வெள்ளி, 29 ஜனவரி, 2016

விண்டோஸ் 8.1மேம்படுங்கள்?


 இன்னும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? 
உடனே அதனை விண்டோஸ் 8.1க்கு மேம்படுத்திக் கொள்ளுங்கள். 
மைக்ரோசாப்ட், இனி விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் பிழை திருத்துவதற்கான பைல்களை அளிக்காது. 
பொதுவாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தான் எந்த விண்டோஸ் பதிப்பினை வெளியிட்டாலும், அதன் பாதுகாப்பான இயக்கத்திற்கான பைல்களை, பத்து ஆண்டுகளுக்கு வழங்கும். 
எப்போது ஹேக்கர்கள், இந்த சிஸ்டத்தின் பிழைக் குறியீடுகள் வழியாக உள்ளே நுழைவது தெரிந்தாலும், அதனைச் சரிப்படுத்தும் வகையில், அதற்கான பைல்களை இலவசமாக வழங்கும். 
ஆனால், விண்டோஸ் 8 பதிப்பினைப் பொறுத்தவரை, இனி அத்தகைய பைல்கள் வழங்கப்பட மாட்டாது. எனவே, விண் 8 பயன்படுத்தும் அனைவரும், விண் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், ஹேக்கர்களின் தொல்லைகளுக்கு ஆளாவோம். 
பன்னாட்டளவில், இந்த வகையில், இன்னும் 5 கோடி பேர் தங்கள் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். (மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 200 கோடி) 
இனி, இந்த சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், புதிய வைரஸ்களைத் தடுக்கவோ, ஹேக்கர்களின் முயற்சிகளை முறியடிக்கவோ, சப்போர்ட் பைல்கள் வழங்கப்பட மாட்டாது. விண்டோஸ் 8.1, 2013 அக்டோபர் மாதம் வெளியிடப்படுகையில், மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தியவர்கள் அனைவரையும், விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
 அப்போதே, 2016ல் விண் 8 சிஸ்டத்திற்கு சப்போர்ட் நிறுத்தப்படும் என அறிவித்தது. 
விண்டோஸ் 8.1, அடிப்படையில், 'விண்டோஸ் சர்வீஸ் பேக்' என அழைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தான். இதற்கு மாற்றிக் கொண்டால், இதற்கான பாதுகாப்பு 2023 ஆம் ஆண்டு வரை கிடைக்கும். நீங்கள் ”விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்வோமே; எதற்காக விண்டோஸ் 8.1” என நினைக்கலாம். இலவசமாக, விண்டோஸ் 10 தேவை என்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 8.1 க்கு முதலில் மேம்படுத்திக் கொண்டால் தான், அதனைப் பெற முடியும். 
விண்டோஸ் 8.1 சிஸ்டம் மேம்படுத்தலைப் பொறுத்தவரை, அது ஏற்கனவே உள்ள நம் பைல்கள் அல்லது புரோகிராம்கள் மீது புதியதாக எதனையும் எழுதாது. 
ஆனால், இதில் உள்ள ஒரு சிரமம் என்னவென்றால், விண் 8.1க்கு மேம்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இடையே வேறு ஹார்ட்வேர் பிரச்னைகள் ஏற்பட்டால், சிக்கல் தான். எனவே, நம் பைல்கள் அனைத்திற்கும் பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு, விண் 8.1க்கு மேம்படுத்திக் கொள்வது பாதுகாப்பானது.
மேம்படுத்திக் கொள்ள: 
முன்பு அப்டேட் பைல்களை Updates என்பதனை அணுகிப் பெற்றோம். ஆனால், விண் 8.1 அப்டேட் பைலை விண்டோஸ் ஸ்டோரில் இருந்து மட்டுமே பெற முடியும். 
விண்டோஸ் 8ல் முதலில் ஸ்டார்ட் (Start) ஸ்கிரீன் செல்லவும். Windows Storeக்கான டைல் தேர்ந்தெடுக்கவும். இது திறக்கும்போது, விண்டோஸ் 8.1க்கு இலவசமாக மாறிக் கொள்ள ஒரு தொடர்பு இடம் (Link) காட்டப்படும். இந்த லிங்க் இல்லை என்றால், “Windows 8.1” என டைப் செய்து தேடிப் பெறவும்.
இந்த லிங்க்கில் சென்று, Download என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் 8.1 பதியப்படத் தொடங்கும். அதிவேக இணைய இணைப்பு இருந்தாலும், சிலருக்கு இது 3 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. சிலருக்கு 90 நிமிடத்தில் முடிகிறது. ஏற்றுக் கொள்ளும் கம்ப்யூட்டரைப் பொறுத்தும், இணைய இணைப்பினைச் சார்ந்தும் இது இருக்கும். சில வேளைகளில், மேம்படுத்துதல் நின்று போனாலும், சில 
விநாடிகளில் மீண்டும் தானாகவே தொடங்கும். 
மேம்படுத்துதலின் ஒவ்வொரு நிலைக்கும், பின்புல வண்ணம் மாறும்.
சிஸ்டம் பைல் இறக்கம் செய்யப்பட்டவுடன், அதனை கம்ப்யூட்ட்டரில் அமைக்க, இரு வகை அமைப்பு (Express setting அல்லது customizing settings) ஆப்ஷன் தரப்படும். முதல் வகையான Express setting எடுத்துக் கொள்ளலாம். விரைவில் மேம்படுத்துதல் முடியும். தொடர்ந்து, உங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் தகவல்களைக் கொடுக்க வேண்டும். இது நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை வாங்கிய போது தந்த தகவலாக இருக்கும். 
இது உங்களுடைய Outlook.com, Hotmail, Live Mail அல்லது MSN அக்கவுண்ட் ஆக இருக்கலாம். இதன் பின்னர், மைக்ரோசாப்ட் உங்களுக்கு ஒரு செக்யூரிட்டி கோட் ஒன்றினை உங்கள் மொபைல் போன் அல்லது உங்களுடைய பிறிதொரு மெயில் அக்கவுண்ட்டிற்கு அனுப்பும். இதனை நீங்கள் டைப் செய்திட வேண்டியதிருக்கும்.
 நீங்கள் தான், இந்த அக்கவுண்ட்டின் உரிமையாளர் என்பதனை இந்த செக்யூரிட்டி கோட் உறுதி செய்திடும். ஆனால், விண்டோஸ் 8.1 மேம்படுத்துதலுக்கு முன்னதாக, இந்த அக்கவுண்ட்டினை அந்தக் கம்ப்யூட்டரில், அப்போது பயன்படுத்தி இருந்தால், இது கேட்கப்பட மாட்டாது. 
செக்யூரிட்டி கோட் தேவைப்படாது. 
செக்யூரிட்டி கோட் உள்ளீடு செய்யப்பட்ட பின்னர், நமக்கு ஒரு திரைக் காட்சி கிடைக்கும். அதில் ஒன் ட்ரைவ் நம் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்ட தகவல் கிடைக்கும். இதில் நம் கம்ப்யூட்டரில் உள்ள போட்டோக்கள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும்.
 இதுவே, நம் டாகுமெண்ட் மற்றும் பைல்கள் அனைத்தும் சேவ் செய்யப்படும் இடமாக இருக்கும் என்ற தகவலும் தரப்படும். 
தொடர்ந்து Next கிளிக் செய்தால், ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கு கம்ப்யூட்டர் நம்மை அழைத்துச் செல்லும். இத்துடன் இந்த மேம்படுத்துதல் முடியாது. 
இன்னும் சில அப்டேட் பைல்கள் இயக்கப்பட வேண்டும். இதற்கு “Windows updates” என டைப் செய்து Search Charm பகுதியில் அப்டேட் பைலுக்கான இடத்தைப் பார்க்கவும். Check for updates என்பதில் கிளிக் செய்திடவும். ”விண்டோஸ் அப்டேட் மையம்” திறக்கப்படும். 
உங்களுக்கான அப்டேட் பைல்கள் எவை உள்ளன என்று காட்டப்படும். அவற்றில் உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்து, அப்டேட் செய்து கொள்ளலாம். அனைத்தையும் அப்டேட் செய்வதே பாதுகாப்பானது. 
அனைத்து அப்டேட் பைல்களையும், பதிவு செய்த பின்னர், உங்கள் கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில், வலது ஓரத்தில், சிறிய விண்டோ ஐகான் காட்டப்படும். 
இது விண்டோஸ் 10க்கான இலவச ஐகான் ஆகும். விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திட ஒத்துக் கொண்டு, அதில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10க்கு மேம்படுத்தப்படும். 
அது 2025 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பிற்கான பைல்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தும்.
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் இயக்க முறைகளை, மக்கள் யாரும் அவ்வளவாக விரும்பவில்லை. முற்றிலும் புதிய வகையில், டைல் கட்டங்களாலான திரைக்குத் தங்களை அழைத்துச் சென்றது விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கவில்லை. 
ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாத விண்டோஸ் இயக்கத்தினை வெறுத்தனர். எனவே, சப்போர்ட் பைல் இல்லை என்ற அறிவிப்பு, விண் 8ல் இருந்த பிழைகள் இல்லாமல் அமைக்கப்பட்ட விண்டோஸ் 8.1 க்கு மாறிக் கொள்ள நல்ல சந்தர்ப்பத்தினை அவர்களுக்கு வழங்கியுள்ளது என்றே கருத வேண்டும்.
நன்றி:தினமலர்,
============================================================================================
இன்று,
ஜனவரி-29.


