புதன், 30 டிசம்பர், 2015

எலிக் காய்ச்சலுக்கு மருந்து!


‘‘வெள்ளத்தின்போது ஏற்படும் ஆபத்துகளைவிட வெள்ளம் வடிந்தபின் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற சுகாதாரக்கேடுகளால்தான் மக்களுக்குப் பல்வேறு ஆபத்துகள் வருகின்றன’’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். 
இந்த வரிசையில் ’எலிக் காய்ச்சல்’ என்று அழைக்கப்படுகிற  ‘லெப்டோஸ்பைரோசிஸ்’   (Leptospirosis) நோய் முக்கியமானது.

‘லெப்டோஸ்பைரா’ எனும் பாக்டீரியா கிருமிகள் நம்மைப் பாதிப்பதால் இது ஏற்படுகிறது. 
இந்தக் கிருமிகள் எலி, பெருச்சாளி, ஆடு, மாடு, பன்றி, பூனை போன்ற பல்வேறு விலங்குகளின் உடலில் வசித்து, அவற்றின் சிறுநீர் வழியாக வெளியேறும். 
மழைக்காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீட்டில் வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். 
அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா’ கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல் வரும். பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைவதுதான் அதிகம்.

எனவே  பாதங்களில் விரிசல், பித்த வெடிப்பு, புண், சேற்றுப்புண் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருகிற அபாயம் அதிகம். காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது விலங்குகளின் சிறுநீர்க்கழிவு மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து நோய் உண்டாக அதிக வாய்ப்புண்டு. கிராமப்புறங்களில் விலங்குகளைக் குளிப்பாட்டும் அதே குளங்களில்தான் ஊர் மக்களும் குளிப்பார்கள். 
அப்போது அவர்களின் வாய், கண், மூக்கு வழியாகவும் இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து, எலிக் காய்ச்சலை ஏற்படுத்தும்.

கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, தசைவலி, உடல்வலி, கண்கள் சிவப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நோயின் முதல்கட்ட அறிகுறிகள். இவற்றில் ‘சிவந்த கண்கள்’, இந்த நோயை இனம் காட்டும் முக்கிய அறிகுறி. 
இந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை பெற்றுவிட்டால் நோய் உடனே கட்டுப்படும். தவறினால், நோய் தீவிரமாகும். குறிப்பாக, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை எனப் பல்வேறு முக்கிய உறுப்புகளை இது தாக்கும். இதன் விளைவாக நோயின் இரண்டாம் கட்ட அறிகுறிகள் தோன்றும். மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இந்தக் கட்டத்தின் முக்கிய அறிகுறிகள். 
இப்போதும் இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் இதயம் மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

எலிக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், வரவிடாமல் தடுக்கவும் ‘டாக்சிசைக்ளின்’ (Doxycycline) மருந்து கை கொடுக்கிறது. அலோபதி மருத்துவத்தில் ஒரு  மருந்து புதிதாகக் கண்டுபிடிக்கப்படும்போது, ஏற்கனவே உள்ள ஒரு மருந்தின் வேதிக்கட்டமைப்பை மாற்றி அமைத்துப் புதிய மருந்துகளை உருவாக்குவது ஒரு தயாரிப்பு முறை. 
இந்தமுறை முதன் முதலில் கடைப்பிடிக்கப்பட்டது இந்த மருந்தின் கண்டுபிடிப்பில்தான். 
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பென்சிலின், ஸ்ட்ரெப்டோமைசின் என்ற இரண்டு ஆன்டி பயாடிக் மருந்துகள்தான் புழக்கத்தில் இருந்தன.

இவை இரண்டுமே ஊசி மருந்துகள். பலரும் ஊசி போட்டுக்கொள்ளத் தயங்கினர்; நோய்கள் கட்டுப்படு வதற்குத் தாமதமானது. மேலும் இவை இரண்டும் சில வகை பாக்டீரியா கிருமிகளை மட்டுமே கட்டுப்படுத்தின. 
வைரஸ், காளான் போன்ற இன்னும் பல கிருமிகளைக் கட்டுப்படுத்த இவற்றால் இயலவில்லை. எனவே, புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவத்துறை தீவிரமாக இறங்கியது. இது மாத்திரையாக இருந்தால் இன்னும் சிறந்த பலனைத் தரும் என்ற கருத்தோட்டத்தில் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தினர்.


