இந்தியாவின் வளர்ச்சி.- எதை நோக்கி?



இந்திய மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் மத வெறி சர்ச்சையை தடுத்து நிறுத்துங்கள் இல்லையெனில் இந்தியா அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா தனது மதிப்பை இழக்க நேரிடும் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்ட அறிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த அறிக்கையில் எத்னிக் டென்ஷன் என்ற வார்த்தை பிரயோகம் வருகிறது.

எத்னிக் டென்ஷன் என்பதன் அர்த்தத்தை தேடிப்பார்க்கையில் இனப் பதற்றம் என விளக்குகிறது அகராதி. இனப் பதற்றம் என்ற வார்த்தைக்கு பின்னால் பல சம்பவங்கள் உள்ளன. 
வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தாத்ரியில் நடந்த கொலை, எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலை என இந்தியாவின் மதச்சார்பின்மையை கேள்விகுள்ளாக்கும் நிகழ்வுகள் உள்ளன.
பொதுவாக தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை.
பொருளாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்து கொண் டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த அறிக்கை வெளிவந்துள்ளதாக தெரிகிறது. 

அதையொட்டித்தான் வளர்ச்சி என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி அரசு எந்த பாதையில் செல்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழத் தொடங்கியிருக்கிறது.
சர்வதேச அளவில் இந்தியாதான் அதிக அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது. 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் ஆகிறது. 

வியட்நாம், மலேசியா, எகிப்து, தாய்லாந்து போன்ற நாடு களுக்கு மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்றுமதி 8.82 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு இந்தியாவில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுதான் காரணம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 
மேலும் மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதற்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்து மத அடிப்படைவாதிகள் தனிமனிதர்களை மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவ னத்தின் ஊழியர்களை தொடர்ந்து தாக்குவதாகவும் இதனால் மாட் டிறைச்சியை எடுத்துச் செல்வதற்கு கடினமாக இருப்பதாக மாட்டிறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நீண்ட கால வளர்ச்சிக்கு இந்தியா அதிக அளவில் பொருளாதார சீர்த்திருத்தங்களை தற்போது எதிர் நோக்கியிருக்கிறது.

ஆனால் தற்போது பாஜக அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது கேள்விகுறியாகியுள்ளதாக மூடிஸ் கூறுகிறது. 

மேலும் ஜிஎஸ்டி மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதா மற்றும் தொழிலாளர் நல மசோதா ஆகியவை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. 

2016-ஆம் ஆண்டு நிறைய பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால் மட்டுமே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)அதிகரிக்கும் எனவும் மூடிஸ் கூறியுள்ளதுபிரதமர் நரேந்திர மோடி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 
மேக் இன் இந்தியா, திறன்மிகு இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார். 

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று உலக முதலீட்டாளர்களை அழைக்கிறார். ஆனால் உள்நாட்டில் நிகழும் பிரச்சனைகளை கட்டுப்படுத்த தவறிவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசிய பாஜகவினரை பார்த்து யாரும் லெட்சுமணன் ரேகையை (ராமாயணத்தில் லெட்சுமணன் கிழித்த கோடு) தாண்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். 

ஆனால் அதன் பிறகும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தாத்ரி கொலையும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும், ரூ.30,000 கோடி அளவிலான இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்து நிற்கிறது. 

இந்தியாவின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியையும் சேர்த்து பாதிக்கும் போதுதான் அச்சம் ஏற்படுகிறது. 

வளர்ச்சி நாயகன் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும்  மோடி தற்போது இந்தியாவின் வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகளை கண்டுகொள்ளாமல் , பாஜக ,ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் மத வெறி பேச்சுக்களை கட்டுப் படுத்தாமலும் இருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டும் ஆபத்தல்ல.பாஜக அரசே இன்னும் அரை நூற்றாண்டு காணாமல் போகும் அபாயமும் உண்டாகியுள்ளது.
இந்திய தேசிய வானொலியில் ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் பேச்சை நேரலையாக ஒலிபரப்புவது எவ்வளவு பெரிய மதவாத அரசியல்.

மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தது பற்றி வருந்தும் காலம் உண்டாகி விட்டது.அதுவும் அந்த அமைப்பினராலே உண்டாக்கப்பட்டு விட்டது.
முதலில்  மோடி தான் வாய் வலிக்க அறிவித்த ,அளித்த வாக்குறுதிகளை ஒன்றை கூட இந்த ஓராண்டு  முடிந்து போன நிலையிலும் நிறைவேற்ற வில்லை.அவருக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவே,போட்டோக்களுக்கு நிற்கவே  நேரம் போதவில்லை.

அவர் இந்தியாவில் இருந்தால்தானே வாக்குறுதிகளை பற்றி மக்கள் நினைவுபடுத்த முடியும்.?
========================================================================================

டைபாய்டு காய்ச்சல்

டைபாய்டு காய்ச்சலை வரவிடாமல் தடுக்கத் தடுப்பூசி  மட்டுமே போதாது. 
காரணம், இவற்றின் நோய் தடுக்கும் சக்தி 80 சதவிகிதம் மட்டுமே. 
எனவே, மற்றத் தடுப்பு வழிகளும் முக்கியம். சுய சுத்தம் பேணப்பட வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். 
தெருக்களைக் கழிப்பறைகளாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும். 

காய்கறிகளையும் பழங்களையும் நன்கு கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும். உணவுகளை ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். 
சுத்தமான உணவுகளையே சாப்பிட வேண்டும்.
 சாலையோரக் கடைகளில் சாப்பிடக்கூடாது. திறந்தவெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக்கூடாது. வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும். 
தடுக்க 
டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க  இரண்டு வகை தடுப்பூசிகள் உள்ளன. ‘விஐ கேப்சுலர் பாலிசாக்கரைடு தடுப்பூசி (Vi-capsular polysaccharide (Vi-PS) vaccine) என்று ஒன்று.
 `விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி’  (Vi-PS TT Conjugate vaccine) என்பது இன்னொன்று. 
டைபாய்டு காய்ச்சலுக்கு மருத்துவர் கூறும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். 
இந்த நோய் கிருமிகளை நேரடியாகத் தாக்கி, டைபாய்டு காய்ச்சலைக் குணப்படுத்த பல நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உள்ளன. குளோராம்பெனிக்கால், கோடிரைமாக்சசோல், சிப்ரோஃபிளாக்சசின், ஓஃபிளாக்சசின், செப்ட்ரியாக்சோன் சோடியம், அசித்திரோமைசின் போன்றவை அவற்றுள் முக்கியமானவை. 
இவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி முறைப்படி பயன்படுத்தினால் நோய் முழுவதுமாக குணமாகும். இல்லையென்றால் டைபாய்டு காய்ச்சல் மீண்டும் வந்துவிடும்.
டைபாய்ட் வந்துவிட்டால் 
நோயாளிக்கு நிறைய தண்ணீர் தர வேண்டும். எளிதில் செரிமானமாகிற அரிசிக்கஞ்சி, கோதுமைக்கூழ், ஜவ்வரிசிக்கஞ்சி, ஆரஞ்சு, ஆப்பிள், தக்காளி, எலுமிச்சை, மாதுளை, திராட்சைப் பழச்சாறுகள், பால், இளநீர், குளுக்கோஸ், தண்ணீர் சத்துமிக்க பானங்கள் மற்றும் ரொட்டி, பிஸ்கெட்டுகள் ஆகிய உணவுகளைத் தர வேண்டும். 
 தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இல்லையென்றால் திரவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு, திட உணவுகளை அதிகப்படுத்தலாம்.
 நீராவியில் தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு உண்பது நல்லது. ஒரு வாரத்திற்குப் பிறகு வழக்கமான உணவுகளை உண்ணலாம். இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை மூன்று வாரங்களுக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது. 
டைபாய்டு காய்ச்சல் வந்தவர் வெளியிலும் வெயிலிலும் செல்லாமல் இருக்க வேண்டும். 
இந்தக் காய்ச்சல் அடுத்தவர்களுக்கு பரவுவதைத் தடுக்க, நோயாளியைத் தனி அறையில் வைத்துச் சிகிச்சை தருவது மிக நல்லது. 
நோயாளியுடன் நெருக்கமாகப் பழகும்போது அடுத்தவர்களுக்கும் இந்த நோய் பரவி விடும் என்பதால் இந்த எச்சரிக்கை.  

