulin E)  அளவு 100 இருக்க வேண்டும். அடுக்குத் தும்மலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆயிரக்கணக்கில் இருக்கும். அலர்ஜி உள்ளவர்கள் அனைவருக்கும் IgE பரிசோதனை பண்ணுவது நல்லது.

அடுக்குத் தும்மலால் அவதிப்படுபவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஐஸ் க்ரீம், திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, எலுமிச்சை, வேர்க்கடலை, க்ரீம் பிஸ்கெட்டுகள், கடல் உணவுகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகிய வற்றை தவிர்க்க வேண்டும். இதை குணப்படுத்த Mast Cellஐ முதலில் சரி பண்ண வேண்டும். அதற்கு Nasal Sprayஐ மூக்கில் அடிக்க வேண்டும். உறிஞ்சக் கூடாது. அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட் ஆலோசனைப்படி Antihistamine மாத்திரையைக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சாப்பிட வேண்டும். அடுக்குத் தும்மல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பிற்காலத்தில்ஆஸ்துமா, வறண்ட தோல்வர வாய்ப்பு உள்ளது’’.

                                                                                                                                - விஜயகுமார்
நன்றி:குங்குமம் டாக்டர்,
========================================================================
ஆட்டம்-போராட்டம்,

தமிழ் நாட்டில் போராட்டம் நடத்தி சட்டம் ஒழுங்கை சீர் குலைப்பது அதிமுகவினர் மட்டுமே.
மற்ற கட்சியினர் மூன்று பேர் கூடி பேசினாலே காவல்துறை குண்டாந்தடிக்கு வேலை கொடுத்து தரையில் இழுத்து உடனே புழல் சிறையில் அடைத்து விடுகிறார்கள்.
அதிமுகவினர் எந்த நேரமும் ,எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்,எதையாவதுஎரிக்கலாம் அதற்கு முழு காவல்துறை பாதுகாப்பு உண்டு.
அதை எதிர்க்கும் எதிர் கட்சியினருக்கு நிச்சயம் சிறையில் இட வசதி செய்து தரப்பட்டு நிலைதான் இன்றைய தமிழகத்தில்.
ஜெயலலிதா சிறை சென்றதும் ஆடாத ஆட்டமா ?அதற்கு அதிமுக காவல்துறை கிளை தராத பாதுகாப்பா?
இதுவரை நடந்த போராட்டம்,பேருந்து உடைப்பு,கடைகளை அடைக்க கல்வீச்சு,கொடும்பாவிகள் எரிப்பு,அசிங்கமான சுவரொட்டிகள் இதற்காக அதிமுக வினர் மீது ஏதாவது நடவடிக்கை,வழக்கு உண்டா?
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக வினர் கடந்த மூன்று தினங்களாக போராட்டம் என்ற பெயரில் வரைமுறையின்றி, பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற னர். 
போராட்டம் என்பது எப்போதும் ஜனநாயகவழியில் இருக்க வேண்டுமே தவிர, வன்முறையை தூண்டும் விதமாக இருக்கக் கூடாது என்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு அழகாகும். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சில ஆட்சேபிக்கத்தக்க கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
அந்த கருத்துக்கு அதிமுகவும், பாஜகவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
ஒரு கருத்து குறித்து மாற்றுக் கருத்து இருப்பின் அதனை எவ்வித தடையும் இன்றி வெளியிட முடியும். நீதிமன்றம் மூலம் பரிகாரம் காணவும் வகை உண்டு. 
அதன் அடிப்படையில்தான் தற்போது நீதிமன்றத்தில் கூட வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது. 
ஆனால் அதிமுகவினர் அதோடு நிற்காமல், காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டு, பெயர்ப் பலகையை அடித்துச் சேதப்படுத்துவது, கொலை மிரட்டல் விடுவது, அநாகரிகமாகப் பேசி எதிர்த்தரப்பினரை ஆத்திரமடையச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது பிரச்சனையைத் தீர்க்க ஒரு போதும் உதவாது. 
அதே நேரத்தில் இளங்கோவனும் கவனமாக வார்த்தைகளை கையாண்டிருக்க வேண்டும். தமிழக அரசியல் பாரம்பரியம் என்பது எதிரும் புதிருமான கருத்துக்கள் கடுமையாக மோதும் களமாக இருந்து வந்திருக்கிறது.
அதிமுக மேடைகளில் எதிரகட்சியினரை குறிப்பாக கருணாநிதியையும் அவர் குடும்பத்தினரையும் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் ஜெயலலிதாவுக்கு தெரியாததல்ல.சொல்லப்போனால் அவற்றை அவர் சிரித்து வரவேற்றிருக்கிறார்.விமர்சித்தவருக்கு பதவிகளையும் வழங்கியுள்ளார்.
அவரின் ஆதரவு ஊடகம் குமுதம் ரிப்போர்டர் குஷ்பு திமுகவின் இணைந்த போது அவரையும் கருணாநிதியையும் பற்றி அசிங்கமாக அட்டைப்படம் சேதியை வெளியிட்டு இன்னொரு மணியம்மை என்று எழுதியதே அப்போது பெண்ணாக குஷ்பு தெரியவில்லையா இந்த முதல்வர் பெண்மணிக்கும்,அவரின் அடியாட்களான அதிமுக,காவல்துறைக்கும்?
ஆனால் இன்று கருத்துமோதல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நேரடி மோதலை முன்னுக்கு நிறுத்தும் முயற்சி நடைபெறுவது மிகவும் ஆபத்தானது. 
