ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

இந்தியாவில் அதிகரித்துள்ளது?


இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் பிற நோய்களால் இறப்பவர்களை விட ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பிடித்தல் மற்றும் மாசு  காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 
கடந்த பத்து ஆண்டு காலத்தில் இதுபோன்ற  உடல்நல பாதிப்புகளால்தான் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 
இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையான ‘லான்செட்’  பத்திரிகை கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: வாஷிங்டன் பல்கலைக்கழக  ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இந்தியாவில் உள்ள பொது சுகாதார அமைப்பு   பிரதிநிதிகள் அடங்கிய குழு உலகம் முழுவதும் உள்ள நோய் குறித்த ஆய்வை  மேற்கொண்டன. 
இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவின் நிலை குறித்தும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரன் 20150913
இந்தியாவில் கடந்த 1990 முதல் 2013ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் ரத்த அழுத்தம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்காக  உயர்ந்துள்ளது. 
இதே காலத்தில் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்பது வருத்தமான விஷயம். மது குடிப்பதால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
1990ம் ஆண்டு சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோய் என்பது மிகப்பெரிய  சவாலாக இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 8.97 லட்சம் பேர் இறந்தனர். 

ஆனால் ஆய்வின் முடிவில் இந்தியாவில் முதல் பத்து இடங்களில் உள்ள நோய்களின் பட்டியலில் இந்த ஊட்டச்சத்து குறைபாடு என்பது இடம்பெறவில்லை. 
மாறாக ரத்த அழுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு 79 லட்சம் பேர் இறந்துள்ளனர். ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் சதவீதம் 2013ம் ஆண்டில்  106 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரையின் அளவு காரணமாக சுமார் 30 லட்சம் குறைபிரசவ உயிரிழப்புகள்  நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றுமொரு முக்கிய காரணியாக சுகாதாரமற்ற நீர்நிலைகள் மற்றும் புகையிலை பயன்படுத்துதலும்  இடம்பிடித்துள்ளது. 
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள்  இறப்பது என்பது 1990ம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டுவிட்டது. 
 மாறாக உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு, மோசமான உணவு பழக்க வழக்கம், மது குடித்தல்  போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த கால்நூற்றாண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று பொது சுகாதார அமைப்பின்  பேராசிரியரான லலித் டான்டோனா தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான  நடைமுறைகள் அதிகரிக்கப்படவேண்டும். 
இவ்வாறு அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=======================================================================================================
இன்று,
செப்டம்பர்-13.

  • உலக சாக்லேட் தினம்
  • நியூயார்க் நகரம், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)
  • ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்(1898)
  • ஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது(1948)

குடிநீர் பாட்டிலில் பிரதமர் படம் கிடையாது.தமிழில் வார்த்தைகள்.ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு 
திருக்குறள் -பொருளுடன்.
ஆனால் முதல்வர் படம்,முதல்வர் பெயர்,ஆங்கிலம்.இதற்கு பெயர் தமிழ் நாடு?

தமிழகத்திடம் மின்சாரம் கேட்க கர்நாடகா முடிவு - செய்தி

"யாரு கிட்ட கேக்குர...!? அண்ணங்கிட்ட தான கேக்குர, நல்லா கேளு...'

கார்னைட் மாபியா பி.ஆர்.பி,14 பேரை நரபலி தந்த புகாரில் காவல்துறை தோண்ட மறுத்து காலம் தாழ்த்தியுள்ளனர் பின்பு சகாயம் போராட்டத்துக்கு பின் தோண்டியுள்ளனர்
பிரேதபரிசோதனை செய்ய வந்த டாக்டர்கள் 5 மணிக்கு மேல் வந்ததால் செய்ய முடியாது காலைல தான் செய்ய முடியும் என தடுத்து விட்டனர் தடயத்தை.அழித்து விடக்கூடாது என்பதால் மைதானத்திலே காவல் காக்கும்
தினமலர் போன்ற பெரும்பாலான பத்திரிகை இதன் முழு உண்மையை போடாமல் இருப்பது கேவலமான தமிழக ஊடக தர்மம்.Sundara Pandiyan

நீதித்துறை கெட்டு போனால் நாடு உறுப்புடாது என்று ரஜினி காந்த் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார். இதை ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட போது நடிகர் சங்கம் சார்பில் ஜெயாவிற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்துவிட்டு இப்போ இப்படி பேசுவது நகைச்சுவைதான்.


