சனி, 19 செப்டம்பர், 2015
நம் மூளையின் அபார ஆற்றல்களுள் முக்கியமானது ஞாபக சக்தி. இந்த ஞாபகத்தை தன்னுள் கொண்டிருக்கும் பகுதிக்கு ‘ஹிப்போக்காம்பஸ்’ என்று பெயர். 
நாம் பார்த்ததை, படித்ததை, கேட்டதை, கேள்விப்பட்டதை இங்குள்ள நியூரான்களில் - இன்னும் குறிப்பாகச் சொன்னால்  சைனாப்ஸ்களில் (Synapses) சில வேதிவினை மாற்றங்களாக சேமித்துக்கொள்கிறது. 
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரமாயிரம் சைனாப்ஸ்களில் ஒரு பட்டாசு சரடு மாதிரி அடுக்காகவும் தொடர்ச்சியாகவும் சேமித்துக்கொள்கிறது. இதை ஞாபகச் சரடு (Memory Engram) என்று கூறுகிறோம்.

பின்னொரு நாளில் இந்த ஞாபகச் சரடைத் தூண்டும்போது, பட்டாசு சரடின் ஒரு முனையில் உள்ள திரியைக் கொளுத்தினால், அந்தச் சரடு முழுவதும் வெடிக்கிற மாதிரி, ஞாபகச் சரடில் பதியப்பட்ட பழையவை நமக்கு நினைவுக்கு வருகின்றன. 
இந்த ஞாபக சக்திக்கு மூளையின் செல் அமைப்பு, செயல்பாடு, வேதிப்பொருட்கள், தானியக்க நரம்புகள்  எல்லாமே இயல்பாக ஆரோக்கியமாக அமைய வேண்டும்.

ஞாபக சக்தியை நம் வசதிக்காக  மூன்று வகையாகப் பிரித்திருக்கிறோம். நண்பர் சொல்லும் அலைபேசி எண்ணை அலைபேசியில் குறித்துவைக்கிறவரை நமக்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறோம். இது ‘குறுகிய கால ஞாபக சக்தி’ (Short term memory). 
போன வாரம் நடந்தது நமக்கு நினைவில் இருப்பது ‘அண்மைக்கால ஞாபக சக்தி’ (Recent memory). வாழ்க்கையில் நிகழ்ந்த துக்ககரமான அல்லது மகிழ்ச்சியான விஷயங்கள் என்றைக்கும் நினைவில் இருக்குமல்லவா? 
இது ‘நெடுங்கால ஞாபக சக்தி’ (Long term memory). 

ஞாபக மறதி என்பது ?


ஞாபக சக்தி குறையும் நிலைமையை ‘ஞாபக மறதி’ (Amnesia) என்று பொதுவாக சொல்கிறோம்.  ஒருவர் தன் ஞாபக சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாகவோ, முழுவதுமாகவோ, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ இழந்துவிடலாம். 
இதில் பல வகைகள் உள்ளன. அதுபோல் ஞாபக சக்தி குறைவதற்கு முதுமை, ஊட்டச்சத்து குறைவு, மன அழுத்தம், கவனமின்மை, குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம், மருந்துகளின் பக்க விளைவுகள், தலையில் அடிபடுதல், வலிப்பு நோய் என்று பல காரணங்கள் இருக்கலாம். 

சுமார் 60 வயதாகும்போது இயல்பாகவே ஞாபக சக்தி படிப்படியாகக் குறையும். காரணம், அப்போது நம் மூளை செல்களின் செயல்பாடு மெதுவாகக் குறையத் தொடங்கும். கவனக் குறைவு அதிகமாகும்.  அன்றாடம் நடந்த நிகழ்வுகள் மனதில் பதியாது.
 இன்றைக்கு வீட்டுக்கு யார் வந்தனர், காலையில் எங்கே சென்றுவந்தோம் என்பதுகூட மறந்துவிடும். வீட்டுக் கதவு எண் மறந்துவிடும். மிகவும் நெருங்கியவர்களின் பெயர்கூட அவசரத்துக்கு நினைவுக்கு வராது. 