இந்த வழியில் 1945ல் பெஞ்சமின் மின்ச் டூகார் எனும் அமெரிக்க விஞ்ஞானி, ஆக்டினோமைசீட்ஸ் எனும் பாக்டீரியாவிலிருந்து ‘குளோர் டெட்ராசைக்ளின்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்தார். இதுதான் மருத்துவத்துறையில் முதன்முதலில் ‘ஒரே சமயத்தில் பல பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுத்து நோய்களைக் குணப்படுத்தும் மருந்து’ (Broad spectrum antibiotic) என்ற புகழைப் பெற்றது. முக்கியமாக சளிக் காய்ச்சல், சரும நோய்கள், பால்வினை நோய்கள், காலரா, பிளேக் போன்றவற்றுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. 
மேலும், இது பலரும் எதிர்பார்த்தது போலவே மாத்திரையாகத் தயாரிக்கப்பட்டதால் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் தொடர்ந்து பல நோய்களுக்குத் தரப்பட்ட காரணத்தால் இதன் செயலாற்றல் குறைந்தது.

இதன் பின்னர்  ‘ஃபைசர்’ மருந்து நிறுவனம் இதேபோல் வேதிப்பண்புள்ள ‘ஆக்ஸி டெட்ராசைக்ளின்’ எனும் மருந்தை ஆக்டினோமைசீட்ஸ் துணை இனக் கிருமியிலிருந்து கண்டுபிடித்தது. 
ஆனால் இதைப் பாதுகாப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு நீண்ட காலம் இதைப் பயன்படுத்த முடியவில்லை. 
எனவே, இதே நிறுவனத்தில் பணிபுரிந்த சார்லி ஸ்டீபன்ஸ் என்ற விஞ்ஞானி ஆக்டினோமைசீட்ஸ் துணை இன பாக்டீரியாக்களோடு சில செயற்கைப் பொருள்களையும் கலந்து புதிய மருந்தை 1960ல் கண்டுபிடித்தார்.

இதை நீண்ட காலம் பாதுகாக்கவும் முடியும் எனத் தெரிந்து கொண்டார். இதற்கு ‘டாக்சிசைக்ளின்’ என்று பெயரிட்டார். 1967ல் இது மனிதப் பயன்பாட்டுக்கு வந்தது. 
புண், பரு, நிமோனியா சளி, வயிற்றுக்கோளாறுகள், பால்வினை நோய்கள் என்று பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக இது பிறவியெடுத்தது. 
என்றாலும் இவை எல்லாவற்றையும்விட எலிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் முக்கிய மருந்தாக மருத்துவர்கள் பயன்படுத்துவது இதை மட்டுமே!

பாக்டீரியா கிருமிகள் வளர்வதற்குத் தேவையான புரதத்தை இது முற்றிலும் அழித்துவிடுவதால் அக்கிருமிகள் வளர்வது தடுக்கப்படுகிறது. 
இதனால் நோய் குணமாகிறது. 
மழைக்காலத்தில் வாரம் 2 மாத்திரைகள் வீதம் 6 வாரங்களுக்கு இதைச் சாப்பிட்டால் இந்தக் காய்ச்சல் வரவே வராது.
                                                                                                             -டாக்டர் கு.கணேசன்,
=====================================================================================
இன்று,
டிசம்பர்-30.
  • சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)
  • உலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)
  • சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)=====================================================================================
முகநூல் 
அரசு விழாக்கள்,நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா படத் தை,பேனரை பிடித்துக்கொண்டு நிற்க ஆட்கள் தேவை.எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படி பிடிப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டுஅந்தந்த மாவட்ட ஆட்சியர்களை உடனே அணுகவும்.