=======================================================================================================
முதலீட்டாளர் மாநாடு
ஒரு தொழிலாளர் பார்வை!

தமிழக அரசு செப்டம்பர் 9-10 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியுள்ளது. 
மாநாட் டிற்கு முன்னதாகவும் தொடர்ந்தும் முதலமைச்சர் “தமிழகம் அடுத்த சில வருடங்களில் சொர்க்கபூமியாக மாறி விடும்” என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். உண்மை யிலேயே முதலமைச்சர் சொல்வது போல இரண்டு லட்சத்து 46 ஆயிரம்கோடி ரூபாய் மூலதனம் கொட்டப் போகிறதா? இதன் மூலம் தமிழகத்தின் வருவாய் பெருகப்போகிறதா?
வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்போகிறதா? முதலமைச்சரின் அறிவிப்பு நம்பகத்தன்மையுள்ளதா? என்ற கேள்விகள் யாருக்கும் எழாதபடி இந்தப் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன.
வேண்டுமா? வேண்டாமா?

இந்திய, அந்நிய மூலதனம் வரு வது மிக முக்கிய தேவையாகும். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்துஇருக்க முடியாது. 
ஆனால், மூலதனவருகையால் நாம் பெறும் நன்மை மூலதன வருகைக்காக நாம் கொடுக்கும் விலையை விட அதிகமா என்கிற கேள்வியோடு பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