நோயாளி மிகவும் தளர்ச்சியுடன் காணப்பட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் ஆகிய அறிகுறிகள் குறையாமல் இருந்தால், அவருக்கு குளுக்கோஸ், சலைன் போன்ற நீர்மங்களைச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். 
அதற்கு அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையைத் தொடர வேண்டும், நோயாளி முதியவர்  அல்லது கர்ப்பிணி என்றால் சிறப்பு கவனம் தேவை. 
========================================================================================
உங்கள்  ஆண்ட்ராய்ட் போன் 

பேட்டரி திறன் 

அதிக நேரம் நீடிக்க........!

ஆண்ட்ராய்ட் மொபைலில் பல சிறப்பான வசதிகள் இருந்தாலும் அதன் முக்கியமான பிரச்சனை பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுவதுதான். 
இக்குறையைப் போக்க ஆண்ட்ராய்ட் 5.0 லாலி பாப் பதிப்பில் பவர் சேவர் மோட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியை இயக்குவதன் மூலம் 35 சதவீத அளவு வரை பேட்டரியை சேமிக்க முடியும். 
இதற்கு முந்தைய பதிப்புகளில் இந்த வசதி கிடையாது. தற்போது அதிகம் பயன்பாட்டில் இருப்பவை ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் மற்றும் அதற்கு முந்தைய பதிப்பு மொபைல்களே.பொதுவாக ஸ்மார்ட் போன்களின் பேட்டரி தீர்வதற்கு அடிப்படை காரணம் செயல்பாட்டிலிருக்கும் ஆப்ஸ்கள்தான். போனில் அதிகமாக பேசுபவர்களை விட ஆப்ஸ் அதிகம் பயன்படுத்துபவர்களின் பேட்டரி மின் சக்திதான் விரைவில் தீர்ந்துபோவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.மொபைலை ஒருநாளைக்கு ஒரு முறை சார்ஜ் செய்வது சராசரி அளவாகும். 
அதுவே இரண்டு அல்லது மூன்று முறை சார்ஜ் செய்ய நேர்ந்தால் நிச்சயம் பேட்டரி மற்றும் போனின் திறன் பாதிப்புக்குள்ளாகும்.

ஆப்ஸை நிறுத்தவும்

பலரும் செய்யும் ஒரு தவறு ஆப்ஸை பயன்படுத்திய பிறகு அதனை நிறுத்தாமல் விட்டுவிடுவதுதான். ஆப்ஸ் செயல்பாட்டில் இருப்பதால் இரண்டு பிரச்சனைகள் ஏற்படும். 
ஒன்று மின்சக்தி, மற்றொன்று ரேம் நினைவகத்தை பயன்படுத்துவது. 
எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் ஆப்ஸ்களான போன் காலிங், மெஸேஜ், கடிகாரம், காலண்டர் ஆப்ஸ்கள் தவிர்த்து மற்ற ஆப்ஸ்களை அவ்வப்போது கிளியர் செய்து விடவேண்டும்.எப்போதாவது பயன்படுத்தும் ஆப்ஸை நீக்கிவிடுவதோ அல்லது தற்காலிகமாக இயக்கத்தை முடக்கிவிடுவதே நல்லது. இதனால் தேவையற்ற இண்டர்நெட் டேட்டா செலவினையும், மின்சக்தி செலவினையும் கட்டுப்படுத்தலாம்.

தற்காலிகமாக இயக்கத்தை நிறுத்துவதாக இருந்தால் செட்டிங்ஸ் மெனுவில் ஆப்ஸ் என்பதில் சென்று நிறுத்தவேண்டிய ஆப்ஸை தேர்வு செய்து அதனை  பட்டனை அழுத்தி நிறுத்தவும். 
அத்துடன் அதற்கு கீழ் உள்ள நோட்டிபிகேஷன் என்பதற்கு நேராக உள்ள செக் பாக்ஸில் டிக் மார்க்கை எடுத்துவிடவும். 
இந்த செயல்பாட்டை வாரம் ஒரு முறையாவது சரிபார்த்துக் கொண்டால் 20 சதவீதம் பேட்டரி விரயத்தை தடுத்துவிடமுடியும்.அதே போல வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களை அவ்வப்போது கிளியர் செய்யவும்.

