தலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.
இந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 16ஆம் தேதியன்றே, இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு இயல்பை விட தமிழகத்தில் 112 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்ததா இல்லையா?
தலைமைச் செயலாளரின் அறிக்கையில், 30-11-2015 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 50 செண்டி மீட்டர் மழை பெய்யும் என்று தெரிவிக்க வில்லை என்றும், ஆங்காங்கு மிக மிகுந்த கனத்த மழை பெய்யும் என்று தான் கூறப் பட்டிருந்தது என்று சமாளித்திருக்கிறார்.
ஆனால் “இந்து” நாளிதழில், “Bloggers predict heavy rain on Monday
(30-11-2015) and Tuesday in Coastal Regions of the State” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 27ஆம் தேதி சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறும்போது, “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமனாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிகக் கன மழை பெய்யும்” என்று கூறி, அது நாளேடுகளில் வெளி வந்திருக்கிறதா இல்லையா?
இஸ்ரோ வி.எஸ்.எஸ்.சி.யின் இயக்குனர் சிவன் அவர்கள் அளித்த பேட்டியில், “சென்னையில் கன மழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து, தமிழக அரசுக்குத் தகவல் கூறினோம். ஆனால் அரசு முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை” என்றே தெரிவித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், 1-12-2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30-11-2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1-12-2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் இதையெல்லாம் மூடி மறைத்து விட்டுத் திசை திருப்பும் அறிக்கை விடுவது சரிதானா? நீதி விசாரணை நடத்த முன் வராமல், தலைமைச் செயலாளரைக் கொண்டு அ.தி.மு.க. அரசு உண்மைக்கு மாறாக இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடச் செய்திருப்ப திலிருந்தே, செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைத் திறந்து சென்னை மாநகரையும், இங்கே வாழும் மாநகரத்து மக்களையும், சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியதில் அ.தி.மு.க. அரசின் நிர்வாகம் மாபெரும் தவறு செய்து விட்டது என்பதையும், அதை மூடி மறைக்கும் முயற்சி தான் தலைமைச் செயலாளரின் இந்த அறிக்கை என்பதையும் தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.
1ஆம் தேதிக்கு முன்பே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து போதிய நீரை வெளி யேற்றியிருந்தால், 1ஆம் தேதி ஒரே நாளில் 29,000 கன அடி என்ற அளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா?
நவம்பர் 17ஆம் தேதி ஏரியிலே 22.3 அடியாக நீர் மட்டம் இருந்த போது, 18 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியவர்கள்., நவம்பர் 30ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 22.05 இருந்த போது 800 கன அடி நீரை மட்டுமே அனுப்பியது தவறா இல்லையா?
அதைத் தான் அனைத்து எதிர்க் கட்சிகளும் கேட்கின்றன.
அதைத் தான் 11-12-2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேயும், நவம்பர் 17ஆம் தேதி 18 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. ஆனால் நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை மிகக் குறைந்த நீரே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விட்டது தான் சென்னை மாநகரிலே வெள்ளப் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம். இந்தத் தவறை தலைமைச் செயலாளரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே வெள்ளத்திற்குக் காரணம் தமிழக அரசின் நிர்வாகம் தான் என்பதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை என்பது அ.தி.மு.க. அரசின் ஒப்புதல் வாக்குமூலம் தான் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில், 1-12-2015 அன்று காலை 10 மணிக்கு 10,000 கன அடி நீரும், 12 மணிக்கு 12,000 கன அடி நீரும், 2 மணி முதல் 20,960 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டதாகவும், மாலை 5 மணி அளவில் அது 25,000 கன அடியாகவும், மாலை 6 மணிக்கு 29,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த அளவுக்கு ஒரே நாளில் நீர் வெளியேற்றப்பட்டதாகக் கூறும் தலைமைச் செயலாளர், அதற்கு முதல் நாள், அதிக நீரை வெளியேற்றாமல், வெறும் 800 கன அடி நீரை மட்டுமே வெளியேற்றியது மிகப் பெரிய, கொடுமையான தவறு தானே? அந்த அளவுக்கு நீரை மிக அதிகமாக வெளியேற்றிய காரணத்தினால் தானே சென்னை மாநகரிலே பேரழிவு ஏற்படவும், பிணங்கள் மிதக்கவும் நேர்ந்தது. அதற்கு இந்த அ.தி.மு.க. அரசு தானே பொறுப்பேற்க வேண்டும்?
தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு 10 ஆயிரம் கன அடி நீரையும், 12 மணிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரையும் திறந்து விட்டதாக சொல்லி விட்டு, அவரே அதே அறிக்கையின் அடுத்த பக்கத்தில் சென்னை மாவட்டக் கலெக்டர் 11.20 மணிக்கு 7,500 கன அடி நீரை வெளியேற்றப்பட்டதாக அறிக்கை கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். இதிலே எந்தப் புள்ளி விவரம் சரியானது?
பொறியாளர்கள் யாரும் தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர், முதலமைச்சர் ஆகிய யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை, அவ்வாறு கூறுவது தவறு என்று தலைமைச் செயலாளர் அறிக்கையிலே கூறுகிறார். அதனை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், கீழ் மட்டத்திலே உள்ள அதிகாரிகள் அவர்களாகக் கேட்காவிட்டாலும், மேலே உள்ள அதிகாரிகள் தாங்களாக மழையின் நிலைமையை உணர்ந்து ஆணை பிறப்பித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? எனவே பழியை கீழ் மட்ட அதிகாரிகள் மீது போட்டு, தலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.
- கலைஞர்,
======================================================================================================
இது உண்மையா?
அந்த இணைப்பில் சென்றால் இணைப்பு கிடைக்கவில்லை.
நீக்கம் செய்து விட்டார்களா என்ன?
உண்மைதான்.
அந்த பக்கம் இதுதான்.
ஆனால் தற்போது நீக்கப்பட்டு விட்டது.