ஞாயிறு, 25 அக்டோபர், 2015

மரணத்தின் மர்மம்

அணுசக்தி உலைகளால் மக்களுக்கு அபாயம் என்று ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கின்றன.ஆனால் அணுசக்தி அறிவியலாளர்களுக் இயற்கைக்கு மாறாக மரணமடைந்துள்ளது தெரியவருகிறது.தொடர்ச்சியாக 26 அணுசக்தி நிபுனர்கள்,ஆய்வாளர்கள்,பணியாளர்கள் அப்படி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.இன்றைய அணு உலக பரபரப்பு அதுதான்.


ந்திய அணுசக்தித் துறை சார்ந்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது. உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடைய விஷயம், அதனால் ராணுவ ரகசியம் என்பதே பெரும்பாலும் பதிலாகக் கிடைக்கும். அணுசக்தியைப் பொறுத்தவரை அரசு, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் மவுனம் காப்பது மரபாகிவிட்டது.

இப்படி மவுனங்களும் மர்மங்களும் நிரம்பிய அணுசக்தித் துறையில் பணியாற்றிய 26 பேரின் மரணம், சமீபத்தில் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது!
இயற்கைக்கு மாறாக
‘மரணம் என்பது இயற்கையான ஒன்றுதானே. அதில் என்ன பிரச்சினை?' என்ற கேள்வி எழலாம். ஆனால், அந்த 26 பேரின் மரணமும் இயற்கைக்கு மாறான முறையில் நடந்திருப்பதுதான், இப்போதைய விவாதத்துக்கான காரணம்.
ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் என்ற ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தாண்டு செப்டம்பர் 21-ம் தேதி பெற்ற தகவலின்படி, 2009 முதல் 2013-ம் ஆண்டுவரை அணுசக்தித் துறையில் 11 பேர் இயற்கைக்கு மாறாக மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இது அரசுத் தகவல் சொல்லும் கணக்கு. 

இந்தத் தகவலின் கீழ் வராமல் மேலும் 15 அணுசக்தி விஞ்ஞானிகள் இயற்கைக்கு மாறான முறையில் மரணமடைந்துள்ளனர்.

முதல் மர்மம்.
கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் நிலை என்று இதை கருத முடியாது. 

ஹோமி ஜஹாங்கிர் பாபா
காரணம், ‘இந்திய அணுசக்தித் துறையின் தந்தை' என்று அழைக்கப்படுகிற ஹோமி ஜஹாங்கிர் பாபாதான் இப்படி இயற்கைக்கு மாறான முறையில் மரணித்த முதல் அணு விஞ்ஞானி.

1966-ம் ஆண்டு ‘சக்தி வாய்ந்த அணுஆயுதம் ஒன்றைக் குறைந்த காலத்தில் இந்தியாவால் தயாரிக்க முடியும்' என்று ஒரு கூட்டத்தில் ஹோமி பாபா பேசினார். அடுத்த சில நாட்களில் விமான விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.


எங்கே விமானம்?
அவர் சென்ற விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மான்ட் பிளாங்க் என்ற பகுதியில் மோதி விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அங்கு விமானத்தின் சிதறிய பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டது. அநேகமாக இது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் வேலையாக இருக்கலாம் என்று இன்றுவரை நம்பப்பட்டுவருகிறது. ஆக, அணு விஞ்ஞானிகள் இயற்கைக்கு மாறாக இறப்பது புதிதல்ல. கடந்த 50 ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்து வருகிறது.

இஸ்ரோவிலும்...
இதுகுறித்து அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அணுசக்தித் துறையில் ஆய்வு மேற்கொண்டுவரும் ஆய்வாளர் எம்.வி.ரமணாவிடம் கேட்டோம்.
"இந்த இறப்புகள் குறித்து இன்னும் விசாரிக்கப்படவில்லை. எனவே, எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் யார் மீதும் குற்றஞ்சாட்டிவிட முடியாது. ஆனால், இந்த மாதிரியான இறப்புகள் அணுசக்தித் துறையில் மட்டும்தான் ஏற்படுகிறதா என்பதைக் கவனித்தாக வேண்டும்" என்றார்.
இவருடைய கூற்று முற்றிலும் சரி. கடந்த 15 ஆண்டுகளாக இஸ்ரோ அமைப்பிலும் 684 பேர் இயற்கைக்கு மாறான முறையில் இறந்திருக்கிறார்கள். அதாவது, ஓர் ஆண்டுக்கு 45 இறப்புகள் என்ற கணக்கில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