உதாரணமாக, ‘நோக்கியா’ தமிழகத்திற்கு வந்தது மிகப்பெரும் வரம் போல சித்தரிக்கப்பட்டது. 
அதுவும் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். விவசாயிகளிடம் ஒரு ஏக்கர் நிலத்தை8 லட்ச ரூபாய்க்கு வாங்கி அதை செம்மைப்படுத்தி 4.5 லட்சம் ரூபாய்க்கு 210 ஏக்கர் நோக்கியாவுக்கு கொடுக்கப்பட்டது. முத்திரைத்தாள் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப் பட்டது. 
5 ஆண்டுகளுக்கு அவர்கள் எந்த வரியும் கட்டத் தேவையில்லை. 
அடுத்த 5 ஆண்டுகளுக்கு வரிகளில்50 சதவிகிதம் கட்டினால் போதும்.
மேலும் அந்த நிறுவனம் விற்கும் செல்போன்களுக்கு செலுத்தும் மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசாங்கமே திருப்பிக் கொடுத்துவிடும். 
அதில் மட்டும் ஒரு நிபந்தனை அந்தத் தொகை நோக்கியா நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யும்தொகையை மிஞ்சக்கூடாது என்பதுதான். 
அப்படி கொடுத்த தொகை 856 கோடி ரூபாய். 
இதோடு தமிழகம் முழுவதும் கடுமையான மின்பற்றாக் குறையால்பாதிக்கப்பட்டிருந்தபோது மூன்று நிமிடத் திற்கு மேல் நோக்கியாவிற்கு மின்தடை இருக்காது என்றும் அதற்கு மேல் மின்சாரம் தடைப்பட்டால் அதனால் ஏற்படும் உற்பத்தி இழப்பை தமிழக அரசாங்கம் ஈடுகட்டும் என்றும் சலுகை மழையால் நனைய வைத்தது. 
ஆனாலும், பத் தாண்­­டுகள் முடிவதற்கு முன்பாகவே அந்த நிறுவனம் காலி செய்து விட்டுச் சென்று விட்டது.
அதைத் தடுக்க திராணியற்று மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தன. அவர்கள் நிறுவனத்தை காலி செய்தபோது மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய 2430 கோடி ரூபாய் வரியையும், மத்திய அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 21000 கோடி ரூபாய் வரியையும் ஏய்த்து விட்டதாக முறையே உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
அதில் பணியாற்றிய 6,000 பெண்கள் உட்பட 8,000 பேர் 30 வயதுக்குள் வேலை இழந்தவர்களாக வெளியே வந்து விட்டார்கள். 
அந்த நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்கள் கொடுத்துக் கொண்டிருந்த பாக்ஸ்கான் நிறுவனமும் மூடப்பட்டு அதில் இருந்த 22,000 பேருக்கும் வேலை பறிபோனது. 
நோக்கியாவுடன் போட்ட ஒப்பந்தத்தால் தமிழக அரசுக்கு, இந்திய அரசுக்கு தமிழக மக்களுக்கு ஏதாவது லாபம் உண்டா?
சிறு, குறு தொழில்கள் செழிக்குமா?
இத்தகைய தொழில்கள் வந்தால் சிறு,குறு தொழில்கள் செழிக்கும் என்றும், அதன் மூலம்பல பேருக்கு வேலை கிடைக்கும் என்றும்சொல்லப்படுகிறது
. இதுவும் கூட உண்மை யில்லை. 
உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்வ தற்கு ஒவ்வொரு நிறுவனமும் அவரவர் நாட்டிலிருந்து ஒப்பந்தக்காரர்களை கூட்டி வந்து நடத்துகிறார்கள். உதாரணமாக, சென்னையைச்சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மறைமலைநகர் பகுதியிலுள்ள ஹூண்டாய், ரெனால்ட் நிசான், போர்டு ஆகிய நிறுவனங் களுக்கு உதிரிப்பாகங்களும், சிறு சிறு பணிகளும் செய்யும் ஒப்பந்தங்கள் சில கம்பெனி களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
 இவை அனைத்தும் அந்நியக் கம்பெனிகள். டேவூ ஆட்டோமேட்டிவ் சீட்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட், கேபிஐ, ஊசூ ஆட்டோமேட்டிவ் இந்தியா லிமிடெட், அசாகி இந்தியா சேப்டி கிளாஸ் பிரைவேட் லிமிடெட், பிரைட் ஆட்டோ பிளாஸ்ட், ஜேகேஎம் டைனமிக் டெக்னாலஜி லிமிடெட், யசாகி, யுக்கால் ஃபியுயல் எனவே, சிறு,குறு தொழில்கள் செழிக்கும் என்பதும் உண்மையல்ல.எப்படியானாலும் அதில் வேலை செய்கிறவர்கள் இந்தியர்களாகத்தானே இருப்பார்கள் என்று எண்ணக்கூடும். 