அரசியல் களத்தில் கொள்கை ரீதியான விமர்சனம் முன்னுக்கு வரவேண்டுமே தவிர, தனிநபர் மீதான தாக்குதல் கூடாது. சட்டமும் நீதியும், அரசு நிர்வாகமும் எல் லோருக்கும் பொதுவானதுதான். அது ஒருபோதும் ஒரு சார்பு கொண்டதாக இருக்கக் கூடாது. 
ஜனநாயக ரீதியில் தங்களின் உரிமைகளுக்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்றால் அதற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படுகின்றன. ஒரு சிறு குறை கண்டாலும், வழக்குப் பதிவு, கைது என காவல்துறையின் கை நீள்கிறது. 
ஆனால் ஆளும் கட்சி என்றால், எந்த விதிமுறையும் கிடையாது போலும். 
எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை சந்திப்புகளின் நடுவில் நின்றே, உருவபொம்மை எரிப்பு, செருப்படி என அனைத்தும் காவல்துறையின் கண் முன்னால் நடக்கிறது. 
அத்துமீறும் ஆளும் கட்சியினருக்கு ஒரு சிறு பங்கம் வந்துவிடக்கூடாது என கைகட்டி காவலுக்கு நிற்கிறது காவல்துறை. 
பெயரளவில் கூட வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெய லலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோதும் இத்த கைய அராஜகங்களை ஆளுங்கட்சியினர் அரங் கேற்றினர்.அரசியல் பாதையில் ஆட்சி, அதிகாரம் என்பது எப்போதும் நிரந்தரம் அல்ல. 
ஜன நாயக வரம்பிற்கு உட்பட்டே அதிகாரம் பயன் படுத்தப்பட வேண்டும். 
அத்துமீறும் போது அது ஜனநாயகத்தையே சவக்குழியில் தள்ளிவிடும். தமிழக மக்கள் எப்போதும் ஜனநாயகத்தின் பக்கம் என்பதையே நிரூபித்து வருகின்றனர். 
அத்துமீறுபவர்களை மக்கள் எப்போதும் தள்ளியே வைத்திருக்கின்றனர் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
இளங்கோவன் இந்த வார்த்தைகளை கூறி நான்கு நாட்கள் வாளாவிருந்த அதிமுகவினர் இப்போது காவல்துறையினர் ஆதரவுடன்  நடத்தும் போராட்டம் தமிழக மக்களை மது விலக்கு போராட்டக் கவனத்தில் இருந்து திசை திருப்ப மேலே வடிவமைக்கப்பட்ட போராட்டம் என்பது மக்கள் அனைவருமே உணர்ந்துள்ளதுதான்.
இளங்கோவன் விளக்கம் .
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.பிரதமர் நரேந்திர மோடி பற்றியோ, முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியோ நான் எந்த தவறான கருத்தையும் வெளியிடவில்லை. நான் சொன்ன கருத்து வேறுவிதமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. நான் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் கூறிய கருத்தில் இருந்து எப்போதும் பின் வாங்க மாட்டேன்.மன்னிப்பு கேட்க மாட்டேன். மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்றார்.தில்லியிலிருந்து வரும் பாஜக மூத்த தலைவர்கள் தமிழக அரசியல் பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால் இங்குள்ள தலைவர்கள் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இதைத்தான் நான் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்று சொன்னேன். இதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
இதையும் மீறி என்னை தாக்க நினைத்தால் உங்களை (செய்தியாளர்களை) சந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்னை உயிரோடு தீ வைத்து எரித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோல், எனது கொடும்பாவியை எரித்து அதிமுக-வினர்போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் யார் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருநெல்வேலி போன்ற பல ஊர்கள் எங்கள் கட்சியினர் பொய் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். கொடும்பாவியை எரித்தவர்களை விட்டுவிட்டனர். 
தவறு செய்யாதவர்களை கைது செய்து சிறையில் வைப்பது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பிய அவர், அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.என் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அதனை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இளங்கோவன் கூறினார்.

ஜெயலலிதா-மோடி சந்திப்பு பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என இளங்கோவன் விளக்கம் தெரிவித்துக்கொண்டிருக்கையில்  அப்போது இடைமறித்த  ஜெயா தொலைக்காட்சி நிருபர் வேண்டும் என்றே அதிமுக ,ஜெயலலிதா அதரவு கோஷமிட்டு  இளங்கோவனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்புபடுத்தியும் கேள்வி எழுப்பினார். இதனால் இளங்கோவநும் காங்கிரசாரும் ஆவேசமடைந்தார். அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத் தில் ஈடுபட்டதால் ஜெயா தொலைக்காட்சி நிருபர் வெளியெற்றப்பட்டார்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-20.


  • உலக கொசு ஒழிப்பு தினம்
  • நேபாள் தந்தையர் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)
  • ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)
  • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)