பிரதமருக்குக் கடிதம்
ரமணா மேலும் தொடர்ந்தார். "சில மாதங்களுக்கு முன்பு ‘பாபா அணு ஆராய்ச்சிக் கழக'த்தை (BARC) சேர்ந்த ஊழியர்கள், ‘பார்க்' அமைப்பின் நிர்வாகத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.
அங்கு நிலவிவரும் அதிகாரப் போட்டி, ஊழியர்களைத் தரக்குறைவாக நடத்துதல், பதவிஉயர்வுகளில் காட்டப்படும் வேறுபாடுகள் போன்ற பிரச்சினைகள்தான், இவ்வாறு அந்த ஊழியர்கள் கடிதம் எழுதக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
இதுபோன்ற பிரச்சினைகள் எல்லா அறிவியல் அமைப்புகளிலும் காணக்கூடியவைதான். ஆனால் குறிப்பாக ஓர் ஊழியர், ஒரு பிரச்சினையை அந்தக் கடிதத்தில் சொல்லியிருந்தார்.

கடலில் அணுக்கழிவு?
அது, அணுவை மறுசுழற்சி செய்யும் உலைகளிலிருந்து வெளிவரும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலுள்ள கதிரியக்க அணுக்கழிவுகளை நேரடியாகக் கடலில் விட வேண்டும் என்று உயரதிகாரி தன்னை நிர்பந்திப்பதாக அந்த ஊழியர் கூறியிருந்தார். இது உண்மை என்றால், அது குறித்து நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும்.
இதுபோன்ற உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் உள்ள பணியாளர்களைத் தரக்குறைவாக நடத்தினால், அந்தப் பணியாளர்கள் அணுக்கழிவுகளை நேரடியாகக் கடலில் கொட்டக்கூடாது என்பது போன்ற விதிகளை மீறலாம்.
ஆனால், இந்தப் பிரச்சினைகள் குறித்து அணுசக்தித் துறை ஏன் இன்னும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பது உங்களைப் போலவே எனக்கும் தெரியவில்லை" என்றார்.

இதுபோன்ற பிரச்சினைகள் வருங்கால அணுசக்தி விஞ்ஞானிகளை எப்படிப் பாதிக்கும் என்று அவரிடம் கேட்டதற்கு, "1940 மற்றும் 1950-களில் இருந்ததைப் போன்ற சவால்களோ, தீர்க்க முடியாத பிரச்சினைகளோ அணுசக்தித் துறையில் இன்றைக்கு எதுவும் இல்லை. எனவே, இந்தத் துறையில் இளைஞர்களின் ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது. அதனால் மேற்கண்ட பிரச்சினையால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது" என்றார்.

இந்தப் பிரச்சினை குறித்து அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்தத் துறையில் பலர் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் இறந்துபோகின்றனர். இதற்கு மேல் அது பற்றி எந்தக் கருத்தும் எனக்கு இல்லை" என்கிறார். அதேநேரம் அரசும், இந்தப் பிரச்சினை பற்றி எந்தக் கருத்தும் இல்லை என்று இருந்துவிட முடியுமா?
எப்படி,எப்படி இறந்தார்கள்?
இயற்கைக்கு மாறான முறையில் இறந்த சிலரின் விவரங்கள் இங்கே. இவர்களில் பெரும்பாலோர், தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் திட்டங்களில் ஈடுபட்டவர்கள். 

அப்படியென்றால், அந்தப் பாதுகாப்பு ரகசியங்களைத் தெரிந்துகொள்வதற்காகத்தான், இவர்கள் கொல்லப்பட்டார்களா? 

இந்தக் கொலைகளுக்குக் காரணம் யார்?

பெரும்பாலான வழக்குகளில் போதிய சாட்சியங்கள் எதுவும் கிடைக்காதபட்சத்தில், அந்த மரணங்கள் தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அசாதரணமாக மரணித்தவர்கள்.