இங்கு வேலை செய்பவர்கள் இந்தியர்களே. ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் அத்தக்கூலிகள். கேபிஐ, ஊசூ ஆட்டோமேட்டிக் இந்தியா ஆகிய 2 கம்பெனிகளிலும் ஒருவர் கூட நிரந்தரத் தொழிலாளிகள் இல்லை. (பட்டியல் 2)
கை நிறையச் சம்பளம்?
அந்நிய நிறுவனங்களில் சம்பளம் கொட்டிக் கொடுப்பதைப் போன்ற ஒரு கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில், இந்த நிறுவனங்கள் எல்லாவித மான சலுகைகளையும் பெற்றுக் கொண்ட பிறகு குறைந்தபட்ச கூலிச்சட்டம் உட்பட, இந்தியாவின் எந்தச் சட்டத்தையும் அமல்படுத்துவது இல்லை. சம்பளமும் மிகக் குறைவே. இந்தக் கம்பெனிகளில் பணிபுரிபவர்களில் 55 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளி, தினக்கூலித் தொழிலாளி, வேலை பழகுநர், பயிற்சியாளர், தகுதிகாண் பருவத்தினர் என்று பல்வேறு பெயர்களில் அத்துக்கூலிகளாக வைக்கப்பட் டுள்ளனர். (பட்டியல் 1). 
இவர்களின் மாதச் சம்பளம் 10,000 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. கட்டுமானப் பணியில் ஈடுபடும் கொத்தனார்கள் பலருக்கும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் என்பதோடு ஒப்பிட் டால் எத்தகைய சுரண்டலுக்கு இவர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது விளங்கும். இது தவிர, வேலைத்தளத்தில் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட பணிகளில் எந்திர மனிதனை பயன்படுத்துவதன் மூலம் மனிதர்களை எந்திரம் போல் வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றன. 
சம்பளமும் அதிகமில்லை, வேலையும் நிரந்தர மில்லை. 
கடுமையான ஒடுக்குமுறைகள், இதுதான் இந்தியாவிற்கு வந்துள்ள பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய தொழிலாளர்களின் நிலை.
அம்மான்னா சும்மாவா?
அம்மா ஜெயலலிதா ஒரு லட்சம் கோடிரூபாய் மூலதனம் வரும் என்றுதான் எதிர்பார்த்தாராம். ஆனால், 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் வந்து விட்ட தாக அம்மாவும், அவரது புகழ் பாடும் பத்திரிகைகளும் பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளுகிறார்கள்.
 ஆனால், கடந்த காலத் தோடு ஒப்பிட்டால், அம்மாவானலும், ஆண்டவனே ஆனாலும் அந்நிய நேரடி மூல தனம் சொன்னபடி வந்துவிடுவதில்லை. உதாரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு அரசாங்கம் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 31 ஆயிரத்து 706 கோடி ரூபாய் என்று தொழில் துறை அமைச்சர் தங்கமணி தொழில்துறை மானியக் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒவ்வொரு வருடமும் அவர்கள் சொன்னதை எல்லாம் கூட்டினால் அந்தத் தொகை இதைப்போல பல மடங்கு. (பட்டியல் 3). 
இந்தப்பணத்தில் எவ்வளவு வந்தது என்பதை கேர் ரேட்டிங் என்கிற நிறுவனம் கணக்கிட்டுள்ளபடி கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்த மொத்த மூலதனம் வெறும் 5,592 கோடி ரூபாய் மட்டும்தான். எனவே, கடந்த காலத்தில் நடந்தவைகளை எல்லாம்கவனத்தில் கொண்டு பார்த்தால் போடப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10 சதவிகிதம் வந்தாலே பெரிய விஷயம். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா இடத்திற்கும் பொருந்தும்.
இதை விட பெரும் வாய்ப்புகளை அளந்த குஜராத்திற்கு அவர்கள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகத்தை விட குறைந்த அளவே வந்தது. 
இந்த ஆண்டு ஜனவரி குஜராத் அரசாங்கம் நடத்திய இதேபோன்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 21,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டதாக அந்த அரசாங்கம் ஜம்பம் அடித்துக் கொண்டது. 
அதற்கு முன்னர் 2013ம் ஆண்டில் 15 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகச் சொன்னார்கள். 
ஆனால் வந்த மூலதனம் அதில் 5 சதவிகிதத்திற்கும் குறைவே.
 ஆனாலும், அம்மா அலட்டிக் கொள்ளாமல் வாயளக்கிறார். 
