நடிகர் சங்க பெயர் மாற்றினால்போதுமா?
எவ்வளவுதான் ஒதுக்கினாலும் இந்த நடிகர் சங்கத் தேர்தலை தாண்டி போகமுடியவில்லை .தொல்லைக்காட்சி ஊடகங்கள் 24X 7 அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள். இந்த முட்டல்கள்,மோதல்களுக்கான மையப்புள்ளி கமல்ஹாசனிடமிருந்துதான் விஸ்வரூபம் கொண்டது என்றால் அது உண்மையே.
விஸ்வரூபம் வெளியாவதில் மத,அரசு பக்கம் இருந்து உண்டான சிக்கல்களில் கமல்ஹாசன் அல்லோகலப்பட்டுக்கொண்டு நாட்டை விட்டே போவதாக சொல்லும்போதும் அவர் இருந்த தென்னிந்திய நடிகர்சங்கம் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.
ஒரு வெற்று அறிக்கை கூட ஒப்புக்கு வெளியிடவில்லை.
காரணம் .தலைவர்,செயலாளர்களான மாமன்,மச்சான்களாகிய சரத் குமார்-ராதாரவி இருவரும் அதிமுக அல்லக்கைகள்.அம்மாவின் ஹெலிகாப்டர் வரும் ஓசை கேட்டே வானத்தை நோக்கி கும்பிடும் சாதி.கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள,பிழைப்பை கெடுத்துக்கொள்ள இருவரும் தயார் இல்லை.
இந்தி,தெலுங்கு,கன்னடம்,வங்காளி என்று இந்திய மொழி நடிகர்கள்,இயக்குனர்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அறிக்கைகள் .சொந்த வீட்டையே படம் வெளியாகாவிட்டால் விற்று விட வேண்டியதுதான் என்ற போது அவருக்கு ஆறுதல் கூறி தமிழகம் முழுக்க இருந்து சொத்துப்பத்திரங்கள் அவர் வீட்டுக்கு தாபாலில் வந்து குவிகிற கண்கலங்க வைக்கும் நிகழ்வுகள்.
அப்போது கமல்ஹாசனை பார்த்து ஆறுதல் கூறிய நடிகர்கள் வாயிலில் இருந்த ஊடகங்களிடம் கருத்துகளை தெரிவித்து செல்கிறார்கள்.
அப்போது வந்த விஷால் கருத்துகளை கூறி விட்டு இந்த விடயத்தில் நடிகர் சங்கம் ஒன்று செய்யாதது வருத்தமளிக்கிறது என்றார்.
அதுவரை வாயையே திறக்காத மாமன் மச்சான்கள் அதாவது நடிகர்சங்க காவலர்கள் கோபத்துடன் குமுறி விட்டனர்.
சின்னப்பயல் விஷாலுக்கு என்ன தெரியும்.நடிகர் சங்கம் எவ்வளவு உழைக்கிறது [?]தெரியுமா?தவறாக கருத்து தெரிவித்த விஷால் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஆனால் பல்வேறு நடிகர்கள் கூறியதால் விஷால் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும் ,விஷாலை அவ்வப்போது போட்டு தாக்கிக்கொண்டுதான் இருந்தனர்.
தன்னையே கமல் விடயத்திலும்,வரலட்சுமி விவகாரத்திலும் சரத் குமார் ,ராதாரவி குறி வைத்து தாக்குவதை கண்டு கோபம் கொண்ட விஷாலுக்கு பூச்சி முருகன்.குமரி முத்து வழக்கு விவகாரம் நடிகர் சங்கம் சத்தியம் சினிமா செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம்,நடிகர் சங்க கட்டிடம் இடிப்பு ஒரு பிடியாக கிடைத்துக்கொண்டது.
அதை தொட்ட விஷாலுக்கு நடிகர் சங்க ராதா ரவி .சரத்குமார் செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்த முன்னணி ,இளம் நடிகர்கள் ஆதரவு ரகசியமாகவும்,பகிரங்கமாகவும் கிடைக்க அதன் விளைவுதான் தேர்தல் மோதல் வரை வந்து விட்டது.
