வாட வைத்த வடகிழக்கு பருவமழை.

டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த கனமழையின் அளவை காட்டும் அனிமேஷனை நாசா வெளியிட்டுள்ளது. 
இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இஞ்ச் அளவுக்கு மழை பெய்ததாக நாசாவின் செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன.
 'தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும்.

இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை'.
===========================================================================================
மீட்பு பணியும்,ஆளுங்கட்சியினர் மீட்பும்,
மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், தமிழகத்தில் சரியான ஒருங்கிணைப்பு இன்மையால், மக்களின் கோபம் வலுத்து வருகிறது. அமைச்சர்களை தொடர்ந்து, அதிகாரிகளையும் மக்கள் விரட்டியடிப்பதாலும், சிறை பிடிப்பதாலும் ஆளுங்கட்சியினர் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரத்தில், மழை விடாது கொட்டியது. ஏரிகள் நிறைந்து, உபரி நீர் திறப்பதால், சிங்காரச் சென்னை, வெள்ளக்காடாக மாறியது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களும் வெள்ள பாதிப்பில் திணறின. சில நாட்களாக மழை விட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், அரசின் சரியான ஒருங்கிணைப்பின்மையால், இந்த பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை. இன்னும் பல பகுதிகள், சேறும், சகதியுமாக உள்ளன.
பல பகுதிகளில் இன்னும், தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அரசு துறையினர் தங்களை சந்தித்து, ஆறுதல் கூறவில்லை என, மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், கடந்த வாரம் 
நிவாரண பணிகளை பார்வையிடச் சென்ற, அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, செல்லுார் ராஜுவை அப்பகுதியினர் முற்றுகையிட்டனர்; மசூதியில் சிறை வைத்தனர். போலீசார் அவர்களை மீட்டுச் சென்றனர். ஆனால், 'தி.மு.க.,வினர் துாண்டி விட்டு நடந்த சம்பவம் அது; எங்களை யாரும் விரட்டவில்லை' என, அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் மாநகராட்சிகவுன்சிலர்கள் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்களை மக்கள் விரட்டியடிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அரசு மீதான கோபம் அதிகமாகி, 'சைரன்' வைத்த காரை கண்டாலே, மக்கள் ஆத்திரமடைகின்றனர்.
அதன் உச்சகட்டமாக, மருத்துவ சிகிச்சை அளிக்கச் சென்ற, மருத்துவத்துறை அதிகாரிகள், டாக்டர்களை சிறைபிடிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை, ஜாபர்கான் பேட்டை பகுதியில் மருத்துவ முகாம் நடத்த, நேற்று காலை, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தலைமையில், டாக்டர்கள் குழு சென்றது.
கீதாலட்சுமி நீல வண்ண, சைரன் பொருத்தப்பட்ட காரில் சென்றார்.
அந்த காரை பார்த்ததும், அமைச்சர், கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் தான் வருகின்றனர் என, நினைத்த பொதுமக்கள், காரை சுற்றி வளைத்தனர். 'எங்கள் பகுதி சேறும், சகதியுமாக கிடக்கிறது; பல இடங்களில், தண்ணீர் வெளியேற்றவில்லை. 
ஆபத்து நேரத்தில் உதவ அரசியல்வாதிகள், அதிகாரிகள் யாரும் எட்டிப் பார்க்கவில்லை; இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்?' என, சரமாரியாக கேள்வி கேட்டனர்.
காரை எடுக்க விடாமல், சுற்றி வளைத்தனர்.கீதாலட்சுமியுடன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் நசீர் அகமதும் சிக்கித் தவித்தார். 'நாங்கள் டாக்டர்கள்; உங்களுக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளோம்' என கூறியும், மக்கள் கேட்பதாக இல்லை; ஒரு மணி நேரமாக, அவர்களை சிறை வைத்தனர்.

நிலைமை சிக்கலானதை அறிந்த போலீஸ் அதிகாரிகள், அங்கு சென்று, பொதுமக்களிடம் பேசி, டாக்டர்கள் குழுவை விடுவித்தனர். 'உங்களுக்கு சிகிச்சை அளிக்கத் தான் வந்தோம்; முதலில் உடல் நலத்தை கவனிப்போம். பின், பிற உதவிகள் கிடைக்க வழி செய்கிறோம்' என, கீதாலட்சுமியும், போலீசாரும் உறுதி அளித்தனர். அதன் பின், சிகிச்சை அளிக்க மக்கள் அனுமதி அளித்தனர்.
அமைச்சர்கள், அரசியல்வாதிகளை தொடர்ந்து, அதிகாரிகள் விரட்டியடிப்பு, சிறைபிடிப்பு சம்பவங்களும் துவங்கியுள்ளதால், ஆளுங்கட்சியினர் பீதி அடைந்துள்ளனர்.
வெள்ள நிவாரணம் அறிவித்த பிறகும், மக்கள் கோபம் தொடர்வதால், எந்த வகையில் சமாதானப்படுத்தலாம் என்பது குறித்து, ஆளுங்கட்சியினர் தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளனர்.
=======================================================================================








============================================================================================
இன்று,
டிசம்பர்-10.

  • சர்வதேச மனித உரிமைகள் தினம்
  • தாய்லாந்து அரசியலமைப்பு தினம்
  • நோபல் பரிசு வழங்கப்படும் தினம்
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)
  • ஸ்வீடன் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)
=============================================================================================
இது தேவக்கோட்டை லொள்ளு,
 தேவகோட்டை நகராட்சியின் . திடக்கழிவு மேலாண்மை  திட்டத்தின் கீழ் 13 வார்டுகளுக்கான பணிக்கு டெண்டர் விடப்பட்டது. அதற்கு நமது எம்ஜி ஆர்  நாளிதழுக்கும், மற்றொரு ஆங்கில நாளிதழுக்கும்  கடந்த ஜூன் மாதம் விளம்பரம் கொடுத்ததற்காக, ரூ.74,615 வழங்க வேண்டும்  என கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

 ‘நகராட்சி பணத்தை விளம்பரம் என்ற பெயரில் வீணடிக்கக்கூடாது’ என திமுக கவுன்சிலர் பாலமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். 

இதனை அதிமுக  நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம் ஆமோதித்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் விளம்பரத்துக்கான பணத்தை கொடுக்கக்கூடாது  என வலியுறுத்தினர். இதனால்,அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. 
இதற்கான மினிட் புத்தகத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில், அதிமுக  கவுன்சிலர்கள் கையெழுத்திட்டனர்.

ஆனால், கூட்டம் முடிந்து வெளியே வந்த பின்புதான், தாங்கள் பணம் வழங்கக்கூடாது என வலியுறுத்திய "நமது எம்ஜிஆர் "அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழுக்கு  என்று அவர்களுக்கு தெரியவந்தது. இதனால் பயந்து போன அவர்கள், தீர்மானத்தில் திருத்தம் செய்யக் கோரி கையெழுத்திட்டு, நகராட்சி தலைவர் சுமித்ரா  ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர்.  மினிட் புக்கில் மீண்டும் திருத்தம் செய்ய முடியாது எனக் கூறி சுமித்ரா ரவிக்குமார் மறுத்து விட்டார்

இதனால் அதிமுக  கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர். 







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?