தனக்கு ஞாபக மறதி உள்ளதை உணர்ந்து அவரே மருத்துவரிடம் வருவார். இப்படிப்பட்டவர்களுக்குப் பேச்சுத்திறன், செயல்திறன், நடை உடை பாவனைகள் எதுவும் மாறாது. ‘குறுகிய கால ஞாபக சக்தி’  மட்டுமே குறையும். இது முதுமை வயதுக்கான ஞாபக மறதி. 
இம்மாதிரியான ஞாபக மறதியுடன் ஒருவர் இயல்பாக பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் சிரமப்பட்டால், அந்த நிலைமையை ‘முதுமை மறதி’ (Dementia) என்கிறோம். 

உதாரணமாக, பேசும்போது உச்சரிப்பு தெளிவாக இருக்காது. சரியான வார்த்தையை சரியான இடத்தில் பயன்படுத்தமாட்டார். தினமும் செய்யக்கூடிய வேலையாக இருந்தாலும் அதைச் செய்ய சிரமப்படுவார். இந்த மாதிரியான ஞாபக மறதி அவருக்கு உள்ளதை மற்றவர்கள்தான் சொல்வார்கள். 
அதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். அவராக மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரமாட்டார். குடும்பத்தினர் தான் அழைத்து வருவார்கள்.

முதுமை மறதி என்பது 60 வயதுக்குப் பிறகு நம் மூளை செல்கள் அழிவதாலும், அப்படி அழிந்த செல்களுக்கு மாற்றாக புதிய செல்கள் உருவாவதில்லை என்பதாலும் மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான வேதிப்பொருட்களும் சுரப்பதில்லை என்பதாலும் ஏற்படுவது,
முதுமை மறதிக்கு பல காரணங்கள் உள்ளன.
 70 சதவிகிதம் வெளியில் தெரிவதில்லை. மீதி 30 சதவிகிதம் மட்டுமே வெளியில் தெரியும். காரணம் தெரியாத வகையில் முக்கியமானது, ‘அல்ஸைமர் நோய்’  (Alzheimer’s disease). அல்ஸைமர் நோய் மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தேடுவதில் தொடங்கி, வந்த பாதையை மறந்து வீட்டுக்குத் திரும்ப திண்டாடுவது, சுற்றி இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து, கடைசியில் ‘நான் யார்?’ 

என்பதே தெரியாமல் போவது வரை முதியவர்களுக்கு ‘அல்ஸைமர்’   என்னும் மறதி நோய் தாக்குவது இயல்பாகிவிட்டது. உலக அளவில் 60 வயதைக் கடந்தவர்களில் நூற்றில் 5 பேரையும், 85 வயதைக் கடந்தவர்களில் 5 பேரில் ஒருவரையும் இது பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் 38 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெண்களைவிட ஆண்களுக்கே இதன் தாக்குதல் அதிகம். அதிலும் பக்கவாதம் தாக்கிய ஆண்களை மிக விரைவில் இது தாக்குகிறது. பரம்பரையில் யாருக்காவது இது வந்திருந்தால், வாரிசுகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம். இது தவிர, விளையாட்டிலும் விபத்திலும் தலையில் அடிபட்டவர்கள் உடனே தலையை ஸ்கேன் செய்து கவனிக்கத் தவறினால் பின்னாளில் அல்ஸைமர் நோய் வரக்கூடும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மது அருந்துவது, புகைப்பழக்கம் போன்றவற்றால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் இது தாக்குவது அதிகம்

வயது ஏற ஏற மூளை செல்கள் சுருங்கி, அந்தப் பகுதியில் ‘அமைலாய்டு’ (Amyloid), ‘டௌ’(Tau) என்னும் இரண்டு புரதப்பொருட்கள் படிகின்றன. இதனால், பூச்சி அரித்த இலைகள் உதிர்வதைப்போல, மூளை செல்கள் சிறிது சிறிதாக மடிந்துபோகின்றன. இதன் விளைவால் ஞாபக சக்தி குறைகிறது. இந்த நோய்க்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மரபணுக் கோளாறு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.

