செவ்வாய், 1 டிசம்பர், 2015

சிறுநீர்க் கடுப்பு..........,

 கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
என்ன காரணம்?
உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.
கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.
சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
சிறுநீர்ப் பாதையில் கல்
சிறுநீரகத்தில் தொடங்கிச் சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.
கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறு கிற புறவழித் துவாரம்வரை பரவும்.
சிறுநீர்ப் பை பிரச்சினைகள்
சிறுநீர்ப் பையில் தொற்று ஏற்பட்டு வீக்கம் உண்டாகும்போது, நீர்க்கடுப்பு ஏற்படும். இங்கு கல், காசநோய், புற்றுநோய் என எது தாக்கினாலும் நீர்க்கடுப்புடன், சிறுநீரில் ரத்தம், சீழ் வெளியேறுதல், குளிர் காய்ச்சல், வாந்தி, வலி போன்ற துணைப் பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ளும்.
புராஸ்டேட் வீக்கம்
புராஸ்டேட் வீக்கமும் புற்றுநோயும், ஆண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்பட முக்கியக் காரணங்களாக அமைகின்றன. வழக்கத்தில் வழக்கமாக, நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கே இந்த மாதிரியான பிரச்சினைகளால் நீர்க்கடுப்பு வருகிறது. இவர்களுக்கு சிறுநீர் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்.
மிதமான வேகத்தில் போகும். ஒருமுறை சிறுநீர் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். எத்தனை முறை போனாலும் சிறுநீர் முழுவதுமாகப் போய்விட்ட திருப்தி இருக்காது. இன்னமும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.
சுய சுகாதாரம் முக்கியம்
சிறுநீர் வெளியேறுகிற பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறினால், சிறுநீர்க் கடுப்பு ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கும் புதுமணத் தம்பதிகளுக்கும் இந்தக் காரணத்தால்தான் அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. மேகவெட்டை (கொனோரியா) போன்ற பால்வினை நோய்கள் தாக்கினாலும், சிறுநீர்ப் புறவழி அழற்சி அடைந்து நீர்க்கடுப்பை உண்டாக்கும்.
சிறுநீர்த் தாரையில் கல் அடைத்துக்கொண்டாலும், அந்தப் பாதை சுருங்கிவிட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. இவர்களுக்குச் சிறுநீர் சொட்டுச் சொட்டாகப் போகும். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ, கருப்பாகவோ மாறும்.
பெண்களுக்குரிய பிரச்சினைகள்
கர்ப்பப்பைக் கட்டிகள், சினைப்பைக் கட்டிகள், அடி இறங்கிய கருப்பை போன்றவை சிறுநீர்ப் பையை அழுத்தும்போது பெண்களுக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுவதுண்டு. மேகவெட்டை நோய் வந்த பெண்களுக்குச் சிறுநீர்க் கடுப்பு நிறைய தொல்லை தரும்.
மாத்திரை மருந்துகள் கவனம்!
வலி நிவாரணி மாத்திரைகள், சல்பா மருந்துகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட வழி அமைக்கும். அதன் விளைவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு நீர்க்கடுப்பும் அடிக்கடி தொல்லை தரும்.
பரிசோதனைகள் என்ன?
சிறுநீர்க் கடுப்புக்குச் சிறுநீரைப் பரிசோதித்தாலே காரணம் புரிந்துவிடும். இத்துடன் வயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் முழுமையான காரணங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இதைக்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம். அடிப்படைக் காரணத்தைக் களையும் சிகிச்சைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
                                                                                                                     டாக்டர் கு. கணேசன்

பப்பாளியின் மருத்துவப் பயன்கள்:
 • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
 • பித்தத்தைப் போக்கும்.
 • உடலுக்குத் தெண்பூட்டும்.
 • இதயத்திற்கு நல்லது.
 • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
 • கல்லீரலுக்கும் ஏற்றது.
 • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
 • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
 • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
 • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
 • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
 • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

 • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
 • பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
 • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
 • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். * உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
 • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
 • ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
 • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
 • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
 • பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.
 • தினமும் ஒரு டம்ளர் பப்பாளி பழச்சாறு  அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது.
 • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள்குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.
 • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும்நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.
