சனி, 12 டிசம்பர், 2015

ஓர் ஆண்டு மட்டுமே விண்டோஸ் 7/8,


நீங்கள் வாங்கும் புதிய டெஸ்க்டாப் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இருந்தால் போதும் என்று எண்ணுகிறீர்களா? 
அப்படியானால், அதற்கு இன்னும் ஓர் ஆண்டு காலம் மட்டுமே உள்ளது.
 ஓராண்டிற்குப் பின்னர், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டங்களுக்கான உரிமங்களை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவதை நிறுத்திவிடும். 
 உங்களுக்கு, அதன் பின்னர், கம்ப்யூட்டர்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் மட்டுமே கிடைக்கும். அக்டோபர் 31, 2016க்குப் பின்னர், விண்டோஸ் 10 சிஸ்டம் மட்டுமே, நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போது தன் புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை வெளியிட்டாலும், முந்தைய விண்டோஸ் சிஸ்டத்துடன், புதிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்படுவதற்கான உரிமத்தினை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கும். 

இதனை, ஒரு விதியாகவே, மைக்ரோசாப்ட் வைத்திருந்தாலும், சில வேளைகளில், இந்த விதி தளர்த்தப்பட்டது என்பதே உண்மை. இந்த விதிப்படி, தற்போது, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான உரிமங்கள், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படக் கூடாது. ஆனால், தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 
 விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, புதிய கம்ப்யூட்டர்களில், யாரும் அதனைக் கொள்ள விருப்பப்படுவதில்லை. விண்டோஸ் 10 பக்கமே சென்று விடுகின்றனர். 
தற்போதைய நிலவரப்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு, 12 கோடிக்கு மேலான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில், 28% க்கும் மேலான கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 இயங்கிக் கொண்டுள்ளது.
இன்னும் ஓராண்டுக்குப் பின், நிறுவனங்களிடம் வாங்கும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 இருக்காது என்பதால், அதற்கான சப்போர்ட் பைல்கள் கிடைக்காது என்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம்.

 ஜனவரி 2020 வரை நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் பைல்கள் தரப்படும். விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு, முதன்மையான சப்போர்ட் பைல்கள், வரும் ஜனவரி, 2018 வரை கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு வரை, நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் பைல்கள் கிடைக்கும்.
2016ஏப்ரல் மாதம் முதல், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் குரோம் பிரவுசர் செயலிக்கான சப்போர்ட் தருவதை, கூகுள் நிறுத்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சப்போர்ட் செய்யாத, ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இன்னும் இயக்கிக் கொண்டிருப்பவர்களைப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள, இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்தும் என கூகுள் கருதுகிறது. ஏப்ரல், 2016க்குப் பின், இந்த சிஸ்டங்களில், குரோம் பிரவுசர் இயங்கும். ஆனால், அதன் பாதுகாப்பிற்கான செக்யூரிட்டி பேட்ச் பைல்கள் தரப்பட மாட்டாது என கூகுள் தெரிவித்துள்ளது.
ஏப்ரல், 2016 உடன், மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கான சப்போர்ட் நிறுத்தி, ஏறத்தாழ இரண்டு ஆண்டு காலம் ஆகியிருக்கும். விஸ்டாவிற்கான சப்போர்ட் 2012 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் 2017 வரை இருக்கும்.
விண்டோஸ் எக்ஸ்பியில், குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர், வேறு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தொடர விரும்பினால், இவர்களுக்கு பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்கள் உதவிக்கு வரலாம்.
நவம்பர் தொடக்கத்தில், நெட்மார்க்கட் ஷேர் (Netmarketshare) என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, விண்டோஸ் எக்ஸ்பி, இன்னும் 12% பேர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 10 சிஸ்டத்தை, 8.1% பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், Statcounter என்னும் அமைப்பு வெளியிட்ட கணிப்பில், விண்டோஸ் 10 சிஸ்டம் 11% பேராலும், விண்டோஸ் எக்ஸ்பி 8.46% பேராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம் கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டிவிடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்.

Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.

Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம்.

USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.

 நன்றி :தினமலர்,
====================================================
இன்று,
டிசம்பர்-12.
  • கென்யா விடுதலை தினம்(1963)
  • இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது(1911)
  • ரொடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது(1979)
 ===================================================
பலிகடாக்கள் தயார்?
புதிய பஸ் இயக்கம் முதல்,கழிப்பறை  திறப்பு விழா வரை எல்லா விஷயங்களுக்கும், 'மேலிட' ஒப்புதலுக்கு அதிகாரிகள் காத்திருக்க வேண்டும்,முதல்வர் ஜெயலலிதா தான்  கொடியசைத்து,காணொளி காட்சி மூலம் திறக்க வேண்டும் என்ற அரசு திட்டங்கள் வேலை கலாசார மாற்றம், இந்த நான்கரை ஆட்சிகாலத்தில் அரசு வட்டாரத்தில் ஆழமாக வேரூன்றி வைக்கப்பட்டு விட்டது. முடுக்கலான் பட்டி கண்மாயில் கழிவு நீர் திறப்புக்கு கூட முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் பெற்று அவர் ஒப்புதல்தரும் நாளில்தான் "மாண்புமிகு முதல்வர் புரசித்தலை அம்மா ஆணைக்கிணங்க "என்ற மந்திரம் ஓதி திறக்கப்படுகிற அவல நிலை மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த காலடி விழும்  கலாச்சாரம்தான் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தாமதமானதற்கும், சென்னை வெள்ளக்காடாக மாறியதற்கும், இதுவே முக்கிய காரணமாகி விட்டது. 
ஆனால்  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் இரண்டு உயர் அதிகாரிகளை பலிகடாவாக்கி, பிரச்னையை ஊத்தி மூடி மறைக்கும் முயற்சி நடப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கொட்டி தீர்த்த கன மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்தன. வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு, டிச., 1ம் தேதி இரவு முதல், டிச., 2 அதிகாலைக்குள், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, மிக அதிகபட்ச அளவில், உபரி நீர் வெளியேற்றப்பட்டதே காரணம் என, புகார் எழுந்தது.நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவை விட, அதிகமாக தண்ணீர் வரும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த பேரிடரை தவிர்த்து இருக்கலாம்.

