செவ்வாய், 19 ஜனவரி, 2016

அன்னிய முதலீடு எவ்வளவு?


பத்திரிகைகளும், அரசின் இயந்திரங்களும் கடந்த சில நாட்களாக சீனாவை காட்டிலும் இந்தியாவிற்கு அதிகமான அந்நிய நேரடி முதலீடு சொல்லிவருகின்றனர்.

 பிரதமர் மோடியின் சுற்றுபயணத்தின் விளைவாக கடந்த 2014 ஜனவரி, ஜுன் காட்டிலும், இந்த 2015 ஆம் ஆண்டில் 2.6 மடங்கு கூடுதலாக அந்நிய நேரடி மூலதனம் வந்ததாக பெருமை கொள்கிறார்கள். இந்த அரையாண்டில் இந்தியாவிற்கு வந்த நிகர முதலீடு 31 மில்லியன் டாலர் (1,86,000 கோடி) மற்றும் சீனாவிற்குள் வந்த நிகர முதலீடு 28 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

 இதை வைத்து தான் சீனாவை காட்டிலும் இந்தியாவிற்கு கூடுதலாக அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்தியா பெற்றது அதிகமா?:-
இந்த அரையாண்டில் சீனாவிற்குள் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 68 பில்லியன் டாலர் இதே காலத்தில் சீனா இதர நாடுகளில் செய்துள்ள முதலீடு 40 பில்லியன் டாலர். 
ஆக நிகர முதலீடு 28 பில்லியன் டாலர் 2009 ஆம் ஆண்டிலிருந்து சீனா தொடர்ச்சியாக வெளிநாடுகளில் முதலீடு அதிகமாக செய்து வருகிறது. 
நிகர முதலீடு கணக்கிடும் போது, உள்ளே வந்த முதலீட்டில், வெளிநாடுகளில் செய்யப்படும் முதலீட்டை கழித்துதான் கணக்கிடப்படும். ஆகவே தான் இந்த வித்தியாசம். உண்மையில் இந்தியாவை காட்டிலும் 3.6 மடங்கு சீனாவிற்கு கூடுதலாக அந்நிய முதலீடு வந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
சீனாவிற்கு வந்த நிகர மூலதனம் ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் டாலராக இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு 2.9 பில்லியன் டாலராக உள்ளது. இதை வைத்து கொண்டு தான் சீனாவை இந்தியா மிஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவிற்கு வந்த மொத்த முதலீடு மாதம் ஒன்றிற்கு 10.5 பில்லியன் டாலர் அதாவது 3.6 மடங்கு கூடுதலாக சீனாவிற்குள் வந்துள்ளது.
இந்தியா மற்ற நாடுகளில் செய்கிற முதலீடு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பாக 2011 முதல் குறைந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு 16 மில்லியன் டாலர் அளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்த இந்தியா, 2015 ஆம் ஆண்டு வெறும் 1.8 பில்லியன் டாலர் அளவே முதலீடு செய்துள்ளது. 
இந்தியா, குறைவாக வெளிநாடுகளில் முதலீடு செய்வதால் நிகர அந்நிய நேரடி முதலீடு சீனாவை காட்டிலும் கூடுதலாக இருப்பது போல் பிம்பம் உள்ளது.
இந்தியாவிற்குள் வந்த முதலீடு கூட முதல் ஐந்து மாதத்தில் 3.5 பில்லியன் டாலர் அளவு சராசரியாக இருந்தது. கடைசி 3 மாதங்கள் (ஜுன்-ஆகஸ்ட் 2015) 1.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இது இன்னமும் குறைய வாய்ப்புள்ளது.
அந்நிய நேரடி முதலீடு தான் இந்தியாவை வளமாக்கும் என்பது போல் மோடி பேசி வருவதை நாம் காண்கிறோம்.  உலக பொருளாதாரமே அந்நிய நேரடி முதலீட்டை நம்பி இல்லை . 
2007ல் உலகத்தில் உள்ள மொத்த அசையா முதலீடு உருவாக்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு 14 சதவீதம் ஆக இருந்தது. இது 2015ல் 9 சதவீதம் ஆக குறைந்துள்ளது. அதேபோல் இந்தியாவிலும் இது 11 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. உலகத்திலேயே மிகப்பெரிய முதலீட்டாளரான அமெரிக்கா 2013ல் 3 டிரில்லியன் டாலராக இருந்தது. 
2014ல் இது 100 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இப்படி உலகம் முழுவதும் மீதான மோகம் குறைந்துள்ள நிலையில் மோடி  உலகை சுற்றி வருகிறார்.