=======================================================================================
இன்று,
டிசம்பர்-1.
 • உலக எய்ட்ஸ் தினம்
 • மியான்மர் தேசிய தினம்
 • பனாமா ஆசிரியர் தினம்
 • இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
 • நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)
=======================================================================================
முல்லைப் பெரியாறு... 
ஒரு அணையின் கதை!
'இந்தப் புவியில் நான் வந்தது என்பது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயலைப் புரிந்திட வேண்டும்; அதை உடனே நிறைவேற்ற வேண்டும். அதைத் தள்ளிவைப்பதற்கோ, தவிர்த்துவிடுவதற்கோ இடம் இல்லை. 
ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இந்தப் புவியில் வரப்போவது இல்லை!’ எனச் சொன்ன பென்னி குயிக், இறந்துவிடவில்லை; இதோ முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் எழுந்து நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
பென்னி குயிக், சீரியஸான ஆள் அல்ல; விளையாட்டுத்தனமானவர். அதுவும் கிரிக்கெட் மீது பெரும் கிறுக்கு உள்ளவர். இங்கிலாந்தில் இருந்து இங்கு வேலைபார்க்க வந்தபோது (1865-ம் ஆண்டு) சென்னை கிரிக்கெட் கிளப் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 
அப்போது சென்னை - பெங்களூரு என இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு போட்டி நடந்திருக்கிறது. 
அதில் ஓர் அணிக்கு பென்னி குயிக் தலைவர். நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு இருக்கும் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை, பிரிட்டிஷ் அரசு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருந்த நேரமும் அது. போட்டி தொடங்கும் முன் பென்னி குயிக் ஜாலியாகச் சொன்னார், 'இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டப்போகிறார்கள்’ என்று!
பென்னி குயிக் அணி வென்றது. அந்தச் சவாலை மனரீதியாகவே ஏற்க பென்னி குயிக் தயார் ஆனார். 'கலோனியல் ஜான் பென்னி குயிக்’ என, பெயரை அறிவித்தார் மகாராணி எலிசபெத். பென்னி குயிக், அப்போது ராணுவத் தலைமைப் பொறியாளராகப் பதவி வகித்தார். 
திட்டத்தின் அன்றைய மதிப்பு 17.5 லட்சம் ரூபாய்!
'முல்லைப் பெரியாறு’ என்ற பெயர், தந்தை பெரியாரின் நினைவாகச் சூட்டப்படவில்லை; காரணப் பெயர் அது. 
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடும் ஆறுகளிலேயே பெரிய ஆறு இது என்பதால், 'பெரியாறு’ என மகுடம் சூட்டப்பட்டது. இது, சுமார் 56 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது. 
சிறுசிறு நதிகளாக ஐந்து நதிகளைத் தன்னோடு இணைத்துக்கொள்கிறது. ஆறாவதாக 'முல்லை’ என்ற இன்னோர் ஆற்றையும் சேர்த்துக்கொள்கிறது. 
இந்த ஏழும் இணைந்துதான் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குள் செல்கின்றன. 
அந்த மாநிலத்துக்குள் சுமார் 244 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி, கொச்சி அருகே அரபிக்கடலில் கடக்கிறது.
உற்பத்தியாகும் இடத்துக்கும் பயன்தராமல், ஓடிப்போய்ச் சேரும் இடத்துக்கும் பயன்தராமல் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறதே என்ற வருத்தத்தில் உதித்த சிந்தனைதான் முல்லைப் பெரியாறு அணை. 
இந்த வருத்தம், முதலில் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கு வந்தது. 
ஓர் அணையைக் கட்டி தண்ணீர் தேக்கினால் வறண்ட மாவட்டங்களை வளப்படுத்தலாம் என்ற யோசனையில் தன்னுடைய மந்திரியாக இருந்த முத்து இருளப்பப் பிள்ளையோடு 12 பேர் கொண்ட குழுவை அணை கட்ட இடம் பார்த்து வரச் சொன்னார். 
அந்தக் காடு, மலைகளுக்குள் முதலில் கால் பதித்த 12 பேர் இவர்கள்தான். 