பல ஆண்டுகளாக எதிர்க்க ஆள் இல்லாமலும்,எதிர்ப்புக்குரலை நசுக்கி விடுவதாலும் பல கோடிகளை சம்பாதித்த இருவராலும் நடிகர் சங்க பொறுப்பை.சுகத்தை விட முடியவில்லை.
பதவியில் இல்லாவிட்டால் தங்கள் முறைகேடுகள் அம்பலமாகி தங்களை அசிங்கப்படுத்தி விடும் என்ற பயம்தான்.
அதுதான் ராதாரவி,சரத்குமார் அணியினரை என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே அசிங்கமாக ,ஆத்திரமாக சாதி,மதம் எல்லாவற்றையும் இழுத்து பேசுகிறார்கள்.
இதில் தயாரிப்பாளர் தாணு உள்ளே நுழைந்து சமரசம் என்ற பெயரில் சரத்குமாருக்கு ஆதரவாக பேசினார்.அவர் தயாரிப்பாளர் சங்கத்திலேயே உண்டான எதிர்ப்பால் வாயை சூயிங்கம் போட்டு ஒட்டிக்கொண்டார்.
இப்போது ஒரே குடும்பமாக இருக்க வேண்டிய நடிகர் சங்கம் ஒரு குடும்பமாக ராதிகா,அவர் கணவர் சரத்குமார்,அண்ணன் ராதாரவி.தங்கை நிரோஷா,அவர் கணவராக வேலை பார்க்கும் ராம்கி[இருவருக்கும் முறைப்படி மணமாக வில்லை].சரத் குமாரின் மகள் வரலட்சுமி என்று மாறி போனதால் வந்த கோளாறுதான்.
இந்த கலகத்தில் வாகை சந்திரசேகர் ஒதுங்கிக்கொண்டார்.
தேர்தலில் விஷால் அணிக்குபின்னணி ஆதரவு கமல்ஹாசன்.
அதானால்தான் ராதா ரவியும்,சரத்குமாரும் கமல்ஹாசன் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.ஆனால் இவர்களை கமல் கண்டு கொள்ளவில்லை.
தனது நண்பர் நாசரை தலைவராக முன்மொழிந்து விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு மேலும் அவர்களின் மூலக்கடுப்பை அதிகப்படுத்தினார்.
விஷால் அணி வெற்றி பெறுவது சந்தேகம்தான்.
காரணம் .திரைப்பட நடிகர்கள் ஆதரவு 95% விஷாலுக்கு இருந்தாலும் அவர்கள் வாக்குகள் 900 பக்கம்தான்.மீதி 2000க்கும் அதிகம் நாடக நடிகர்கள் வாக்குகள்.
அந்த பட்டியலில் உண்மையில் சில நாடக நடிகர்கள் இருந்தாலும் ராதாரவி மகன்,வேலைக்காரர்கள் உடபட பலர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளராம்.
அதிமுக,சமக கட்சி உறுப்பினர்கள் நாடக நடிகர்கள் போர்வையில் இருக்கின்றனர்.அவர்கள் வாக்குகள் யாருக்கு போகும் என்பது இதை படிக்கும் நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.
திரை நடிகர்களில் 240 பேர்கள் சந்தா தரவில்லை என்று நீக்கப்பட்டுள்ளார்கள்.அதுவும் விஷால் அணியை ஆதரிக்கும் சச்சு,மன்சூர் அலிகான் போன்ற 40க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களுக்கு வாக்குகள் இல்லை.இருப்பவர்களிலும் மோகன் போன்ற பலர் வாக்குகளை அவர்கள் வரும் முன்னரே போட்டு விட்டார்களாம்.
இப்போது சொல்லுங்கள் யாருக்கு வெற்றி.
சென்னையில் நடித்துக்கொண்டிருக்கும் மன்சூர் அலிகான்,சச்சு போன்றவர்கள் சந்தா கொடுக்க வில்லையாம்.ஆனால் தமிழகம் முழுக்க உள்ள நாடக நடிகர்கள் 2000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சந்தாவை சென்னையில் வந்து தவறாமல் செலுத்தியுள்ளார்களாம்.