1) ஹோமி பாபா (1966) - விமான விபத்து
2) அவ்தேஷ் சந்திரா (பார்க், 2000) - தற்கொலை
3) டாலியா நாயக் (எஸ்.ஐ.என்.பி., 2005) - விஷம் குடித்துத் தற்கொலை
4) ஜஸ்வந்த் ராவ் (இந்தியன் ரேர் எர்த், 2008) - தற்கொலை
5) லோகநாதன் மகாலிங்கம் (கைகா, 2009) - ஆற்றில் விழுந்து தற்கொலை
6) உமங் சிங் (பார்க், 2009) - தீ விபத்து
7) பார்த்தா பிரதிம்பாக் (பார்க், 2009) - தீ விபத்து
8) திருமலா பிரசாத் தென்காசி (ராஜா ராமண்ணா சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி, 2009) - தற்கொலை
9) எம்.ஐயர் (பார்க், 2010) - தற்கொலை
10) அஷுதோஷ் ஷர்மா (பார்க், 2010) - தூக்கிட்டுத் தற்கொலை
11) செளமிக் சவுத்ரி (பார்க் - 2010) - தூக்கிட்டுத் தற்கொலை
12) அக்ஷய் பி. சவான் (பார்க் - 2010) - மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை
13) சுபாஷ் சோனவானே (பார்க் - 2010) - தற்கொலை
14) உமா ராவ் (பார்க், 2011) - தற்கொலை
15) முகமது முஸ்தபா (கல்பாக்கம், 2012) - தற்கொலை
16) கே.கே.ஜோஷி (ஐ.என்.எஸ். அரிஹந்த், 2013) - தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை
17) அபிஷ் ஷிவம் (ஐ.என்.எஸ். அரிஹந்த், 2013) - தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை
18) ரவி மூல் (என்.சி.பி.எல்.) - கொலை
19) டைட்டஸ் பால் (பார்க்) - தூக்கிட்டுத் தற்கொலை
20) ஜி.கே. குமரவேல் - விமான விபத்து
21) பல்தேவ் சிங் - தற்கொலை
                                                                                                                                                                                           - எம்.வி.ரமணா
===================================================================================
இன்று,
அக்டோபர்-25.

ஓவியர் பாப்லோ பிகாசோ 
ஸ்பெயின் நாட்டின் தெருவில் பல ஓவியங்களை அந்த இளைஞன் கடை விரித்து இருந்த பொழுது ,"என்ன பைத்தியக்காரத்தனம் இது ?" எனதான் ஊரே சிரித்தது.ஓவியம் என்பது இருப்பதை இருக்கிற மாதிரி வரைவது தான் ஓவியம் என்பதை உடைத்து பல்வேறு தளங்களில் ஓவியத்தை பயணம் போக வைத்தான் அந்த இளைஞன் . தனக்கு தோன்றியதை ஓவியமாக வடித்து தள்ளிய உண்மைக் கலைஞன் அவர்.