அதன் பிறகுதான் பிரிட்டிஷ் அதிகாரிகள், மதுரை ஆட்சியராக வந்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
பிறகு பற்பல தடைகளுக்குப் பிறகு 1887-ம் ஆண்டு வேலையைத் தொடங்கினார் பென்னி குயிக். 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் அணை, திறப்பு விழா கண்டது.
 இந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள்கூட நிம்மதியாகக் கழியவில்லை. அணை கட்டும் வேலை தொடங்கியது முதல், மழையும் பெய்து தீர்த்தது. ஓர் ஆண்டு கழிந்திருக்கும்... அதுவரை கட்டிய கட்டுமானத்தை ஒருநாள் நள்ளிரவில் யானைகள் கூட்டம் வந்து இடித்துத் தள்ளிவிட்டுப் போனது. 
இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும்... தொடர் மழையால் மண் தடுப்பு மொத்தமும் தகர்ந்தது. வேலையில் இருந்த மொத்த பேரும் கைகோத்து மனிதக் கேடயமாக மாறி, நீர்ப் பெருக்கைத் தடுத்து நிறுத்தினார்கள். யானை இடித்ததும்... மழை கரைத்ததையும் மீண்டும் எழுப்ப வேண்டுமானால் கூடுதல் நிதி தேவை. சென்னைக்கு வந்தார் பென்னி குயிக். பணம் கேட்டு நின்றார்; மறுத்துவிட்டார்கள்.
அதைவிட அவமானம்... 'உனக்கு அணை கட்டத் தெரியவில்லை. தேவை இல்லாமல் செலவு செய்துவிட்டாய்’ எனக் கண்டித்தார்கள். 'உண்மையில், இவ்வளவு பணத்தை அதற்குச் செலவு செய்ததாகத் தெரியவில்லையே’ எனச் சந்தேகமும் எழுப்பினர். விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. வருந்திய மனநிலையில் 'எல்லாவற்றையும் விட்டுவிடலாம்’ என லண்டன் போனார். திரும்பி வரும்போது 45 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்தார். 
அது, அரசாங்கப் பணம் அல்ல; அவரது சொந்தப் பணம். தனது சொத்துக்களை விற்று எடுத்து வந்த பணம். அணையைக் கட்டி முடிப்பதுதான் அவரின் ஒரே லட்சியம். அணை திறக்கப்பட்ட பிறகு சொன்னார், 'நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பப்போவது இல்லை. எனவே, நான் மௌனமாகவே இருந்தேன். 
அணை எழுப்பப்பட்டுவிட்டது. இனி அணை பேசும்!’ - 
அப்போது முதல் இப்போது வரை பென்னி குயிக்கைப் பற்றித்தான் அந்த மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பாட்டன், முப்பாட்டன் மரியாதை அவருக்கு.
அவரைக் கடவுளாக வணங்குகிறார்கள். அவருக்கு இணையான மரியாதை லோகன் துரைக்கு. பென்னி குயிக், பெரிய அதிகாரி. அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருந்தவர்தான் லோகன் துரை. இவரது பெயரையும் தங்களது பிள்ளைகளுக்கு வைத்தார்கள். 
அணை கட்டித் திறக்கப்பட்ட இந்த 119 ஆண்டு காலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் செழிக்க, முல்லைப் பெரியாறு அணையே முழு முக்கியக் காரணம்.
கரிகாற்சோழன் காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணையும், பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறும் தமிழ் மக்களின் வளத்துக்கும் நலத்துக்கும் மட்டும் அல்ல; பாரம்பர்ய கட்டுமானத் திறமைக்கும் சான்றாக உயர்ந்து நிற்கின்றன. 
மன்னர் ஆட்சியிலும் காலனி ஆதிக்கத்திலும் கிடைத்த நன்மைகளை மக்களாட்சி காலத்தில் மண்ணில் போட்டுப் புரட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகவும் முல்லைப் பெரியாறு மாறிப்போனது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடல் கடந்து வந்தவனுக்கு, தேனி கூடலூரும் இடுக்கி குமுளியும் ஒரே ஊராகத்தான் தெரிந்தன. 