ராதாரவி சொல்லுகிறார் கண்டிபாக நம்ப வேண்டும் .இல்லையென்றால் பச்சையாக திட்டுவார்.
ஆனாலும் உள்ளூர சரத்குமார் அணியினருக்கு உதறல்தான்.அதுதான் கமல்ஹாசன்,சிவகுமார் போன்ற பெரும் நடிகர்களை தாக்கிப்பேசவும் விஷால்,சங்கீதா போன்றவர்களை தாக்கும் அளவுக்கும் கொண்டு போய் விட்டுள்ளது.
இவர்கள் சண்டையில் தேர்தல் நடக்கையில் ஊடகங்கள் மற்றொரு தலைப்பை பிடித்து தொங்கிக்கொண்டு அதை ஊதி பெருசாக்கும் பணியில் முனைந்து விட்டன.
அது தென்னிந்திய நடிகர்க சங்கத்தை தமிழக நடிகர் சங்கமாக பெயர் மாற்றும் திருப்பணிதான்.
வழக்கமாக தேர்தல்களில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினிகாந்தை விஜயகுமார் மூலம் தூண்டி அவரும் நடிகர்கள் சங்கம் வாஸ்து படிஇடிக்கப்பட்டாலும் நியுமராலஜி படி தமிழ் நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றினால் பாபா அருளால் நல்லதே நடக்கும் என்று வாய்ஸ் கொடுக்க வைத்தனர்.
அதை வருகிற போகிற வர்களிடம் வாக்களிக்க காத்து நிற்பவர்களிடம் சுண்டல் விற்கும் நபர் வரை கருத்துகளை கேட்டு காலத்தை ஊட்டி விட்டனர்.
இந்த மோதலுக்கும்,தேர்தலுக்கும் காரணம் பெயர் மாற்றம்தானா என்று எண்ணும் அளவு கருத்து கந்தசாமிகள் வரவு ஊடகங்களில்.
இயக்குனர் சங்க ஆர்.கே.செல்வமணி இந்த பெயர் மாற்றத்தில் முன்னணியாக இருக்கிறார்.இயக்குனருக்கு நடிகர் சங்கம் பெயர் மாற்ற என்ன ஆர்வம்?
பெயர் மாற்ற காரணமாக மலையாள நடிகர்சங்கம்,ஆந்திர ,கன்னட சங்கங்களை எல்லாம் தூக்கி எடுத்துக் காட்டுகிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற சங்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தங்களுக்கு தனி சங்கம் வைக்கும் போது அவர்களுக்கான பெயர்களை சூட்டுவது வழமைதானே?தென்னிந்திய நடிகர் சங்கம் - ஆந்திரா,தென்னிந்திய நடிகர் சங்கம்-கேரளா என்றா வைப்பார்கள்.
அது போகட்டும்.
திராவிடர் கழகத்தில் இருந்து திமுக,அதிமுக.மதிமுக,தேமுதிமுக என்று வரிசையாக பிரிந்து வந்ததால் திராவிடர் கழகம் பெயரை மாற்றிட முடியுமா?மாற்றால் தேவையா?மாற்றத்தால் அதனை தோற்று வித்தவர்களை அவமதிப்பதல்லவா?இப்போது மலையாள நடிகர்கள்,ஆந்திர நடிகர்கள் என்று அனைவரும் தனி சங்கம் கண்டு போன பின்னர் இப்போது தமிழ் நடிகர்கள் மட்டுமே மிஞ்சிருக்கையில் பெயர் மாற்றம் எதற்கு?
வேலையற்ற வீனர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே-இது தென்னிந்திய நடிகர் சங்கம் ஆரம்பித்தவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர்.படப்பாடல்களில் வரிகள்.
பெயர் மாற்றம் ஒன்றும் சாதித்து விடாது.தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் செயல்பட்டு சாதிக்க வேண்டும்.முறைகேடான தலைமையை மாற்றுங்கள் சங்கப்பெயரை அல்ல.