ஆண்டன் செக்கோவ்
[1860 - ஜனவரி 29]
இருபதாம் நுாற்றாண்டின் ஆரம்பகால முன்னணி நாடக ஆசிரியராகவும், நவீன சிறுகதை மன்னராகவும் போற்றப்படுபவர், ஆண்டன் செக்கோவ்.


 ரஷ்யாவின், டகான்ராக் என்ற ஊரில் பிறந்தார். 

மருத்துவராகப் பணி புரிந்தவாறே, சிறுகதைகள் எழுதத் துவங்கினார். அவரது எழுத்துக்கு கிடைத்த ஆதரவால், மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, முழுநேர எழுத்தாளராகி விட்டார்.ஐந்தே ஆண்டுகளுக்குள், 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்; 

தன், 44 ஆண்டு கால வாழ்க்கையில், 24 ஆண்டுகள் எழுதியபடியே இருந்தார். 
மொத்தம், 568 சிறுகதைகளும், நாடகங்களும் எழுதியுள்ளார்.

மரபுவழிகளை உடைத்து, மனநிலை சார்ந்த சமூக அவலங்களை வெளிப்படுத்திய இவரது எழுத்து நடை, 

சிறுகதை படைப்புகளிலும், மேடை நாடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 
1904, ஜூலை 15-ம் தேதி இயற்கை எய்தினார்.ஆண்டன் செக்கோவ் பிறந்த தினம் இன்று!


============================================================================================
ஊழல் தரவரிசை பட்டியல்.