india aim

 அமெரிக்க பத்திரிக்கை சொல்கிறது  அமெரிக்காவில் உள்ள மேடிசன் சதுக்கத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து மோடி மந்திரம் சொல்ல, பல ஆயிரம் பேரை தயார் செய்தும் அமெரிக்காவுடன் இதுவரை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட  போட முடியவில்லை. 
சீனா 100 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக கூறினாலும், அதிபர் கடைசியாக ஒத்து கொண்ட 20 பில்லியன் டாலர் கூட இந்தியாவிற்கு வரவில்லை. மோடி அறிவித்ததை போல ஜப்பானிலிருந்து வரவேண்டிய 34 பில்லியன் டாலர், அமெரிக்காவிலிருந்து வரவேண்டிய 41 பில்லியன் டாலர், சீனாவிலிருந்து வரவேண்டிய 20 பில்லியன் டாலர், ஐக்கிய அரபு நாடுகள் 70 பில்லியன் டாலர் இவையாவும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. 
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 258 பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் 12,93,303 கோடி) ஆனால் மோடி தற்போது அறிவித்துள்ள முதலீடுகள் 15 ஆண்டுகளில் வந்த மொத்த முதலீட்டில் 60 சதவீதம் ஆகும். வெள்ளை காக்கா பறக்குது பாரீர் என்று மோடி முழங்கி வருகிறார்.
எங்கே தேடுவேன், முதலீட்டை எங்கே தேடுவேன்:
என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில் எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன் என்று பாடுவார். அதுபோல் 31 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்ததாக கூறப்பட்டும், அது எங்கே என்று தேடவேண்டிய சூழல் தான் உள்ளது. 
தொழில் உற்பத்திக்கு அது பயன்பட்டதா என்றால் இல்லை என்பது தான் பதில் வராத முதலீடு என்பதற்கு வந்துள்ளது. 
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சந்தையை சுரண்டுவதற்கு தான் மூலதனம் வந்துள்ளது. அரசின் தொழில்துறையின் அறிக்கைப்படி 2015ல் வந்த முதலீட்டில் பெரும்பாலான முதலீடு மின்வணிகம் (இ.காமர்ஸ்) பிலிப் கார்ட், ஸ்நாப் டீல் போன்ற நிறுவனங்களிலும், மெட்ரோ காஷ் அண்ட் கேரி நிறுவனத்திலும், ஆட்டோ மொபைல் தொழிலிலும் வந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் 6 பில்லியன் டாலர் வந்திருந்தாலும் மொத்த விற்பனையில் ஏற்றுமதி சதவீதம் 20-25 சதவீதம் தாண்டவில்லை. அதாவது வந்த முதலீடு ஏற்றுமதி செய்ய பயன்படவில்லை. மாறாக உள்நாட்டில் இருந்த கிராக்கியை பயன்படுத்தியுள்ளது.
ஒதுங்கி விடுகின்ற முதலீடு  உற்பத்தியை பெருக்குவதை காட்டிலும், எலக்ட்ரானிக் (மின்னணு) பொருட்களின் இறக்குமதியை அதிகப்படுத்துவதுதான் உதவியுள்ளது. 
2013 லிருந்து இன்றுவரை மின்னணு பொருட்களின் இறக்குமதி பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களில் செய்யப்படுகின்ற முதலீடு ஏற்றுமதிக்கு பயன்படவில்லை, 
மாறாக இறக்குமதியை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்குகிற கட்டுமான தொழிலிலோ, உற்பத்தி துறையிலோ, மின்சாரம், எண்ணெய் எரிவாயு, உலோகங்களிலோ இந்த முதலீடு பெரிய அளவில் வரவில்லை. 
இதை பற்றி கவலைப்படாமல் பல நூறு கோடிகள் செலவு செய்து மோடி வெளிநாட்டு சுற்று பயணம் தொடர்ந்து சென்று வருகிறார். 
கூட்டி கழித்து பார்த்தால், அந்நிய நேரடி முதலீட்டால் இந்தியா இழந்ததுதான் அதிகம்.
  • ஆனந்தன்
============================================================================================== 
இன்று,
ஜனவரி-19.
  • ஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)
  • அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)
  • கிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)
  • நன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது(1806)