அவரது துதிபாடிகள் அம்மான்னா சும்மாவா என்று புளகாங்கிதத்தோடு பேசுகிறார்கள்.
சொன்னது நீ தானா?
அம்மா சொன்னால் அடையாமல் விடமாட்டார் என்பது அவர் கட்சிக் காரர்களும், அவரை ஆதரிக்கும் பத்திரிகை யாளர்களும் சொல்லும் கருத்து.
 ஆனால் அம்மாவின் கடந்த காலச் செயல்பாடு அதற்கு நேர் எதிராக இருக்கிறது. 
2012-ம் ஆண்டு தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ வெளியிட்டு தமிழகத்தை கனவில் மிதக்க விட்டார். 2023-ல் ஆசியாவிலேயே மூலதனம் அதிகமாக வரும் இடமாக சென்னை இருக்குமென்றும், அதற்குள் 15 லட்சம் கோடி ரூபாய் அந்நிய மூலதனம் இந்தியாவில் வந்து குவிந்து விடுமென்றும், வேலை வாய்ப்புகள் வந்து வரிசையில் நிற்குமென்றும் பீற்றித் திரிந்தார்கள். 
ஒவ்வொன்றிலும் என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்பதற்குப் பதிலாக ஒரே ஒரு துறையில் குறிப்பாக, எந்தத் தொழில் வந்தாலும் அதற்குத் தேவையான மின்சாரத்துறையில் அவர் சொன்னது என்ன? நடந்திருப்பது என்ன என்பதைப் பார்த்தால் சொன்னது நீதானா என்று கேட்கத் தோன்றும். தொலைநோக்குத் திட்டம் 2023-ல் மொத்த முதலீடு 15 லட்சம் கோடி என்றால் அது ஏறத்தாழ மூன்றில் ஒருபங்கு, 4.5 லட்சம் கோடி ரூபாய் மின்துறையில் முதலீடு செய்யப்படுமென்றும் அதன் மூலம் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென்றும், அதில் 2017 இறுதிக்குள் 5,000 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுமென்றும் தெரிவித்திருக்கிறார்கள். 
இந்த மூன்று வருட காலத்தில் உருப்படியாக ஒரு திட்டம் கூட துவங்கவில்லை என்பது மட்டுமல்ல, 2017 வருகிற போது 500 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்பட்டிருக்காது என்பதுதான் உண்மை.இதேபோன்று மதுரை, தூத்துக்குடி தொழில் வளாகம் பணிகள் பற்றி கடந்த 4 பட்ஜெட்டிலும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
-சு.கனகராஜ்
 இன்னும் அது தவழவே இல்லை.குப்புறத்தான் கிடக் கிறது. 
இதேபோன்று தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏதுமில்லை. எனவே, அம்மா அவ்வப்போது ஊதிப் பெரிதாக்குவார், ஆனால் காற்று போகும்போது இன்னொன்றை எடுத்து ஊதிப் பெருக்கி அதை மறக்கச் செய்வார். 
இதுதான் ஜெயலலிதா அவர்களின் கடந்த காலச் செயல்பாடாக இருந்து வந்திருக்கிறது. எனவே, அந்நிய மூலதனம் வரட்டும். அதற்காக அது கொள்ளையடித்துக் கொண்டு போகவோ, இந்தியச் சட்டங்களை உடைக்கவோ அனுமதிக்கக்கூடாது. 
தமிழக அரசு ஆட்டோமொபைல் தொழிற் கொள்கையில் அத்தொழிலை பொதுப் பயன்பாட்டுச் சேவை என்று சொல்லி வேலை நிறுத்தத்தை தடை செய்திருக்கிறது. விநாசகாலே விபரீத புத்தி என்பார்கள். விபரீத புத்தி விநாச காலத்திற்கு பட்டுக்கம்பளம் விரிக்கும். 
மூலதனம் வரட்டும். 
இந்தியச் சட்டங் களுக்குட்பட்டு இயங்கட்டும். 
தரமான, சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பை உருவாக்கட்டும்.
 வரிகளை ஒழுங்காக கட்டட்டும். 
லாபமும் சம்பாதிக்கட்டும். இப்படி இருந்தால்தான் அது தொழிற்கொள்கை. 
இல்லையேல் அது கொள்ளைத்தொழில். 
தமிழக அரசு தொழிலை அனுமதிக்கட்டும்.கொள்ளையை அல்ல!

                                                                                                                            -சு.கனகராஜ்,                                                                                                                                        
(கட்டுரையாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்)
========================================================================================================================================================