அல்ஸைமர் நோயில் அறிவு சார்ந்த செயல்பாடுகள் முதலில் மறந்துபோகும். ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறாரோ அந்தத் தொழில் சார்ந்த அறிவு குறைந்து கொண்டே வரும். இது முதல் கட்டம்.  இரண்டாவது கட்டத்தில், வழக்கமாக நடந்து செல்லும் பாதையை மறப்பதில் தொடங்கி நெருங்கிப் பழகும் முகங்கள், உறவினரின் பெயர்கள் வரை ஞாபகத்துக்கு வராது. மூன்றாவது கட்டத்தில் ஞாபகம் மொத்தமும் அழிந்துபோகும். உணவை வாயில் போட்டுக்கொண்டால் அதை விழுங்க வேண்டும் என்றுகூட தோணாது... மென்றுகொண்டே இருப்பார்கள் அல்லது துப்பிவிடுவார்கள். மனைவியையே ‘இவர் யார்?’ என்று கேட்கும் அளவுக்கு மறதி முற்றிவிடும். இறுதியில், எதற்கெடுத்தாலும் சந்தேகம், கோபம், எரிச்சல்படுவது என்று மன பாதிப்புகளுக்கு உள்ளாகி, தன்னிலை மறந்து திரிவார்கள். 

இந்த நோய்க்கு முழுமையான சிகிச்சை எதுவும் இல்லை. நோயின் வீரியத்தைக் குறைக்க டோனிபிசில், ரிவாஸ்டிக்மின் கேலன்டமின் ஆகிய மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகளால் தொடக்க நிலை அல்ஸைமர் நோயைக் கட்டுப்படுத்தலாம். நோயாளியைப் பராமரித்தல்இந்தப் பாதிப்பு உள்ளவர்களை அன்போடும் பரிவோடும் பொறுமையோடும் கவனித்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தினரின் கடமை. கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற இன்றைய சூழலில், தன்னிலை மறந்து தவிக்கும் அல்ஸைமர் நோயாளிகளை சரியாக கவனிப்பது நாட்டில் வெகுவாக குறைந்து வருவது ஒரு துயரம்தான். 

ஒருவருடைய ஞாபக மறதிக்கு அடிப்படை காரணம் தெரிந்துவிட்டால் அதைக் குணப்படுத்துவது எளிது. காரணத்துக்கு ஏற்பவே சிகிச்சை அமையும். அத்தோடு உளவியலாளரின் ஆலோசனைகளும் பரிந்துரைகளும் தேவைப்படும்.
முதுமை மறதியைத் தடுப்பது எப்படி?

1. ஊட்டச்சத்து மிக்க உணவுகளைச் சாப்பிடுங்கள்.

2. துரித உணவுகளை ஓரங்கட்டுங்கள்.

3. பருமனைத் தவிருங்கள்.

4. புகைப் பிடிக்காதீர்கள்.

5. மது அருந்தாதீர்கள்.

6. நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

7. ரத்தக் கொழுப்பை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.

8. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தியானம், பிராணாயாமம் மேற்கொள்ளுங்கள்.

9. தினமும் 6 - 8 மணி நேரம் உறக்கம் தேவை. இதற்குக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

10. தனிமையைத் தவிருங்கள்.

11. பணிக்காலம் நிறைவடைந்து ஓய்வுக்காலத்தில் உள்ளவர்கள் பகலில் புத்தகம் படிப்பது, தோட்டக்கலை, இசை
கேட்பது, கேரம், செஸ் போன்ற உள்விளையாட்டு விளையாடுவது என ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுங்கள்.

12. மனக் கவலை, மன அழுத்தம் தவிருங்கள்.

நன்றி:தினகரன்.