, டிச., 1ல், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நவ., 30ம் தேதி இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார் மற்றும் சென்னை மாவட்டங்களில், டிச., 1ம் தேதியும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய அறிக்கையில், டிச., 1 மற்றும், டிச., 2ம் தேதி, வட கடலோர மாவட்டங்களில், கன மழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை, நான், டிச., 1ம் தேதி, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். சென்னை, திருவள்ளூர், கடலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை, அமைச்சர்கள் மேற்பார்வையிட ஆணையிட்டுள்ளேன். சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்களில், மொத்த கொள்ளளவில், 83.8 சதவீதம் நிரம்பியுள்ளது. ஏரிகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 89 பெரிய நீர்த்தேக்கங்களில், 45ல் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் திறந்து
விடப்படும்போது, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும், நான்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 முதல்வர் ஜெயலலிதா, ஆய்வு கூட்டம் நடத்தி, இத்தகைய அறிக்கை வெளியிட்ட, அடுத்த சில மணி நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில், மிக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. 
அப்படியானால், முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு, செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்த விவரங்களை, பொதுப்பணித் துறை அனுப்பியதா, அதுகுறித்து விவாதிக்கப்பட்டதா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக, பொதுப்பணித் துறை செயலர் பழனியப்பன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் திருமாறன், சென்னை மண்டல தலைமை பொறியாளர் சண்முகம், அணைகள் பாதுகாப்பு இயக்க தலைமை பொறியாளர் கலீல் அகமது ஆகியோரிடம், தலைமைச் செயலர் ஞானதேசிகன், இரண்டு நாட்களாக விசாரணை நடத்தியுள்ளார்.
 மேலும், இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களும் விளக்கம் அளித்துள்ள நிலையில், நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் திருமாறன், சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் சண்முகம் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, பொதுப்பணித் துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து திருமாறனிடம் கேட்டபோது, ''கடலுார் வெள்ளப் பாதிப்பு ஆய்வுப் பணியில் இருக்கிறேன்,'' என்றார். சண்முகத்திடம் கேட்டபோது, ''தலைமைச் செயலகத்தில் நடக்கும் அதிகாரிகள் மட்டத்திலான

ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன்,'' என தெரிவித்தார். 

 * 'ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என்ற, முதல்வரின் அறிக்கைக்கும், 'பொதுப்பணித் துறை அதிகாரிகள் அரசின் அனுமதிக்காக காத்திருந்தோம்' என்று கூறுவதற்கும் இடையிலான முரண்பாடு, பல சந்தேகங்களை எழுப்புகிறது.
* முதல்வருக்கு ஏரியின் நிலவரம் மறைக்கப்பட்டதா அல்லது, ஒவ்வொரு கட்டத்திலும், உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்கும் வேலை கலாசார மாற்றம் காரணமாக, சென்னை மக்கள் வெள்ளத்தில் தள்ளப்பட்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'தமிழகத்தில், ஒரு திறப்பு விழாவிற்கு கூட, மேலிட அனுமதி பெற வேண்டும் என்ற வேலை கலாசாரம் வேரூன்றி விட்டது. இது தான், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விஷயத்திலும் எதிரொலித்துள்ளது. இதை மூடி மறைக்க, இரண்டு உயர் அதிகாரிகளை மட்டும், 'சஸ்பெண்ட்' என்ற பெயரில், பலிகடா ஆக்குவது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'சென்னையில், 50 செ.மீ., வரை மழை பெய்யும்' என, வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தும், பொதுப்பணித் துறை அதிகாரிகள், வெள்ள ஒழுங்குமுறை குறித்த போதிய அனுபவ அறிவு இல்லாதவர்களாக இருந்ததால், இந்த பேரிடர் ஏற்பட்டது.
ஒரு நோயாளிக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும் போது, தலைமைச் செயலர், முதல்வரிடம் அனுமதி பெற வேண்டும் என்று இருப்பது தேவையற்ற ஒன்று.
ஏரியின் கொள்ளளவு, கரை ஓரத்தின் உயரம், கொள்ளளவு ஆகியவற்றின் அடிப்படையில், நீரியல் அறிவுடன் பொதுப்பணித் துறை அதிகாரிகள் செயல்பட்டு இருக்க வேண்டும்.அதை விடுத்து, தலைமைச் செயலர் அனுமதி, முதல்வரின் அனுமதி என, காலம் கடத்துவது, அவர்களுக்கு அத்துறை பற்றிய அனுபவ அறிவு இல்லாததையே காட்டுகிறது. தற்போது, நீர் வளத்துறையில் இருக்கும் பெரும்பாலான அதிகாரிகள், பணி காலம் முழுவதும், கட்டுமானப் பிரிவில் இருந்து விட்டு, கடைசி சமயத்தில், இப்பிரிவில் உயர் பதவிகளை பிடித்து உள்ளனர்.
=================================================