ஆனால், நாட்டுப்பற்று உள்ள இந்தியர்களுக்குத்தான் கூடலூரும் குமுளியும் 'வேறு வேறு நாடுகளாகத்’ தெரிகின்றன. மற்ற அனைவரின் பிரச்னைகளிலும் இந்தியர்களாக முடிவெடுப்பவர்கள், தமிழர் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டும் 'தமிழர் பிரச்னை’யாகத் தள்ளி நிற்கும் சரித்திரத் துக்கு முல்லைப் பெரியாறும் விதிவிலக்கு அல்ல.
இடுக்கி அணையைக் கட்டி இடைஞ்சல்களை ஏற்படுத்தியது கேரளா. அதில் தண்ணீர் நிரம்பாதபோதெல்லாம், முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என குழவிக் கல்லால் காந்தாரி இடித்துக்கொண்டதைப்போல இடித்துக் கொள்ளும் கேரளா. இடுக்கி நிறையாததற்குக் காரணம் தமிழன் அல்ல; இயற்கை. இன்னும் சொன்னால், இயற்கைகூட காரணம் அல்ல; கேரள அரசியல்வாதிகளின் ஏமாற்றும் பேராசை. 
555 அடி உயரம் கொண்டது அந்த அணை. 
அதாவது முல்லைப் பெரியாறு அணையைவிட ஐந்து மடங்கு பெரியது. 142 அடி நிரம்புவதற்கும், 555 அடி நிரம்பாமல்போவதற்கும் யாரைக் குறை சொல்ல முடியும்? 
கிணற்றில் தண்ணீர் இல்லாமல் தொட்டியைப் பெரிதாகக் கட்டியவனின் நிலைமைதான் கேரளாவுக்கு.
இன்னொன்றையும் சொல்கிறார்கள்... '142 அடி... 152 அடி எனத் தமிழகம் பேராசைப் படுகிறது’ என்று. முல்லைப் பெரியாறு அணை என்பது, மதகுவைத்துத் திறந்துவிடப்படும் அணை அல்ல; தண்ணீரைத் தேக்கிவைக்கும் அணை. 104 அடி வரை தேங்கும் நீரை எந்தப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு மேல் தேங்கும் நீரைத்தான் எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் '142’ எனத் தமிழகம் கோரிக்கை வைக்கிறது. அணையின் கொள்ளளவு 152 அடியாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அனுமதித்து இருப்பது 142 அடி மட்டுமே.
கேரளா சொல்லும் அனைத்து காரணங்களையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (27.2.2006) தவிடுபொடி ஆக்கிவிட்டது. 'கேரளாவின் அறிக்கைகள், கேரளா அரசின் தரப்பில் முட்டுக்கட்டைபோடும் அணுகுமுறையையே தெளிவுபடுத்துகிறது’ என மண்டையில் கொட்டினார்கள் மூன்று நீதிபதிகள். 'அணை கட்டியதால் வனவளம் பாதிக்கப்பட்டது’ என கேரளா கூறியதற்கு, 'காட்டுக்குள் இருக்கும் ஓர் அணையைப் பலப்படுத்தும் பணியை ஒரு வனவிரோத நடவடிக்கையாகக் கருத இடம் இல்லை. இயற்கையில் நீர் பரவியிருக்கும் இடத்தைத்தான் அனைத்து பறவைகளும் விலங்குகளும் நேசிக்கும்’ என்றனர் நீதிபதிகள். '
அணை பலவீனமாக இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக எந்த அறிக்கையும் இல்லை’ என்றனர். இவ்வளவுக்குப் பிறகும் கேரளா, கேவலமான முஸ்தீபுகளைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப் பார்க்கிறது.
சுண்ணாம்பு சுர்க்கிக் கலவையில் கருங்கல் உபயோகித்துக் கட்டப்பட்ட அணையை, குடை வைத்து தட்டிப் பார்க்கிறார் ஓர் அமைச்சர். குத்திப் பார்க்கிறார் ஒரு எம்.எல்.ஏ. எப்படியாவது அதை அசைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற நப்பாசையில் கேரளா அரசியல்வாதிகள் தூக்கம் இல்லாமல் கிடக்கும்போது... இயற்கை இம்முறை கைவிடவில்லை. 142 அடித் தண்ணீரைத் தாங்கி நிற்கிறது அணை.
அணையே துணை!
                                                                                                                                       - ப.திருமாவேலன்