இளம் வயதில் அப்பாவுடன் ஸ்பெயினில் காளைச்சண்டைகள் பார்க்க போனது அவரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது. அவருடைய ஓவியங்களில் தொடர்ந்து காளைச்சண்டைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. காலையில் பதினோரு மணிக்கு பொறுமையாக எழுந்துவிட்டு இரவு மூன்று மணி வரை ஓவியங்கள் வரைகிற குணம் அவருக்கு இருந்தது. எப்படி தொன்னூறு வயதிலும் இத்தனை ஆர்வத்தோடு இயங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட பொழுது ,"சிலர் இளவயதிலேயே முதியவர் போல உணர்கிறார்கள். நான் இந்த வயதில் முப்பது வயது இளைஞனாக தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறேன் !" என்றார்
அரசியல் கட்சிகளின் பெயர்கள் கூட தெரியாமலே இயங்கிக்கொண்டு இருந்தார் அவர்.  அவரின் ஓவியங்கள் 1936 க்கு முன்னர் அரசியல் சார்ந்து வரையபட்டதே இல்லை. பாசிஸ சக்திகள் குறிப்பாக ஹிட்லரின் படைகள் அமைதி தவழ்ந்த எண்ணற்ற பொதுமக்கள் இருந்த கார்னிகா நகரத்தை தாக்கி உயிர்களை குடித்து வெறியாட்டம் போட்ட பொழுது தான் பிகாசோ கோபப்பட்டார். அரசு ஒரு ஓவியம் வரையச்சொல்லி ஏற்கனவே கேட்டிருந்தது. எல்லா கோபத்தை, அவர்களின் வெறியாட்டத்தை ஓவியத்தில் அப்படியே கொண்டுவந்தார். பற்றியெரியும் நெருப்பும்,அதில் சிக்கிக்கொண்ட பெண்ணும் என்று அவர் அப்படியே காட்சிப்படுத்திய விதம் உலகம் முழுக்க போருக்கு எதிரான அடையாளமானது.
அதிகம் பொருள் ஈட்டிய அவர் தான் இறக்கிற வருடத்தில் கூட இருநூறு ஓவியங்கள் வரைந்தவர் அவர். அவர் நாட்டை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது பிரான்ஸ் தேசத்தில் தஞ்சம் புகுந்து அங்கேயே இருந்தார்;அவரை அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா போகச்சொன்ன பொழுது கம்பீரமாக மறுத்தார் . அங்கே இருந்தே தைரியமாக ஓவியங்கள் வரைந்தார் .
அவர் எண்ணற்ற ஓவியங்கள் வரைந்தாலும் அதில் சிலவற்றை மட்டுமே விற்பனைக்கு
விடுவார். எண்ணற்ற ஓவியங்கள் ஒரே சமயத்தில் சந்தைக்கு வந்தால் அவரின்
மார்கெட் போய்விடும் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. பிரான்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் அவர்.
ஸ்டாலின் இறந்த பொழுது அவரை இளைஞராக காண்பித்து ஓவியம் தீட்டி இருந்தார்
இவர்.
பிரான்ஸ் தேசத்தை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது இவர் அங்கேயே
இருந்தாரில்லையா ? அப்பொழுது ஒரு ஜெர்மானிய ராணுவ அதிகாரி இவரைப்பார்க்க
வந்தார். கார்னிகாவை கண்களை விரித்து பார்த்துவிட்டு ,"இந்த ஓவியத்தை நீ
தானே வரைந்தாய் ?" என்று கோபத்தோடு கேட்ட பொழுது பிகாஸோ சலனமே இல்லாமல்
தீர்க்கமாக ,"இல்லை இதை நீங்கள் தான் வரைந்தீர்கள் !" என்றார். எல்லாமும்
கலையாகுமா என்றொரு இளைஞன் கேட்ட பொழுது ஒரு மிதிவண்டியின் இருக்கை அதன்
ஹாண்டில் பார் இரண்டையும் சேர்த்து ஒரு காளையின் தலையை உருவாக்கிவிட்டு
"முடியும் !" என்றார் அவர்.
ஒரு நாளைக்கு பலமணிநேரம் நின்றுகொண்டே வரையும் குணமும் இருந்தது. அமைதிக்கான அடையாளமாக புறாவை பிரபலப்படுத்தியதும் அவரே ; அதே சமயம் கொரியப்படுகொலைகள்,'போரும்,அமைதியும்' என்று போரின் தீங்குகளுக்கு எதிராக
ஓவியங்கள் தீட்டி கலை மூலம் அமைதிக்காக குரல் கொடுத்தார் அவர்.
மரபை மீறும் ஆவேசம் அவரிடம் இருந்ததுபெரும்பாலான நவீன ஓவியங்கள் குறிப்பாக அவருடைய ஓவியங்கள் புரியவில்லை எனக்கேட்ட பொழுது  "உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரத்திலிருந்து குயில்  கீதத்தை கூவுதல் மூலம் கசிய விடுகிற பொழுது அதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு ? உங்கள் வீட்டின் கண்ணாடியில் வழிந்து மென்மையாக படிகிறதே பனித்துளி, அதை எந்த பொருளில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? ஒவ்வொரு நாளும் மேகம் புதுப்புது வடிவம் எடுக்கிறதே அதற்கு என்ன பொருள் ?. வெயிலை, இரவை, மழையை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள்.எல்லாவற்றிலும் மனதார கரைந்திடுங்கள் .எல்லாவற்றின் ஊடாகவும் நீங்கள் இருப்பதை உணரத் துவங்குங்கள் உலகின் காட்சிகளும்.அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் துவங்கினால் நவீன ஓவியங்கள் தானே புரியத் துவங்கிடும் ".
கியூபிசம் எனும் ஓவிய பாணி அவரால் உருவானது .பைத்தியம் என்ற அதே உலகம்
,"நவீன ஓவியத்தின் தந்தை !"என அவரை ஏற்றுக்கொண்டது.பாப்லோ பிகாசோ எனும்
மாபெரும் கலைஞரின் பிறந்தநாள் இன்று (அக்.25, 1881)
                                                                                                                                 - பூ.கொ.சரவணன்,
===================================================================================