வெள்ளி, 25 டிசம்பர், 2015

முக இளமைக்கு

பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். அதை முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து, கழுவினால்  இளமை திருப்பு காப்பாக [ஆன்ட்டி ஏஜிங் மாஸ்க்]  வேலை செய்யும். 
சரும சுருக்கங்களை நீக்கும். 
ரொம்பவும் பழுத்துப் போன வாழைப்பழங்களை  இனிமேல் வீணாக்காதீர்கள். முக அழகு காப்பாக [மாஸ்க்காக] பயன்படுத்துங்கள்.

கேரட்டை சுத்தம் செய்து வேகவைத்து மசித்து முகத்தில் தடவி வரலாம் . இதுவும் இளமையை தரும்  தன்மை  கொண்டது. ரொம்பவும் எண்ணெய் வழிகிற சருமம் என்றால் தக்காளிச் சாற்றில், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி சிறிது  நேரம் ஊறிக் கழுவலாம். மாஸ்க்கை அகற்றும் போது எப்போதும் ஈர விரல்களால் அவற்றை லேசாகத் தேய்த்து வட்ட வடிவில்  மென்மையாக மசாஜ் கொடுத்து எடுக்க வேண்டும்.

கண்களைச் சுற்றி கரு வளையங்கள் இருந்தால் பச்சை உருளைக்கிழங்கைத் துருவி வைத்திருந்து கழுவினால் போதும்.  
சுலபமான இந்த வழியை விட்டுவிட்டு, நீங்களாக ஐ ஜெல் அல்லது கிரீம் வாங்கி, கண்களுக்கடியில் அழுத்தமாக மசாஜ்  செய்தால், கரு வளையங்கள் அதிகரிப்பதுடன், சுருக்கங்களும் வரும்.

அதிக வாசனை உள்ள மசாஜ் கிரீம்களை தவிர்த்து விடவும். ஆயூர்  வேத  தைலங்களை வாங்கி உடல் மசாஜ்க்கு உபயோகிப்பது எதிர் விளைவுகள் இல்லாததுடன் உடல் நலனுக்கும் நன்மை தரும்.
செயற்கையாக கலர் சேர்க்கப்பட்டவையும் பாதுகாப்பானவை அல்ல.ஸ்க்ரப்பில் பெரிய துகள்கள் இருக்கும்படி வாங்க வேண்டாம். 
மசாஜ் செய்து கொள்ளும் போது எப்போதும் கழுத்துப் பகுதியில்  இருந்து மேல் நோக்கியே செய்ய வேண்டும். தவறாகச் செய்தால் சருமம் தொய்வடைந்துவிடும்.

முல்தானி மட்டியை தினமும் முகத்தில் தடவிக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அது இயற்கையான பொருள்தான் என்றாலும்,  தினமும்  உபயோகித்தால் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தையும் எண்ணெய் பசையையும் அகற்றி விடும். முல்தானி மட்டி  போன்றவற்றை அவ்வப்போது பயன் படுத்த வேண்டும்.அதை ரொம்ப நேரம் சருமத்தில் வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பாசிப்பயிறு,கஸ்தூரி மஞ்சள் கலவை,நலங்கு மாவு போன்றவற்றை நம் முன்னோர்கள் உபயோகித்து வந்தார்கள்.
அது முகத்துக்கு அழகையும்,கவர்ச்சியையும் தந்தது.பெண்கள் முகத்தில் மீசை போன்று முடி வளர்வதையும் தடுத்தது.முகப்பரு  போன்றவற்றை அவர் விடாமலும் கிருமிகளையும் அழித்து வந்தது.வயதானாலும் அழகையும் முகசுருக்கமில்லமாலும்  வைத்திருந்தது.ஆனால் நாம் அதை இன்று மறந்து விட்டு ரசாயன அழகு சாதனங்கள் பின்னால் அலைகிறோம்.இவை அந்த நேரம் மட்டுமே அழகை தரும்.அவற்றை உபயோகிக்காவிட்டால் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் அழகுடன் இருப்போம்.உதாரணமாக பேர் அன்ட் லவ்லி தினமும் உபயோகிப்பவர்கள் சில காலத்துக்குப் பின்னர் அதை தடவாமல் இருந்தால் அவர்கள் முகம் அவர்களுக்கே சகிக்காமல் இருக்கும்.ஆனால் பாசிப்பயிறு,மஞ்சள் கலவை தடவியவர்களுக்கு அதில்லாவிட்டாலும் முகஅ ழகு குறையாமல் இருக்கும்.
=========================================================================================
இன்று,
டிசம்பர்-25.
1968 டிசம்பர் 25-
வெண்மணியில் பண்ணையாளர்களால் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளர்கள் உயிருடன் குடிசையில் தள்ளி  கொளுத்தப்பட்ட நாள். 
ஆன்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்தார்(1741)
  • சீன குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது(1947)
  • ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இறந்த தினம்(1977)

1968 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ந்தேதி இரவு.


சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட தமிழ் விவசாயிகள், கூலித் தொளிலாளர்கள் தங்களின் உழைப்பில் அதிகமாக அந்தாண்டு மகசூல் கிடைத்ததால், கூலியாக வழக்கமான நெல்லைவிட வெறும் 4 கை நெல் அதிகமாக கேட்டார்கள். நியாயமானதே.


ஆனால் கூலி அதிகம் கேட்பதா என்ற ஒரே காரணத்திற்காக  நிலப்பண்ணையாளர்கள் அன்றைய நெல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவனாய் இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு வின் தலைமையில் விரட்டி சென்றனர்.

பயந்துபோய் இராமையா என்பவரின் குடிசையில் தங்கள் உயிரைப் பாதுகாக்க வேறு வழியில்லாமல் ஒண்டிய அவர்களை 44 பேரை (5 ஆண்கள், 16 பெண்கள், 23 குழந்தைகள்) குடிசையோடு வைத்து உயிரோடு எரித்தனர். காண்க:   மேலும் காண:இதைவிடக் கொடூரம் நீதிமன்றத்தீர்ப்பு. 

1. காவல் துறை 23 நிலப்பண்ணையாளர்களை கைது செய்தது.

2. மாவட்ட நீதிமன்றம் அதில் 15 பேரை விடுவித்தது. மற்ற 8 பேருக்கும் 1 முதல் 10 ஆண்டு வரை சிறை விதித்தது.

3. ஆனால் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடிவித்தது. தீர்ப்பில் சொன்ன காரணம்:

இவ்வளவு பெரிய பணக்கார நிலப்பண்ணையாளர்கள் இத்தகைய கொடூர வன்முறை செய்பவர்களாக நினைக்க முடியாது.

நன்றி:தமிழ் செல்வா.
=========================================================================================
மாதம் 2.80 லட்சம் சம்பளம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
புதிய சம்பளம் அமல்படுத்தப்பட்டால் எம்பிக்கள் ஒவ்வொருவருக்கும் அலவன்ஸ்களுடன் சேர்த்து மாதம் ரூ. 2.8 லட்சம் கிடைக்கும் என தெரிகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர தொகுதி படி ரூ. 45 ஆயிரம்  உதவியாளர் மற்றும் அலுவலக படி ரூ.45 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படுகிறது. மத்திய அரசில் மிகுந்த உயர்பதவியான கேபினட் செயலருக்கு வழங்கப்படும் சம்பளம் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. இது வரும் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போது இந்த அறிக்கை அனைத்து துறைகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய அரசின் கேபினட் செயலருக்கான சம்பளம் ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து எம்பிக்களின் சம்பளத்தையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான பரிந்துரையை நாடாளுமன்ற கூட்டுகமிட்டி மத்திய நிதி அமைச்சகத்திடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இந்த பரிந்துரைகள் தற்போது நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இதனை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும் என டெல்லி வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்துள்ளன. புதிய பரிந்துரையின் படி தற்போது எம்பிக்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.

அதே போல் தொகுதிபடியும் ரூ. 45 ஆயிரத்திலிருந்து ரூ. 90 ஆயிரமாகவும், உதவியாளர் மற்றும் அலுவலக படி ரூ. 90 ஆயிரமாகவும் உயர்த்தி தரப்படும். புதிய சம்பளம் அமலுக்கு வந்தால் ஒவ்வொரு எம்பியும் மாதம் ரூ. 2.8 லட்சம் சம்பளமாக பெறுவர். இது தவிர எம்பிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தையும் இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போதுள்ள ரூ. 20 ஆயிரம் ஓய்வூதியம் இனி ரூ. 35 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இதுதவிர 5 ஆண்டுகளுக்கு மேல் எம்பியாக இருந்திருந்தால் கூடுதல் வருடம் ஒவ்வொன்றுக்கும் ரூ. 2 ஆயிரம் சேர்த்து வழங்கப்படும். இதற்குமுன்பு கூடுதல் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1,500 மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தினப்படியை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இதனை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இது போல் மேலும் சில பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. புதிய சம்பளம் அமலுக்கு வந்தால் மத்திய அரசின் செயலரை விட எம்பிக்கள் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.