இடுகையை பதிவேற்றிய பின்னர்தான் கண்டு பிடித்தேன் இடுகைக்கு தலைப்பே வைக்க மறந்தது.
எனது ஞாபகமறதிக்கு வருந்துகிறேன்.
எனக்காக "ஞாபக மறதி என்பது ?"என்பதையே தலைப்பாக எண்ணிக்கொள்ளுங்கள்.
===================================================================================================
நேதாஜி  மர்மம் விலகல்?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ல் நடந்த விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், 1964-ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்திருப்பதற்கான சாத்தியங்களே உள்ளன என்று மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மம் இன்றுவரை விலகவில்லை. 
1945-ஆம் ஆண்டு தைவான் விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என்பதே, பெருமளவு உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக இருக்கிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால், நேதாஜி விபத்தில் இறக்கவில்லை என்ற கருத்தும் நீண்டகாலமாக உள்ளது.
நேதாஜி என்ன ஆனார்? 
என்பதற்கான பதில் மத்திய அரசின் ஆவணங்களில் உள்ளதாகவும், அதை வெளியிட வேண்டும் என்றும் அண்மையில் பிரச்சனை கிளப்பப்பட்டது. 
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, நரேந்திரமோடியும் இப்பிரச்சனையைக் கிளப்பினார். தான் பிரதமரானால், அந்த ரகசியங்களை வெளியிடுவேன் என்று அறிவித்தார். ஆனால், பிரதமரான பின் இவ்விஷயத்தில் மவுனமான அவர், ஆவணங்களை வெளியிட்டால், பிற நாடுகளுடனான உறவு பாதிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேதாஜி தொடர்பாக மேற்குவங்க அரசிடம் இருக்கும் ஆவணங்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று தடாலடியாக அறிவித்தார்.
அதன்படி 12 ஆயிரத்து 744 பக்கங்களைக் கொண்ட, 64 ஆவணங்களை அவர், வெள்ளியன்று போலீஸ் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டார். 
கண்ணாடி பேழை ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் படிக்கும் வகையில், டிஜிட்டல் வடிவிலும் வைக்கப்படும் என்று தெரிவித்தார். 
மேலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஆவணங்களை சி.டி.யாகவும் வெளியிடப்பட்டது.
 வெளியிட்ட ஆவணங்களில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1964-ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்துள்ளார் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 1945ஆம் ஆண்டு தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
நேதாஜி, 1945-க்குப் பின் 19 ஆண்டுகள் கழித்து 1964-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் இருந்து சீனா வழியாக இந்தியாவுக்கு திரும்பினார் என்றும், இத்தகவல் அமெரிக்காவின் உளவு அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் 1941-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வெள்ளையர் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி, சீக்கியர் வேடத்தில் அந்த காவலில் இருந்து தப்பியதாகவும் சில ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

====================================================================================================
இன்று,
செப்டம்பர்-19.
  • சிலி ராணுவ தினம்
  • நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது(1893)
  • அமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது(1957)

பூஜை பொருட்களுடன் குழந்தை உட்பட நான்கு எலும்புக் கூடுகள் சேவற்கொடியோன் கூறியபடியெ எடுக்கப்பட்டு இரு நாட்கள் கழித்து தமிழக அம்மா காவல்துறை அந்த சுடுகாட்டி மீண்டும் ஆழமாகத்தோண்டுவது ஏன்?அது சுடுகாடு அங்கு எலும்புக் கூடுகள் கிடைப்பது சாதாரணமான விடயம் என்று காட்டி கிரானைட் மாபியாக்களை நரபளியில் இருந்து காப்பாற்றத்தான்.சகாயம் தொன்டச்சொல்லும்  போது சரிவர ஒத்துழைக்காத அம்மா போலிசு,மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தோண்டுவதன் மர்மம் இதுதானா?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழ் நாடு மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அன்று நீதி மன்றத்தில் வெளிப்படை யாகத் தெரிவித்தார் - நீதியரசர் C.J எஸ்.கே.கவுல்
காவல் துறை மீது இதுவரை இல்லாத இப்படிப்பட்ட கடுங் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அணி வகுத்துவந்து கொண்டிக்கும் நேரத்தில், அதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல இன்று ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது. 
“தி இந்து” ஆங்கில நாளிதழில், இன்று (19-9-2015) முதல் பக்கத்தில் வந்துள்ள செய்தியிலேயே, “No Confidence in State Police, observes C.J.” என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், “Chief Justice S.K. Kaul on Friday made an oral observation in the open Court that he has lost confidence in State Police” - அதாவது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அவர்கள் மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அன்று நீதி மன்றத்தில் வெளிப்படை யாகத் தெரிவித்தார் என்று அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது.
தலைமை நீதிபதி அவர்கள் தமிழகக் காவல் துறை பற்றி தெரிவித்துள்ள இந்தக் கருத்து பெரும்பாலான நாளேடுகளில் வெளி வந்த போதிலும், “தினத்தந்தி” போன்ற நடு நிலை[?]நாளேடுகள் தலைமை நீதிபதி தெரிவித்த இந்தக் கருத்தை வெளியிடாமல், சீப்பை மறைத்து வைத்து விட்டால்
திருமணமே நின்று விடும் என்பதைப் போல,மறைத்துள்ளார்கள்.
                                                                                                                  -கலைஞர் 

=================================================================================================


====================================================================================================
முகனூல்:.................................................பெரணமல்லூர் ம.பிரகாஷ்