ஆப்ஸை நிறுத்த ஆப்ஸ்

செயல்பாட்டிலிருக்கும் ஆப்ஸை நிறுத்த பேட்டரி டாக்டர், பேட்டரி சேவர் என்று கணக்கில்லாத ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. 
இத்தகைய அப்ளிகேசன்களின் வேலை திறந்து இருக்கும் ஆப்ஸ்களை உங்களிடம் அறிவுறுத்தும், உடனே நீங்களும் பட்டனை அழுத்தி நிறுத்துவீர்கள். உடனே அது திறந்த ஆப்ஸ்களை நினைவகத்திலிருந்து நீக்கும். இது தற்காலிகம்தான்.

 மீண்டும் சில ஆப்ஸ்கள் இயங்க தொடங்கிவிடும். கிட்டத்தட்ட அனைத்து பேட்டரி சேவர் ஆப்ஸ்களும் இந்த வேலையைத்தான் செய்கின்றன.இந்த ஆப்ஸ்கள் பிற ஆப்ஸின் செயல்பாட்டை நிறுத்தினாலும், வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த வேலைகளை செய்வதற்காக அதிகமான மின்சக்தியையும் ரேம் மெமரியையும் வீணடிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.எனவே, பேட்டரி சேவர் ஆப்ஸ் பயன்படுத்தாமல் முந்தைய தலைப்பில் கூறிய வழிமுறைகளை நாமே செயல்படுத்துவதுதான் மிகச்சிறந்த வழிமுறை.

இந்த வேலையெல்லாம் நம்மால் பார்க்க முடியாது என்பவர்களுக்கு தேவைப்படும்போது பயன்படுத்த ஒரு ஆப்ஸ் உள்ளது. இது மற்ற பேட்டரி சேவர்களைப் போல எப்போதும் செயல்பாட்டில் இருக்காது. நீங்கள் இயக்கும்போது மட்டுமே இயங்கும். 
இந்த ஆப்சின் பெயர் கிரீனிஃபி இந்த ஆப்ஸை பிளே ஸ்டோரில் இந்த லிங்க்கிலிருந்து பெறலாம்.இந்த ஆப்ஸ் முன்பு ரூட் செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே செயல்பட்டது. 

தற்போது அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் இயங்குகிறது.
முழுமையான பேட்டரி சார்ஜ்மொபைலை சார்ஜ் செய்யும்போது முழுமையாக சார்ஜ் ஆகும் வரை பயன்படுத்தாமலிருப்பது அவசியம். அடிக்கடி இணைப்பை நீக்கியோ, சார்ஜ் ஆகும்போது பயன்படுத்துவதோ தவறாகும். தொடர்ச்சியாக சார்ஜ் ஆவது தடைபட்டால் பேட்டரியின் ஆயுள் குறையும், மின்சக்தியும் விரைவில் குறைந்துவிடும்.

முழுமையாக சார்ஜ் செய்வதற்கு போன் உபயோகம் இல்லாத சரியான நேரத்தை தேர்வு செய்து சார்ஜ் செய்யவும்.
சார்ஜ் ஆவதை விரைவுபடுத்த போனை சுவிட்ச் ஆப் செய்து சார்ஜ் செய்யலாம். 
இது ஒரு சிறந்த வழி எனினும், மற்றொரு வழியும் இருக்கிறது. 
ஏரோப்ளேன் மோடை செயல்படுத்தலாம். 
ஏரோப்ளேன் மோட் செயல்பாட்டிலிருக்கும்போது போன் நெட்வொர்க், ஒய்ஃபீ, இணையத்தைப் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் அனைத்தும் நிறுத்தப்படும். 

எனவே, மொபைல் விரைவாக சார்ஜ் ஆவதற்கு வழியேற்படும். 
இந்த செயல்பாட்டின்போது போன் அழைப்புகள் வராது என்பதை கவனத்தில் கொள்ளவும்.அதிக நேரம் சார்ஜ் போடுவதைத் தவிர்க்கவேண்டும். 

சார்ஜ் முழுமையடைந்ததற்கான அறிவிப்பு வந்தவுடன் சில நிமிடங்களில் மின் இணைப்பை நீக்கிவிடவேண்டும்.
===========================================================================================
===============================================================================================================================

இன்று,
நவம்பர்-05.
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்(1870)
  • இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)
  • ஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்(1895)
  • கொலம்பியா ஐநா.,வில் இணைந்தது(1945)

====================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?