================================================================================================
மொபைல்வாலட்
உங்களுக்கு கிரெடிட்கார்டு தெரியும்; டெபிட்கார்டு தெரியும்; 
காஷ்கார்டு தெரியுமா? 
அதான் பிரீபெய்ட் வெர்சுவல் கார்டு, மொபைல்வாலட் என்றெல்லாம் சொல்கிறார்களே! 
உங்கள் கைபேசிக்குள் ஒளிந்திருக்கும் பணம் இது! 
வங்கிக்குப் போகாமல், ஏன் உங்களுக்கு வங்கிக் கணக்கே இல்லையென்றால் கூட நீங்கள் இதைப் பயன்படுத்தி மற்றொரு ஊரிலிருப்பவருக்குப் பணம் அனுப்பலாம். 
கரண்ட் பில் கட்டலாம். டாப்அப் செய்யலாம். ரயில் டிக்கெட்டும் சினிமா டிக்கெட்டும் கூட எடுக்கலாம். பேடிஎம் போன்ற பல நிறுவனங்கள் இச்சேவையை அளித்தாலும் இன்று இச்சந்தையைக் கலக்கிக் கொண்டிருப்பது ஐகேஷ் எனும் காஷ்கார்டு சேவையே!
பீஹாரிலிருந்து சென்னை வந்து கட்டிட வேலை செய்பவரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தொழிலாளியிடம் இணைய வசதி இருக்காது; 
வங்கிக்குச் செல்ல நேரம் இருக்காது. 
ஆனால் கைபேசி இல்லாமல் இருக்குமா? 
அம்மாதிரியான ஆட்கள் தெருக்கோடியில் இருக்கும் ஸ்மார்ட்ஷாப் எனும் முகவரின் கடைக்குச் சென்று தங்களது கணக்கில் பணத்தைச் செலுத்திவிடலாம். 
பின்னர் தேவையான பணத்தை கைபேசி மூலமாக அனுப்பினால், சில நொடிகளில் அவரது உறவினர் தமது ஏடிஎம் கார்டு மூலம் அதை எடுத்துக் கொள்ளலாம். கோயம்பேடு சந்தைகளிலுள்ள சிறு வியாபாரிகள் இச்சேவையைப் பயன்படுத்துகிறார்கள்!
இதன் பின்னணி சுவாரஸ்யமானது! 
2008ல் கைபேசிகளின் ஆதிக்கத்தால் எஸ்டீடி பூத்துகளுக்கு தேவை குறைந்ததால் பல ஆயிரம் கடைகளை மூடிவிடக்கூடிய சூழ்நிலை உருவா யிற்று. 
ஆனால் அதே சமயம் பல லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் வங்கி மூலம் பணம் அனுப்புவதில் சிரமப்பட்டனர்.
இவையிரண்டையும் பார்த்த ராமுஅண்ணாமலை, பழனியப்பன் எனும் நம்மூர் சகோதரர்களுக்கோ இதில் ஒரு அரிய சேவை மற்றும் வர்த்தக வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. 
வங்கிகளே தயங்கிய காலத்தில் அவர்கள் தைரியமாக இறங்கினார்கள். இவ்விரண்டையும் இணையத்தினால் இணைத்தார்கள். ஐகேஷ் என்னும் கைபேசி பணப்பரிமாற்றச் சேவையை உருவாக்கி ஒரு அமைதிப் புரட்சியே செய்துவிட்டார்கள். 
இன்று இந்தியாவெங்கும் 90,000 ஸ்மார்ட்ஷாப்புகளில் ஐகேஷ்-ஐ பயன்படுத்தி நடக்கும் பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு இரண்டரை லட்சமாம்!
                                                                                                                         நன்றி:சோம.வீரப்பன்
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15, 17 ஆகிய தேதிகளில் சுமார் ரூ.365 கோடி க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப் பட்டுள்ளது.